Published:Updated:

நல்ல பங்குகள்... ஆபத்தான பங்குகள்... என்ன வித்தியாசம்? - ஓர் உதாரணம் #SmartInvestorIn100days நாள் 11

#SmartInvestorIn100days
#SmartInvestorIn100days

முன்பு இருந்த விலைகள் மட்டுமே, ஒரு பங்கை வாங்க சரியான காரணம் அல்ல.

வாசகர் சுப்பு ரெட்டி பால் கேட்டிருக்கும் கேள்வி

"இப்போது எஸ் பேங்க் பங்கை வாங்கிச் சேர்க்கலாமா?"

எஸ் பேங்க் மட்டுமல்ல. தற்போது, கஃபே காபிடே என்டர்பிரைசஸ் - சிசிடிஎல், ஜீ என்டர்டெயின்மென்ட் போன்ற பங்கு விலைகளும் தொடர்ந்து விலை இறங்கி, சிறு முதலீட்டாளர்களை, ’வா... வா... வாங்கு’ என்று அழைக்கின்றன.

யெஸ் பேங்க் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா? இன்னும் விலை வீழுமா? #SmartInvestorIn100Days - நாள் 10

இந்த நிறுவனப் பங்குளின் உயர்ந்த விலைகளை, முன்பு பார்த்தவர்களுக்கு, இப்போது மிகக் குறைந்த விலைகளைப் பார்க்கும்போது, ஆர்வம் வருவது இயற்கை. வாங்கத் தோன்றும்.

நிறுவனத்தின் வியாபாரம் நன்றாக இருந்தாலும், நிர்வாகம், பங்குகள் அடமானம் அல்லது தேர்தல் முடிவு போன்ற வேறு பொதுவான காரணங்களுக்காக விலை இறங்குகிறது என்கிறபோது அவற்றை வாங்கலாம்.

அப்படி மிகக்குறைந்த விலைகளில் சில பங்குகளைத் தைரியமாக வாங்கியவர்கள் பின்னால் நல்ல லாபம் பார்த்த கதைகள் உண்டு. வேறு சில பங்குகளில் அதன்பின் மேலும் விலை இறங்கி அந்தப் பங்கு விலைகள் ஒன்றும் இல்லாமல் போனதும் உண்டு.

Share Market
Share Market

ஹெச்.டி.ஐ.எல், சுஸ்லான், ஜெயின் இரிகேஷன், ஜே.பி. அசோசியேட்ஸ், ரிலையன்ஸ் பவர், ஜெட் ஏர்வேஸ் என்று கெட்டுப்போன பங்குகளின் பட்டியல் மிக மிக நீளமானது.

அப்படிப்பட்ட கடுமையாக விலை குறைந்த பங்குகளின் பட்டியலைப் பார்த்தால் தலைசுற்றும்.

பலருக்கும் எஸ் பேங்க் கவர்ச்சியாக இருப்பதற்கு, அதன் முன்பிருந்த விலைக்கும் இப்போது இருக்கும் விலைக்குமான வேறுபாடுதான் காரணம். இப்போது வாங்கினால் பெரும் லாபம் பார்த்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

இதன் பெயர் என்ன?

யூகபேரம். ஆங்கிலத்தில், ஸ்பெக்குலேஷன். அவர்களது யூகம், ’எஸ் பேங்க் விலை வீழ்வது தற்காலிகம். மீண்டும் அது உயர்ந்துவிடும்.’

Speculation
Speculation

இதை ஏன் யூகம் என்கிறோம்?

இது யூகமேதான். பிறகு, அவர்கள் என்ன தகவலின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தார்கள்? நிச்சயமான தகவல் ஏதும் தென்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஒருவிதமான தகவல் வெளிவருகிறது. எது உண்மை என்று யாருக்குத் தெரியும்?

அவர்கள் எதிர்பார்ப்பதுபோல விலை உயர்ந்துவிடாதா?

உயரலாம். உயராமலும் போகலாம். இரண்டுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி இரண்டுக்கும் வாய்ப்பிருக்கும்போது, நாம் அந்த இரண்டில் ஒன்று நிச்சயம் நடக்கும் என்று நினைத்தால், அது ஸ்பெக்குலேஷன்தான்.

எஸ் பேங்க் பங்கை 100 ரூபாயில் வாங்கியவர் அந்த நேரத்தில் முதலீடு செய்ததும் அப்படிப்பட்டதுதான். அதுதான், ’இறுதி விலை குறைவு’ - லோவெஸ்ட் - இதற்கு மேல் விழாது என்று அவராக முடிவுக்கு வந்திருக்கிறார். மாட்டிக்கொண்டுவிட்டார்.

400 ரூபாய் விலைபோன ஆர்.எஸ்.சாப்ஃட்வேர் ஜூன் மாதம் 24 ரூபாய். இப்போது ரூபாய் 18. இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. ஒரு காலத்தில் பிரமாதம் என்று பலரும் நினைத்த எத்தனையோ பங்குகள் இருக்கின்றன. ஜூன் 25-ம் தேதி வாக்கில் வெளிவந்த ஒரு பட்டியல் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும்.

25 stock sample from life highs to CMP. June - 2019

1. Reliance Infra - ரூ.2500 > ரூ.45

2. LEEL - ரூ.340 > ரூ. 7

3. DHFL - ரூ.690 > ரூ.65

4. Rel Capital - ரூ.2924 > ரூ.62

5. Rel Power - ரூ.430 > ரூ.5

6. Jain Irrigation - ரூ.264 > ரூ.25

7. Mcleod - ரூ.325 > ரூ.20

8. Cox & King - ரூ.367 > ரூ.63

9. Eros Int - ரூ.643 > ரூ.27

10. J&K Bank - ரூ.176 > ரூ. 37

11. Jet Airways - ரூ.883 > ரூ.32

12. Vakrangee - ரூ.515 > ரூ.35

13. PC Jew - ரூ.600 > ரூ.43

14. Suzlon - ரூ.400 > ரூ.4

15. Kwality - ரூ.225 > ரூ.3

16. Oil Country - ரூ.172 > ரூ.7

17. JP Ass - ரூ.339 > ரூ. 4

18. Adlabs - ரூ.207 > ரூ. 5

19. Uttam Galva - ரூ.172 > ரூ.8

20. Patel Eng - ரூ.500 > ரூ.21

21. Manpasand - ரூ.500 > ரூ.30

22. RS Software - ரூ.400 > ரூ.24

23. Windsar - ரூ.150 > ரூ.26

24. Aban Offshore - ரூ.940 > ரூ.37

25. Bartronics - ரூ.255 > ரூ. 5

மேலே இருக்கும் பட்டியலில் உள்ள நிறுவனப் பங்குகளின் தொடர் விலை ஏற்றங்களைப் பார்த்தவர்கள், அவற்றின் விலைகள் இறங்கும்போது வாங்கியிருந்தால் பின்னால் என்ன ஆகியிருப்பார்கள்! ’விழும் கத்தியைப் பிடிப்பது போன்றது’ எனும் பொருள்பட அந்தச் செயலை, ஆங்கிலத்தில் 'Catching falling knife' என்பார்கள்.

Bajaj Hindustan
Bajaj Hindustan
ஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்! #SmartInvestorIn100Days - நாள் 9

ஒன்றரை ஆண்டுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிவிட்டு கீழே இறங்கியதும் அன்பர் ஒருவர் என்னை சந்தித்தார். கொஞ்சம் பொதுவாக மார்க்கெட் பற்றி கேட்டுவிட்டு பஜாஜ் ஹிந்துஸ்தான் பங்குகள் குறித்து கேட்டார்.

”பொதுவாக சுகர் இன்டஸ்ட்ரி சரியில்லை. அந்தப் பங்கும் அப்படித்தான் இருக்கும்” என்றேன். மீண்டும் மீண்டும் வேறு விதங்களில் அந்தப் பங்கின் விலை உயருமா என்று கேட்டார். இப்போது என்ன விலை நடக்கிறது என்று அவரிடம் கேட்டேன். 10 ரூபாய் என்றார். நீங்கள் வாங்கியது என்ன விலையில் என்று கேட்டேன். ”பல விலைகளில் வாங்கினேன். சராசரியாக 18 ரூபாய் அடக்கம் ஆகிறது” என்றார்.

Bajaj Hindustan Share Value
Bajaj Hindustan Share Value

அந்தப் பங்கின் விலை மீண்டும் உயருமா என்று அவர் கேட்க, ”நீங்கள் பாதியை விற்றுவிட்டு, வேறு விலை ஏறக்கூடிய பங்குகளை வாங்கிக்கொள்ளுங்களேன்” என்றேன். நட்டமாகிவிடுமே என்றார். 'என்ன, பங்கு ஒன்றுக்கு 8 ரூபாய்தானே' என்றேன்.

மௌனமாக இருந்தார். எவ்வளவு பங்குகள் வைத்திருக்கிறீர்கள் என்றேன். இரண்டு லட்சம் என்றாரே... பார்க்க வேண்டும். மனிதர், பஜாஜ் ஹிந்துஸ்தான் பங்கு விலை இறங்க இறங்க, தொடர்ந்து ஆவரேஜ் செய்துகொண்டே இருந்திருக்கிறார். அதற்காக அவரிடம் இருந்த மற்ற (நல்ல) பங்குகளை அவ்வப்போது விற்றிருக்கிறார்.

முன்பு இருந்த விலைகள் மட்டுமே, ஒரு பங்கை வாங்க சரியான காரணம் அல்ல. விலை அதிகம் இறங்காவிட்டாலும், நன்கு வியாபாரம் செய்து லாபம் ஈட்டி, பகிர்ந்தளிக்கும் நிறுவனப் பங்குகளையே, அதிலும் நிலைத்து நிற்கக்கூடிய பெரிய நிறுவனப் பங்குகளே எப்போதும் பாதுகாப்பானது என்பதுதான் என் அணுகுமுறை. பங்குகள்தான் வேண்டும் என்றால், அப்படிப்பட்ட பங்குகளைத் தேர்வுசெய்வதுதான் சரி. அப்படிப்பட்ட பங்குகள் இருக்கவே செய்கின்றன.

திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்ப, கனியிருப்பக் காய்கவர்ந்தற்று, என்பது, பங்குச் சந்தையில் தேர்வு செய்யும் பங்குகளுக்கும் பொருந்தும். நல்ல பங்குகள் பல கிடைக்கும்போது, ஏன் ஆபத்தான, ரிஸ்க்கான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்?

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

அடுத்த கட்டுரைக்கு