Published:Updated:

ஒரு பங்கின் விலை ஏறவும் இறங்கவும் என்னவெல்லாம் காரணம்? #SmartInvestorIn100Days நாள்-30

பல்வேறு பங்குகளின் விலைகள் தினசரி மாறும். ஒரு சிறிய அளவேனும் மாறும். அந்த மாறுதல்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும்.

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

டெக்னிக்கல் அனலிசிஸில் `சார்ட் பேட்டர்ன்ஸ்’ (Chart Patterns) என்று ஒன்று உண்டு. அது பின்னால் நடக்கக்கூடியதை முன் அறிவிப்பு செய்யும். முன்பு பார்த்த `சுவிங் ரிஜெக்‌ஷன்’ போல.

அனைவரும் சுலபமாக அடையாளம் காணக்கூடிய `சார்ட் பேட்டர்ன்ஸ்’-களில் ஒன்று `கேப் அப்’, மற்றொன்று `கேப் டவுன்’ (Gap up & Gap down).

பல்வேறு பங்குகளின் விலைகள் தினசரி மாறும். ஒரு சிறிய அளவேனும் மாறும். அந்த மாறுதல்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். உதாரணத்திற்கு திங்கள்கிழமை பங்கு ஒன்றின் விலை 780 ரூபாய் என்றால், செவ்வாய் அன்று அதன் விலை 780 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கும். அதன்பின் அது இறங்கலாம். உயரவும் செய்யலாம். இப்படியே அடுத்தடுத்த நாள்கள் அந்தப் பங்கின் விலை மாறும்.

பங்குச்சந்தையில் அதிரடி ஏற்றம்! தொடருமா? தற்காலிகமா? எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம்?

ஒரு பங்கின் விலை என்று சொல்லும் போது, குறிப்பிட்ட நாளில் அந்தப் பங்கு வர்த்தக நேர முடிவில் என்ன விலை நடந்ததோ (குளோசிங் பிரைஸ்) அதைத்தான் அன்றைய விலை என்பார்கள்.

அதே பங்கு, அன்றைய ஒரு தினமே பல விலைகளில் வர்த்தகம் ஆகியிருக்கும். ஒரு வர்த்தக நாளில் முதலில் நடக்கும் விலைக்குப் பெயர் , `ஓபனிங் பிரைஸ்’. முடியும் விலை, `குளோசிங் பிரைஸ்’. இரண்டுக்கும் நடுவில், வெவ்வேறு விலைகள் நடந்திருக்கும். அவை ஓபனிங் மற்றும் குளோசிங் விலைகளில் இருந்து மாறுபடலாம்.

குளோசிங் பிரைஸ்
குளோசிங் பிரைஸ்

அவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அன்றைய தினம் அந்தப் பங்கு போன மிக அதிக விலை என்ன என்று பார்ப்பார்கள். அந்த விலைக்குப் பெயர், `டேஸ் ஹை (Day’s high)' அதே நாள் நடந்த மிகக் குறைந்த விலைக்குப் பெயர், `டேஸ் லோ  (day’s low)'.

உதாரணத்திற்கு, அதிகம் டிரேட் ஆகும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கை எடுத்துக்கொள்ளலாம். 1.11.2019 அன்று, மும்பை பங்குச் சந்தையில் அந்தப் பங்கு நடந்த விலைகளைப் பார்க்கலாம்.

ஸ்டேட் பேங்க்
ஸ்டேட் பேங்க்

முதல் நாள் முடிவு விலை ரூ.313.50 என்கிற விலை, அடுத்த நாளும் நடந்திருக்கிறது. நடந்திருக்கிறது என்றால், அடுத்த நாளின் `லோ’ மற்றும் `ஹை’ விலைகளான ரூ.308.70 மற்றும் ரூ.315.10 என்ற ரேஞ்சுக்குள், நடந்திருக்கிறது. இதுதான் முதல் நாள் விலையுடனான தொடர்பு. முதல் நாள் ரேஞ்சுக்குள் அடுத்த நாளின் ஏதாவது ஒரு வர்த்தகம் நடந்திருக்க வேண்டும்.

இப்படி நடப்பதுதான் இயல்பு. விலை மாற்றங்களில் இடைவெளி இல்லை.

சந்தை நிலவரத்திலோ, நிறுவனத்தின் லாப நஷ்டங்களிலோ மிகப்பெரிய அல்லது விலையில் தாக்கம் தரவல்ல புதிய  செய்தி ஏதும் இல்லை. அதனால், அது முதல் நாள் விட்ட இடத்திலிருந்து மறுநாள் வர்த்தகம் நடக்கிறது.

முதல் நாள் வர்த்தகம் முடிந்தபின் சந்தைக்கு அல்லது துறைக்கு அல்லது நிறுவனத்திற்குத் தாக்கம் தரவல்ல பெரிய செய்திகள் ஏதேனும் வந்தால், அதன் தாக்கம் மறுநாள் வர்த்தகத்தில் எதிரொலிக்கும். செய்தியைத் தெரிந்துகொண்ட பலரும் வாங்கவோ விற்கவோ ஆயத்தமாக இருப்பார்கள்.

நல்ல செய்தியாக இருந்தால், முதல் நாள் `ஹை' விலையைக் காட்டிலும் அடுத்த நாள் `ஓப்பனிங்' விலை கூடுதலாக இருக்கும். கூடுதல் விலையில் வர்த்தகம் தொடங்கும். அப்படியென்றால் முதல்நாள் விலைகளுக்கும், அடுத்த நாள் விலைக்கும் இடையே வித்தியாசம். ஆங்கிலத்தில் கேப் அப்.

வர்த்தக ஆரம்பத்திலேயே இப்படி இருப்பதால் அதன் பெயர், `கேப் அப் ஓப்பனிங்’. செய்தி கெட்டதாக இருந்தால், முதல் நாள் `குளோசிங்' விலையைக் காட்டிலும் குறைவான விலைக்கு வர்த்தகம் தொடங்கினால், `கேப் டவுன் ஓப்பனிங்’

இப்படி நடப்பதை சார்ட்டில் பார்த்தால் தெரியும். சார்ட்களிலும் பல வகை உண்டு. அதில் கேண்டில் ஸ்டிக் வகை சார்ட்டில் பார்த்தால்தான் தெரியும். பங்குச்சந்தை டெக்னிக்கலின் ஒரு விதி என்ன என்றால், இப்படிப்பட்ட இடைவெளிகளை, விலைகள் மீண்டும் நிரப்பும் என்பதுதான் (Gaps will be filled).

முன்பு பார்த்த ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பங்கின், 24 செப்டம்பர் 2019-ன் குறைந்த பட்ச விலை 301 ரூபாய்.

ஸ்டேட் பேங்க்
ஸ்டேட் பேங்க்

அடுத்த நாள், 25 செப்டம்பர் 2019 அன்று, `ஓப்பனிங்' விலை 299 ரூபாய். அன்று முழுவதும் ஸ்டேட் பேங்க் பங்கின் விலை முதல்நாள் `குளோசிங்' விலையைத் தாண்டவில்லை. 301 ரூபாய்க்கும் 299 ரூபாய்க்கும் விலை வித்தியாசம் 2 ரூபாய். இதுதான் கேப்.

இந்த `கேப்’பை பின்னொரு நாள், ஒருமுறையேனும், தற்காலிகமாக இன்ட்ரா-டே வர்த்தகத்திலேனும், மற்றொரு வர்த்தகம் `ஃபில் அப்’ செய்யும். அதாவது அந்தத் தவறவிட்ட 301 ரூபாய் விலையைத் தொடும். தாண்டவும் செய்யலாம், தொட்டபின் மீண்டும் விழவும் செய்யலாம். ஆனால், அதைத் தொடும்.

பங்குச்சந்தை அநியாயங்கள்... உஷார்! #SmartInvestorIn100Days நாள்-14

ஸ்டேட் பேங்க் பங்கு விலை, 31 அக்டோபர் 2019-அன்று அந்த வேலை செய்தது. 291 ரூபாயில் ஓபன் ஆகி, 312 ரூபாயில் முடிந்தது. ஓவர். `கேப்’ இப்போது `ஃபில் அப்’ ஆகிவிட்டது. எல்லாப் பங்குகளிலும் இதே வேகத்தில், சீக்கிரமாக நடக்கவேண்டும் என்பதில்லை. அடுத்தடுத்து வரும் செய்திகளையும் செய்திகளின் தன்மைகளையும் பொறுத்து மாறும்.

ஸ்டேட் பேங்க்
ஸ்டேட் பேங்க்

இதே போன்ற `கேப்', சமீபத்தில் இன்ஃபோசிஸ் பங்கு விலையில் விழுந்தது. அக்டோபர் 18, `லோ' விலை 760 ரூபாய். அக்டோபர் 22 `ஹை' விலை 691 ரூபாய். 692 ரூபாயிலிருந்து 759 ரூபாய் வரை கேப். அந்த `கேப்' இன்னும் முழுவதும் மூடப்படவில்லை. ஆனால், அதற்கான வேலைகள் ஆரம்பித்திருப்பது `சார்ட்’ டில் தெரிகிறது.

இன்ஃபோசிஸ் பெரிய கேப் டவுன்
இன்ஃபோசிஸ் பெரிய கேப் டவுன்

பல ஆண்டுகளாகப் பல பங்குகளில், பல்வேறு தருணங்களில் சந்தைகளில் பார்த்த அனுபவங்களை வைத்து இதைச் சொல்கிறார்கள். இது பெரும்பாலும் நடக்கிறது. சில சமயங்களில் நடக்காமலும் போகலாம். ஆம். எல்லா `கேப்' களும் 'ஃபில் அப்' ஆகாது. `கேப்'களில் நான்கு வகைகள் உண்டு.

1.         பிரேக் அவே கேப்ஸ் – Breakaway Gaps

2.         எக்ஸாஷன் கேப்ஸ் – Exhaustion Gaps

3.         காமன் கேப்ஸ்  - Common Gaps

4.         கன்டினுவேஷன் கேப்ஸ்- Continuation Gaps

ரிஸ்க் Vs ரிவார்டு - செக்டார், தீமெட்டிக் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?

மூன்றாவது மற்றும் நான்காவது கேப்கள் ’ஃபில் அப்’ ஆகாமலும் போகலாம். உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் மீள முடியாத பெரும் சிக்கலில் இருப்பது தெரியவந்து, விலைகள் 'கேப் டவுன்' ஆனால். உதாரணத்துக்கு, சத்தியம் கம்ப்யூட்டர்ஸ்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.