Published:Updated:

178 கோடியை இழந்த ஜுன்ஜுன்வாலா கற்றுத்தரும் படிப்பினை! #SmartInvestorIn100Days நாள் -35

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

அத்தனை புகழ்பெற்ற ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவே சமீபத்தில் தீவான் ஹவுசிங் அண்டு ஃபைனான்ஸ் நிறுவனப் பங்குகளில் அடி வாங்கினார். சாதாரண அடி அல்ல. பெரிய அடி. 178 கோடி ரூபாய் இழப்பு.

கிரிக்கெட் விளையாட்டு பார்த்திருக்கிறோம். விளையாடியும் இருக்கிறோம். களமிறங்கி பேட் பிடிப்பவரின் நோக்கம் என்ன? அதிக ரன்கள் எடுக்க வேண்டும். அரை சதம், சதம் ஸ்கோர் செய்ய வேண்டும் என்று ஆசைகள் பெரிதாக இருக்கும். ஆட இறங்குகிறார். அவர் என்ன செய்தால் ரன் எடுக்க முடியும். அடித்து ஆட வேண்டும்.

சிலர் இருக்கிறார்கள். பேட்டை ஓங்கவே மாட்டார்கள். அடித்துவிட்டு எதிர்பக்கம் இருப்பவர், `கம் ஆன், கம் ஆன்’ என்று கரடியாகக் கத்தினாலும், between the wickets ஓட மாட்டார்கள். பந்தை எடுத்த பீல்டர் என்ன செய்யப்போகிறார் என்ற பயத்துடன் அவரையே பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

Vikatan

அவர்களது ஆசை, செஞ்சுரி அடிப்பது. ஆனால், அவர்கள் அணுகுமுறை, அவுட் ஆகிவிடாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை உறுதியாகச் செய்வது. அவர்கள் அப்ரோச், `டிபென்சிவ்’.

பேட்டைத் தூக்காமல், விக்கெட்டை பவுலர் அனுப்பும் பந்துக்கு காட்டாமல், எப்படி அடிப்பது, ரன் எடுப்பது...  பீல்டர்கள் இருப்பார்கள்தான். விக்கெட்டை நோக்கி பந்தை எறிவார்கள்தான். ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டி ரன்கள் எடுக்க வேண்டும். பலர் செய்கிறார்கள்.

ரன் எடுப்பது, குழுவின் வெற்றிக்கு உதவுவது, டீமில் தொடர்வது, பெயர், புகழ் பெறுவது எல்லாம் கிடைக்கும் வெகுமதிகள். `ரிவார்ட்’ கள். விக்கெட் போகலாம். அவுட் ஆகி, பெயர் கெடலாம் என்பது `ரிஸ்க்’. ஆடப்போகிறவர்கள் இரண்டையும் சந்திக்க வேண்டிவரும். ரிஸ்கும் ரிவார்டும் கலந்துதான் இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு கிடைக்கும் வட்டி, 6.5 சதவிகிதம் முதல் 7.5 சதவிகிதம் வரை. சேமிக்கிற பணத்துக்கு ரிஸ்க் எடுக்காமல் வங்கி டெபாசிட்டுகளாகப் போட்டு வைத்தால், பணி ஓய்வின்போது, வயது 60-ஐத் தாண்டிய பின் அந்தப் பணம் எந்த அளவில் இருக்கும்? அப்போது விலைவாசி என்னவாக இருக்கும்!

அந்தப் பணம் வாழ்க்கையை ஓட்டப் போதுமா?

சேமிக்கிற எல்லாப் பணத்தையும் மிகப் பாதுகாப்பான முதலீடுகளில் மட்டுமே ஈடுபடுத்தினால், பின்னால் குறைவாகத்தான் கிடைக்கும். ஓரளவு பணத்திற்காவது கூடுதல் வருமானம் ஈட்ட முயற்சிக்க வேண்டும். எல்லோரும் அல்ல. வயது 50-க்கு மேல் என்றால் முதலீட்டிற்கான பாதுகாப்புதான் முக்கியம். வயது இருபது முதல் 35 வரையில் என்றால், கூடுதல் வருமானம் தரும் முதலீடுகளிலும் ஓரளவு சேமிப்பை ஈடுபடுத்தவேண்டும். பங்குகளில் செய்யும் முதலீடு அப்படிப்பட்டதுதான். சரியாகச் செய்தால் அள்ளிக்கொடுக்கும் வலு அதற்கு உண்டு.

பங்குச் சந்தை தொடர்பான முதலீடுகள் இரண்டு வகைப்படும். முதலாவது `டைரக்ட் ஈக்விட்டி’. நேரடியாகப் பங்குகள் வாங்குவது, விற்பது. இரண்டாவது வகை, ஈக்விட்டி தொடர்பான மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது.

ஒரு வங்கி கணக்கு, அதில் கொஞ்சம் பணம். ஒரு டிமேட் கணக்கு. தவிர பங்குத்தரகர் நிறுவனத்திடம் திறக்கவேண்டிய ஒரு வர்த்தக கணக்கு. பான் எண், முகவரிச் சான்று இருந்தால் தேவைப்படும் கணக்குகள் ஒரு மணிநேரத்தில் தொடங்கிவிடலாம்.

இவை போதும். ஒருவர் பங்குச்சந்தையில் லிஸ்ட் ஆகியிருக்கும் பங்குகளை வாங்கலாம். நேரில் போய்ச் சொல்லியோ அல்லது இணையம்  மூலமாகவோ அல்லது ஒரு போன் கால் மூலமாகவோ வாங்கியவற்றை விற்கலாம்.

பங்குச்சந்தை முதலீடு
பங்குச்சந்தை முதலீடு

பங்கு வர்த்தகம் செய்வது, பங்குகளில் முதலீடு செய்வது, செயல் ரீதியாகப் பார்த்தால் இவ்வளவு சுலபமாகிவிட்டது. எவர் வேண்டுமானாலும் செய்யலாம். எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம்.

கிரிக்கெட் விளையாடுவதும் இப்படித்தானே. ஒரு பேட், ஒரு பந்து இருந்தால் போதும். விளையாடலாம். ஆனால், விரும்பும் சாதனைகள் செய்ய அவை மட்டுமே போதுமா? அதற்கான பயிற்சி, மனோநிலை, உழைப்பு வேண்டுமல்லவா?

எல்லாம் சுலபமாகிவிட்டதால், பல்வேறு தரகு நிறுவனங்களும், ஊடகங்களும் பங்குகள் குறித்து விவாதிப்பதால், சில முகவர்கள் அணுகி செய்யச்சொல்வதால், பங்கு வர்த்தகத்தில் இறங்கிவிடுகிறார்கள். அதில் இருக்கும் ரிவார்டுகள் பற்றி மட்டும் கொஞ்சம் தெரிந்துகொண்டு.

கவாஸ்கர், டெண்டுல்கர், தோனி, விராட் கோலி என்று நம் தலைமுறைக்குத் தெரிந்த அத்தனை கிரிக்கெட் வெற்றியாளர்களும் சும்மா தெரிந்துகொண்டு வந்தவர்களா? அது மட்டுமே தகுதியாக இருந்தவர்கள் வெற்றி பெற்றார்களா?

பங்குச்சந்தை அநியாயங்கள்... உஷார்! #SmartInvestorIn100Days நாள்-14

எந்த வயதில் இருந்து அறிமுகம்! நாள்  ஒன்றுக்கு எத்தனை மணிநேரப் பயிற்சி! எத்தனை விதமான பயிற்சிகள். எல்லாம் தாண்டி வந்தபின்பே, தன்னை நிரூபித்து ஆடி சாதிக்கிறார்கள்.

அரசியல், திரைப்படம், விளையாட்டுகள், கல்வி என்று எந்த தளத்தில் பெற்ற வெற்றிகளுக்குப் பின்னாலும் மாபெரும் கற்றல், பயிற்சி மற்றும்  உழைப்பு இருக்கிறது.

பங்குச் சந்தையும் அதற்கு விதிவிலக்கல்ல.

செய்ய முடிவது வேறு. வெற்றிகரமாக, லாபகரமாக செய்ய முடிவது வேறு. எது வேண்டும்?

உலக அளவில் வாரன் பஃபெட் பங்கு முதலீட்டில் மிகப்பெரும் வெற்றியாளர். அவரைப் போல, அவர் அளவு இல்லாவிட்டாலும் சமீபகாலத்தில் நம் நாட்டில் பங்கு வர்த்தகத்தில், முதலீட்டில் வெற்றிபெற்று பணம் செய்தவர், செய்துகொண்டிருப்பவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.

அத்தனை புகழ்பெற்ற அவரே சமீபத்தில் தீவான் ஹவுசிங் அண்டு ஃபைனான்ஸ் நிறுவனப் பங்குகளில் அடி வாங்கினார். சாதாரண அடி அல்ல. பெரிய அடி. 178 கோடி ரூபாய் இழப்பு. ஒரு முதலீட்டாளராக. அவர் அந்நிறுவனத்தின் 77 லட்சம் பங்குகள் வைத்திருந்திருக்கிறார். அந்தப்பங்கு 92 சதவிகிதம் விலை வீழ்ச்சி அடைந்தது. அதனால் அவருக்கு அவ்வளவு நஷ்டம்.

Rakesh Jhunjhunwala
Rakesh Jhunjhunwala

பங்குச் சந்தையில் இருக்கும் ஒரு ரிஸ்க் இது. அவர் அளவிலேயே கணிக்கமுடியாத சிக்கல் வெளிவந்து நஷ்டம் ஏற்படுத்தியது.

இதை அவர் சமாளித்தரா? மீண்டாரா? அல்லது அதனாலேயே மூழ்கிவிட்டாரா?

அவர் மூழ்கவில்லை. காரணம், ஒரு டெக்னிக். அது போர்ட்ஃபோலியோவில் டைவர்சிஃபிகேஷன்.

அவர் அந்த ஒரு பங்கை மட்டுமா வைத்திருக்கிறார்? அவர் சமீபத்தில் வாங்கிய எஸ் பேங்க் நிறுவனப்பங்குகளையும் சேர்த்து மொத்தம் 26 நிறுவனப் பங்குகளை அல்லவா வைத்திருக்கிறார்.

ராகேஷ் ஜுன்ஜூன்வாலாவின் நவம்பர் 2019 போர்ட்ஃபோலியோ. (கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லைடு புகைப்படங்களை பார்க்கவும்).

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

அடுத்த கட்டுரைக்கு