Published:Updated:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி? #SmartInvestorIn100Days -43

பங்குச்சந்தையில் அதிகம் புழங்கும் வார்த்தைகளில் ஒன்று, இந்த `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை வைத்து இதை விரிவாகப் பார்க்கலாம்.

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு செய்தி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ 10 லட்சம் கோடியைத் தொடவிருக்கிறது என்று. ``இன்னும் சில ஆயிரம் கோடிகள்தான்; சீக்கிரமே நடந்துவிடும்" என்றெல்லாம் பேசினார்கள்.

பங்குச்சந்தையில் அதிகம் புழங்கும் வார்த்தைகளில் ஒன்று, இந்த `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’. மியூச்சுவல் ஃபண்ட்களிலும் பயன்படுத்துவார்கள். அது, லார்ஜ் கேப் ஃபண்ட். இது, ஸ்மால் கேப் ஃபண்ட் என்பது போல வகைப்படுத்துவார்கள். `கேப்’ என்பது `கேப்பிட்டலைசேஷன்’ என்பதன் சுருக்கம்.

இவை பற்றி சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்றுதான்.

ஒரு நிறுவனத்தில் போடப்பட்டிருக்கும் முதலுக்கு, கேப்பிட்டல் என்று பெயர். 2 கோடி ரூபாய் முதல் போட்டிருந்தால், அந்த நிறுவனத்தின் ஷேர் கேப்பிட்டல் 2 கோடி. அது, ஈக்விட்டி பங்குகளாகத்தான் இருக்கும். அதனால், ஈக்விட்டி கேப்பிட்டல். மற்றொரு வகைக்குப் பெயர், பிரிஃபரன்ஸ் ஷேர்கள். அதை இப்போதைக்கு விட்டுவிடலாம்.

மார்க்கெட் கேப்
மார்க்கெட் கேப்

நிறுவனம் அதன் முதல் பணத்தை, அதாவது கேப்பிட்டலை, குறிப்பிட்ட முகமதிப்புள்ள பங்குகளாக வெளியிட்டிருக்கும். முகமதிப்பு என்பதை ஆங்கிலத்தில் `ஃபேஸ் வேல்யு’ என்பார்கள். (ரூபாயில் டினாமினேஷன் இருப்பது போல) பெரும்பாலான நிறுவனங்கள் 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளாகத்தான் வெளியிட்டிருப்பார்கள். 2 கோடி ரூபாய் நிறுவனத்தின் `முதல்’ என்றால், 20 லட்சம் எண்ணிக்கையிலான 10 ரூபாய் பங்குகளாக அது இருக்கும்.

இந்தப் பங்குகள், பங்குச்சந்தைகளில் பட்டியல் இடப்படும். அதன்பின், அந்தப் பங்குகளில் வர்த்தகம் நடக்கும். சிலர் வாங்குவார்கள், சிலர் விற்பார்கள். அதனால் அந்தப் பங்குகளின் விலையில் மாற்றங்கள் இருக்கும்.

வெளியிடும்போதே சில நிறுவனங்கள், ``எங்கள் நிறுவனப் பங்கின் முகமதிப்பு 10 ரூபாய்தான். ஆனால், எங்கள் நிறுவனம் ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகின்றன. அது பிரமாதமாக வியாபாரம் செய்துகொண்டிருக்கிறது. அதனால் நன்றாக சம்பாதித்துக்கொண்டிருக்கிறது. எங்கள் வசம் இருக்கும் பங்குகளில் ஒரு பகுதியை கேட்பவர்களுக்குக் கொடுக்கவிருக்கிறோம். `இன்ன’ அளவு சம்பாதிக்கும் நிறுவனம் என்பதால், முகமதிப்பு அளவுக்கே தர இயலாது. எங்களுக்கு கூடுதல் விலை வேண்டும். நாங்கள் கேட்கும் பிரீமியம் தருபவர்களுக்கு நாங்கள் பங்குகளைக் கொடுக்கத் தயார்" என்பார்கள்.

அப்படி வெளியிடப்படுவதன் பெயர் `பிரீமியம் இஷ்யு’. முகமதிப்பு விலைக்கே கொடுத்தால், `அட் பார் இஷ்யு’ . விலை குறைத்துக்கொடுக்கும் நிலைமையும் வரலாம். அப்படிக்கொடுத்தால் அது, `அட் டிஸ்கவுண்ட் இஷ்யு’

பங்கு முதலீடு
பங்கு முதலீடு

அப்படி சமீபத்தில் `அட் பிரீமியம்’ கொடுக்கப்பட்ட பங்கு, IRCTC. பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்குகளை 310 ரூபாய் பிரீமியம் வைத்து 320 ரூபாய் என்று கொடுத்தார்கள். அந்தப் பங்கு, பட்டியல் இடப்பட்ட அன்றே 728 ரூபாய் விலை போனது. இப்போது 880 ரூபாய்க்கும் மேல் விலை நடக்கிறது.

IRCTC -யின் மொத்த கேப்பிட்டல் 160 கோடி ரூபாய். 10 ரூபாய் பங்குகளாக இருப்பதால், 16 கோடி பத்து ரூபாய் பங்குகள். நவம்பர் 21-ம் தேதி IRCTC பங்கின் முடிவு விலை 884.80 ரூபாய். அதனால் அன்றைய தினம் அதன் மார்கெட் கேப்பிட்டலைசேஷன், 16 கோடி X 884.80.
டாடா மோட்டார்ஸ், IRCTC பங்குகளால் கிடைத்த படிப்பினைகள்! #SmartInvestorIn100Days நாள்-28

ஆமாம். மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் என்பது பங்குகளின் எண்ணிக்கையை அதன் சந்தை விலையால் பெருக்கினால் வருவது. IRCTC -யின் 21.11.19 மார்க்கெட் கேப்பிடலைசேஷன் 14,156 கோடி ரூபாய்கள்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் RIL, மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி ரூபாய்.

14,000 கோடி எங்கே, 10,00,000 லட்சம் கோடி எங்கே!

அதுதான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியும், முகேஷ் அம்பானியும் கொண்டாடிக்கொண்டிருக்கக் காரணம்.

RIL நிறுவனத்தின் கேப்பிட்டல், 6,339 கோடி ரூபாய்கள். 10 ரூபாய் பங்குகளின் எண்ணிக்கை, 633.9 கோடி. அதன் 21.11.19 முடிவு விலை 1,545 ரூபாய். மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன், 9,79,375 கோடி ரூபாய்கள். பத்து லட்சம் கோடிக்கு இன்னும் 20,000 கோடிகள் வேண்டும். ஒரு பங்கிற்கு 32 ரூபாய் விலை உயர்ந்தால் போதும்.

மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனைப் பொறுத்தவரை இந்தியாவில் முதலிடத்தில் இருப்பது RIL. அடுத்த இடத்தில் TCS, மூன்றாவது இடத்தில் HDFC Bank.

முதல் சில இடங்களில் இருக்கும் பிற நிறுவனங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா.

இந்தப் பட்டியலில் இருக்கும் எண்கள் பங்கு விலைகள் மாறுவதைப் பொறுத்து மாறுபடும்.
இந்தப் பட்டியலில் இருக்கும் எண்கள் பங்கு விலைகள் மாறுவதைப் பொறுத்து மாறுபடும்.
- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.