Published:Updated:

நிதிநிலை அறிக்கைக்குப் பின், இன்ஃபோசிஸ் விலை குறைந்தது, டி.சி.எஸ். விலை அதிகமானது... ஏன்? - நாள்-18

நல்ல ரிசல்ட் கொடுத்த இன்ஃபோசிஸ் பங்கு, அடுத்த சில நாள்களுக்கு விலை குறைவதும், சந்தை சரியில்லை என்று அபிப்ராயப்படும்படி ரிசல்ட் கொடுத்த TCS பங்கு விலைகள், ரிசல்ட் வந்தபின் உயர்வதும் சிலருக்கு வினோதமாகத் தெரியலாம். அப்படி நடப்பது ஏன் தெரியுமா?

#SmartInvestorIn100days
#SmartInvestorIn100days

முதலீடு செய்பவர்கள், ஒவ்வொரு காலாண்டு நிதிநிலை முடிவுக்கும் பெரிய முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஆனால், டிரேட் செய்பவர்கள் அப்படியல்ல. அவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இதில் நல்ல லாபம் பார்ப்பவர்களும் உண்டு. பெரும் நஷ்டத்தில் மாட்டிக்கொள்கிறவர்களும் உண்டு.

TCS மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய இரு பெரும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளை இதற்கு உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.

இரண்டுமே முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் மற்றும் வருமானம் தரும் பங்குகள். நாம் முன்பு பார்த்த ஐந்து லட்சணங்களும் இருக்கிற நிறுவனப் பங்குகள்.

TCS
TCS

TCS நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் அக்டோபர் 12-ம் தேதி சனிக்கிழமை அன்று வெளியிடப்படும் என்று அறிவிப்பு வந்தது.

அதற்கு முந்தைய ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டிலேயே TCS, எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவான வியாபாரம் மற்றும் லாபம் காட்டியிருந்தது. செப்டம்பர் மாதத்துடன் முடியும் அடுத்த காலாண்டு நிதிநிலை முடிவுகள் அதையொட்டியே இருக்கும் அல்லது மிகச்சிறு வளர்ச்சி மட்டுமே கண்டிருக்கும் என்று பல தரகு நிறுவனங்களும் கணிப்பு வெளியிட்டிருந்தன.

பங்குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா? #SmartInvestorIn100days - நாள்-16

சில தரகு நிறுவனங்களும் முதலீட்டு நிறுவனங்களும் இனி இந்த விலைக்குக் குறையும் என்று டார்கெட் விலையும் வெளியிட்டிருந்தன.

இப்படி கணிப்புகள் செய்வோரும் அவற்றைத் தெரிந்து கொள்வோரில் சிலரும் ரிசல்ட் வந்ததும் நிச்சயம் விலை இறங்கிவிடும் என்கிற எதிர்பார்ப்பில், அந்தப் பங்குகளை முன்கூட்டியே சந்தையில் விற்றார்கள். கையில் இல்லாமல் விற்க முடியும் என்றும் அதன் பெயர் 'ஷார்ட் போடுவது' என்றும் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். தவிர, கையில் இருக்கும் பங்குகளை விற்றுவிடுவோரும் உண்டு.

12-ம் தேதி வரவிருந்த ரிசல்ட் போதுமானதாக இருக்காது என்று எதிர்பார்த்து, 4-ம் தேதி 2,079 ரூபாய் இருந்த TCS பங்கு விலை, அன்றிலிருந்து தொடர்ந்து இறங்கி, ரிசல்ட்டுக்கு முதல் நாள், அதாவது அக்டோபர் 11-ம் தேதி அன்று வர்த்தகத்தில் 1,929 ரூபாய் என்கிற நிலைக்குப் போய்விட்டு, வர்த்தக முடிவில் 1,986 என்கிற நிலையில் நின்றது. பங்கு ஒன்றுக்கு சுமார் 107 ரூபாய் குறைவு.

இப்படியாக TCS பங்கு விலை, அதன் காலாண்டு முடிவுகள் வெளிவருவதற்கு முன் இறங்கியது.

TCS
TCS

12-ம் தேதி வந்த ரிசல்ட், வல்லுனர்கள் கணித்தது போல சுமாராகத்தான் இருந்தது. அப்படியென்றால், அதன் விலை மேலும் இறங்கியிருக்க வேண்டும் அல்லவா?

ஆனால், ரிசல்ட் வந்த சனிக்கிழமைக்கு அடுத்த வர்த்தக நாளான திங்கள்ழமை முதல் TCS பங்கு விலையில் ஏற்றம்தான்! அக்டோபர் 16 அன்று 2,046 என்ற அளவுக்குப் போய்விட்டது.

TCS
TCS

ஏன் இப்படி எதிர்பார்ப்பிற்கு மாறாக நிகழ்ந்தது?

அதைப்பற்றி பார்ப்பதற்கு முன், மற்றொரு ஜாம்பவான் பங்கான இன்போசிஸின் இரண்டாம் காலண்டு நிதிநிலை முடிவுகள் மற்றும் விலைகள் மீதான அந்த ரிசல்ட்டின் தாக்கத்தையும் பார்த்துவிடலாம்.

இன்போசிஸ் ரிசல்ட் அக்டோபர் 11, வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் லாபம் மற்றும் விகிதங்கள் முன்பைவிட கூடுதலாக இருக்கும் என்று வல்லுநர்கள் (அனலிஸ்ட்கள்) மற்றும் தரகு நிறுவனங்கள் கணித்தன. எதிர்பார்ப்பு தெரிவித்தன.

பங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா?!

அக்டோபர் 7-ம் தேதி, 789 ரூபாய் இருந்த இன்ஃபோசிஸ் பங்கு விலை, தொடர்ந்து உயர்ந்து, ரிசல்ட் வரவிருந்த 11-ம் தேதியன்று 824 ரூபாய் வரை உயர்ந்துவிட்டு பின், 819 ரூபாயில் முடிவுற்றது.

வந்த ரிசல்ட்டில், எதிர்பார்த்தது போலவே லாபமும் விகிதங்களும் உயர்ந்து இருந்தன. நியாயமாகப் பார்த்தால் அதன்பின் விலை தொடர்ந்து உயர வேண்டும். ஆனால், அந்தப் பங்கின் விலை விழுந்தது. 14-ம் தேதி இன்ஃபோசிஸ் பங்கு விலை, 789 ரூபாயில் தொடங்கி 785 ரூபாயில் முடிவுற்றது.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்

ஏன்?

சந்தையின் போக்குகள் குறித்து அதிகம் அறியாதவர்கள், இப்படிப்பட்ட நிகழ்வுகளால் நட்டப்படக்கூடும்.

நல்ல ரிசல்ட் கொடுத்த இன்போசிஸ் பங்கு, அடுத்த சில நாள்களுக்கு விலை குறைவதும், சந்தை சரியில்லை என்று அபிப்ராயப்படும்படி ரிசல்ட் கொடுத்த TCS பங்கு விலைகள், ரிசல்ட் வந்தபின் உயர்வதும் சிலருக்கு வினோதமாகத் தெரியலாம். அப்படி நடப்பது ஏன் தெரியுமா?

இந்தக் கேள்விக்கு சந்தை மொழியிலேயே பதில் சொல்வதென்றால் இப்படிச் சொல்லலாம். `அந்த ரிசல்ட்டுகள் ஆல்ரெடி டிஸ்கவுண்டட்’.

வரவிருக்கும் செய்திக்கான விலை மாற்றத்தை ஏற்கெனவே சந்தை செய்துவிட்டது. அதனால் செய்தி வந்தபோது சந்தையால் மீண்டும் ஒருமுறை மறுவினையாற்ற (ரியாக்ட் செய்ய) முடியவில்லை.

Share Market
Share Market

மேலும், வரப்போகிற செய்திக்காக விலையை இறக்குவதோ ஏற்றுவதோ, செய்திக்கு ஏற்ற அளவுதானே செய்ய வேண்டும்? ஆனால், விவரம் தெரிந்தவர் தெரியாதவர் என்று பலரும் ஒரே திசையில் விலையை ஏற்றவோ இறக்கவோ செய்வார்கள். அவர்கள் பலர் அப்படிச் செய்ய, விலை இறங்கவேண்டியதைக் காட்டிலும் அல்லது அதிகரிக்கவைக்க வேண்டியதைக் காட்டிலும் கூடுதலாக மாறிவிடும்.

அதன்பின் அந்த அதிகத்தைச் சரிசெய்கிறேன் என்று அதற்கு எதிர்திசையில், அவர்களோ அல்லது வேறு சிலரோ, வாங்கவோ விற்கவோ செய்ய, ரிசல்ட் வந்தபின் விலை போகவேண்டிய திசைக்கு மாறான திசையில் நகரும். வியப்பூட்டும்.

இதனால்தான் விவரம் தெரியாமல் டிரேடில் இறங்கினால் சிக்கல், நஷ்டம் என்பது. நல்ல ரிசல்ட்டுக்குப் பின் விலை இறக்கம். சுமாரான ரிசல்டுக்குப் பின் விலை ஏற்றம் என்பனவும் சாத்தியமே.

Share Market
Share Market

முதலீட்டில் இந்தப் பிரச்னை இல்லை. காரணம், இந்தக் குழப்பங்கள் எல்லாம் சில நாள்களுக்குத்தான். பின்னர் சரியாகிவிடும். அதுவரை தாங்க முடியாமல் விற்றால்தான் நட்டம். அது, டிரேட் செய்பவர்களின் டெலிவரி எடுத்துவைக்கும் கெப்பாசிட்டியைப் பொறுத்தது.

வெற்றிகரமான டிரேடர்களுக்குப் பழக்கமான ஒரு பங்குச் சந்தை முதுமொழி, 'பை ஆன் ரூமர். செல் ஆன் நியூஸ்' (Buy on Rumour. Sell on news).

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.