Published:Updated:

ஹர்ஷத் மேத்தாவால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா?#SmartInvestorIn100Days நாள்-51

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

1991-ல் நரசிம்மராவ் ஆட்சியில் செய்யப்பட்ட Liberalisation, Privatisation & Globalisation காரணமாக 1992 ஆகஸ்ட் செப்டம்பர் வரை தொடர்ந்து எகிறிக்கொண்டிருந்த பங்கு விலைகள், `மீண்டும் ஒரு ஊழல்’ என்ற செய்தியால் தடைபட்டன.

எதுவுமே நேர்கோட்டில் தொடர்ந்து வெகுகாலம் பயணிக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் வந்தே தீரும். சைக்கிளில் மேலே போன பெடல் கீழே வருவதுபோல, கீழே இருந்த பெடல் மேலே போவதுபோல பல்வேறு பொருளாதாரக் கூறுகளும் மாறுதலுக்கு உள்ளாகும்.

அதுவரை நாட்டில் நிலவிய குறைந்த வட்டி விகிதம், தாராளமாகக் கிடைத்த கடன், தொடர்ந்து உயர்ந்த மக்களின் வருமானம் மற்றும் வாங்கும் சக்தி ஆகியவை குறையும். அவற்றின் காரணமாக அதற்கு முன்னர் நிலவிய `வியாபாரங்களுக்குச் சாதகமான சூழல்’ மெல்ல மெல்ல மாறும்.

கரடியின் பிடியில் பங்குச்சந்தை
கரடியின் பிடியில் பங்குச்சந்தை

வட்டி விகிதங்கள் உயர்ந்து, வியாபாரத்துக்குக் கிடைக்கிற கடன் தொகைகள் குறைந்துவிடும்; இடுபொருள்கள் விலை உயர்ந்துவிடும்; `இன்னும் விற்கும். இன்னும் விற்கும்’ என்கிற எதிர்பார்ப்பில் செய்த தொழிலக விரிவாக்கங்கள் உற்பத்தி செய்து தள்ளும் அளவுக்கு பொருள்கள் விற்பனை ஆகாமல் தேங்க ஆரம்பிக்கும். (இப்போது நடக்கும் மோட்டார் வாகன விற்பனை தேக்கம்போல).

இதனால் நிறுவனங்களின் வியாபாரம் குறையும், அதனால் லாபம் குறையும். ஆனாலும், நிலைமையில் வந்திருக்கும் மாற்றங்களை உணராமல், பழைய நினைப்பிலேயே பலரும் பங்குகளைத் தொடர்ந்து வாங்குவார்கள்.

பங்குகளின் விலைகளுக்கும் அவை தரும் வருமானம் மற்றும் பிற வாய்ப்புகளுக்கும் இருக்கும் தொடர்பு குறையும். விவரமறிந்த சிலர் இதை, `Market has become expensive' என்பார்கள். பங்குகளை விற்க ஆரம்பிப்பார்கள். ஆனால், சந்தை பற்றி அதிகம் தெரியாதவர்கள், முதல் சில வர்த்தகங்களில் லாபம் மட்டுமே பார்த்தவர்கள், நிலைமை மாறிவிட்டதை உணரமாட்டார்கள். கையில் இருப்பதை விற்காததுடன், `அட விலைகள் கொஞ்சம் இறங்கி இருக்கிறதே, இது நல்ல சந்தர்ப்பம்' என்று மேலும் வாங்குவார்கள்.

சிலர் விற்க, வேறு சிலர் வாங்க, சந்தை, சின்ன இறக்கங்களும் சின்ன ஏற்றங்களுமாகப் போக்குப் புரியாமல் அலைபாய்ந்துகொண்டிருக்கும். இதை, `சைடு வே மூவ்மென்ட்’ என்பார்கள்.

`இந்த நிலைமை தற்காலிகம். நிலைமையில் முன்னேற்றம் வரும். மீண்டும் பங்கு விலைகள் உயரும்’ என்ற தகவல்களும் சந்தையில் பரப்பப்படும். `இல்லை ஆட்டம் முடிந்தது’ என்று வேறு சிலர் சொல்வார்கள்.

பின்னர், சின்னச் சின்ன சாதகமில்லாத புள்ளி விவரங்களுக்குகூட மதிப்பளித்து, சந்தை இறங்கும். ஆனாலும் மீண்டும் கொஞ்சம் உயரும். மீண்டும் ஒரு செய்திக்கு விழும். கொஞ்சம் மீளும்.

பின்பு ஒரு பெரிய `கெட்ட செய்தி’ வரும். அன்றைக்கு ஒரு பெரிய அடியாக அடிப்பார்கள். ஒரே நாளில் சந்தை மூன்று நான்கு சதவிகிதம் விழும். செய்தி அடிப்படையானதாக இருந்தால் அடுத்தடுத்த நாள்களும் விலைகள் விழும்.

1985 - 86-ல் இருந்த `ஃபுல் ரன்’க்கு அப்படித்தான் `போஃபர்ஸ் ஊழல்’ என்ற செய்தி வந்தவுடன், 1987-ல் `காளையின் ஓட்டம் முடிவுக்கு வந்தது. பெரிய வீழ்ச்சி.

அதன்பின், 1991-ல் நரசிம்மராவ் ஆட்சியில் செய்யப்பட்ட Liberalisation, Privatisation & Globalisation காரணமாக 1992 ஆகஸ்ட் செப்டம்பர் வரை தொடர்ந்து எகிறிக்கொண்டிருந்த பங்கு விலைகள், `மீண்டும் ஒரு ஊழல்’ என்ற செய்தியால் தடைபட்டன. அந்தக் கெட்ட செய்தியின் பெயர் ஹர்ஷத் மேத்தா ஊழல்.

அதுவரை வரலாறு காணாத அளவு விலைகள் உயர்ந்து கொண்டிருந்த பங்குகளின் விலைகள், 28 ஏப்ரல் 1992 அன்று, ஒரே நாளில் தலைகுப்புற விழுந்தன. அடி என்றால் சாதாரண அடியல்ல. 12.77 சதவிகிதம் வீழ்ச்சி. ஹர்ஷத் மேத்தா என்ற Big Bull ஊழல் செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியானதால் ஏற்பட்ட `கிராஷ்’.

இது பங்குச்சந்தையின் `டாப் கியர்' காலமா? முதலீடு செய்யலாமா?!  #SmartInvestorIn100Days நாள்- 50

23 ஏப்ரல் 1992 அன்று சுசிதா தலால் (Sucheta Dalal) என்ற நிருபர், `டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் ஹர்ஷத் மேத்தா வங்கிகளில் தவறாகப் பணம் பெற்று, அதைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பது குறித்து எழுதினார். 1994 வரை தொடர்ந்த வீழ்ச்சியில், 1992-ல் இருந்த விலைகளில் 70% காணாமல் போனது.

2000-ம் ஆண்டில் காணப்பட்ட `டெக்னாலஜி பூம்’ல் பெரிய அளவுகளில் விலை உயர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனப்பங்கு விலைகள், பின்பு பெரிய அளவுகளில் விழுந்தன.

அதன்பின் 2003-ல் தொடங்கிய `பூம்’ 2008 வரை தொடர்ந்தது. அந்தக் காலகட்டத்தில் விலைகள் விண்ணுக்குப் போய்விட்டன. அமெரிக்காவில் `சப் பிரைம்’ சிக்கல் என்ற கெட்ட செய்தி வர, விலைகள் குப்புற அடித்து விழுந்தன.

பங்கின் விலை வீழ்ச்சி
பங்கின் விலை வீழ்ச்சி
GDP குறைந்திருப்பதால் பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சியடையுமா? #SmartInvestorIn100Days நாள்-49

பின்பு, அதிலிருந்து மீண்டு, திரும்ப விழுந்து, அதன்பின் 2013-ம் ஆண்டு உயரத்தொடங்கி, இப்போதும் காளையின் ஓட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆறு ஆண்டுகளாக விலைகள் உயர்வு. அதன் விளைவாக, முன் எப்போதும் இல்லாத அளவாக, சென்செக்ஸ் 41,000 புள்ளிகள், நிஃப்டி 12,000 புள்ளிகள் என்று ஜெயக் கொடி பறந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலை தொடருமா? அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

அடுத்த கட்டுரைக்கு