Published:Updated:

நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா?#SmartInvestorIn100Days - நாள் 1

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும் பொருளாதார ஏற்ற இறக்கங்களை அலசும் தொடர்!

எழுத்தாளர், பயிற்சியாளர், ஆலோசகர் எனப் பன்முகம் கொண்டவர் சோம.வள்ளியப்பன். இவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள...

சோம.வள்ளியப்பன்

#SmartInvestorIn100Days - நாள் 1

  • மோட்டார் வாகனங்கள் விற்பனையில் கடும் சரிவு

  • ரியல் எஸ்டேட் துறையில் தொடரும் மந்தநிலை

  • பங்குச் சந்தைகளிலிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேற்றம்

  • ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவாக, வெறும் 5 சதவிகிதமாக குறைந்திருக்கும் இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி

  • 2020 முதல் உலகின் பலநாடுகளிலும் பொருளாதார சுணக்கம் வரக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு.

இப்படியாக சோர்வும் அச்சமும் தரும் பல்வேறு செய்திகள் உலா வரும் செப்டம்பர் 2019-ல் நாம் ஆரம்பிக்கும் இந்தத் தொடரில் பார்க்கப்போவது அப்படிப்பட்ட செய்திகளின் அலசல்கள்தான்.

வேலைவாய்ப்புகள், வருமானத்திற்கான வழிகள், பணம், சேமிப்பு, முதலீடுகள், காப்பீடு, பட்ஜெட் பங்குகள் என ஆர்வத்தைத் தூண்டும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றனவே.

பொருளாதாரம் போரடிக்கிற சப்ஜெக்ட்டாக இருந்த காலம் போயே விட்டது. தினசரிகளில் மட்டுமல்ல. வார மாத இதழ்களில் மட்டுமல்ல. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தாண்டி, தற்போது சமூக ஊடகங்களிலும் கணிசமான அளவு இடம் பெறுவதும் கவனிக்கப்படுவதும் பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

”வங்கிகள் மற்றும் தபாலாபீசுகள் பிக்சட் டெபாசிட்களுக்குத் தரும் வட்டி விகிதங்கள் மிகச் சுமாராக அல்லவா இருக்கின்றன; வங்கிகள் தருவதைக் காட்டிலும் சற்று அதிகமான வட்டி மற்றும் வரிச்சலுகை ஆகியன தந்தாலும், அவசரத்திற்கு திரும்ப எடுக்க முடியாது. 15 ஆண்டுகளுக்கு ’லாக் இன் பீரியட்’ என்றல்லவா பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் தெரிவிக்கிறது? விலை இப்போது உயர்கிறதுதான். ஆனால் எப்போதும் தொடர்ந்து இதேபோல உயர்ந்துகொண்டிருக்கும் என்று சொல்லமுடியாத முதலீடாகத்தானே இருக்கிறது தங்கம்? முதலீட்டிற்கான வாய்ப்புகள் பலவும் இப்படியிருந்தால் சேமித்த பணத்தை எங்கேதான் முதலீடு செய்வதாம்?

நான் 36 அல்லது 24 சதவிகித அதிக வட்டிக்கெல்லாம் ஆசைப்படவில்லை. என் முதலீட்டிற்கு பெரும் லாபம் எல்லாம் எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் நாட்டில் நிலவும் பணவீக்கத்தை சமாளித்து, அதற்கும் சற்று கூடுதலாக அதாவது ஆண்டுக்கு 12 அல்லது 15 சதவிகித வளர்ச்சியாவது வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட முதலீட்டு வாய்ப்புகள் எங்கே இருக்கின்றன?
Indian Rupee
Indian Rupee
எனக்கு வயது, நாற்பதுக்குள்தான். எனக்கு ரிஸ்க் எடுக்கும் வயதும், தைரியமும் இருக்கிறது. வேலை போக, கணிசமான நேரமும் இருக்கிறது. பாதுகாப்பானதாகவே இருந்தாலும் வங்கிகள் தரும் வெறும் 7 சதவிகித வட்டி வருமானமெல்லாம் எனக்குப் போதவே போதாது. நான், இப்போது ரிஸ்க் எடுக்காமல் பிறகு எப்போது எடுக்கமுடியும்?
என்னுடைய முழுப் பணத்திற்கும் இல்லாவிட்டாலும், ஒரு பகுதி பணத்தையாவது 12-15% வருமானம் வரும் வகையில் முதலீடு செய்தால்தானே என் வருங்கால தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளமுடியும்?”

நீங்கள் அவசியம் இறங்கவேண்டிய அல்லது செய்யவேண்டிய ஒன்று எனப் பங்குச் சந்தையைச் சொல்லவில்லை. இப்படியெல்லாம் யோசிப்பவராக இருந்தால், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் பங்குச்சந்தை, பங்குகளில் முதலீடு மற்றும் மற்றும் பரஸ்பர நிதிகள்.

கவனித்திருக்கலாம். நீங்கள் அவசியம் இறங்கவேண்டிய அல்லது செய்யவேண்டிய ஒன்று எனப் பங்குச் சந்தையைச் சொல்லவில்லை. தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்றுதான் சொல்கிறேன். ஆமாம். செய்யப்போகிறோமோ இல்லையோ. அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.

அங்கே அப்படி என்னதான் நடக்கிறது, அதன் மீது பலருக்கு அவ்வளவு மோகம்? அதே போல பலருக்கு ஏன் அத்தனை பயம்? இன்னும் பலருக்கு ஏன் அதன் மீது பெரிய வன்மம்? அதெப்படி ஒரே விஷயத்தின் மீது இத்தனை வேறுபட்ட உணர்வுகள் இருக்க முடியும் என்று தெரிந்துள்ளவேண்டுமல்லவா? அதற்காகத்தான் இந்தத் தொடர்.

அதனால் அடுத்த நூறு நாள்களுக்கு ஒரு வேலை செய்யப்போகிறோம். ஆமாம், போகிறோம்தான். இதில் உங்கள் பங்கும் உண்டு. தினம் ஒன்றிரெண்டு முக்கிய பொருளாதார நிகழ்வுகள் குறித்து அலசல். நூறு நாள்களுக்கு தினம் தினம்.

முக்கியமானவற்றை எளிமையாக... ஆனால் முழுமையாக!

அதுகுறித்தோ அல்லது அதன் தொடர்பாகவோ உங்கள் கருத்துகளை தெரிவிப்பதுடன், நீங்கள் சந்தேகங்கள், விளக்கங்கள் கேட்கலாம். கேட்க வேண்டும். சுவாரஸ்யமான, பலருக்கும் பலன்தரக்கூடிய கேள்விகளை தேர்வுசெய்து இதே பகுதியில் அவற்றுக்கு பதில் சொல்வேன். சரி, முதல் விஷயமாக எதை எடுத்துக்கொள்ளலாம்?

1. தங்கத்தை என்ன செய்வது?

1961-ம் ஆண்டு தங்கம் விலை அதுவரை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. சவரன் விலை ரூ 91. தற்போது அதே சவரன் விலை ரூ.28,888.

அடேயப்பா! நூறு ரூபாய்க்கும் குறைவாக இருந்தது இப்போது கிட்டத்தட்ட 29 ஆயிரமா! என்ன விலை ஏற்றம்... என்ன விலை ஏற்றம்... என்று வியப்பவரா நீங்கள்?

கொஞ்சம் பொறுங்கள். உங்களுக்கு சில தகவல்கள் சொல்ல வேண்டும். நிச்சயம் இது நல்ல விலை உயர்வுதான். ஆனால்...

Gold
Gold

என்ன ஆனால் என்று கேட்பீர்கள்தானே!

1961க்கும் இப்போதைக்கும் இடையே 59 ஆண்டுகள். அப்படியென்றால் 59 ஆண்டுகளில் இந்த விலை உயர்வு. தங்கமாக இருந்த நேரம், அது வேறு ஒரு வருமானமும் தந்திருக்காது. அதை நகையாகப் போட்டுகொண்டிருந்தால் சந்தோஷம் கிடைத்திருக்கும். அதே நேரம் அதில் தேய்மானமும் ஆகியிருக்கும்.

தேய்மானம் என்றால் அந்த ஒரு சவரன் எனும் 8 கிராம், 59 ஆண்டு பயன்பாட்டிற்குப்பின் அதே 8 கிராம் எடை இருக்காது. அய்யா, நான் அதை அணியவேயில்லை. அப்படியே பீரோவில் வைத்திருந்தேன் என்றால், அது சரி. தேய்மானம் இருக்காது. 8 கிராம் எட்டு கிராமாகவே இருக்கும்.

1961ல் தங்கம் வாங்காமல் 91 ரூபாயை ஏதாவது ஒரு வங்கியில் பிக்செட் டிப்பாசிட்டாகப் போட்டிருந்தால், அதற்கு கிடைக்கும் வட்டியை மீண்டும் மீண்டும் மறுமுதலீடு செய்திருந்தால், அந்த 91 ரூபாயின் 2019 மொத்த மதிப்பு எவ்வளவாக இருக்கும்?

தற்போது வாங்கிகளில் வட்டி விகிதம் 8% தான் என்றாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு 9, அதற்கும் முன்பு 10% அதற்கும் முன்பு 12 சதவிகிதம் எல்லாம் இருந்திருக்கிறது.

அப்படி அந்த 91 ரூபாய்க்கு சராசரியாக 10% கூட்டு வட்டி போட்டுப் பார்த்தால், வரும் தொகை... 52,871.

அய்யா, 10% வேண்டாம் வெறும் 8% என்று கணக்கிட்டால் கூட வரும் தொகை, 42,315. ஆனால் தங்கத்தின் விலையோ 28,888-தான்.

இதெல்லாம் இப்போது தங்கத்தின் விலை உயர்ந்திருக்கும் போது. இதே தங்கத்தின் விலையை 2013, 2014-ல் எல்லாம் பார்த்திருந்தால் இன்னும் மோசம்.

இதற்குப் பின்னும் தங்கத்தின் விலை ஏறலாம். இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் எப்போதும் ஏறிக்கொண்டே இருக்கும் என்பதையும் சொல்லவும் முடியாது.

தங்கத்தில் நகை என்பது, விரும்பிச் செய்யும் செலவு. கார் வண்டி போன் வீடு வாங்குவது போல. அதில் லாப நட்டக் கணக்குப் பார்க்கத் தேவையில்லை.

Gold
Gold

ஆனால் தங்கம் நன்கு விலை உயர்கிறது. அதில் போடும் பணம் நன்கு பெருகும் என்று நினைத்தால், அதற்குத்தான் இந்த விளக்கமும் எடுத்துக்காட்டும்.

சில குறுகிய காலங்களில் தங்கத்தின் விலை பரபரப்பாக உயரும். புதிய உச்சங்களைத் தொடும். சரியாக வாங்கி சரியாக விற்றால் அதில் லாபம் கிடைக்கும். அப்படிச் செய்வதன் பெயர் டிரேடிங் (வர்த்தகம்). அதில் லாபம் வரும் வாய்ப்பு உண்டு. விலை இறங்கி நட்டமும் ஏற்படலாம்.

ஆனால், நீண்ட காலத்தில் பணத்தைப் பெருக்க, தங்கம் அவ்வளவு சரியானதாகத் தெரியவில்லை.

2. பி.எஃப்-க்கு வட்டி அதிகரிப்பு... என்ன பலன்?

சந்தோஷ் கங்வார் தெரியுமா உங்களுக்கு? அவர் செய்திருக்கும் அறிவிப்பில் பலரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஏன் தெரியுமா?

முதலில், முதல் தெரியுமாவிற்கு பதில். அவர்தான் நாட்டின் தொழிலாளர் துறை அமைச்சர். மத்திய அமைச்சர்.

பலரும் மகிழ்ச்சி அடையும் விதமாக அவர் செய்திருக்கும் அறிவிப்பு, பி.எஃப்க்கு வட்டி 8.65% என்பதுதான்.

நாட்டில் 6 கோடி பேர் எம்ப்ளாயீஸ் பிராவிடென்ட் ஃபண்ட் எனப்படும் சேமநலநிதியான பி.எஃப்ல் கணக்கு வைத்து மாதச் சம்பளத்திலிருந்து அதில் பணம் போடுகிறவர்கள். (நாங்க எங்க போடுறோம். அவர்களாகப் பிடித்துக்கொள்கிறார்கள்!).

கூடவே நிறுவனமும் அதே அளவு பணம் போடுகிறது. இப்படியாக சேரும் பணம் (பலரின் ஒரே சேமிப்பு!) ஆண்டு முழுக்க அந்தக் கணக்கிலேயே இருக்கும். இருந்தது. (லோன் எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும்!)

Manufacturing
Manufacturing

அந்தப் பணத்துக்குதான் கடந்த 2018-19 ஆண்டுக்கான வட்டி 8.65% என்று அறிவித்ததுடன், வட்டித்தொகை வரும் பண்டிகை காலத்துக்கு முன்பாக ( தீபாவளி?) அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். நிதியமைச்சகத்துக்கு இந்தப் பரிந்துரை போயிருக்கிறது. நிதியமைச்சர் ஒப்புதல் கொடுக்கவேண்டும். கொடுப்பார்.

இது கடந்த 2017-18ம் ஆண்டுக்கு வழங்கப்பட்ட 8.55% விட சற்று கூடுதல். நாட்டில் பணவீக்கம் குறைந்திருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை குறைத்து வரும் நிலையில் கடந்த ஆண்டை விட மிகச்சிறிய அளவே ஆனாலும், வட்டி விகிதத்தை உயர்த்தியிருப்பது பாராட்டுக்குரியதுதான்.

இந்த அறிவிப்பை செய்தது மத்திய அமைச்சர். இந்த முடிவை அவர்தான் எடுத்தாரா?

பி.எஃப். விஷயங்களை கவனிக்க Central Board of Trustees என்று ஓர் அமைப்பு இருக்கிறது. இதில் ஊழியர் பிரதிநிதிகள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் இருப்பார்கள். இந்த அமைப்பின் தலைவர் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர்,

வேலையிலிருந்து ஓய்வு பெறுகிறவர்கள், வேலையை விட்டுவிட்டு, ’என்னுடைய பி.எஃப். கணக்கை முடித்து, என் பணத்தைத் திருப்பித் தந்துவிடுங்கள்’ என்று விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு, வட்டி கணக்கிடுகையில், 2018-19-ம் ஆண்டுக்கு 8.65% ஆக கணக்கிட்டுக் கொடுப்பார்கள். 8.65% என்பது, தற்போது, வங்கிகள், தபால் ஆபீஸ்கள் கொடுக்கும் வட்டி சதவிகிதங்களுடன் ஒப்பிடுகையில் நல்ல வட்டி விகிதம். தவிர, இந்த வட்டி வருமானத்துக்கு முழு வருமான வரி விலக்கும் உண்டு.

பி.எப். ஒரு சிறந்த சேமிப்பு முறை

ஒரு ஊழியர் பி.எஃப். போடும் பணத்துக்கு நிகரான தொகையை நிறுவனம் அதன் பங்காக போடவேண்டும். அந்தத் தொகைகளுக்கு வருமான வரி இல்லை. அந்தத் தொகைகளுக்குக் கிடைக்கும் வட்டிப் பணம் வங்கி வட்டிகளைக் காட்டிலும் கூடுதலானது. அந்தப் பணத்திற்கும் வருமான வரி இல்லை.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகோ அல்லது பணி ஓய்வின் போதோ பி.எஃப். பணத்தை எடுத்தால், எடுக்கும் பணத்திற்கு வருமான வரி இல்லை. வருமான வரியிலிருந்து... போடும்போதும், வட்டிக்கும், எடுக்கும்போதும், விலக்கு - விலக்கு - விலக்கு எனும் பொருள்பட இதை EEE பெனிஃபிட் என்பார்கள்.

புத்திசாலிகள் செய்யும் மற்றொரு விஷயம், நிறுவனம் பிடித்தம் செய்வதுபோக, கூடுதலாக 1000-மோ அல்லது வேறு ஒரு தொகையோ விருப்ப பி.எஃப். ஆக போடுவார்கள். இப்படிப் போடும் தொகை 80சி யின் லட்சத்து 50,000 வரம்பிற்குள் இருத்தால் அதற்கும் வருமான வரிவிலக்கு பெறுவார்கள்.

உபரியாக கூடுதல் வட்டி, வட்டிக்கு விலக்கு மற்றும் எடுக்கும் / போடும்போது விலக்கு. அதன் பெயர் வாலன்டரி பிராவிடென்ட் ஃபண்ட் (VPF). நிறுவனத்தில் விசாரியுங்கள்.

3. நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா?

நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பங்குச் சந்தைகளில் புலிப்பாய்ச்சல். ஒரே நாளில் 2000 புள்ளிகள் எல்லாம் முன்பு ப. சிதம்பரம் அவர்கள் போட்ட டிரீம் பட்ஜெட்டின்போது கூட நடக்கவில்லை.

நம்பமுடியாத அளவு உடனடியாக உயர்ந்தது மட்டுமல்ல, அடுத்த வர்த்தக நாளான 23 செப்டம்பர் திங்கட் கிழமையும் இன்னொரு பெரிய ஏற்றம். சென்செக்ஸ் மற்றொரு 1075 புள்ளிகள் எகிறல். இரண்டு நாள்களில் மட்டும் முதலீட்டாளர்கள் பங்கு மதிப்பு பத்தரை லட்சம் கோடி ரூபாய்கள் உயர்வு!

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை அடி பின்னிவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அப்படி என்னதான் அறிவித்துவிட்டார் நிதியமைச்சர், இந்த ஆட்டம் அங்கே?

நிறுவனங்கள் அவற்றின் இலாபத்தின் மீது கட்ட வேண்டிய வருமான வரியை பெரிய அளவில் குறைத்துவிட்டார்கள்.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman
வேறு எந்த விலக்கோ, மானியமோ பெறாத நிறுவனங்கள் 22 சதவிகிதம் வருமான வரி கட்டினால் போதும். சர் சார்ஜையும் செஸ்ஸையும் சேர்த்து அதிகபட்சம் 25.17% தான் கார்ப்பரேட் இன்கம் டேக்ஸ். இதை தேர்வு செய்யும் நிறுவனங்கள் குறைந்தபட்ச மாற்று வரி ’மேட்’ கட்டத் தேவையில்லை.
தொடர்ந்து அரசின் பிற சலுகைகள்/ மானியங்கள் பெறும் நிறுவனங்கள் கட்டவேண்டிய குறைந்தபட்ச மாற்று வரி ’மேட்’ 18.5% லிருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 2019, 1-ம் தேதிக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்டு, 31 மார்ச் 2023-க்குள் உற்பத்தியைத் தொடங்கும் புதிய நிறுவனங்கள், வேறு எந்த விலக்கோ, மானியமோ பெறாதபட்சத்தில் 15% வருமான வரி கட்டினால் போதும். இவர்களுக்கு சர் சார்ஜையும் செஸ்ஸையும் சேர்த்து அதிகபட்சம் 17.01% தான் கார்ப்பரேட் இன்கம் டேக்ஸ். இதன்மூலம் மேக் இன் இந்தியா வலுப்பெறும்.
மேலும் மூலதன ஆதாய வரியிலும் சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
  • செக்யூரிட்டி டிரான்சேக்‌ஷன் டேக்ஸ் கட்டும், பங்குகள், பரஸ்பதிநிதி வர்த்தம் மூலம் கிடைக்கும் லாபத்தின் மீதான வரியின் மீது பட்டப்பட்டிருந்த சர்சார்ஜ் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.

  • Foreign Portfolio Investors (FPIs) ஈட்டும், டிரவேட்டிவ்ஸ் உட்பட மூலதன ஆதாயங்களுக்கும் சர்சார்ஜ் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.

  • 5.7.19 க்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பங்குகள், பை பேக்கிற்கு வரிகள் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

  • மேலும் லாபத்தில் 2% CSR செலவுகளை எவற்றில் செய்யலாம் என்பதிலும் தளர்வுகள் செய்யப்படிருக்கின்றன.

  • இவற்றால் அரசுக்கு 1,45,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். வருவாய் இழப்பை சரிகட்ட அரசு மேலும் கடன் வாங்கவேண்டியிருக்கும்.

ஆனால், தேவைப்படாது. இந்த நடவடிக்கையால் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து அதன் மூலம் இந்த இழப்பு சரியாகிவிடும் என்கிறார் நிதியமைச்சர். இது ஒப்புக்கொள்ளக்கூடியதா?

பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று சொல்ல முடியவில்லை. ஈட்டும் லாபத்தின் மீது 30% க்கும் சற்று அதிகமாக வருமான வரி கட்டிக்கொண்டிருந்த நிறுவனங்களுக்கு இது நிச்சயமாக பெரிய ’லக்கி பிரைஸ்’ தான். 2019-20 முதல் அவர்கள் செய்யும் லாபத்தில் ஒரு பகுதி அவர்களிடமே தங்கப்போகிறது.

அதனால்தான் அப்படிப்பட்ட நன்கு லாபமீட்டி வரும் லிமிடெட் கம்பெனி நிறுவனங்களின் பங்கு விலைகள் அவ்வளவு உயர்ந்திருக்கிறது. அதனால்தான் பங்குச் சந்தைகளில் இவ்வளவு பெரிய எழுச்சி.

4. இதனால் எப்படி நாட்டின் பொருளாதாரம் உயரும்?

அந்த நிறுவனங்கள் ஆண்டு முழுதும் வியாபாரம் செய்து லாபமீட்டி, அதில் ஒரு பகுதியை வரியில்லாமல் மீதமாக்கி, அந்தப் பணத்தை முதலீடு செய்து, அதன் மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்கி, அதன் மூலம் வாங்குசக்தியை அதிகரித்து… கொஞ்சம் நீளமான செயல்முறையாகத் தெரியவில்லை? அப்படித்தான் தெரிகிறது.

அந்த நிறுவனங்கள் ஏன் முதலீடு செய்ய ஆண்டு இறுதிவரை காத்திருக்க வேண்டும்? அவை அவற்றிடம் இருக்கும் ‘ரிசர்வ்’ பணத்தில் இருந்து இப்போதே முதலீடு செய்வார்களே... என்று கேட்கலாம்.

அப்படி செய்வதாக இருந்தால் அவர்கள் ஏற்கெனவே செய்திருப்பார்களே! நாட்டில் டிமாண்ட் குறைவதுதானே இப்போதைய பொருளாதார சுணக்கத்துக்கு காரணம்?

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

அதைச் சரி செய்வார்கள் என்றல்லவா எதிர்பார்த்திருந்தோம்.

தனிநபர் வருமான வரி உச்சவரம்பை பெரிய அளவில் உயர்த்தியிருந்தால், மக்கள் கையில் பணம் போய், அவர்கள் பொருள்கள் வாங்கத் தொடங்கி, நிறுவனங்கள் அதன் காரணமாக உற்பத்தியை அதிகரித்து, அவர்களே லாபம் செய்து... அதை முதலீடு செய்து... எல்லாம் சரியாக ஆரம்பித்திருக்குமே!

வந்திருக்கும் சலுகைகள் தனி நபர் நிறுவனங்கள், பார்ட்னர்ஷிப் நிறுவனக்களுக்குப் பொருந்தாது. அதேபோல, ஏற்கெனவே வேறு சில திட்டங்கள் மூலம், வருமான வரியைக் குறைத்து கட்டிக்கொண்டிருக்கும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பொருந்தாது.

மொத்தத்தில் இது, ஏற்கெனவே லாபம் செய்துகொண்டிருக்கும் லிமிடெட் கம்பெனிகளுக்கு வாரி வழங்கப்பட்டிருக்கும் வரிச் சலுகை, வரிக்குறைப்பு. அவ்வளவுதான்.

இதனால் அரசுக்கு பற்றாக்குறை, கடன், வட்டி என்று சிக்கல்கள்.

புதிய நிறுவனக்களுக்கு வரி 15% மட்டும் என்பது மட்டும் ஓரளவு முதலீட்டை ஈர்க்கும் அறிவிப்பு. அதிலும் அந்நிய நேரடி முதலீடுகள் வரும் வாய்ப்பு இருக்கிறது.மற்றபடி செலவுதான்.

- முதல் போடலாம்!

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

அடுத்த கட்டுரைக்கு