Published:Updated:

போட்ட பணத்தைப்போல, பல மடங்கு ரிட்டர்ன் தரும் பங்குகளைக் கண்டறிவது எப்படி? #SmartInvestorIn100Days-46

பங்குகளில் ரிஸ்க் குறைவான முதலீடுகள் என்றால், `லார்ஜ் கேப்’ பங்குகள்தான். ஆனாலும் எல்லா `லார்ஜ் கேப்’ பங்குகளையும் அப்படிச் சொல்ல முடியாது. `லார்ஜ் கேப்’ என்றாலே கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம் என்று அர்த்தமில்லை.

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

செய்திகளில் நீங்கள் கவனித்திருப்பீர்கள். கடந்த திங்கள்கிழமை நவம்பர் 25 அன்று, இந்திய பங்குச் சந்தைகளில் எழுச்சி. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 540 புள்ளிகள் உயர்வு. அதனால் முதலீட்டாளர்கள் பணம், 1.81 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்தது என்று தகவல்.

இந்த 1.81 லட்சம் கோடி ரூபாய் உயர்வு என்பது, மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வு குறித்துதான். மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குகளில் 1,413 பங்குகளின் விலைகள் அன்றைய தினம் உயர்ந்தன. 1,086 பங்குகளின் விலைகள் குறைந்தன. மற்றொரு 208 பங்குகளின் விலைகளில் மாற்றம் இல்லை. முந்தைய வர்த்தக நாளான நவம்பர் 22 வெள்ளிக்கிழமையன்று இருந்த விலையிலேயே வர்த்தகம் நடந்திருக்கிறது அல்லது வர்த்தகம் நடக்கவில்லை.

விலை உயர்ந்த பங்குகளின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் அதிகரிக்க, விலை குறைந்த பங்குகளின் மார்க்கெட் கேப்பிட்டலைஷேசன் குறைய, நிகரமாக எல்லாப் பங்குகளுக்கும் சேர்த்து மும்பை பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டிருக்கும் பங்குகளின் மொத்த மதிப்பு, 1.81 லட்சம் கோடி ரூபாய் உயர்வு.

முன்பே பார்த்திருக்கிறோம், இந்த உயர்வு என்பது `பேப்பரில்’ இருக்கும் உயர்வுதான். அடுத்த சில நாள்களிலேயே சந்தை இறங்கினால், மார்க்கெட் கேப்பிட்டலைஷேசனும் அதற்கேற்ப குறைந்துவிடும்.

குறுகியகால முதலீடுகளுக்கு, `ஃபிக்சட் இன்கம்’ ஃபிக்சட் டெபாசிட்ஸ், கடன் பத்திரங்கள், டெப்ட் வகை பரஸ்பர நிதிகள் போன்றவைதான் சரிவரும். நீண்ட காலம் காத்திருக்க, பணத்தை விட்டுவைக்க முடியும் என்றால்தான் ஈக்விட்டிக்கு வரவேண்டும் என்று சொல்வதுண்டு.

ஆனாலும், சந்தை ஏறுமுகத்தில் இருக்கிறது என்பது உறுதியாகத் தெரிந்தால், பங்குகளில் முதலீடுசெய்யும்போது, ஒரு சில மாதங்களுக்கு மட்டும் முதலீடுசெய்ய விரும்பினால், லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடுசெய்வது பரவாயில்லை. சந்தை ஏறுமுகமாவே இருந்தாலும் `மிட் கேப்’ மற்றும் அதைக் காட்டிலும் கூடுதலாக `ஸ்மால் கேப்’ பங்குகள் ரிஸ்க்கானவைதான்.

பங்குகளில் ரிஸ்க் குறைவான முதலீடுகள் என்றால், `லார்ஜ் கேப்’ பங்குகள்தான். ஆனாலும் எல்லா `லார்ஜ் கேப்’ பங்குகளையும் அப்படிச் சொல்ல முடியாது. `லார்ஜ் கேப்’ என்றாலே கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம் என்று அர்த்தமில்லை.

டிரேடிங் செய்ய விரும்பும் சிலர், அவர்கள் வாங்கிய பின் விலைகள் குறைந்தால் விற்றுவிடுவார்கள். `ஸ்டாப் லாஸ்’ என்று ஓர் அளவு வைத்திருப்பார்கள். அதற்கும் கீழே விலை போனால், விற்றுவிடுவார்கள். டிரேடிங்கில் இது சரி. ஆனால், சிலர் விற்க மாட்டார்கள். விலை உயர்ந்துவிடும் என்று காத்திருப்பார்கள்.

`ஸ்மால் கேப்’, `மிட் கேப்’ பங்குகளில் அப்படி காத்திருப்பது பலன் தருமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், லார்ஜ் கேப்பில் `உட்கார்ந்துவிடலாம்’. பின்னர், விலை ஏறும் வாய்ப்புகள் ஒப்பீட்டு அளவில் அதிகம்.

முதலீடு
முதலீடு
மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்? #SmartInvestorIn100Days நாள் - 44

பரஸ்பர நிதிகளுக்கும் இந்த வழிகாட்டல்கள் பொருந்தும்.

`மல்டி பேஃகர்’ ஸ்டாக்ஸ் (Multi Bagger Stocks) என்று மற்றொரு வகை இருக்கிறது. வாங்கிய விலையைப் போல சில மடங்குகள் உயர்வது. உதாரணத்திற்கு, 100 ரூபாய்க்கு வாங்கிய பங்கு விலை, 200, 300 என்று உயர்வது.

போட்ட பணத்தைப் போல பல மடங்கு வாரித் தரும் பங்குகளைத்தான், மல்டி பேஃகர் பங்குகள் என்பார்கள்.

பிலிப்ஸ் கார்பன் பங்குகள், அப்படி பல மடங்கு விலை உயர்ந்த பங்குகளில் ஒன்று. அதேபோல நோசில். ஜனவரி 2015-ல் 36 ரூபாய் விற்ற நோசில் (NOCIL) பங்கின் விலை, ஜனவரி 2018-ல் 181 ரூபாய். மூன்று ஆண்டுகளில் விலை ஐந்து மடங்கு உயர்வு. அதன்பின் விலை தொடர்ந்து இறங்கினாலும், இப்போது நவம்பர் 2019-ல் 103 ரூபாய்க்குக் குறைந்துவிட்டது. ஆயினும், 2015 விலையுடன் ஒப்பிட்டால், இப்போதும்கூட அது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். ஐந்து ஆண்டுகளிலேயே இவ்வளவு உயர்ந்திருக்கிறது. தவிர, ஐந்து ஆண்டுகளும் டிவிடெண்ட் கொடுத்திருக்கும்.

ஒரு நிறுவனத்துக்கு `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ ஏன் முக்கியம்? #SmartInvestorIn100Days நாள் - 45

LG பாலகிருஷ்ணா என்ற பங்கு, பிப்ரவரி 2016-ல் 216 ரூபாய். ஏப்ரல் 2018-ல், 670 ரூபாய். இரண்டு ஆண்டுகளில் மூன்று மடங்கு விலை உயர்வு. மீண்டும் ஆகஸ்ட் 2019-ல், 218 ரூபாய்க்கே வந்துவிட்டது. இப்போது, 270-க்கு அருகில் வர்த்தகம் ஆகிக்கொண்டிருக்கிறது.

பினோலெக்ஸ் கேபிள்ஸ், ஐச்சர் மோட்டார்ஸ் என்றும், இன்னும் சில பங்குகளும் பல மடங்கு விலை உயர்ந்திருக்கின்றன.

மல்டி பேஃகர் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு பங்கின் விலையில் ஏற்படும் பெரும் உயர்வு. அந்த உயர்வு காலாகாலத்துக்கும் தொடராது. கிரிக்கெட் பந்தயத்தில், குறிப்பிட்ட ஓவர்களுக்கு இடையே, உதாரணத்திற்கு 20 முதல் 30 ஓவர்கள் வரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் – கபில்தேவ், சந்தீப் பாட்டில் போன்றோர் அடி விளாசுவதுபோல, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மிகச்சிறப்பாக விலை உயரும். பின்னர், நிதானமான விலை ஏற்றம் இருக்கலாம்; இறங்கவும் செய்யலாம். ஆனால், குறிப்பிட்ட `பீரியடில்’ பிரமாதமான ஏற்றம் இருக்கும்.

மல்டி பேஃகர் பங்குகளைப் பின்னால் அடையாளம் காண்பது சுலபம். ஆனால், முன்கூட்டியே சரியாகக் கணிப்பது சிரமம்.

ஆனாலும் இணையத்தில் தேடினால், சில புரோக்ரேஜ் நிறுவனங்கள் அடுத்த ஆண்டிற்கான மல்டி பேஃகர் பங்குகள் இவை எனப் பட்டியல் கொடுத்திருப்பதைப் பார்க்கலாம். அவற்றில் ஒன்றிரண்டு அப்படியாகி விடலாம்.

மல்டி பேஃகர்கள் பெரும்பாலும், `மிட் கேப்’ அல்லது `ஸ்மால் கேப்’ பங்காகத்தான் அவற்றின் பயணத்தைத் தொடங்கும்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.