Published:Updated:

ஏறுமுகத்தில் இருக்கும் பங்கின் விலை திடீரென சரிவது ஏன் தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-55

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

பங்குச்சந்தை பலூன் என்பது வித்தியாசமான பலூன். ராட்சத பலூன். அதற்கு ஒரே சமயத்தில் பலரும் காற்று ஊதுவார்கள். ஒவ்வொருவரும் ஊதுவது எவ்வளவு என்று மற்றவர்கள் உணரமாட்டார்கள். எல்லோரும் சேர்ந்து உற்சாகமாக ஊதுவார்கள்.

பங்குச்சந்தை  மற்றும் பங்கு விலைகள் எல்லா நேரமும் ஒரே திசையில் பயணிக்காது. சில ஆண்டுகளுக்கு ஏறுமுகமாகவும், பின்பு இறங்குமுகமாகவும் மாறி மாறிப் பயணம்செய்யும். முதலாவது புல் பேஸ். இரண்டாவது பேர் பேஸ்.

ஏறுமுகத்தில் இருக்கும்போது, ஒரு நேரம் உச்சம் தொட்டுவிட்டு, பின் வேகமாகக் கீழே விழும். அப்படி விழுவதற்கு சில நிகழ்வுகள், செய்திகள் காரணமாக அமையும். உதாரணத்திற்கு,  போபர்ஸ் ஊழல், ஹர்ஷத் மேத்தா ஊழல் போன்ற செய்திகள், `சப் பிரைம்’ பிரச்னை மற்றும் சந்தை எதிர்பாராத ஆட்சி மாற்றம் போன்றவற்றைச் சொல்லலாம்.

பங்குச் சந்தையைத் தீர்மானிக்க, கணிக்க உதவும் 6 காலகட்டங்கள்! #SmartInvestorIn100Days நாள்-52
பலூனும் பங்குச் சந்தையும்
பலூனும் பங்குச் சந்தையும்

இப்படி பங்குச்சந்தை உயரத்தில் இருந்துகொண்டிருக்கும்போது கெட்ட செய்தி வந்தால் விழுவது சரி. ஆனால், எல்லா சமயங்களிலும் விழுவதும் இறக்கமும் தொடராது. சில சமயங்களில் விழுந்துவிட்டு, சந்தை சீக்கிரமே எழுந்து மீண்டும் அதன் பழைய ஏறுமுகக் கதையைத் தொடரும்.

இறக்கம் சில நாள்களுக்கு மட்டுமே நடந்திருக்கும். அதைத் திசை மாற்றம் என்றோ, `புல் பேஸ் போய், பேர் பேஸ்’ வந்துவிட்டது என்றோ சொல்லமுடியாது. அது கோடை மழை போல, `ஒன் டைம் ஈவென்ட்’.

எல்லாம் சரியாக போய்க்கொண்டிருக்கையில், பங்குச்சந்தை ஒரு நேரம் சடாரென விழ ஒரு `டிரிகர்’ போதும். ஆனால், வீழ்ச்சி தொடர,  மேலும் சில காரணங்கள் தேவை. அதேபோல, விழுந்த பின் எழவும், ஓட்டத்தைத் தொடரவும் வேறு சில காரணங்கள் தேவை.

அவற்றை பங்குச்சந்தையின் பாஷையில் `வேல்யுவேஷன்ஸ்’ என்பார்கள்.
Savings | Representational Image
Savings | Representational Image

பங்கு விலைகளை ஒரு பலூனுக்கு ஒப்பிட்டால், இதைப் புரிந்துகொள்வது சுலபமாக இருக்கும். ஒரு பலூனுக்குள் காற்று ஊதலாம். ஊத ஊத பலூன் விரிந்து விம்மும். பார்க்க அழகாக இருக்கும். அழகாக இருக்கிறதென்றும், நம்மால் ஊத முடிகிறதென்றும், மேலும் ஊதினால் என்ன நடக்கும்? அல்லது அப்படி முழுவதும் காற்று ஊதப்பட்டு, கழுத்து கட்டப்பட்ட பலூன், கூர்மையான ஊசி அல்லது கம்பிமீது பட்டால் என்ன ஆகும்?

பல்வேறு சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கிறதென்றும், நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கிறதென்றும் தெரிந்து பங்குகள் வாங்கப்படும். பலரும் வாங்குவதாலும் சிலர் மட்டுமே விற்பதாலும் பங்கு விலைகள் உயரும். உயர்ந்துகொண்டே போகும்.  பெரும்பாலான பங்குகளின் விலைகள் மற்றும் சந்தைக் குறியீட்டு எண்கள் எல்லாம் ஏறுமுகத்தில்.

இது, பலூனுக்குள் தொடர்ந்து காற்று ஊதுவதற்கு ஒப்பு.

இது பங்குச்சந்தையின் `டாப் கியர்' காலமா? முதலீடு செய்யலாமா?!  #SmartInvestorIn100Days நாள்- 50

இப்படித்தான், முன்பு 50-வது அத்தியாயத்தில் பார்த்தது போல, 1984-86ல் ராஜீவ் காந்தி, வி.பி.சிங்கின் புதிய கொள்கைகள் காரணமாகவும், பின்பு 1991-ல் உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் காரணமாகவும், 1999-2000-ம் ஆண்டுகளில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எழுச்சி காரணமாகவும், பின்பு 2003 முதல் 2008 வரையிலும் நல்ல பொருளாதார சூழ்நிலை நிலவிய காரணங்களாலும் பங்குச்சந்தை எனும் பலூன்களில் தொடர்ந்து காற்று ஊதப்பட்டது.

பங்குச்சந்தை பலூன் என்பது வித்தியாசமான பலூன். ராட்சத பலூன். அதற்கு ஒரே சமயத்தில் பலரும் காற்று ஊதுவார்கள். ஒவ்வொருவரும் ஊதுவது எவ்வளவு என்று மற்றவர்கள் உணரமாட்டார்கள். எல்லோரும் சேர்ந்து உற்சாகமாக ஊதுவார்கள்.

அப்போதுதான் சந்தை உச்சம் தொடும். பலூனின் தோல் விரிந்து விரிந்து, `ஓவர் ஸ்டிரெட்ச்’ ஆகி, மெலிதாகிவிடும். விவரம் அறிந்தவர்கள், இப்படி முன்பு பல பலூன்கள் பார்த்தவர்கள், `போதும் இதற்கு மேல் இந்த பலூன் தாங்காது’ என்று எச்சரிப்பார்கள். `அவனை நிறுத்தச் சொல். நான் நிறுத்துகிறேன்’ என்பதுபோல பலரும் முரண்டுபிடித்துக்கொண்டு தொடர்ந்து ஊதுவார்கள்.

முதலீடு
முதலீடு

பின்பு ஒரு நேரம், `டமார்’ என்று ஒரு சத்தம் கேட்கும். அப்படி ஒவ்வொரு `புல் ரன்’ க்குப் பின்பும் கேட்டிருக்கிறது. பலூன் வெடித்துக் கிழிந்துவிடும். மொத்தக் காற்றும் காலி. மார்க்கெட் கேபிட்டலைசேஷனில் சில லட்சம் கோடிகள் இழப்பு என்று செய்திகள் வரும்.

சில சமயங்களில் பலூன் வெடிக்காது. அதன் வாய் வழியாகக் கொஞ்சம் காற்று வெளியேறும். மீண்டும் ஊதத் தொடங்கிவிடுவார்கள். மீண்டும் விலைகளில் எழுச்சி.

எப்போது வெடிக்கும்? பலூன் இதற்குமேல் தாங்காது எனும் நிலையில். சந்தை எப்போது விழும்? விலைகள் இதற்கு மேல் தாங்காது என்ற நிலையில். விலைகள் மிக அதிகமாக உயர்ந்துவிட்டால் அதை வேல்யுவேஷன் அதிகமாகிவிட்டது, `மார்க்கெட் இஸ் எக்ஸ்பென்சிவ்’ என்பார்கள்.

அடுத்த அத்தியாயத்தில் வேல்யுவேஷன் பற்றி பார்க்கலாம். 

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

அடுத்த கட்டுரைக்கு