Published:Updated:

எம்.ஆர்.எஃப். பங்குக்கு நடந்தது ஐ.ஆர்.சி.டி.சி-க்கு நடக்குமா?

share market

ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும் பொருளாதார ஏற்ற இறக்கங்களை அலசும் தொடர்!

எம்.ஆர்.எஃப். பங்குக்கு நடந்தது ஐ.ஆர்.சி.டி.சி-க்கு நடக்குமா?

ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும் பொருளாதார ஏற்ற இறக்கங்களை அலசும் தொடர்!

Published:Updated:
share market

"பாரத ஸ்டேட் வங்கியில் பிக்சட் டெபாசிட்டாக போடாமல் ஓராண்டுக்கு முன்போ, ஐந்து ஆண்டுகளுக்கு முன்போ அந்தப் பங்கை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருந்தால், அது தற்போது எவ்வளவாக மாறியிருக்கும் என்று கணக்கிட்டுப் பார்க்க விருப்பமா... நாளை சொல்கிறேன்" என்று சொல்லியிருந்தேன்.

IRCTC
IRCTC

அதற்கு முன் வாசகர்களுக்கு வாய்ப்பு தரும் மற்றொரு முக்கிய விஷயம் குறித்து உடனடியாகச் சொல்லவேண்டியது அவசியமாகிவிட்டது. எனவே அதற்கான பதிலை நாளை பார்க்கலாம்.

இன்று சொல்லவேண்டிய அந்த முக்கிய விஷயம் ஐ.ஆர்.சி.டி.சி- யின் (IRCTC) ஐ.பி.ஓ குறித்து. அதை உடனடியாகச் சொல்லவேண்டியதன் அவசியம், அக்டோபர் 3-ம் தேதி வரை மட்டும்தான் அந்தப் பங்குகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது. ஆகவே, இன்றைய தகவல் பொதுவாக ஐ.பி.ஓ-க்கள் குறித்தும் மற்றும் நடப்பில் இருக்கும் ஐ.ஆர்.சி.டி.சி-யின் ஐ.பி.ஓ குறித்து மட்டுமே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பங்குகள் என்பது நிறுவனத்தில் போடப்பட்டிருக்கும் முதலின் ஒரு பகுதி. உதாரணத்துக்கு எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் மொத்த முதலீடு (ஈக்விட்டி கேபிடல்) ரூ.4,24,00,000. ஒரு பங்கின் முக மதிப்பு, அதை Face Value என்பார்கள், ரூபாய் 10. ஆக, எம்.ஆர்.எஃப் என்ற நிறுவனத்தின் ஈக்விட்டி கேப்பிடல், 42.41 லட்சம் 10 ரூபாய் பங்குகள்.

இந்த 42.41 லட்சம் பங்குகளில் பெரும் பகுதியை வைத்திருப்பவர்கள் அந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்கள். புரமோட்டர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்.

கவனிக்க. அந்த நிறுவனத்தின் எல்லாப் பங்குகளையும் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. பெரும் பகுதியை என்றுதான் சொல்கிறோம். புரமோட்டர்கள் மற்றும் புரமோட்டர்கள் குரூப் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 11,75,936. மொத்தப் பங்குகள் எண்ணிக்கையில் அது 27.73 சதவிகிதம் மட்டுமே. அப்படியென்றால் மீதப் பங்குகள் யார் வசம் இருக்கின்றன? அவர்கள் இந்த நிறுவனத்தில் யார்? அவர்களது முதலீடு, பொறுப்புகள் மற்றும் உரிமைகள் என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீதப் பங்குகளை பல்வேறு நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள் (11.13 %) மற்றும் பொதுமக்களில் சிலர் வைத்திருக்கிறார்கள்.

இந்தப் பங்குகளை வைத்திருப்பவர்கள், பங்குச் சந்தைகளில் விற்கிறார்கள். வாங்க நினைப்பவர்கள் வாங்குகிறார்கள்.

பத்து ரூபாய் முகமதிப்புள்ள எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை (30.9.19 நிலவரப்படி), ரூ. 63,287

ஆமாம், அறுபத்து மூன்றாயிரத்து இருநூற்று எண்பத்து ஏழு! அந்த விலை கொடுத்தால்தான் ஒரு பங்கு வாங்கலாம். இதே எம்.ஆர்.எஃப் பங்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு, ஜனவரி 2000-வது ஆண்டில் 2,640 ரூபாய்க்கு வர்த்தமாகியிருக்கிறது. பின்பு, ஜூன் 17-ம் தேதி, 2016-ம் ஆண்டு விலை, ரூ.31,333.

ஜூலை 31, 2018 அன்று ரூ. 79,490-க்கு வர்த்தகமாகியிருக்கிறது. பின்பு, விலை இறங்கியிருக்கிறது. இப்போது விலை ரூ.63,287.

எம்.ஆர்.எஃப் பங்கு என்பது இந்தியப் பங்குச் சந்தையில் மிகவும் வேறுபாடான பங்கு. இவ்வளவு விலை விற்கிற பங்குகள் வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம். எம்.ஆர்.எஃப் போல இன்னும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் பங்குகள் பொது மக்களிடம் இருக்கின்றன.

MRF
MRF

சாதாரண மனிதர்களும் இப்படிப்பட்ட பெரிய நிறுவனங்களின் பங்குகளை அவர்களால் முடிந்த அளவுகளில், அவர்கள் சரி என நினைக்கும் விலை வரும்போது வாங்கலாம். நல்ல விலை வந்துவிட்டது, லாபம் கிடைக்கிறது என்று நினைத்தால் விற்கலாம். அல்லது நஷ்டம் ஆகிறது, இனி வாங்கிய விலை வராது என்று நினைத்தாலும் விற்கலாம்.

அப்படியெல்லாம் பங்குச் சந்தையில் தரகர் மூலம் வாங்கினால் விற்றால், அதன் பெயர் செக்கண்டரி மார்க்கெட் ஆபரேஷன்.

share market
share market

செகண்டரி மார்க்கெட்டில் வாங்குவதும் விற்பதும் சந்தை விலையில். எவராவது விற்கத் தயாராக இருந்தால் மட்டுமே. அதுவும் அவர்கள் கொடுக்கத் தயாராக இருக்கும் விலையில்தான் வாங்க முடியும். விற்பதும் அப்படியே.

இங்கே நானே இரண்டு கேள்விகள் கேட்டு, அவற்றுக்கான பதில்களையும் சொல்கிறேன்.

• இது செகண்டரி மார்க்கெட் என்றால், எது பிரைமரி மார்கெட்?

• எவரோ முதலீடு போட்டுத் தொடங்கிய நிறுவனத்தின் பங்குகள் எப்படிப் பிற நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் பொது மக்களிடம் வந்தன?

இரண்டுக்கும் ஒரே பதில்தான். முதலீடு போட்டு நிறுவனம் தொடங்குகிறவர்கள் அல்லது தொடங்கி நடத்திக் கொண்டிருப்பவர்கள், அவர்களிடம் இருக்கும் பங்குகளில் ஒரு பகுதியைச் சந்தையில் விற்று பணம் பார்க்க முயல்வார்கள்.

அவர்கள் அப்படி, அவர்களது நிறுவனத்தின் பங்குகளை முதன்முறையாக வெளிநபர்களுக்கு விற்கும் இடம்தான் பிரைமரி மார்க்கெட்.

அப்படி அவர்கள் விற்கும் முறைக்குப் பெயர், ஐ.பி.ஓ. (IPO). ஐ.பி.ஓ. என்றால் இனிஷியல் பப்ளிக் ஆபர். பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் ஆபர். நிறுவனத்தார் முடிவு செய்த விலையில், வேண்டுபவர்கள் வாங்கிக்கொள்ளலாம். நிறுவனம் அதன் 10 ரூபாய் முகமதிப்புள்ள பங்குகளை, அதே பத்து ரூபாய்க்குக் கொடுத்தால் அதன் பெயர், `அட் பார்’.

`நான் ஏன் நன்கு லாபம் செய்யும் நிறுவனத்தின் பங்குகளை, இன்னும் கூடுதலாக லாபம் செய்யக்கூடிய நிறுவனத்தின் பங்குகளை `அட் பார்’ விலையில் கொடுக்க வேண்டும்! கூடுதல் விலை வைத்துக்கொடுக்கிறேன். இதன் மதிப்பு தெரிந்தவர்கள் வாங்கிக்கொள்ளட்டும்’ என்று `அட் பிரிமியம்’ விலையிலும் ஆபர் கொடுப்பார்கள்.

`அவர்கள் சொல்லும் விலை குறைவுதான். சந்தைக்குப் போனால் இந்த விலைக்குக் கிடைக்காது’ என்று கணிப்பவர்கள், அவர்கள் வெளியிடும் ஐ.பி.ஓ-வில் விண்ணப்பிப்பார்கள்.

விற்பனைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பங்கு எண்ணிக்கைகளைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையிலான பங்குகளுக்குக் கோரிக்கைகள் வந்துவிட்டால், லாட் போட்டு எடுப்பார்கள். விழுந்தவர்களுக்குக் கிடைக்கும். மற்றவர்களின் பணம் திருப்பிக்கொடுக்கப்படும்.

Railway
Railway

அதுபோன்ற ஒரு ஐ.பி.ஓ. இப்போது நடப்பில் இருக்கிறது. விண்ணப்பிக்க அக்டோபர் 3-ம் தேதி வியாழக்கிழமை, கடைசி நாள்.

ஐ.பி.ஓ. வெளியிடும் நிறுவனம் ஐ.ஆர்.சி.டி.சி. மத்திய அரசின் Indian Railway Catering and Tourism Corporation என்ற லாபம் ஈட்டும் நிறுவனம். அரசு அதன் மொத்த பங்குகளில் 12.6 சதவிகிதம் பங்குகளை மட்டும் அதாவது, 2,01,60,000 பங்குகளை இந்த ஐ .பி. ஓ. மூலம் விற்க முன்வந்திருக்கிறது.

10 ரூபாய் முகமதிப்புள்ள இந்தப் பங்கின் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விலை ரூ.315 முதல் ரூ.320 வரை. குறைந்தபட்சம் 40 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு 12,800 ரூபாய் தேவைப்படும்.

லாட்களில் பங்கு கிடைக்காதவர்களுக்கு, அக்டோபர் 10-ம் தேதி பணம் திருப்பித் தரப்படும் என்கிறது ஐ.ஆர்.சி.டி.சி. இதுபோன்ற நல்ல ஐ. பி. ஓ-க்கள் அடிக்கடி வராது.

இதில் விண்ணப்பிக்க, வங்கிக் கிளைகள் அல்லது பங்கு தரகு நிறுவன கிளைகளை அணுகலாம். பான் கார்டு, வங்கி கணக்கு, முகவரி சான்றிதழ் ஆகியவை இருந்தால் உடனடியாக வர்த்தக கணக்கு மற்றும் டீமேட் கணக்குத் திறந்துகூட, இந்த ஐ. பி .ஓ-வுக்கு விண்ணபித்துவிட முடியும்.

பெரும்பாலான தரகர்கள் இது நல்ல வாய்ப்பு என்று தெரிவிக்கிறார்கள் என்கிறது எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகை. மேல்விவரங்கள் தெரிந்துகொண்டு (அவரவர் பொறுப்பில்) விண்ணப்பிக்கலாம்.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism