Published:Updated:

டீலர்கள் சொல்வதைக் கேட்டு பங்குச்சந்தையில் டிரேடு செய்யலாமா? #SmartInvestorIn100Days நாள்-72

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

டிரேடிங் நீச்சல் என்றால், இன்வெஸ்ட்மென்ட் என்பது படகு அல்லது கப்பலில் போவதுபோல. அதிலும் ஆபத்து உண்டு. ஆனால் குறைவு.

பங்குச்சந்தையில் டிரேடிங்தான் ஒருவருடைய விருப்பம் என்றால், அதை வெற்றிகரமாகச் செய்வதற்கு சில வழிகள் இருக்கின்றன.

பங்குச் சந்தை அறிமுகம் ஆனதும், சிலர் உடனடியாக டிரேட் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். காரணம், அதை ஆரம்பிப்பது சுலபம். எங்கிருந்தோ ஒரு பரிந்துரை வரும். தரகரேகூட என்ன வாங்கலாம் என்று சொல்வார். உடனே ஒரு தொகைக்கு வாங்கிவிடுவார்கள். இன்னும் சிலர், உள்ளே வரும் விதமே விநோதமாக இருக்கும். டிமேட் தொடங்கியதும் 50,000 ரூபாய் போல ஆரம்பப் பணம் எடுத்துவரச் சொல்வார்கள்.

அப்படி உள்ளே அழைத்து வரப்படுபவர்களுக்கு முன் அனுபவம் ஏதும் இருக்காது. பங்குகளில் பெரும் லாபம் ஈட்டமுடியும் என்று எவரோ சொன்னதை அப்படியே நம்பி, உடனடியாகப் பணம் பண்ணும் எதிர்பார்ப்புடன் வந்திருப்பார்கள். ஒவ்வொரு `பூம்' நேரத்திலும் இப்படி நேரும்.

சந்தை உயர்ந்துகொண்டே இருப்பதைப் பார்த்து, தெரிந்தவர்கள், உடன் வேலை செய்கிறவர்கள், பங்குகளில் லாபம் செய்வதைக் கேள்விப்பட்டு, செய்திகளிலும் உயர்வு என்று சொல்லப்படுபவற்றைக் கேட்டு, தானும் செய்துபார்த்தால் என்ன என்று நினைக்கையில், ஏதோ ஒரு தரகு நிறுவன முகவரின் பேச்சால் கவரப்பட்டு, சந்தைக்குள் வருவார்கள்.

முகவருக்கு ஏற்கெனவே பல வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். தவிர, அவர் மேலும் சில வாடிக்கையாளர்களைச் சேர்க்க வேண்டும். வாடிக்கையாளர்களைச் சேர்த்ததுடன் அவர் வேலை முடிந்தது. அவர், அந்த நிறுவனத்தின் `சேல்ஸ் பர்சன்'. `இனி, போன் எடுப்பது, ஆர்டர் போடுவதெல்லாம் `டீலர்கள்' என்றழைக்கப்படும் டிரேடிங் டெர்மினல் முன்பு அமர்ந்திருக்கும் வேறு பணியாளர்கள்தான்' என்று அவர்களை அறிமுகப்படுத்திவிட்டு அவர் நகர்ந்துவிடுவார்.

Shares
Shares

புதிதாக சந்தைக்குள் வந்த வாடிக்கையாளருக்கு, எந்தப் பங்கை வாங்குவது என்ற சொந்த யோசனை ஏதும் இல்லாததால், தரகு நிறுவனத்திலிருந்து வரும் `பை கால்’கள் (Buy Call) எதுவோ, அவற்றை வாங்கலாம் என்று `டீலர்’ சொல்வதைச் செய்வார்கள். எதை வாங்கலாம் என்று நிச்சயமாகத் தெரியாதவர்களுக்கு, எந்தப் பங்கை வாங்கினால்தான் என்ன!

டீலர் சொல்வதைக் கேட்பதுதான் அப்போதைக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி. கிட்டத்தட்ட 50,000 ரூபாய் பணத்திற்கும், இதில் 10, அதில் 20 என்பது போல டீலர் சொல்வதை எல்லாம் வாங்கிவிடுவார்கள்.

அடுத்து?

Investment
Investment
காபி டே நிறுவன பங்குகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள்! #SmartInvestorIn100Days நாள்-70

வாங்கியவற்றின் விலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். சிலவற்றின் விலை உயரும். சிலவற்றின் விலை இறங்கும். என்ன செய்வது என்பது அவர்களுக்குத் தெரியாது. இதில் வேதனை என்னவென்றால், தரகர்களின் பெரும்பாலான டீலர்கர்களுக்கும்கூட அதெல்லாம் தெரியாது. காரணம், டீலர்களில் சிலர் வேலைக்குப் புதிதாக இருப்பார்கள். பரிந்துரை சொல்லும் அளவுக்கெல்லாம் அனுபவம் இருக்காது.

அவர்களைக் கேட்டால், ``விற்றுவிடுங்கள். வேறு சில பரிந்துரைகள் வந்திருக்கின்றன. அவற்றை வாங்கலாம்” என்பார்கள். இன்னும் சிலர், ``ஏற்கெனவே `ஸ்டாப் லாஸ்’, `டிரிகர்’ ஆகி விற்றாகிவிட்டது” என்பார்கள். அவர்கள் குரலில் எந்தப் பதற்றமோ வருத்தமோ இருக்காது.

புதிதாக உள்ளே வந்தவர்களுக்கு, `ஸ்டாப் லாஸ்’, `டிரிகர்’ போன்ற எதுவும் புரியாது. தவிர, `டிரெண்டு’, `மொமெண்டம் ஸ்டாக்’, `ஓவர் பாட்’, `ஓவர் சோல்டு’ என்று பயன்படுத்தப்படும் பல சொற்களும் பதங்களும் புதியனவாக இருக்கும்.

சிலருடைய அதிர்ஷ்டத்துக்கு, தொடக்கத்தில் வாங்கியவற்றுக்கே லாபம் கிடைக்கலாம். அதனால், அவர்கள் மிகவும் ஊக்கம் பெற்று, கூடுதல் பணத்தைப் பங்குகளில் வர்த்தகம் செய்ய கொண்டு வரலாம். அதன்பின் அவர்களுக்கு நஷ்டம் வரலாம். வேறு சிலருக்கு தொடக்கத்திலிருந்தே பங்கு வர்த்தகம் சரி வராது. ஐம்பதாயிரத்தின் மதிப்பு, 40 அல்லது 35 ஆயிரம் என்பது போல குறைந்துவிடும். அடுத்து என்ன செய்வது, எப்படிச் செய்வது என்பது புரியாது.

இப்படிப்பட்ட நேரத்தில் பங்குச் சந்தைகளுக்கு விவரம் தெரியாமல் வந்த புதியவர்கள், இரு வேறு பாதைகளில் பிரிவார்கள். ஒரு பகுதியினர், `இனி பங்கு வர்த்தகம் வேண்டவே வேண்டாம்; எனக்கு ஒத்துவரவில்லை. இருப்பவற்றை விற்றுவிடுங்கள் போதும்’ என்று முடித்துக்கொள்வார்கள். சந்தையிலிருந்து விலகிவிடுவார்கள்.

இன்னொரு பகுதியினர், `இதென்ன பெரிய விஷயமா... நான் இதை விடப்போவதில்லை. தொலைத்த பணத்தைப் பிடிப்பேன்’ என்று தொடர்ந்து செய்வார்கள்.

அவ்வாறு பங்கு வர்த்தகத்தில் தொடர முடிவெடுத்தவர்கள், மேலும், இரண்டு வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள்.

முதல் பகுதியினர், அவர்கள் நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்கள் செய்யாமல், மேலும் பணத்தைத் தொலைப்பார்கள். அவ்வப்போது செய்யும் தற்செயல் லாபங்கள், அவர்களைப் பங்கு வர்த்தகத்தில் தக்கவைக்கும். தவிர, தேவைப்படும் நேரம் கூடுதல் தொகைகளையும் சந்தைக்குள் கொண்டுவருவார்கள். வர்த்தகத்தில் மிகவும் பிஸியாக இருப்பார்கள். லாபம் வராது. நஷ்டம்தான் ஏற்படும். ஆனால், அவர்கள் கணக்குப் பார்க்க மாட்டார்கள். வருத்தப்படவும் மாட்டார்கள்.

முதலீட்டாளர்கள்
முதலீட்டாளர்கள்
பங்குச்சந்தையில் டிரேடு செய்ய பொருத்தமான பங்குகள்! #SmartInvestorIn100Days நாள் - 71

மற்றொரு பிரிவினர், பங்குச் சந்தை குறித்தும் விலை உயர்வுகள் இறக்கங்கள் குறித்தும் விவரங்கள் தேடிப் படித்து, கேட்டுத்தெரிந்துகொண்டு, தங்கள் செயல்பாட்டை மாற்றி சரியாகச் செய்து லாபம் பார்ப்பார்கள்.

டிரேடிங் நீச்சல் என்றால், இன்வெஸ்ட்மென்ட் என்பது படகு அல்லது கப்பலில் போவதுபோல. அதிலும் ஆபத்து உண்டு. ஆனால் குறைவு. டிரேடிங்கில் பணம் செய்யும் `நீச்சல் மன்னர்கள்’ இருந்தாலும் மொத்தத்தில் அவர்கள் சதவிகிதம் குறைவு.

அப்படிப்பட்ட வெற்றிகரமான டிரேடர்கள் சொல்லும் லாபம் செய்யும் வழிமுறைகள் பலவும் எளிமையானவை. ஆனால், பெரும்பாலானவர்கள் பின்பற்றாதவை. அவற்றில் ஒன்று, டிரேடிங்கில் `டிசிப்ளின்’ கடைபிடிக்காதது. டிசிப்ளின் என்றால் ஒழுங்குமுறை.

அப்படியென்ன எளிய, ஆனாலும் பலரும் கடைபிடிக்காத ஒழுங்குமுறைகள்? நாளை பார்க்கலாம்.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

அடுத்த கட்டுரைக்கு