Published:Updated:

இன்ட்ரா-டே வர்த்தகம் லாபம் தருமா? #SmartInvestorIn100Days நாள் - 15

இன்ட்ரா-டே டிரேட் செய்து பணம் பண்ணமுடியுமா, வாரன் பஃபெட் போன்று எவரேனும் இதில் வெற்றி பெற்றிருக்கிறார்களா என்று ஒரு கேள்வி.

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

வாரன் பஃபெட் பங்குச்சந்தையில் பெரும் பணம் பண்ணியவர் என்பது சரி. உலகில் இருக்கும் மனிதர்களிலேயே பங்குச்சந்தையில் அதிக அளவில் பணம் செய்தவரும், தொடர்ந்து செய்துகொண்டிருப்பவர் பஃபெட் என்பதே உண்மை.

ஆனால், அவருக்கும் இன்ட்ரா-டே டிரேடுக்கும் வெகுதூரம். சொல்லப்போனால் ஸ்நானப்பிராப்திகூட இல்லை. (ஒரே நேரம் ஒரே குளம் அல்லது ஆற்றில் குளித்த அளவிலான சிறு தொடர்பு).

பஃபெட் செய்வதெல்லாம் இன்வெஸ்ட்மென்ட். தேர்ந்த நிதானமான முதலீடுகள். ஒரு பங்கை வாங்கியதில் இருந்து விற்கும் வரையிலான நேரத்தை வைத்து, ஒருவர் பங்குச்சந்தையில் செய்வது என்ன என்று சொல்லலாம்.

  1. நீண்டகாலம் வைத்திருப்பவர், முதலீட்டாளர். ஆங்கிலத்தில் இன்வெஸ்டர்.

  2. ஒரிரு நாள்கள் முதல் சில வாரங்கள் வரை வைத்திருந்து விற்பவர், டிரேடர்.

  3. வாங்கிய அன்றே விற்பவர், இன்ட்ரா-டே டிரேடர்.

டிரேடிங்கில், வாங்கிவிட்டு விற்பது மட்டுமல்ல. முதலில் விற்றுவிட்டு, பின்னர் அதே நாளில் விலை இறங்கியதும் வாங்கி, லாபம் பார்க்கும் நோக்கில் செய்வதும் `இன்ட்ரா-டே ’ வர்த்தகம்தான். அதை`ஷார்ட்’ போய்விட்டு பின்னர் `கவர்’ செய்வது என்பார்கள்.

டிரேட் என்பதில் பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸும் அடங்கும். அவையும் வாங்கி விற்று அல்லது விற்று வாங்கி லாபம் முயல அனுமதிப்பவை. அவற்றைத் தனியாகப் பார்க்கலாம். ஆமாம். இவையெல்லாமே முயற்சிகள்தான். இவற்றில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கலாம். நஷ்டமும் ஆகலாம்.

லாபம் அல்லது நஷ்டம் என்பது முதலீடு, டிரேட் மற்றும் இன்ட்ரா-டே டிரேட் ஆகிய மூன்றுக்குமே பொருந்தும்.

உதாரணத்துக்கு நேற்று பட்டியலிடப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி பங்கையே எடுத்துக்கொண்டால், இன்ட்ரா-டே செய்யும் சிலர், பங்கு பட்டியலிடப்பட்டதும், `மார்க்கெட் ரேட்’ என்று போட்டு வாங்கியிருக்கலாம். என்ன விலை நடந்தாலும் அந்த விலையில் வாங்குவதுதான் ’மார்கெட் ரேட்’.

 இன்ட்ரா-டே
இன்ட்ரா-டே
ஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்! #SmartInvestorIn100Days - நாள் 9

ஐ.பி.ஓ-வில் 112 மடங்கு சப்ஸ்கிரைப் ஆன பங்கு என்பதால், நிச்சயம் வழங்கப்படும் ரூ.310 என்ற விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு பட்டியலிடப்படும், வாங்க பலத்த போட்டி இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தது போலத்தான் நடந்தது.

சொல்லப்போனால், கிரே மார்கெட்டில் 50% கூடுதல் விலைக்கு வர்த்தகம் ஆகிறது என்ற செய்திகள் வந்தன. ஆனால், பட்டியலிடப்பட்டு முதல்நாள் நடந்த விலையோ, 125 சதவிகிதத்துக்கும் அதிகம்.

அலாட்மென்ட் கிடைத்த சிலர், அடித்தது லக்கி பிரைஸ் என்று உடன் விற்றிருக்கலாம். விற்றிருந்தால், இரண்டு வாரத்தில் போட்ட பணம் இரட்டிப்புக்கும் மேல்.

கிடைத்ததை விற்காமல் சிலர், இன்னும் விலை உயரும் என்கிற எதிர்பார்ப்பில் வைத்திருக்கலாம். வேறு சிலர் கூடுதலாக அந்தப் பங்குகளை வாங்கியிருக்கலாம்.

சிலர், காலையில் பட்டியலிடப்பட்டதும் வாங்கி, பங்கு விலை உயர்ந்ததும் நேற்றே விற்றிருக்கலாம். வேறு சிலர், எல்லோரும் இந்தப் பங்கு பிரமாதமாக சப்ஸ்கிரைப் ஆகியிருக்கிறது. அதனால் மிகவும் கூடுதல் விலை போகும் என்று நம்பி, கண்ணை மூடிக்கொண்டு வாங்குவார்கள். ஆனால், அவ்வளவு கூடுதல் விலை எல்லாம் நிற்காது. ஆரம்ப ஜோரில் பலரும் மார்க்கெட் ரேட்டில் வாங்குகையில், நாம் சும்மாவே விற்றுவைப்போம். இன்றே கண்டிப்பாக விலை இறங்கும். அப்போது கவர் செய்துவிடலாம் என்று விற்றிருப்பார்கள். கையில் பங்கு இல்லாமலே! இதுபோன்று பல பங்குகளுக்கு, பட்டியலிடப்படும் நாளன்று நடந்திருக்கிறது.

மேலே பார்த்த வாங்குதல் விற்றல் ஆகிய இரண்டும் ஒரே நாளுக்குள் நடப்பது. வாங்கி விற்றோ. விற்றபின் வாங்கியோ. எல்லா வகையினருக்கும் நேற்று ஐ.ஆர்.டி.சி பங்கு வர்த்தகத்தில் வாய்ப்பிருந்தது.

IRCTC
IRCTC
பங்குச்சந்தை அநியாயங்கள்... உஷார்! #SmartInvestorIn100Days நாள்-14

ஐ.ஆர்.சி.டி.சி பங்கு வழங்கப்பட்ட விலை: ரூ.310

சிறுமுதலீட்டாளர்களுக்கு : ரூ.320

NSE யில் பட்டியல் இட்டதும் ஆரம்ப விலை : ரூ.626

14-ம் தேதியன்று போன அதிகபட்ச விலை: ரூ. 743.80

14-ம் தேதி அன்று நடந்த குறைந்தபட்ச விலை: ரூ.625

அன்றைய முடிவு விலை: ரூ.727

வர்த்தகமான பங்குகளின் எண்ணிக்கை NSE-யில் 4,52,70,607

வர்த்தகமான பங்குகளின் எண்ணிக்கை BSE-ல் 54,40,273

ஒரு நாள் வர்த்தகத்தின் டெக்னிக்கல் சார்ட் பார்த்தால் அந்த ஒரு நாளின் வர்த்தக நேரத்தில் பங்குவிலை எப்படியெல்லாம் நகர்ந்திருக்கிறது என்று தெரியும்.

தேசிய பங்குச் சந்தையில் 14.10.2019 அன்று ஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலை சார்ட்
தேசிய பங்குச் சந்தையில் 14.10.2019 அன்று ஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலை சார்ட்
moneycontrol.com

ஆரம்ப விலையில் வாங்கி அதிகபட்ச விலையில் விற்றிருந்தால், பங்கு ஒன்றுக்கு 117 ரூபாய் லாபம். எப்படிப் பார்த்தாலும் முதல் நாள் அன்று நிச்சயம் விலை ஏறும் என்று யூகித்திருந்தவர்கள், பங்கு ஒன்றுக்கு 50 முதல் 100 ரூபாய் வரை பார்த்திருக்கலாம். சிலர் பார்த்திருப்பார்கள்.

வேறு சிலர், எப்போதும் மேலே பார்த்ததுபோல வாங்கிவிட்டு விற்க மாட்டார்கள். அவர்களுக்கு அவ்வாறு ‘லாங்’ போவது பிடிக்காது. எப்போதும் ’ஷார்ட்’ தான். 626 ரூபாயில் ஆரம்பித்து 670, 680, 690 ரூபாய் வரை போனவுடன் ஷார்ட் அடிப்பார்கள். இறங்கும். இறங்கிய பின் குறைந்த விலையில் ’கவர்’ செய்து லாபம் பார்ப்போம் என்கிற எண்ணத்தில்.

ஐ.ஆர்.சி.டி.சி பங்கு நேற்று அந்த வாய்ப்பைக் கொடுக்கவில்லை.

பார்த்தால் தெரியும், நேற்றைய ஆரம்ப விலையும், நேற்றைய குறைந்த விலையும் (ஓப்பனிங் மற்றும் குளோசிங்) தேசியப்பங்குச் சந்தையில் ஒன்றுதான் (ஒரே ஒரு ரூபாய்தான் வித்தியாசம்). அதனால் ஷார்ட் போனவர்களுக்கு நஷ்டம்.

சில ’இன்ட்ரா-டே’ ’லாங்’ போனவர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம். காரணம், அவர்கள் நேற்றைய அதிக விலையில், உதாரணத்துக்கு 730, 740 ரூபாய்க்கும் மேற்பட்ட விலைகளில் வாங்கியிருந்தால், அதை இன்ட்ரா-டே டிரேட் என்பதால் நேற்றே விற்றிருக்க வேண்டும். பங்குக்கு 20 ரூபாயோ 30 ரூபாயோ நஷ்டமாகியிருக்கும்.

காரணம், 743 ரூபாய் என்ற விலை போய்விட்டு, பின்னர், மதியம் 12.42 ரூபாய் வாக்கில் 701 ரூபாய் விலை நடந்திருக்கிறது.

இன்ட்ரா டே டிரேட் என்பது மின்சாரம் ஓடும் ஒயரைக் கையில் பிடிப்பதுபோலதான். படார் என்று பெரிய அடியாக விழலாம். அதிலும் இன்ட்ரா-டே ஷார்ட் மிகவும் ஆபத்தானது.

இன்ட்ரா-டேயில் `லாங்' போய்விட்டு, அன்றைக்கு விற்கமுடியாமல் போனால், பணம் கட்டி, டெலிவரி எடுக்கலாம். ஆனால் ஷார்ட் அப்படியல்ல. விற்றவர் அன்றைக்கே டெலிவரி கொடுத்தாக வேண்டும். அதற்காகத்தான் அதை அன்றே வேறு எவரிடமிருந்தாவது வாங்கிவிடுவது.

விற்றவர் அப்படி வாங்க வேண்டும் என்றால். எவரேனும் விற்கவேண்டும். எவரும் விற்க முன்வராவிட்டால்? அதன் பெயர் ’பையர் பிரீஸ்’. (இதுதான் ஷாக் என்பது!)

அதன்பின் நமக்காக சந்தை நிர்வாகம் தனியாக ஆன்லைன் ஏலம் நடத்தி, அங்கே கிடைக்கிற விலையில் நமக்காக அந்தப்பங்கை எவரிடமிருந்தாவது வாங்கி, டெலிவரி கொடுத்து, நம் கணக்கை நேர் செய்யும்.

இதனால் ஷார்ட் அடித்து கவர் பண்ண முடியாதவருக்கு பெரிய நஷ்டம் வரும். அப்படியென்றால் இன்ட்ரா டே வை வெற்றிகரமாக, லாபகரமாக செய்யவே முடியாதா? இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.