Published:Updated:

வாங்கிய பங்குகளை உடனுக்குடன் விற்பது நல்ல அணுகுமுறையா? #SmartInvestorIn100Days நாள் - 68

#SmartInvestorIn100Days

பங்குச்சந்தையில் கொஞ்சம் லாபம் கிடைத்தாலும், உடனே விற்றுவிடுவார்கள். இது தவறா? இப்படிச் செய்யக்கூடாதா?

Published:Updated:

வாங்கிய பங்குகளை உடனுக்குடன் விற்பது நல்ல அணுகுமுறையா? #SmartInvestorIn100Days நாள் - 68

பங்குச்சந்தையில் கொஞ்சம் லாபம் கிடைத்தாலும், உடனே விற்றுவிடுவார்கள். இது தவறா? இப்படிச் செய்யக்கூடாதா?

#SmartInvestorIn100Days

கண் தெரியாத சிலர், யானையை வெவ்வேறு விதங்களாகப் பார்த்த கதை குறித்து முன்பு குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.

பங்குச்சந்தையையும் பலரும் அப்படி பல்வேறு விதங்களாகப் பார்க்கிறார்கள், அணுகுகிறார்கள். சிலர் முதலீட்டு வாய்ப்பாக பார்ப்பது போல, வேறு சிலர், நல்ல டிரேடிங் வாய்ப்பாகப் பார்க்கிறார்கள்.

இதுவரை நீண்டகால முதலீட்டிற்குப் பங்குகளை எப்படித் தேர்வு செய்யவேண்டும் என்பது குறித்து விரிவாகப் பேசினோம். இனி, பங்குகளில் `டிரேடிங்’ செய்வது எப்படி மற்றும் அதன் லாப நஷ்டங்கள் குறித்து பார்க்கலாம்.

சில கடைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஏதோ சில பொருள்களை வாங்கி விற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால், அந்தப் பொருள்கள் அனைத்தையும் அவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களைப் பொறுத்தவரை, அது ஒரு வியாபாரப் பொருள். அவ்வளவுதான்.

எந்தப் பொருள் எந்த சீசனில் நன்றாக விற்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். எதை அதிகம் வாங்கி ஸ்டாக் வைத்துவிடக்கூடாது என்பதுவும் அவர்களுக்குத் தெரியும். ஆனால், அதை அவர்கள் பயன்படுத்தி அனுபவித்திருக்க மாட்டார்கள். எளிதான உதாரணம் சொல்வதென்றால், சில ரியல் எஸ்டேட் தரகர்களைச் சொல்லலாம்.

நல்ல நல்ல இடங்கள் பலவற்றை, குறைவான விலைகளில் பலருக்கும் வாங்கிக் கொடுத்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு என்று வாங்கியிருக்க மாட்டார்கள்.

Representational Image
Representational Image

பங்குகளில் டிரேடிங் செய்கிறவர்களில் பலர் அப்படிப்பட்ட வியாபாரிகள் போலதான் நடந்துகொள்வார்கள். அவர்களில் பலர் பங்குகளை நீண்டகாலம் வைத்திருப்பதில்லை. அவைதரும் டிவிடெண்ட் போனஸ் போன்றவற்றுக்காக அவற்றை வாங்குவதில்லை. வாங்கி வைத்திருப்பது, காத்திருப்பதெல்லாம் அவர்கள் அகராதியில் கிடையாது. கொஞ்சம் லாபம் கிடைத்தாலும் உடனே விற்றுவிடுவார்கள்.

இது தவறா? இப்படிச் செய்யக்கூடாதா?

இதில் தவறோ, செய்யக்கூடாத எதுவுமோ இல்லை. இது அவர்களுடைய அணுகுமுறை. இதில் மிக நல்ல லாபம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து நஷ்டம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

`முதலீடு செய்துவிட்டு அதில் உட்கார்ந்திருப்பது’ என்றால்தான் ரிஸ்க். இப்படி வாங்கி அப்படி விற்கும்போது நமக்கு ரிஸ்க் குறைவு’ என்று நினைப்பவர்கள் இவர்கள். தவிர, `வாங்கி தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய முதலீடுகளுக்கு, அதிகம் தெரிந்திருக்க வேண்டும். இதில் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை’ என்பது சிலர் எண்ணம்.

Shares
Shares

இன்னும் சிலர், `முதலீட்டுக்கு என்று போய்விட்டால், கையில் இருக்கும் பணம் `லாக்’ ஆகிவிடும். கையில் இருக்கும் பணத்திற்கு ஏதாவது பங்கு வாங்கிவிட்டால், முதலீடு என்றால், காத்திருக்கச் சொல்வார்கள். அதனால் வேறு எதுவும் வாங்க முடியாது. அப்படி இருந்துவிட்டால் பலவும் `இழக்கும் சந்தர்ப்பங்கள்’ ஆகிவிடும்! டிரேட் செய்தால் கையில் இருக்கும் பணத்தை அதிகம் `ரொட்டேட்’ செய்யலாம். அவ்வளவுக்கு அவ்வளவு லாபம்’ என்று வாதிடுவார்கள்.

மேலும் `ஒருமுறை முதலீடு’ செய்துவிட்டால், அதன்பின் என்ன செய்ய? எவ்வளவு விஷயங்கள் நடக்கும் இடம், பங்குச்சந்தை! அங்கே நான் `பேசிவ்’ ஆக, சும்மா உட்கார்ந்திருக்க வேடிக்கை பார்க்க விரும்பவில்லை. எனக்கு தினம் தினம் ஏதாவது செய்யவேண்டும். மார்கெட்டில் `ஆக்டிவ்’ ஆக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லி, `டிரேடிங்’ செய்பவர்கள் உண்டு.

`நான் புத்திசாலி. எனக்கு சந்தை பற்றி நன்றாகவே தெரியும். நான் ஜெயித்துக்காட்ட விரும்புகிறேன். என் திறமையைக் காட்ட, இந்த டிரேடிங் ஒரு பெரிய வாய்ப்பு’ என்று உள்ளே வருகிறவர்களும் உண்டு.

இவர்களை எல்லாம் தாண்டி மற்றொரு வகையினரும் உண்டு. `நான் முதலீடு செய்யத்தான் வந்தேன். அப்படித்தான் ஆரம்பித்தேன். ஆனால், ஏனோ இப்போது டிரேட் செய்துகொண்டிருக்கிறேன்’ என்று தன்னைத்தானே வியப்புடன் பார்ப்பவர்கள் அவர்கள்.

எனவே பங்குச்சந்தை என்றால் என்ன, டிரேடிங் என்றால் என்ன, எப்படிச் செய்கிறார்கள், என்ன `டெக்னிக்’ பயன்படுத்தி வெற்றி பெறுகிறார்கள் போன்றவற்றையெல்லாம் தெரிந்துகொள்வது பயனுள்ளது, சுவாரஸ்யமானதும் கூட.

இனி அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.