Published:Updated:

பங்குச்சந்தையை சூதாட்டம் என்பது சரியா... உண்மை என்ன?! #SmartInvestorIn100Days நாள் - 33

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

எத்தனையோ முதலீட்டு முறைகள் இருக்கும்போது பங்குச்சந்தையில்தான் முதலீடு செய்யவேண்டுமா?

பங்குச்சந்தை பல அபாயங்களுக்கு உட்பட்டது என்கிறார்கள். அப்படிச் சொல்லப்பட்டாலும் பலர் அதில் இறங்குகிறார்கள். அவர்கள் செய்வது என்ன? எவரேனும் பங்குகளில் லாபம் பார்க்கிறார்களா? பங்குச்சந்தை யாருக்கு ஒத்து வரும், யாருக்கு சரிப்படாது? பங்குகளில் முதலீடு செய்யாமல் முடியாதா? வேறு வழிகள் இல்லையா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் சிலருக்குத் தேவைப்படலாம்.

வேலைக்குப் போய் சம்பளம் வாங்கி அல்லது தொழில், வியாபாரம் செய்து லாபம் பார்த்து, எல்லோருமே ஏதாவது ஒரு வழியில் ஓரளவு பணம் சம்பாதிக்கிறோம். கிடைக்கிற பணத்தைத் தேவைகளுக்குச் செலவு செய்கிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிலருக்குக் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இருக்கிறது. சிலர் பற்றாக்குறையைச் சரிசெய்ய கடன் வாங்குகிறார்கள். போகப் போகச் சிலருக்கு வருமானம் அதிகரிக்கிறது. சிலருக்கு அதிகரிப்பதில்லை.

Share Market
Share Market

அதேபோல பணத்திற்கான தேவையும் போகப்போகக் கூடுகிறது. விலைவாசி மட்டுமல்லாது, வயதாவதால் ஏற்படும் உடல்நலக்குறைவு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளின் காரணமாகவும் ஒருவருக்குத் தேவைப்படும் பணத்தின் அளவு தொடர்ந்து அதிகரிக்கிறது.

ஒரு கட்டத்திற்கு மேல் உழைக்க இயலாது. வருமானம் குறையும். அல்லது நின்றுவிடும்.

இவையெல்லாம் வாழ்க்கையின் யதார்த்தங்கள். பெரும்பாலான மக்கள் சந்தித்தாகவேண்டிய நிர்பந்தங்கள். இந்தச் சூழலை எதிர்கொள்ள, சவாலைச் சந்திக்க, சில முன்னேற்பாடுகள் செய்யவேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலாவது, தற்போதைய சம்பாத்தியம் தற்கால தேவைக்கு மட்டுமல்ல என்று புரிந்துகொண்டு, அதற்குத் தக்க செயலாற்ற வேண்டும். செயலாற்றுவது என்றால், இப்போது சம்பாதிப்பதில் ஒரு பகுதியை மட்டுமே செலவுசெய்து மற்றொரு பகுதியை வருங்காலத்திற்காக எடுத்து வைத்துவிடுவது. முடியும், முடியாது என்று விவாதிக்காமல், செலவுகளைக் குறைத்துக்கொண்டு சேமிப்பது.

இரண்டாவது, சேமிக்கிற பணம் பத்திரமாய் இருக்கவும், தேவைப்படும் காலத்தில் அந்தப் பணத்திற்கு மதிப்பு இருக்கும்படி செய்யவும் பாதுகாப்பான, அதே சமயம் வளர்ச்சி வாய்ப்பிருக்கிற இடத்தில் முதலீடு செய்வது.

இந்த இடத்தில்தான் பங்குச்சந்தை என்ற முதலீட்டு வாய்ப்பு வருகிறது.

பங்குச்சந்தை முதலீட்டு வாய்ப்பு என்பதே பலரும் உணராது அதை வைத்து அவர்கள் செய்வது வேறு பல.

யானையைக் குருடர்கள் பார்த்த கதை தெரியும்தானே! கண் தெரியாத, முன்னேபின்னே யானையையே பார்த்தறிந்திராதவர்கள் சிலரை யானையிடம் அழைத்துப் போகிறார்கள். அவர்களை யானையைச் சுற்றி நிற்கவைத்து, கைகளால் தடவி யானை எப்படி இருக்கிறது என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் என்றார்கள்.

கால் பக்கம் நின்று தொட்டுத் தடவிப் பார்த்தவர், ``யானை, தூண் போல இருக்கிறது” என்றார். மற்றொருவர், காதை தடவிப் பார்த்துவிட்டு ``இல்லை, இல்லை. யானை முறம் போல இருக்கிறது” என்றார், மற்றொருவர் சொன்னது, ``யானை கயிறு போலிருக்கிறது” என்று. அவர் தடவிப்பார்த்தது, யானையின் வாலை. இன்னொருவர் முதுகைத் தடவிப்பார்த்துவிட்டு, ``சுவர் போலத்தான் இருக்கிறது” என்று அடித்துப் பேசினார். தும்பிக்கையைத் தொட்டவரின் விவரிப்போ, ``யானை மரம் போல இருக்கிறது” என்று.

Share Market
Share Market

யார் சொன்னது சரி, யார் சொன்னது தவறு. எவர் சொன்னதும் சரியில்லை. அதே சமயம் அவர்கள் எவரும் பொய் சொல்லவில்லை. அவர்கள் தொட்டுப் பார்த்தபோது உணர்ந்ததை வைத்து அப்படிப்பட்ட முடிவுகளுக்கு வந்தார்கள். அவர்கள் வேறு எந்தப் பகுதியையும் தெரிந்துகொள்ளவில்லை.

அதைப் போன்றதுதான் பங்குச்சந்தை பற்றிப் பலரும் கொண்டிருக்கும் அபிப்பிராயங்களும்.

சிலர், பங்குச்சந்தையை, `இது ஒரு சூதாட்டம், சரியாக அடித்தால் ஒரு டிரேடில் பெரும் பணம் பண்ணிவிடலாம்’ என்பார்கள். வேறு சிலர், `ஒரு சில மணித்துளிகளில் பெரும் பணம் செய்ய வாய்ப்புத் தரும் இடம் பங்குச்சந்தை’ என்பார்கள். வேறு சிலரோ, `வங்கி வட்டியைக் காட்டிலும் கூடுதல் வருமானம் தரக்கூடிய, முதலீட்டு வாய்ப்புகள் இருக்குமிடம்’ என்பார்கள். `வருமானத்துக்கு வரிவிலக்கு பெற்றுத்தரும் முதலீட்டு வாய்ப்பு’ என்போரும் உண்டு.

இவற்றில் எது சரி? எது தவறு?

எல்லாமே சரிதான். பங்குச்சந்தையையும் பலர் அவரவர் தெரிந்துகொண்ட அல்லது அவர்கள் பங்குச்சந்தையைப் பயன்படுத்தும் வகையை வைத்து, அது அப்படித்தான் என்று விவரிக்கிறார்கள்.

மேலே பார்த்த வகைகள் அனைத்திலும் பணம் பண்ணுகிறவர்களும் உண்டு, பணம் இழக்கிறவர்களும் உண்டு.

இப்படிப்பட்ட பங்குச்சந்தை எவ்வாறு ஒருவருடைய சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் உகந்ததாக இருக்க முடியும்?

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.