Election bannerElection banner
Published:Updated:

இது பங்குச்சந்தையின் `டாப் கியர்' காலமா? முதலீடு செய்யலாமா?!  #SmartInvestorIn100Days நாள்- 50

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

வி.பி.சிங், நிதியமைச்சராக இருந்தபோது அவர் செய்த பல சீர்திருத்தங்களால் பங்குச்சந்தைகளில் ஏற்றம் வந்தது. பங்குகளின் விலைகள் நல்ல ஏற்றம் கண்டன. இந்த `விலை தொடர் உயர்வு காலம்’ 65 வாரங்கள் தொடர்ந்தது.

நாட்டின் பொருளாதார நிலை சரியாக இருந்தால், பல்வேறு நிறுவனங்களின் வியாபாரங்கள் நன்றாக நடக்கும். அவை லாபமீட்டும். அதனால், பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கும் லாபம்.

இப்படிப்பட்ட சாதகமான நிலை தொடர்ந்தால், வியாபாரமும் லாபமும் மேலும் அதிகரிக்கும். அதனால், பங்கு விலைகளும் தொடர்ந்து உயரும். இப்படி நடப்பது பல ஆண்டுகளுக்குக் கூடத் தொடரும். இதை `விலைகள் தொடர் உயர்வு காலம் (1984 -1986)’ என்றும் சொல்லலாம்.

பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பின் நடந்த தேர்தலில், ராஜீவ் காந்தி மிகப்பெரும் வெற்றிபெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார். வி.பி.சிங், நிதியமைச்சராக இருந்தபோது அவர் செய்த பல சீர்திருத்தங்களால் பங்குச்சந்தைகளில் ஏற்றம் வந்தது. பங்குகளின் விலைகள் நல்ல ஏற்றம் கண்டன. இந்த `விலை தொடர் உயர்வு காலம்’ 65 வாரங்கள் தொடர்ந்தது.

அடுத்து, 1991-ம் ஆண்டில் மிகக்குறைந்த மெஜாரிட்டியுடன் ஆட்சிசெய்த  நரசிம்மராவ் செய்த Liberlisation, Privatisation & Globalisation காரணமாக, பங்கு விலைகள் மிக அதிக அளவில் உயர்ந்தன. இரண்டே ஆண்டுகளில் சென்செக்ஸ் 578% உயர்ந்தது.

அடுத்து, 1999-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 978 புள்ளிகளில் இருந்த நிஃப்டி, பிப்ரவரி 2000-ம் ஆண்டில் 1,654 புள்ளிகள் வரை உயர்ந்தது. 10 மாதங்களில் 69 சதவிகித உயர்வு.

அதன் பின்னர், 2003-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 934 என்ற அளவில் இருந்த தேசிய பங்குச்சந்தையின் புள்ளிகள், 2008 டிசம்பர் மாதம் 6,138 வரை உயர்ந்தது. ஐந்தரை ஆண்டுகளில் ஆறு மடங்குக்கும் மேல் உயர்வு.

பங்குச்சந்தை ஏற்றங்கள்
பங்குச்சந்தை ஏற்றங்கள்

பின்பு, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5,500 புள்ளிகள் என்ற அளவில் இருந்த நிஃப்டி, இப்போது, 2019-ம் ஆண்டு 12,000-த்தை தொட்டு வந்திருக்கிறது. ஆறு ஆண்டுகளில் இதுவரை 118 சதவிகித உயர்வு. இடையில் பெரிய வீழ்ச்சி இல்லாமல் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு உயர்வு.

சில குறிப்பிட்ட காலத்துக்கு பெரும்பாலான பங்குகளின் விலைகள் உயர்வதை, `பூம் பீரியட்’ (Boom Period) என்பார்கள். முன்னேறி, முட்டித்தள்ளும் காளை மாடுகளின் காலம் எனப் பொருள்படும் விதம் `ஃபுல் ஃபேஸ்’ (Bull Phase) என்றும் சொல்வார்கள்.

இப்படிப்பட்ட காலங்களில் நல்ல லாபம் பார்க்கும் நிறுவனப் பங்குகளின் விலைகள் உயரும், தொடர்ந்து உயரும். அதனால், பங்குகளை வாங்கி வைத்திருந்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதைப் பார்க்கும் வேறு பலரும் இது, `பங்குகளில் பணம் பார்க்க சரியான நேரம்’ என்று சந்தைக்குள் வருவார்கள். அவர்களும் வாங்குவார்கள். அவர்கள் வாங்கிய பங்குகளும் விலை உயரும்.

அவர்களுக்கும் லாபம். அதுவும் வாங்கி கொஞ்ச நாள்களிலேயே லாபம். இது அவர்களை மேலும் வாங்கத் தூண்டும். வாங்குவார்கள். அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்குச் சொல்வார்கள். ஊடகங்கள் இப்படிக் கிடைக்கும் லாபங்கள் பற்றிப் பேசும்; எழுதும். அதுவரை பங்குச்சந்தைப் பக்கம் வராதவர்கள்கூட, லாபம் பார்க்கும் நோக்கத்துடன் பங்குகளை வாங்குவார்கள்.

Bull Market
Bull Market

இந்தக் காரணங்களால் பங்கு விலைகள் தொடர்ந்து உயர, கையில் இருப்பதை விற்பானேன், நமக்குக் கிடைக்கும் லாபத்தை விடுவானேன்’ என்று விற்க வருபவர்கள் எண்ணிக்கை குறையும். விற்க வருபவர்கள் குறைவாகவும், வாங்க வருபவர்கள் அதிகமாகவும் ஆக, பங்கு விலைகளுக்கு மேலும் கொண்டாட்டம்தான், மேலும் உயரும்.

அதுவரை என்ன நிறுவனம், என்ன லாபம் ஈட்டுகிறது என்று பார்த்துப் பார்த்து வாங்கியவர்கள், ஆராய்வதையெல்லாம் விட்டுவிடுவார்கள். `இந்த பங்குக்கு இந்த விலை வரை சரி. அதற்குமேல் பெறாது’ என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். `வாங்கியதும் விலை உயரப்போகிறது. விற்று லாபம் பார்க்கப் போகிறோம். அவ்வளவுதான்’ என்கிற ரீதியில் சிந்தனை போகும். ஆசை கண்ணை மறைக்கும். பலவற்றையும் வாங்குவார்கள். காதில் விழுவதையெல்லாம் நம்புவார்கள்.

Sensex, Nifty high
Sensex, Nifty high
GDP குறைந்திருப்பதால் பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சியடையுமா? #SmartInvestorIn100Days நாள்-49

கையில் இருக்கும் காசுக்கு வாங்குவார்கள். கையில் இருக்கும் பங்குகளை அடமானம் வைத்து `மார்ஜின் ஃபண்டிங்’கில் பணம் பெற்று பங்குகள் வாங்குவார்கள். நகைகள் போன்ற வேறு சொத்துகளின்மீது கடன்வாங்கி வாங்குவார்கள். 

இப்போது, அப்படிப்பட்ட நிலை இன்னும் வரவில்லை. சந்தை இன்னும் அந்த `டாப் கியர்’ருக்கு வரவில்லை. மேலே பார்த்த `ஃபுல் பீரியட்’களின் உச்சத்தில் அப்படித்தான் நடந்தது. அதனால் விலைகள் தாறுமாறாக உயரும். ஆனாலும், வாங்குவார்கள்.  இப்படியே எவ்வளவு காலம் விலைகள் உயர முடியும்?

அடுத்தது என்ன நடக்கும்? அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம். 

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு