ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும் பொருளாதார ஏற்ற இறக்கங்களை அலசும் தொடர்!
எங்கே முதலீடு செய்தாலும், போடும் பணம் பத்திரமாக இருக்கவேண்டும் என்பது அடிப்படை. அதற்குப் பிறகுதான், அந்த முதலீடு வருமானம் ஈட்டித் தருமா, தராதா என்றெல்லாம் பார்க்க வேண்டும். ஆனால், பங்குச்சந்தை அந்த விதிக்கு ஒத்துவராதது.
வங்கி, போஸ்ட் ஆபீஸ் போன்றவற்றில் போடும் பிக்சட் டெபாசிட் போன்றவை பிக்சட் ரிட்டர்ன் முதலீடுகள். இத்தனை சதவிகிதம் வட்டி என்று முன்கூட்டியே தெரிவிப்பார்கள் என்பதுடன் அதை நிச்சயமாக தரவும் செய்வார்கள். சந்தை அபாயங்கள் அவற்றைப் பாதிக்காது. மற்றொரு வகையான வேரியபிள் ரிட்டர்ன் பிரிவில் வருவது பங்குகள், தங்கம் வெள்ளி, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் போடும் பணம்.
வேரியபிள் என்றால், மாறக்கூடியது. இவ்வளவுதான் என்றில்லை. அதிலிருந்து கிடைக்கக்கூடிய வருமானம் கூடலாம், குறையலாம். பல மடங்காகலாம். சமயத்தில் முதலுக்கே கூட மோசம் வரலாம். முதலீடு மற்றும் வருமானம் ஆகிய இரண்டுக்குமே வேரியபிள் ரிட்டர்ன் முதலீடுகளில் கியாரன்ட்டி இல்லை.

ஒருவர் வாங்கிய பிறகு தங்கம் விலை இறங்குவதில்லையா? அப்படி இறங்கினால் அவருக்கு அதிலிருந்து வருமானம் வராதது மட்டுமல்ல, போட்ட பணத்தின் மதிப்பும் குறைந்துவிடுகிறது அல்லவா! அதனால்தான் தங்கத்தில் போடும் முதலீடு வேரியபிள் ரிட்டர்ன் வகையில் வருகிறது. பங்குச் சந்தை முதலீடும் அதே போன்றதுதான். ஒரு நிறுவனத்தின் பங்கை நாம் வாங்கிய பின், அதன் விலை இறங்கிவிடலாம். அட... அப்படியா! இப்படி ஓர் ஆபத்து இருக்கிறது என்றால், அதன் பெயர் முதலீடா? இதெல்லாம் தெரிந்துமா இதில் இவ்வளவு நபர்கள் பணம் போடுகிறார்கள்... என்று கேள்வி வருகிறதா?
பிக்சட் வருமானம் தரும் முதலீடுகளின் குணமும் பெருமையும் என்ன?
முதலுக்கு ஆபத்தில்லை. மற்றும் மாறாத, முன் அறிவிப்பு செய்யப்பட்ட, நிச்சய வருமானம். 'அதில் என்ன குறை? ஏன் வேறு எதையும் தேடவேண்டும்? எல்லோருமே பேசாமல் அதில் போடவேண்டியதுதானே!’ என்று கேட்டால் நீங்கள் ரொம்பவும் அப்பாவி. தற்சமயம், அக்டோபர் 2-ம் தேதி, 2019-ல் ஓராண்டுக் கால, டெர்ம் டெபாசிட்டுக்கு போஸ்ட் ஆபீஸ் தருவது ஆண்டுக்கு 7.1 சதவிகிதம் வட்டி. இதன்மீது வருமான வரியும் உண்டு. இது, பெரும்பாலான வங்கிகள் கொடுக்கும் வட்டி விகிதத்தைக் காட்டிலும் அதிகம். ஆனாலும் பலர் ரியல் எஸ்டேட், பங்குகள், தங்கம் மற்றும் வேறு வியாபாரங்களில் பணம் போடுவதற்குக் காரணம், அவர்களுக்கு எதிலும் சுவாரஸ்யம் வேண்டும் என்பதால்தான். அது முதலீடாக இருந்தாலும் சரி. அவர்கள் தேடுவது, கூடுதல் வருமானத்தை. அந்தத் தேடுதலில் ரிஸ்க் இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். பரவாயில்லை என்றுதான் இறங்குகிறார்கள்.
ஆமாம். வேரியபிள் ரிட்டர்ன் என்றால் வருமானம் குறையும் அல்லது முதலுக்கு பங்கம் வரும் ஆபத்து மட்டுமல்ல. நல்ல வருமானமும் முதலைப் பெருக்கும் வாய்ப்பும் இருக்குமிடம். அந்த ஆப்பர்ச்சூனிட்டிதான் அவர்களை ஈர்க்கிறது. சிலர் கண்களுக்கு ஆபத்து மட்டும் தெரிகிறது. ஆனால் பல முதலீட்டாளர்கள் பார்ப்பது அங்கிருக்கும் வாய்ப்புகளை.
பங்குச் சந்தை முதலீடுகள் வாய்ப்பும் ஆபத்தும் கலந்து செய்த கலவை. ’வேட்டையாட காட்டுக்குப் போவது, மீன் பிடிக்கக் கடலுக்குப் போவது, வியாபாரம் செய்வது என்று எதில்தான் ரிஸ்க் இல்லை. அதைக் கண்டு பயந்தால் ஆகுமா? நாம்தான் எச்சரிக்கையாகப் பார்த்துச் செய்யவேண்டும்’ என்கிற எண்ணம், அணுகுமுறை உடையவர்கள் இருக்கிறார்கள். எல்லாப் பங்குகளும் எல்லா நேரமும் நட்டம் தராது. லாபம் தரும் நிறுவனங்கள், அந்நிறுவனப் பங்குகள், சந்தையில் நிறையவே உண்டு. கண்டுபிடிக்கமுடியும். கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி, ஆரம்ப வழி, முன்பு சொல்லப்பட்ட ஐந்து லட்சணங்கள். அதை எடுத்துக்காட்டுடன் சொன்னால் புரியுமே என்று நினைத்திருக்கையில் வாகாய் வந்து அமைந்தது, ஐ.ஆர்.சி.டி.சி ஐ.பி.ஓ.

அதை வைத்தே ஐந்து லட்சணங்களை ஆராய்வோம். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் பொது வெளியில் கிடைக்கும் தகவல்களின் அடைப்படையில் எழுதப்பட்டிருக்கிறது.
1. வளரும் துறையில் இயங்கும் நிறுவனமா? இண்டஸ்ட்ரி எப்படி?
இந்தியன் ரயில்வே நிச்சயம் தொடர்ந்து வளரக்கூடிய துறை.
2. லாபம் ஈட்டும் நிறுவனம், தொடர்ந்து ஈட்டும் வாய்ப்பிருக்கும் நிறுவனமா? பிராஃபிட்டபிலிட்டி எப்படி?
ஐ.ஆர்.சி.டி.சி என்பது இந்தியன் ரயில்வேவுக்கு internet ticketing, catering, packaged drinking water (under the Rail Neer brand), and travel and tourism ஆகிய சேவைகளை வழங்கும் ஒரே நிறுவனம் . போட்டியாளர்கள் இல்லை. மேலும் executive lounges, budget hotels, and travel and tourism போன்ற புதிய சேவைகளையும் இந்நிறுவனம் எதிர்காலத்தில் கொண்டுவரலாம். கடனே இல்லாத நிறுவனம். லாபம் ஈட்டிக்கொண்டிருக்கும் நிறுவனம். தவிர ரூபாய் 1,110 கோடி ருபாய் கையிருப்பு பணம் வைத்திருக்கும் நிறுவனம். லாபம் ஈட்டும் நிறுவனம்.

எகனாமிக் டைம்ஸ் கொடுத்திருக்கும் இந்தத் தகவல் அதன் லாபம் ஈட்டும் வலுவைக் காட்டுகிறது.
3. ஈட்டும் லாபத்தை ஷேர் ஹோல்டர்களுடன் நன்கு பகிரும் நிறுவனமா?- டிஸ்டிரிபூஷன் எப்படி இருக்கும்?
தற்போது 60 சதவிகிதம் டிவிடெண்ட் கொடுக்கிறது. பெரும்பான்மையான பங்குகளை, (87.4%) அரசு வைத்திருப்பதால், தொடர்ந்து நல்ல டிவிடெண்ட் கொடுக்கும் வாய்ப்பிருக்கிறது. மேலும் இப்போது கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டிருப்பதால், இந்நிறுவனத்தின் லாபமும், அதனால் டிவிடெண்டும் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.
4. நேர்மையாக, வெளிப்படையாக , புரபஷனலாக நடத்தப்படும் நிறுவனமா- கவர்னென்ஸ் எப்படி?
இது இந்திய ரயில்வேயின் சப்சிடரி நிறுனம். அதனால் இதன் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. அதனால் சரியாக இருக்கும்.
5. கணிசமான அளவில் தினசரி வர்த்தகமாகும் நிறுவனமா?
ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் இனிதான் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட இருக்கிறது. 2 கோடி பங்குகள் வெளியிடப்படுவதால், ஓரளவு வர்த்தகமாகும் நிறுவனமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
நாம் மேலே பார்த்தது, ஒரு பங்கை எப்படி ஆராய வேண்டும் என்பதற்கான மாதிரி மட்டுமே. இதை வைத்து மட்டுமே இந்தப் பங்கில் முதலீடு செய்ய முடிவுசெய்ய வேண்டாம். ஒரு பங்கு குறித்து மேலும் பல விவரங்கள் தெரிந்துகொண்டு அதில் முதலீடு செய்வதுதான் சரி.
-முதல் போடலாம்
சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.