கேஷ் மற்றும் பியூச்சர் மார்க்கெட் - எதற்கு எவ்வளவு மார்ஜின்? #SmartInvestorIn100Days நாள்-79

மார்ஜின் பணம், கேஷ் மார்க்கெட் பரிவர்த்தனைகளுக்கும் உண்டு, பியூச்சர்ஸ் மார்க்கெட் பரிவர்த்தனைகளுக்கும் உண்டு.
நிஃப்டி 50 மற்றும் பேங்க் நிஃப்டி ஆகிய இரண்டு குறியீட்டு எண்கள் மட்டுமே பியூச்சர்ஸ் பகுதியில் வர்த்தகம் ஆகின்றன. ஆனால், இவற்றைப் போல இன்னும் பல குறியீட்டு எண்கள் உருவாக்கப்பட்டு, அந்தந்த குறியீட்டு எண்களில் இருக்கும் பங்குகளின் விலை மாற்றங்கள் தொடர்ந்து கவனிக்கப்படுகின்றன.
தற்போது இந்திய பங்கு சந்தைகளில் கவனிக்கப்படும் குறியீட்டு எண்களை கீழே உள்ள படத்தில் பார்க்கலாம். இன்டெக்ஸ் என்பது ஒருமை. இன்டிசெஸ் (Indices) என்பது பன்மை. குறியீட்டு எண்களுக்கு அருகில் அவற்றின் 10.1.20 தினத்தின் முடிவு புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

டெரிவேடிவ்ஸ் வர்த்தகம் செய்ய 'மார்ஜின்’ என்ற முன்பணம் கட்டவேண்டும். காரணம், 500 ரிலையன்ஸ், 8800 எஸ் பேங்க் என்பது போல 147 பங்குகள் மற்றும் இரண்டு பெரிய குறியீட்டு எண்களில் வர்த்தகம் நடக்கிறது.
பலரும் வாங்குகிறார்கள், விற்கிறார்கள். விலைகள், ஒரே நாளில் பல சதவிகிதங்கள் வரைகூட உயர்கின்றன, விழுகின்றன. குறியீட்டு எண்களும் அப்படி பெரிய அளவுகளில் ஏற்றத்தாழ்வுகள் அடைகின்றன.

இந்த நிலையில், ஒருவர் பங்குகளை வாங்கியபின், அதன் விலை குறைந்துவிட்டால் அல்லது அவர் விற்ற பிறகு விலை உயர்ந்துவிட்டால், அவருக்கு பெரிய நஷ்டம். அதற்குரிய பணத்தை, அவர் அவருடைய பங்குத்தரகர் மூலம் சந்தைக்குத் தர வேண்டும். கிடைக்கும் அந்தப் பணத்தை சந்தை மற்றொரு தரகர் மூலம் அதே வர்த்தகத்தின் மூலம் லாபம் அடைந்தவரிடம் சேர்க்கவேண்டும். இதெல்லாம் சந்தையின் பொறுப்பு.
வர்த்தகம் செய்த வாடிக்கையாளர் பணம் கொடுக்காமல் போய்விடக்கூடாது. அதன் பெயர் 'கவுன்ட்டர் பார்ட்டி ரிஸ்க்’. அப்படி ஏதும் நிகழ்ந்துவிட்டால் அது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க, சந்தை நிர்வாகங்கள், வர்த்தகம் செய்கிறவர்களிடம் முன்பணம் கேட்கின்றன. அப்படிப்பட்ட முன்பணத்தின் பெயர், 'மார்ஜின்’.
மார்ஜின் பணம், கேஷ் மார்க்கெட் பரிவர்த்தனைகளுக்கும் உண்டு, பியூச்சர்ஸ் மார்க்கெட் பரிவர்த்தனைகளுக்கும் உண்டு. கேஷ் மார்க்கெட் பரிவர்த்தனைகளுக்கு இரண்டு விதமான மார்ஜின் பணம் கட்டவேண்டும்.
முதலாவது, வார் மார்ஜின் (VAR Margin). 'Value at risk' என்பதுதான் அதன் விரிவு. இந்தத் தொகை பங்குக்கு பங்கு மற்றும் ஒரே பங்கிற்கே அடிக்கடி மாறும்.
இரண்டாவது மார்ஜின் பெயர், ஈ.எல்.எம் (ELM ) மார்ஜின். இதன் விரிவு, Extreme Loss Margin என்பது. இந்தத் தொகையும் பங்கிற்கு பங்கு மாறும். ஆனால், மாதம் ஒருமுறைதான் மாறும். இது, பரிவர்த்தனைத் தொகையில் சுமார் 5 முதல் 7 சதவிகிதமாக இருக்கும்.
பியூச்சர்ஸ் மார்க்கெட் பரிவர்த்தனைகளுக்கும் இரண்டு மார்ஜின் தொகைகள் உண்டு. ஒன்று, ஈஎல்எம் (ELM) மார்ஜின். மற்றொன்று ஸ்பான் (SPAN) மார்ஜின். இந்த மார்ஜின் தொகை, விலைகளின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அடிக்கடி மாறும்.
இவற்றின் பெயர்களை பல்வேறு தரகு நிறுவனங்களில் அவர்களின் பழக்கங்கள் காரணமாக வேறு சில பெயர்களிலும் குறிப்பிடுவார்கள். ஆனால், எல்லாம் மார்ஜின் பணம்தான். தொகைகள் ஒன்றுதான். சந்தை அறிவிப்பதுதான்.
எதற்கு எவ்வளவு மார்ஜின் பணம் என்பதை https://zerodha.com/margin-calculator/SPAN/ என்ற இணையதளத்திலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம். உதாரணத்திற்காக, கடந்த வாரம் இருந்த நிலையில், சிலவற்றுக்கான மார்ஜின் கணக்கிடல் மற்றும் தொகைகளைப் பார்க்கலாம்.
நிஃப்டி 50
நிஃப்டி மார்க்கெட் லாட் = 75
நிஃப்டிக்கு மார்ஜின் பணம் - 1,02,839 ரூபாய்.
ஒரு நிஃப்டி, 12,200 புள்ளிகள் வீதம், 75 என்ற ’லாட் சைஸ்’ க்கு, ஆகும் மொத்த தொகை, ரூ.9,15,000. ஆனால், நிஃப்டிக்கு மார்ஜின் பணம், 1,02,839 ரூபாய்தான்.

பேங்க் நிஃப்டி
மார்க்கெட் லாட், 20. அதன் மார்ஜின் பணம், 84,665 ரூபாய்.
மார்ஜின் தொகைகளை நிர்ணயிப்பது பங்குச் சந்தைகள்தான். விலை உயர உயர, மார்ஜின் தொகை அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட பங்கில் அதிகம் பேர் ஊகபேரம் - ஸ்பெக்குலேஷன் நடந்தால், செபியின் வழிகாட்டுதல்படி, சந்தை நிர்வாகங்கள், அந்தப் பங்கிற்கு கட்டவேண்டிய மார்ஜின் சதவிகிதத்தை அதிகரிக்கும்.
ஜனவரி முதல் வாரத்தில் எஸ் பேங்கிற்கு இருக்கும் மார்ஜின் சதவிகிதம், 88.72%
எஸ் பேங்க் பங்கின் லாட் சைஸ், 8800. பங்கு ஒன்று 45 ரூபாய் விலையில் 8800 பங்குகளின் மதிப்பு, 3 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய். அந்தப் பங்குகளை பியூச்சர்ஸ் மார்க்கெட்டில் வாங்குவதற்கு கட்டவேண்டிய மார்ஜின் தொகை, 3,31,924 ரூபாய். ஆமாம், 88.72% தொகையை மார்ஜின் பணமாகக் கட்டினால்தான், அந்தப் பங்கை பியூச்சர்ஸில் வாங்கலாம், விற்கலாம்.
ஒரே ஒரு நாளில் நடக்கும் பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தின் அளவுகளைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். 10.01.20 க்கான தேசிய பங்கு சந்தையின் டெய்லி ரிப்போர்ட்டில் இருந்து...

- முதல் போடலாம்...
சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.