Published:Updated:

பங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா?!

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா மீது ஏதாவது புதிய தடைகள் விதித்துவிட்டால், வேறு ஏதேனும் பொருளாதாரத்துக்கு அச்சம் தரும் செய்திகள் வந்துவிட்டால், அது சமயம் பங்குச் சந்தை சரிந்தால்... ஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலையும் பாதிப்புக்குள்ளாகுமே!

நேற்று சொல்லியிருந்த ஐ.ஆர்.சி.டி.சி-யின், ஐ.பி.ஓ. குறித்து இன்னும் சில தகவல்களையும் பார்த்து விட்டு அடுத்த தகவலுக்கு நகரலாம். சிறு முதலீட்டாளர்களை பங்குச் சந்தையில் ரீடெய்ல் முதலீட்டாளர்கள் என்று அழைக்கிறார்கள். வெளியிடப்படும் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் மொத்தப் பங்குகளில், 35% பங்குகளை ரீடெய்ல் முதலீட்டாளர்களுக்கு என்று ஒதுக்கிவிட்டார்கள். தவிர, அவர்களுக்குப் பங்கு விலையில் 10 ரூபாய் தள்ளுபடியும்  தருகிறார்கள்.  

அதன்படி, விலை 315 ரூபாயிலிருந்து 320 ரூபாய்க்குள் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், ரீடெய்ல் முதலீட்டாளர்களுக்கு அலாட்மெண்ட் விலை 305 ரூபாயிலிருந்து 310 ரூபாய்க்குள்தான் இருக்கும். சிறு முதலீட்டாளராக விண்ணப்பிப்பவர், அதிகபட்சமாக 640 பங்குகளுக்கு அதாவது 16 லாட்களுக்கு  மட்டுமே விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்க  நேரம் வழங்கப்பட்டிருக்கிறது.

பங்குச்சந்தை
பங்குச்சந்தை

கனரா செக்யூரிட்டீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ், பிரபுதாஸ் லில்லாதர் போன்ற தரகு நிறுவனங்கள், இந்த ஐ.பி.ஓ-வை, விண்ணப்பிக்கப் பரிந்துரை செய்திருக்கின்றன. ஐ.பி.ஓ-வின் இரண்டாம் நாளான செவ்வாய்க் கிழமை மதியம் 11.15 நிலவரப்படி, ரீடெய்ல் பகுதிக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பதைப் போல, 3.44 மடங்கு அதிகம் விண்ணப்பங்கள் வந்துவிட்டதாம். இன்னும் 2 மற்றும் 3-ம் தேதிகள் இருக்கின்றன. கணிசமான அளவில் ஓவர் சப்ஸ்க்ரிப்ஷன்  ஆகும் போலத் தெரிகிறது. அப்படியென்றால் லாட்தான். அதனால் விண்ணப்பித்தவர்களுக்கு பங்குகள் கிடைக்கிறதா இல்லையா என்பது அக்டோபர்,  9-ம் தேதிதான் தெரியவரும். பின்பு, அக்டோபர் 14-ம் தேதி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். அதன் பின் அந்தப் பங்கின் விலையைச் சந்தை நிர்ணயிக்கும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அலாட்மெண்ட் கிடைத்தால் உடனே விற்றுவிடுவேன் என்பவர், பங்குச்சந்தை மொழியில் டிரேடர் எனப்படுகிறார். பங்கு ஒன்றுக்கு 305 ரூபாய் என்ற விலையில் 14 பங்குகள் அலாட்மெண்ட் பெறும் ஒருவரால், பட்டியலிடப்பட்டதும் (லிஸ்டிங் என்பார்கள்) அலாட்மெண்ட் விலையைக் காட்டிலும்  கூடுதல் விலைக்கு விற்க முடிந்தால், அவர் செய்வது ’புராஃபிட்டபிள் டிரேட்’. குறைந்த விலைக்கு விற்றால், அது லாஸ் டிரேட். தற்போதைய தகவல்கள்படி (எக்னாமிக் டைம்ஸ்) இந்தப் பங்கு 50% கூடுதல் விலைக்குப் பட்டியலிடப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதை ’கிரே மார்க்கெட் ரேட்' என்பார்கள். ’உனக்கு அலாட்மென்ட் கிடைத்தால், எனக்குத் தா. நான் இவ்வளவு விலைக்கு வாங்கிக்கொள்கிறேன்’ என்று சிலர் பேசி வைத்துக்கொண்டு  வர்த்தகம் செய்வது. அப்படிச் செய்வது சரியல்ல. சட்டப்படி அதை உறுதிப்படுத்தவெல்லாம் முடியாது. அதனால்தான் அதன் பெயர், கிரே மார்க்கெட்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனாலும், இந்த கிரே மார்க்கெட் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பட்டியலிடப்படும்போது புதிய பங்கின் சந்தை விலை என்னவாக இருக்கும் என்பதை இந்த கிரே மார்க்கெட் ஓரளவு சுட்டிக்காட்டுகிறது. கிரே மார்க்கெட் விலைகள்  தவறாகப் போன வரலாறுகளும் உண்டு. இப்போதைக்கு, ஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலை 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரைவிலான விலையில் பட்டியலிடப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு சந்தையில் நிலவுகிறது.

’பட்டியலிட இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கிறதே! அப்போது உலகில், நாட்டில், பங்குச் சந்தைகளில் என்ன நிலை இருக்குமோ! அமெரிக்க  அதிபர் டிரம்ப், சீனா மீது  ஏதாவது புதிய தடைகள் விதித்துவிட்டால் அல்லது வேறு ஏதேனும் புதிய பொருளாதாரத்துக்கு அச்சம் தரும் செய்திகள் வந்துவிட்டால், அது சமயம் பங்குச் சந்தை சரிந்தால்... ஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலையும் பாதிப்புக்குள்ளாகுமே’  என்று யோசிப்பவர்களும் உண்டு. இந்த இடத்தில், ஐ.பி.ஓ. வெளியிடப்பட்ட சில நிறுவனங்களின் தற்போதைய நிலை என்ன என்பதை ஒரு எடுத்துக்காட்டுக்காகப் பார்த்துவிடுவோம். கூடுதல் புரிதல் கிடைக்கும்.

Moneycontrol.com வலைதளத்தில் கிடைக்கும், சமீபத்தில் வெளிவந்த ஐ.பி.ஓ.கள் குறித்த தகவலைப் பாருங்கள்.

பங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா?!

இந்தியாமார்ட் இண்டர்மெஷ் என்ற நிறுவனம் (மேலே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்) அதன் 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளை 973 ரூபாய் விலை வைத்து வெளியிட்டது. பட்டியல் இடப்பட்ட அன்று அது 1302 ரூபாய்க்கு வர்த்தகமாகி, இப்போது 1.10.2019-ல் 1,780 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கிட்டத்தட்ட 80% விலை உயர்வு.

ரயில் விகாஸ் என்று மற்றொரு  நிறுவனம் 11.4.19 அன்று,  ஐ.பி.ஓ. மூலம் 430 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வெளியிட்டது. 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளை 19 ரூபாய்க்குக் கொடுத்தது. பட்டியல் இடப்பட்ட அன்று அதன் விலை அதே 19.05 ரூபாய்தான். அந்தப் பங்கின் தற்போதைய விலை 23.85 ரூபாய் (1.10.19). பங்கு ஒன்றுக்கு 4.85 ரூபாய் உயர்வு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளியிடப்பட்ட விலைகளைக் காட்டிலும் குறைவான விலைக்கு தற்போது வர்த்தகமாகும் பங்குகளும் உண்டு.

உதாரணத்திற்கு இரண்டு பங்கு வெளியீடுகள். எம்.எஸ்.டி.சி பங்குகள் (கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்) 128 ரூபாய்க்கு வெளியிடப்பட்டு, 114 ரூபாய்க்குப் பட்டியல் இடப்பட்டு, தற்போது 90 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகிறது. பங்கு ஒன்றுக்கு ரூபாய் 38 நஷ்டம். அதே போல Xelpmoc Design என்ற நிறுவனப் பங்குகளும்  விலை குறைவாக வர்த்தகம் ஆகிறது. ஆக, பட்டியலிடப்படும் நேரம் பங்கு சந்தைகளில் கடுமையான சூழ்நிலை நிலவினால்,  ஐ.ஆர்.சி.டி.சி பங்கு 305 ரூபாய்க்குக் குறைவான விலையில் பட்டியல் இடப்படலாம். அதற்கும் சாத்தியம் உண்டு.

பங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா?!

'அந்த நேரம் அப்படி இருந்தால் என்ன? நான் வாங்கி உடனடியாக விற்கும் டிரேடர் இல்லை. நான் வாங்கி வைத்திருக்கும் முதலீட்டாளர்' என்று சொல்பவர்கள், என்ன விலைக்குப் பட்டியல் இடப்பட்டாலும் விற்கமாட்டார்கள். ஆக, சந்தையில் எல்லா விதமானவர்களும் உண்டு. பல்வேறுவிதமான அணுகுமுறைகள் சாத்தியம்.

⦁    ஐ.பி.ஓ. வைத் தவிர்த்து விடுபவர்கள்

⦁    ஐ.பி.ஓ வின் போது விண்ணப்பிப்பவர்கள்

⦁    கிடைத்ததை வைத்துக்கொள்பவர்கள்  

⦁    கிடைக்காவிட்டால் விட்டுவிடுபவர்கள்.

⦁    கிடைத்ததை விற்றுவிடுகிறவர்கள்.

⦁    புதிதாகப் பட்டியலிடப்பட்டதும் வாங்குகிறவர்கள்.

⦁    பட்டியலிடப்பட்ட பின்பும் காத்திருந்து பார்த்துவிட்டு, வாங்குபவர்கள்.

நல்ல பங்குகளாக தேர்ந்து சிறு சிறு அளவுகளில் தொடர்ந்து வாங்கி, கவனமாகக் கண்காணித்து நன்றாக இருக்கும் வரை வைத்துப் பயன்பெறலாம் என்பது பங்குகளுக்கு மட்டுமா பொருந்தும்?!  

இந்தத் தொடரின் 3-ம் நாளில் தெரிவித்திருந்த, நல்ல பங்குகளுக்கான 5 லட்சணங்கள் இந்த ஐ.ஆர்.சி.டி.சி பங்கிற்கு எவ்வளவு தூரம் பொருந்துகிறது என்று மேலோட்டமாகப் பார்ப்போமா? அது சரி, உங்களுக்கு அந்த நல்ல பங்குகளின் ஐந்து லட்சணங்கள் நினைவிருக்கிறதா? முந்தைய அந்த அத்தியாயத்திற்கு நகராமலேயே, நினைவுக்குக் கொண்டுவர முயற்சியுங்கள். முடியாவிட்டால் மூன்றாம் நாள் அத்தியாயத்தை ஒருமுறை வாசித்து வையுங்கள். நாளை விரிவாகச் சொல்கிறேன்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.