ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இனி நிப்பான் என பெயர்/நிர்வாகம் மாற்றம்..! நல்லதா, கெட்டதா?! - நாள்-17

அனில் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு, 3,500 கோடி ரூபாய் மட்டுமே. இந்தத் தொகை, அண்ணன் முகேஷ் அம்பானி குடியிருக்கும் மும்பை வீட்டின் மதிப்பைக் காட்டிலும் குறைவு.
``ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் நான் யூனிட்ஸ் வாங்கியிருக்கிறேன். இப்போது அந்த மியூச்சுவல் ஃபண்ட் பற்றி சில செய்திகள் வருகின்றனவே. நான் என்ன செய்ய வேண்டும். அவற்றை ரெடீம் செய்துவிட்டு, போட்ட பணத்தை எடுத்துவிடவேண்டுமா?” என்று சிலர் கேட்கிறார்கள். பலரிடமும் இந்த சந்தேகம் மற்றும் அச்சம் வந்திருக்கலாம்.
ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், செய்திகளில் அடிபடுவது உண்மை. அந்த மியூச்சுவல் ஃபண்டு நிதி நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஒரு நிறுவனம். அதன் பெயர், ரிலையன்ஸ் நிப்பான் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி. நேற்றைய விலை 260 ரூபாய்.

இந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளில் பெரும் பகுதியை வைத்திருந்தது, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம். அவற்றை எல்லாம் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, நிப்பான் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டது.
இந்த விற்பனைக்குப் பின், ரிலையன்ஸ் நிப்பான் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரர், ஜப்பானைச் சேர்ந்த நிப்பான் லைப் இன்ஷூரன்ஸ். அது 75% பங்குகள் வைத்திருக்கிறது. மீதம், ஏனைய முதலீட்டாளர்கள் வசம். ரிலையன்ஸ் கேப்பிடல் வசம் அந்நிறுவனத்தின் பங்குகள் ஏதும் இல்லை.
இதன் காரணமாக, ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டின் முதலாளி மாறிவிட்டார். அதனால் ரிலையன்ஸ் பெயர் நீக்கப்பட்டுவிட்டது. புதிய பெயர், நிப்பான் இண்டியா மியூச்சுவல் பண்ட். சுருக்கமாக NIMF.
இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிதி குழுமத்தின் கீழ், 35 ஈக்விட்டி, 2 கோல்டு, 6 ஹைபிரிட் மற்றும் 17 டெப்ட் (Debt) திட்டங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
மாற்றம், பெயரிலும் நிறுவனத்தின் முதலாளியிலும்தான். மற்றபடி நிறுவனத்தின் நிர்வாகிகளும் தலைமைச் செயல் அதிகாரியும் அதே நபர்கள்தான். குறைந்தபட்சம் இப்போதைக்கு மாற்றங்கள் இல்லை, `அவர்களே நீடிப்பார்கள், நிர்வகிப்பார்கள்’ என்று நிப்பான் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அதேபோல, (ரிலையன்ஸ்) ஃபண்டுகளின், ஃபண்ட் மேனேஜர்கள் மற்றும் அவற்றின் போர்ட்ஃபோலியோக்களிலும் ரிலையன்ஸ் கேப்பிடல் வெளியேறியதால் மாற்றங்கள் இல்லை.
ஆகவே இந்த ஒரு மாற்றம் காரணமாக , அந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருப்போர் உடனடியாக அச்சப்படவேண்டியதில்லை. மற்ற வழக்கமான காரணங்களுக்காக தேவைப்பட்டால் யூனிட்டுகளை விற்கலாம். பின்னால் நிலைமையைப் பார்த்து முடிவெடுக்கலாம்.
இந்த இடத்தில், இந்தச் செய்தியை வைத்து இரண்டு விஷயங்களை விளக்கலாம் என்று நினைக்கிறேன்.
முதலாவது, நாம் ஏற்கெனவே பார்த்த நல்ல மேனேஜ்மென்ட் மற்றும் அதன் `குட் கவர்னென்ஸ்’ குறித்து. இந்த அம்சம் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் பொருந்தும். இப்போது ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டு நிர்வாகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் நல்லதுக்கே என்று சொல்வோர் உண்டு.
`இல்லை. நல்ல நிர்வாகமாக இருந்தாலும் இதுவரை Goldman Sachs, Fidelity, JP Morgan, Morgan Stanley, ING, Deutsche, Merrill Lynch, BlackRock… போன்ற பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு நிதித் துறையில் பெரிதாக லாபம் ஈட்ட முடியாமல் வெளியேறியிருக்கிறார்கள். நிப்பானும் அப்படிப்பட்ட வெளிநாட்டு நிறுவனம்தானே!’ என்போரும் உண்டு.
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இரண்டாவது, இந்த மாற்றத்தால் அதன் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஏற்படவிருக்கும் மாற்றங்களைக் காட்டிலும், அவற்றின் தாய் நிறுவனமான, ரிலையன்ஸ் நிப்பான் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் பங்கு விலைகளில் முன்னேற்றம் வரலாம் என்கிற கணிப்பு குறித்து. காரணம், `முதலாளி மாற்றம்’, பரஸ்பர நிதிகளில் நல்ல தாக்கத்தைக் கொடுக்கக்கூடியதைக் காட்டிலும், அதன் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் லாபத்தில் தாக்கம் கொடுக்கலாம் என்கிற கருத்து.
75% பங்குகளை வைத்திருக்கும் புதிய முதலாளி, ஜப்பான் நாட்டு நிறுவனம் நிப்பான் லைஃப் இன்ஷூரன்ஸ், 130 ஆண்டுகள் பழைமையான நிறுவனம். ஜப்பானின் மிகப்பெரிய தனியார் காப்பீட்டு நிறுவனம். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களில் வியாபாரம் செய்யும், 700 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவு பணத்தை நிர்வகிக்கும்- அசெட் அண்டர் மேனேஜ்மென்ட்- நிறுவனம். ஆகவே, வலிமையான, அனுபவம் இருக்கும் நிர்வாகம்.
விட்டு விலகும் ரிலையன்ஸ் கேப்பிடல் எப்படி?
ரிலையன்ஸ் கேப்பிடலை பற்றி பேசவேண்டுமென்றால், அதன் நிறுவனர், அனில் அம்பானி பற்றிச் சொல்லியாக வேண்டும்.
அனில் அம்பானி நம் காலத்தில், முதலீட்டாளர்கள், தொழில், வியாபாரங்கள் செய்வோர், ஒரு முதலாளி எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதை, தான் எடுக்கும் நிர்வாக முடிவுகள் மூலம் சொல்லித் தந்துகொண்டிருக்கும் ஓர் ஆசான் போலத் தெரிகிறார்.
2008-ம் ஆண்டு வாக்கில் உலகின் ஆறாவது பணக்காரராக கணிக்கப்பட்டவர். அவரது அப்போதைய சொத்து மதிப்பு 42 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அப்போதைய டாலர் மதிப்பில், சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்.

தந்தை இறந்த பின் அவரது அண்ணனும் அவருமாக அவர்கள் தந்தையார் திருபாய் அம்பானியின் சொத்துகளை, வியாபாரங்களைப் பிரித்துக்கொண்டார்கள். சமமாகத்தான் இருக்க வேண்டும்.
இப்போது தம்பி அனில் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு, 3500 கோடி ரூபாய் மட்டுமே. இந்தத் தொகை, அண்ணன் முகேஷ் அம்பானி குடியிருக்கும் மும்பை வீட்டின் மதிப்பைக் காட்டிலும் குறைவு. தவிர, முகேஷ் அம்பானிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து வரும் ஆண்டு டிவிடெண்ட் வருமானம் மட்டுமே, 1,500 கோடி ரூபாய்கள். மற்ற வருமானங்கள், சொத்து மதிப்பெல்லாம் சொல்லி மாளாது.
கம்யூனிகேஷன்ஸ், பவர், இஃன்ப்ரா, ஃபைனான்ஸ் என்று பலதுறைகளில் நிறுவனங்கள் நடத்தி, அனில் அம்பானி எதிலும் ஜெயிக்கவில்லை. கடன் கடன் கடன். அதனால் அவரது நிறுவனப் பங்குகளை அடமானம் வைத்து மேலும் கடன்வாங்க வேண்டிய நிலைக்குப் போனார்.
2018-ல் அவருடைய குழும நிறுவனங்களின் மொத்த கடன் தொகை 1.7 லட்சம் கோடி ரூபாய். பலரும் நீதிமன்றங்கள் போய், அனில் கைதாகும் நிலை உண்டானது. அதனால், அவரது நிறுவனப் பங்குகளை தொடர்ந்து விற்றுவருகிறார். அந்த வரிசையில் வந்ததுதான் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் இருந்து அவரது வெளியேற்றமும், பங்குகள் விற்பனையும்.
அவர் குழும நிறுவனங்களிலே மதிப்பு மிக்கதாக இருந்தது, ரிலையன்ஸ் கேப்பிடல். அந்தப் பங்கின் நேற்றைய விலை, 13 ரூபாய்.
2017 செப்டம்பரில் இதன் விலை 750 ரூபாய். இதே பங்கு 2008-ம் ஆண்டு 2,924 ரூபாய் விலைபோனது. அந்த விலையுடன் ஒப்பிட்டால் இன்றைய விலை 1 சதவிகிதத்துக்கும் குறைவு. 99% வெல்த் எரோஷன் கொடுத்திருக்கும் நிறுவனம். இந்தப் பங்கை வாங்கிவைத்திருந்த பல முதலீட்டாளர்களின் பணத்தை அழித்த பங்கு இது.

என்ன சொல்ல வருகிறோம்?
ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு இந்த மாற்றத்தால் உடனடி கெடுதல் ஏதுமில்லை.
ரிலையன்ஸ் கேப்பிடல் கெடுத்திருக்கும் ஏனைய முதலீட்டாளர்கள் செல்வம், மிகப்பெரிது.
ரிலையன்ஸ் நிப்பான் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி நிர்வாகத்தில் மாற்றம் வந்திருக்கிறது. அனில் குழுமத்தின் ரிலையன்ஸ் கேப்பிடல், இனி அந்த நிர்வாகத்தில் இல்லை.
சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.