Published:Updated:

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்! எப்படி? #SmartInvestorIn100days - நாள்- 19

அரசு ஊழியர்கள்
News
அரசு ஊழியர்கள்

ஓர் அரசு ஊழியர் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய முடியுமா? SIP திட்டங்களில் முதலீடு செய்வது அரசால் அனுமதிக்கப்படுமா?

``ஓர் அரசு ஊழியர் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய முடியுமா? SIP திட்டங்களில் முதலீடு செய்வது அரசால் அனுமதிக்கப்படுமா?” என்று வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். அவரின் கேள்விகளுக்கான பதில்களை இன்று பார்க்கலாம்.

அந்தக் கேள்விக்கு நேரடியாக, சுருக்கமாகப் பதில் சொல்வதென்றால், `செய்யலாம்’ என்பதுதான். ஆனால், நிச்சயமாக கூடுதல் விவரங்கள் சொல்லியே ஆகவேண்டும். காரணம், அப்படிப்பட்ட மேல் விவரங்களை அரசு சொல்கிறது.

அரசு ஊழியர் என்பதில் சில வேறுபாடுகள் இருக்கின்றன. மத்திய அரசு, மாநில அரசுகள், மாநகராட்சி, ஊராட்சி போன்ற அரசுத் துறைகள். இதுதவிர, அரசு முதல் போட்டு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்கள்.

அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள்

இவற்றில் பணிபுரியும் அனைவருக்கும் ஒரே போன்ற அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறதா? அனுமதி உண்டென்றால், அது எங்கே யாரால் எவ்வாறு கொடுக்கப்பட்டிருக்கிறது? அதை ஊழியர் பார்த்து, படித்து தெரிந்துகொள்ள முடியுமா?

அரசு நிறுவனம் மட்டுமல்ல, எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் ஊழியர்கள் அந்த நிறுவனத்தின் விதிகளுக்குக் கட்டுப்படவேண்டும். நிறுவனங்களில் அதற்குப் பெயர், நிலை ஆணைகள். ஆங்கிலத்தில், ஸ்டாண்டிங் ஆர்டர்ஸ் என்று சொல்லப்படும்.

அரசாங்கங்களும் அவற்றின் ஊழியர்களுக்கு பல விதிமுறைகளை வைத்திருக்கின்றன. அவை மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்ப சற்று மாறுபடலாம். ஆனால், நிச்சயமாக `சர்விஸ் ரூல்ஸ்’ என்று ஒரு பட்டியல் இருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மத்திய அரசின் சிவில் சர்விஸ் ஊழியர்களுக்கு (Central Civil Services- CCS), 'சிசிஎஸ் (காண்டக்ட்) ரூல்ஸ் 1964' என்று, அவர்கள் நடந்துகொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து ஒரு விதிப்பட்டியல் இருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதன்படி, `எந்த அரசாங்க ஊழியரும் ஷேர்கள், ஸ்டாக்ஸ் அல்லது வேறுவிதமான இன்வெஸ்ட்மெண்ட்களில் ’ஸ்பெக்குலேட்’ செய்யக்கூடாது. பங்குகளை அடிக்கடி வாங்கி விற்பதும் ஸ்பெக்குலேஷனில் அடங்கும்.’

ஸ்பெக்குலேஷன் என்றால், முதலீட்டிற்காக அல்லாமல், குறுகிய காலத்தில் விலை ஏறும் இறங்கும் என எதிர்பார்த்து செய்யப்படும் ஊகபேரம் என்று சொல்லலாம். இதில் இன்ட்ரா டே வர்த்தகம் அடங்கும். மற்றபடி அவர்கள் பங்குகளில் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்களில், டிபென்சர்களில் வேறு எந்தக் குடிமகனும் செய்வதுபோல முதலீடு செய்யலாம். தடை ஏதும் இல்லை.

Investment
Investment

சொல்லப்போனால், அரசாங்கமே இப்போது அதன் வசம் இருக்கும் ஊழியர்களின் சேமநலநிதி பணத்தை, பங்குகளில் முதலீடு செய்கிறது. ராஜீவ் காந்தி ஈக்விட்டி திட்டம்போல, சில ஆண்டுகளில் பங்குகளில் முதலீடு செய்வதற்கு வரிச்சலுகைகள் கொடுத்திருக்கிறது.

அரசாங்கங்களுக்கு, வேறு எந்த நிர்வாகத்தையும்போல இரண்டு விஷயங்களில் கவனம் இருக்கிறது.

ஒன்று, வேலை நேரத்தில் ஊழியர்கள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டால், வேலையின் மீதான கவனம் குறையும்; சிதறும். அது வேலையை பாதிக்கும். ஆகவே ஊகபேரம், `இன்ட்ரா டே’ வர்த்தகம் போன்றவற்றில் ஈடுபடவேண்டாம் என்கிறது.

இரண்டு, அரசு, அதன் ஊழியர்களின் சொத்து எவ்வளவு என்று பார்க்க விரும்புகிறது. அதனால், ஊழியர்கள் வாங்கும் வைத்திருக்கும் அசையா சொத்துகள் குறித்து தகவல் தெரிவிக்கச் சொல்வதுடன், அசையும் சொத்துகளான பங்குகள், செக்யூரிட்டீஸ், டிபென்ச்சர்ஸ் போன்றவற்றில் ஊழியர்கள் எவ்வளவு முதலீடு செய்திருக்கின்றார்கள் என்பதையும் கண்காணிக்க விழைகிறது.

இது இரண்டு மட்டும்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசு ஊழியர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதை கண்காணிப்பது சுலபமில்லை என்கிற காரணத்தினால், அவர்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேற்பட்ட தொகைகளுக்கு பங்குகள் போன்றவற்றை வாங்கினால் அது குறித்து அரசுக்கு தெரிவிக்க அறிவுறுத்துகிறது.

கிளாஸ் A மற்றும் கிளாஸ் B அலுவலர்கள், ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஒரு அகடெமிக் ஆண்டில் 50,000 ரூபாய்க்கு மேல் பங்குகள், செக்யூரிட்டீஸ், மியூச்சுவல் ஃபண்ட்கள் அல்லது டிபென்சர்கள் வாங்கியிருந்தால், குறிப்பிட்ட படிவத்தில் தகவல் தெரிவிக்கவேண்டும்.

கிளாஸ் C மற்றும் கிளாஸ் D அலுவலர்கள், ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஒரு அகடெமிக் ஆண்டில் 25,000 ரூபாய்க்கு மேல் பங்குகள், செக்யூரிட்டீஸ், மியூச்சுவல் ஃபண்ட்கள் அல்லது டிபென்சர்கள் வாங்கியிருந்தால், குறிப்பிட்ட படிவத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மற்றபடி, பங்குகள் முதலீட்டிற்கு தடையில்லை. முதலீட்டு பணத்தின் அளவுக்கும் தடையில்லை. சீரான தொடர் முதலீடான எஸ்.ஐ.பி போடவும் அனுமதியுண்டு. தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வளவுதான்.

பிப்ரவரி 2019-ல், இந்த 50,000 மற்றும் 25,000 என்கிற தொகைகளை, ஊழியரின் `ஆறுமாத பேசிக் சம்பளத்துக்கும் (Basic Salary) அதிகமான தொகைக்கு முதலீடு செய்திருந்தால்' என்று மாற்றியிருக்கிறார்கள் என்று தகவல்.

மேற்சொன்ன CCS (காண்டெக்ட்) ரூல்ஸ் 1964-ன் கீழ் வராத அரசு ஊழியர்கள், அவர்களுக்கு பொருந்தும் சர்விஸ் ரூல்ஸ் என்னவென்று தெரிந்துகொள்வது நலம். மத்திய அரசின் தற்காலிக ஊழியர்களுக்கு The Central Civil Services (Temporary Service) Rules, 1965.

தமிழக அரசு ஊழியர்களுக்கு Tamilnadu Government Servants (Condition of Service) Act, 2016 போன்ற சர்விஸ் ரூல்ஸ் இருக்கிறது. அதன் ஒரு ஷரத்து படி, ஊழியர் எவரும் 5,000 ரூபாய்க்கு மேலான மதிப்பிற்கு என்ன பொருள் வாங்கினாலும் அதற்கு நிர்வாகத்தின் அனுமதி பெறவேண்டுமென்று இருக்கிறது என்று சிலர் வருத்தப்பட்டு சொல்கிறார்கள். ஐந்தாயிரம் என்பது எந்தக் காலத்தில் நிர்ணயிக்கபட்ட தொகையோ?!

Savings
Savings

ரயில்வே ஊழியர்கள், ராணுவத்தில் பணி புரிகிறவர்கள் என்பது போல அரசின் வெவ்வேறு தனித்தனி அமைப்புகளுக்கு வெவ்வேறு சர்விஸ் ரூல்ஸ் இருக்கும். எல்லாவற்றிலும், இதேபோல இருக்கலாம்.

தனியார் நிறுவனங்களிலும் ஊகபேரம், தொடர் வர்த்தகம் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்கள் அளிக்கவேண்டும் என்பது போன்ற சர்வீஸ் ரூல்ஸ் இருக்க வாய்ப்பிருக்கிறது.

சரியான விவரங்களை நிறுவனத்தின் பர்சனல்/ஸ்டாஃப் டிபார்ட்மெண்டில் கேட்டுத் தெரிந்துகொள்ளமுடியும்.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.