Published:Updated:

`காலம் மாறிவிட்டது; இனி செலவழித்தால் நல்லதா... சேமிக்கவே வேண்டாமா?' #SmartInvestorIn100Days நாள்-99

உடலில் வலு இருக்கிற நேரம், உலகில் வாய்ப்பு கிடைக்கிற காலம், சம்பாதிக்கும் பணத்தை அதிகம் செலவு செய்யாமல், சேமித்து வைப்பது நல்லது.

இந்தியாவில் பெரிய நகரங்களில் ஒன்றான அந்த நகரத்தில் இருக்கும் ஒரு பெரிய வசிப்பிடத்தில் லட்சக்கணக்கானவர்கள் குடியிருக்கிறார்கள். அங்கே குடியிருப்பு வசதிகள் குறைவு. வீடுகளும் வலுவற்ற பொருள்களால் தற்காலிகத் தேவைக்காகக் கட்டப்பட்டதுபோல் இருக்கும் என்பார்கள்.

ஆனால், அந்தக் குச்சு வீடுகளுக்குள், வீட்டின் அமைப்பிற்கும் வசதிக்கும் தொடர்பில்லாத விதங்களில், விலை உயர்ந்த தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வீட்டிற்கு வெளியே விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள் இருக்கும் என்றும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அந்த நகரத்தில் மட்டும் அல்ல. இன்னும் பல நகரங்களிலும் ஊர்களிலும் கூட, பலரும் வாழும் வாழ்க்கை அப்படி இருக்கிறது.

வீடு என்றால், வரவேற்பறையில் இருக்கும் சோஃபா, ஜன்னல் திரைச்சீலைகள், சுவரில் தொங்கும் விலையுயர்ந்த பொருள்கள் அல்ல. வெளித்தெரியாத, மண்ணுக்குள் இருக்கும் வலுவான அடித்தளம்; அதற்குமேல் இரும்பும் சிமென்டும் கலந்து உறுதியுடன் நிறுத்தப்பட்டிருக்கும் தூண்கள்; அவற்றுக்கிடையே அடுக்கப்பட்டு, சிமென்டால் இணைக்கப்பட்டிருக்கும் சுட்ட செங்கற்கள். அவற்றுக்கெல்லாம் மேலே, நல்ல, ஒழுகாத கான்கிரீட் விதானம்; பாதுகாப்பான கதவுகள்; வீட்டிற்குள்ளே திறந்தால், தண்ணீர் வருகிற குழாய்கள்; தள்ளிவிட்டால், தரைவழி கீழே இறங்கி, வீட்டுக்கு வெளியே ஓடிவிடும் கழிவுநீர் சிஸ்டம். இவைதானே முக்கியம்!

Representational Image
Representational Image

மேல்பூச்சு, பெயின்ட், ஏசி, டிவி, குளிர்சாதனப் பெட்டி, சோஃபா, டைனிங் டேபிள் போன்றவற்றை இயலும்போது, ஒவ்வொன்றாகச் சேர்த்துக்கொள்ளலாம். சிலகாலம் அவையெல்லாம் இல்லாமலும் வாழ முடியும்.

உடலில் வலு இருக்கிற நேரம், உலகில் வாய்ப்பு கிடைக்கிற காலம், சம்பாதிக்கும் பணத்தை மனக்கட்டுப்பாட்டுடன் சில தேவைகளைத் தள்ளிவைத்து, தவிர்த்து, செலவைக் குறைத்து, கவனமாய்ச் சேர்க்கவேண்டும். இந்தத் தேவை எல்லாக் காலகட்டங்களிலும் ஒன்றுதான். `இப்போது காலம் மாறிவிட்டது. இது செலவு செய்யும் காலம். சேர்ப்பது தேவையில்லை’ என்று சிலர் நினைக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை நான், இதம் தரும் அறிவுறை எனும் பொருளில் `அக்செப்டபிள் அட்வைஸ்’ என்பேன். ``இதற்கு மருந்து தேவையில்லை” என்று மருத்துவர் சொல்வது நமக்கு ஏற்புடையதாக இருக்கும். ``என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்” என்று சொல்லும் டயட்டீஷியனை நமக்கு பிடிக்கும். ``சொந்த வீடு வேஸ்ட்” என்று சொல்லப்படும் அறிவுரை இனிக்கும். காரணம், நம் உள்மனம் விரும்பும் அணுகுமுறைகள் இவை.

உள் மனதிற்கு நம்மால் இவற்றையெல்லாம் செய்ய முடியாது என்று நன்றாகவே தெரியும். அந்த நிலையில் அந்த மனநிலைக்கு ஒத்து வருவது போல வெளியிலிருந்து வரும் அறிவுரை இருந்துவிட்டால், நிச்சயம் அது ஏற்புடையதாகத்தானே இருக்கும். ஆனால், அது நமக்கு நன்மை பயப்பதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

எல்லாம் தனியார்மயம் என்ற இலக்கை நோக்கி ஓடும் பொருளாதாரம்; `என் பணம் எனக்கே போதவில்லை’ என்கிற மனநிலைக்கு மாறும் பிள்ளைகள்; வேகமான நகரமயமாதல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் கேடு; எந்தத் திறனையும் விரைந்து பயனற்றதாக்கும் புதிய புதிய தொழிநுட்பங்கள்; தனித் திறன்களுக்கு மதிப்பு குறைந்துகொண்டே வரும் அவலம்; புதியன வந்துகொண்டே இருப்பதால் எதிலும் ஒரு நிலையற்ற தன்மை; பணி ஓய்வு வரை ஒரே வேலை; நிரந்தரமான வேலை போன்றவை பழைய 500 மற்றும் 1,000 ரூபாய்த் தாள்களைப் போல மதிப்பு நீக்கம் செய்யப்பட்டு விட்ட நிலை.

இப்படிப்பட்ட காலகட்டத்தில், பணமாக எவ்வளவு சேர்த்து வைத்திருந்தாலும், தனக்கென்று, தன்னை `வெளியே போ' என்று எவரும் சொல்ல முடியாத அளவு உரிமை கொண்டாடக் கூடிய ஒரு சிறிய வீடு அல்லது பிளாட் என்பது எல்லோருக்கும் அவசியம்.

``கடன் வாங்கி சொந்த வீடு வாங்கும் போது அடுத்த 20 ஆண்டுகளுக்கு நீ கட்டும் வட்டித் தொகை எவ்வளவு தெரியுமா?” என்று கணக்கிட்டுக் காட்டி, வாதங்கள் செய்கிறார்கள். அது சரியல்ல.

Representational Image
Representational Image
ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் என்றால் என்ன... ஓர் விரிவான அலசல்! #SmartInvestorIn100Days  நாள்-98

சேமித்து வைத்திருக்கும் 10 லட்ச ரூபாய் பணத்தில் 60 லட்ச ரூபாய்க்கு பிளாட் வாங்க முடிவதற்குக் காரணம், அந்தக் கடன்தான். அதற்கு வட்டி உண்டுதான். ஆனால், அந்தக் கடனைக் கட்டி முடிக்கும் காலம்வரை மட்டுமல்ல அதன்பின்பும் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அந்த வீட்டில் குடியிருக்கலாமே. அல்லது வாடகை வருமானம் வரும்.

மேலும் வெறும் பத்து லட்ச ரூபாய் வைத்துக்கொண்டு வாங்கிய வீட்டின் மதிப்பு, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எத்தனை கோடி? இவற்றையும் கணக்குப் போட வேண்டும் அல்லவா! `இப்படி ஒரு வீடு. அதற்கு ஒரு கடன்’ என்று தன்னைத்தானே நிர்பந்தப்படுத்திக்கொள்வதால் வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி ஒருவர், நிச்சயம் பல ஆண்டுகளுக்குச் சேமிக்கிறாரே. வீடு வாங்காத ஒருவர், அதே தீவிரத்துடன் சேமிப்பாரா?

`கடன் வாங்கி வீடு வாங்குவதற்குப் பதிலாக, அந்த மாதாந்திரத் தவணைத் தொகையை அப்படியே பரஸ்பர நிதியில் போட்டு விடலாம்’ என்கிற அறிவுரைகளும் சொல்லப்படுகின்றன. பிளாட் என்பது குடியிருக்க உதவுகிற, கண்முன் நிற்கிற, நம் கட்டுப்பாட்டில் இருக்கிற ஒரு பௌதிகப் பொருள். ஆனால், பரஸ்பர நிதி என்பது மட்டுமே ஒருவருடைய சேமிப்பு என்பதில் ரிஸ்க் இருக்கத்தானே செய்கிறது.

நீண்ட காலத்தில் பரஸ்பரநிதிகள், 12, 14 சதவிகித வருமானம் ஈட்டித் தருகின்றன என்று கணக்குகள் காட்டப்பட்டாலும், இடையில் பெரிய பொருளாதார வீழ்ச்சிகள், தீவிரவாத தாக்குதல்கள், இயற்கைப் பேரழிவுகள் போன்றவற்றால் பங்குச்சந்தை பாதிக்கப்படுகிற போது, பரஸ்பர நிதிகளும் பாதிக்கப்படும்தானே.

Representational Image
Representational Image

வீட்டில் போட்ட ஆரம்ப கால சேமிப்பு பாதுகாப்பாக இருக்கும். அதைச் சிறு பகுதிகளாக விற்று பணம் பார்க்க இயலாது. அதே அளவு பணத்தை பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்து வரும் ஒருவருக்கு அவசரத் தேவைகள் வருகிறபோது, அவர் அந்த பரஸ்பரநிதியைப் பணமாக மாற்ற வாய்ப்பிருந்தால் மாற்றாமல் விடுவாரா? எனவே எளிதில் விற்க இயலாத வீடு என்பதும், ஒரு சொடக்கில் விற்கக்கூடிய பரஸ்பரநிதியும் ஒன்றல்ல.

மேலும், சொந்த வீடு வாங்காமல், இருக்கிற பணத்தை தானே நிர்வாகம் செய்கிறேன், முதலீடு செய்கிறேன் என்று களத்தில் இறங்கிவிடும் ஒருவர், தொடர்ந்து வாடகை வீட்டிலேயே குடியிருக்க வேண்டும்.

அந்த 20 வருடக் காலத்தில் அவர் எத்தனை வாடகை வீடுகளுக்கு மாற வேண்டி இருக்கும்! எப்படிப்பட்ட சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்! வாடகை உயராமல் இருக்குமா? அதே வேகத்தில் அவருடைய ஊதியம் உயருமா? தவிர, ஒருவருடைய வேலைக்கு உத்தரவாதம் உண்டா.

Representational Image
Representational Image
சம்பாதிக்க ஆரம்பித்ததும் முதலீட்டை தொடங்கிட வேண்டும்... ஏன் தெரியுமா?#SmartInvestorIn100Days நாள்-96

என் அனுபவத்தில், ஒவ்வொருவருக்கும் சொந்த ஊரிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ அவரவருக்கென ஒரு சிறு பிளாட்டாவது குடியிருப்பதற்கு மிகவும் அவசியம். `முதலீட்டீற்காக இரண்டாவது வீடு’ என்பதில் எனக்கும் சம்மதம் இல்லை. ஆனால், ஒருவருக்கு, ஒரு குடும்பத்திற்கு ஒரு சொந்த வீடு என்பது மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு. அது Secured feeling கொடுக்கும் என்பது தவிர, வயதான காலத்தில் அவசியமான ஒன்று.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு