Published:Updated:

பங்குச்சந்தையில் `பிரித்துப்போட' பழகுங்கள்! எப்படி? #SmartInvestorIn100Days நாள் - 39

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

ஒரு நல்ல டீம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒருவரையே நம்பிக்கொண்டிருக்கக்கூடாது! கிரிக்கெட்டில் டீம். பங்கு முதலீட்டில், போர்ட்ஃபோலியோ.

டைட்டன் பங்குகள் மற்றும் TCS பங்குகள் கொடுத்திருக்கும் லாபங்களைப் பார்த்தோம். `யானைக்கும் அடி சறுக்கும்' என்பார்கள். எவ்வளவுதான் தேர்ந்து வாங்கினாலும், எப்போதாவது சில நிறுவனப் பங்குகள் காலை வாருவது நடக்கவே செய்யும். ரிஸ்கைக் குறைக்கலாமே தவிர, முழுதும் தவிர்க்க முடியாது. அதுவும் பங்குச் சந்தையில் அந்தப் பேச்சுக்கே இடமில்லை.

Share Market
Share Market

சுஸ்லான், மைண்ட் ட்ரீ என்று, நம்பிக்கொண்டிருந்தவர்களை காலை வாரிவிட்ட பங்குகள், பல உண்டு. அதற்குக் காரணங்கள் நியாயமானதாகவேகூட இருக்கலாம். ஆனாலும் பங்கு வாங்கியவருக்கு நட்டம்தானே. ஒரு நல்ல டீம் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒருவரையே நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. முன்பெல்லாம் அப்படித்தான். டெண்டுல்கர் அவுட் ஆகிவிட்டால், அதுவும் ஆரம்ப ஓவர்களிலேயே அதிக ஓட்டங்கள் எடுக்காமல் அவுட் ஆகிவிட்டால் போயிற்று. அதன்பின் `பரேடு’ தான் என்பார்கள். அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவராக களமிறங்கி, உடனே உடனே அவுட் ஆகி, பெவிலியன் திரும்புவார்கள். அணி தோற்றுவிடும்.

ஒரே நபரை அதிகம் நம்பி இருக்கக் கூடாது. அவருக்கு உடல் நலம் இல்லாமல் போகலாம். அல்லது அவர் அடிபடலாம். அல்லது அன்று ஏனோ அவர் சரியாக ஆடாமல் போகலாம். அதனால், ஒரு டீம் என்றால் அதில் ஸ்கோர் செய்யக்கூடிய பலர் இருக்கவேண்டும். ஒரு பந்தயத்தில் இவர் அடித்தால், அடுத்த பந்தயத்தில் இவர் அடிக்காவிட்டாலும் வேறு எவரோ அடித்துக் காப்பாற்றிவிடுவார் என்பது போல குழு இருக்க வேண்டும்.

கிரிக்கெட்டில் டீம். பங்கு முதலீட்டில், போர்ட்ஃபோலியோ.

அது டைட்டன் அல்லது TCS போன்ற ரத்தினங்களாகவே இருந்தாலும், முதலீடு செய்பவர் அவரது மொத்தப் பணத்திற்கும் ஒரே நிறுவனப் பங்கையே வாங்கி வைக்கக்கூடாது. அந்த ஒரு நிறுவனத்திற்கு ஏதும் ஆனால், அது முதலீட்டாளரைப் பெரிய அளவில் பாதிக்கக்கூடாது.

ஜுன்ஜுன்வாலாவின் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம். அவர் தற்சமயம், நவம்பர் 2019-ல் வைத்திருக்கும் பங்குகளின் பட்டியலை முன்பு பார்த்தோம். கவனித்திருப்பீர்கள். அவர் போர்ட்ஃபோலியோவில் மொத்தம் எத்தனை நிறுவனப் பங்குகள் வைத்திருக்கிறார் என்பது நினைவிருக்கிறதா?

share market | பங்குசந்தை
share market | பங்குசந்தை
வாங்கிய பங்கை எப்போது விற்கவேண்டும்? ஜுன்ஜுன்வாலா காட்டும் வழி!  #SmartInvestorIn100Days நாள் - 36

சமீபத்தில் அவர் வாங்கிய யெஸ் பேங்க் நிறுவனப் பங்குகளையும் சேர்த்து, மொத்தம் 26 நிறுவனங்களின் பங்குகள் வைத்திருக்கிறார். இதுதான் அவரது போர்ட்ஃபோலியோ.

இவ்வளவு முதல் பெருக்கமும், டிவிடெண்ட் வருமானமும் தருகிற டைட்டன் பங்குகளையே அவர் அவரது மொத்தப் பணத்திற்கும் வாங்கவில்லை. மொத்த முதலீட்டில் டைட்டன் பங்குகளின் மதிப்பு 5.1 சதவிகிதம்தான். தொகை மதிப்பிலும் அதுவே 100 சதவிகிதம் அல்ல. சுமார் 30 சதவிகிதம்தான். சமீபத்தில் அதிகம் விலை உயர்ந்ததால் அவ்வளவு சதவிகிதம் இருக்கிறது. ஆக, பங்குச்சந்தை முதலீட்டில் வெற்றிபெற வைக்கும் அணுகுமுறைகளில், பிரித்துப் போடும், `டைவர்சிஃபிகேஷன்’னும் ஒன்று. டைவர்சிஃபிகேஷன் என்பது ஒரு பொதுவான அணுகுமுறை. அதற்குள்ளும் பல்வேறு உள் பகுப்புகள் உண்டு.

Share Market
Share Market

பங்குச்சந்தை முதலீடு என்பது ஒரு வகை முதலீடு என்றால், அதேபோல முதலீட்டு வாய்ப்பு தருவன இன்னும் பல இருக்கின்றன. கடன் பத்திரங்களில் முதலீடு, பிக்செட் டெபாசிட், தங்கம், வெள்ளி, நிலம், கமர்ஷியல் கட்டடங்கள், வீடுகள், ஓவியங்கள் என்று பணத்தை முதலீடு செய்ய பல வாய்ப்புகள் இருக்கின்றன. தனக்கு நன்றாகத் தெரியும் என்பதாலேயே ஒருவர் அவரது மொத்தப் பணத்தையும் பங்குகளிலேயே முதலீடு செய்யக்கூடாது. பல்வேறு `அசெட்’ களில் அவர் பிரித்துப்போட வேண்டும்.

ஃபிக்செட் டெபாசிட்டுகள் மிகவும் பாதுகாப்பானவை என்று மும்பையில் ஒருவர் ஒரு கூட்டுறவு வங்கியில் அவரது மொத்தப் பணத்தையும் டெபாசிட் போட்டு, அந்த வங்கியில் சிக்கல் ஏற்பட்டு, பணம் எடுக்கத் தடை வந்து, அவர் அதிர்ச்சியில் உயிர்விட்டார்.

உலக நிலைமை, அரசியல் நிலவரம், சட்ட மாறுதல்கள், மக்களின் விருப்பு வெறுப்புகள், சுற்றுபுறச் சூழ்நிலை, பருவநிலை மாற்றங்கள் என்று எத்தனையோ விஷயங்கள், பல்வேறு `அசெட் கிளாஸ்’ களையும் பாதிக்கலாம். எனவே ஒரே ஒரு `அசெட் கிளாஸ்’ தான் என்று இருந்துவிடக் கூடாது.

`ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் போட்டு வைக்காதீர்கள்' எனும் பொருள்பட, `Don’t put all eggs in one basket' என்பார்கள். ஒரு முட்டைக்கு ஏதும் நேர்ந்தால், மொத்த முட்டைகளும் போய்விடுமே, அதனால், நிறுவனங்களின் வியாபாரங்களுக்கும் இது பொருந்தும். பல ஆண்டுகளாக ITC நிறுவனம் சிகரெட் தயாரிக்கும் நிறுவனமாக இருந்தது. நல்ல வியாபாரம், நல்ல வருமானம், நல்ல லாபம். ஆனால் நிலைமை மாற மாற, சட்டம், சமூக மாற்றங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் சொல்லிய உண்மைகள் காரணமாக, சிகரெட் பயன்பாடு குறைந்தது. விற்பனையும் லாபமும் குறைந்தன. இதை உணர்ந்த ITC, படிப்படியாக, தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு வேறு பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் இறங்கி, வெகுவாக `டைவர்சிஃபை’ செய்துவிட்டது. பிழைத்துக்கொண்டுவிட்டது.

Infosys
Infosys
நம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா?! #SmartInvestorIn100Days நாள்-21

TCS, இன்போஃசிஸ், HCL போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவை வைத்தே அதிக வியாபாரம் செய்தன. `சப் பிரைம்’ என்ற சிக்கல் 2008-ம் ஆண்டில் வந்து, அமெரிக்கா பாதிக்கப்பட்டதும் இந்தத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வியாபாரங்களும் பாதிக்கப்பட்டன. அதன்பின் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி என்று ஆரம்பித்து `டைவர்சிஃபை’ செய்துகொண்டன. இப்போது நன்றாக இருக்கின்றன.

`விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார் ’ என்று கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். அதை இங்கே, பங்குச் சந்தைக்கு சற்று மாற்றிச் சொல்வதென்றால், `பிரித்துப்போட்டவர்கள் எல்லாம் பிழைத்துக்கொண்டார்’ என்று சொல்லலாம்.

தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் உருவாக்கும் போதுகூட கவனமாக பல்வேறு துறை சார்ந்த 50 நிறுவனப் பங்குகளைச் சேர்த்தார்கள். அந்த விதத்தில் சென்செக்ஸ்சைக் காட்டிலும் நிஃப்டி நல்ல `டைவர்சிஃபைடு இன்டெக்ஸ்’ என்று சொல்லலாம்.

இந்த எச்சரிக்கைகள் எல்லாம் தனிநபர் போர்ட்ஃபோலியோக்களுக்கும் பொருந்தும்.

-முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

அடுத்த கட்டுரைக்கு