Published:Updated:

பங்குச் சந்தை மூதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 முதலீட்டாளார் வகைகள்! #SmartInvestorIn100Days நாள்-90 

திட்டமிட்டு ஏற்றுதல் / இறக்குதல் எல்லாம், FII-க்கள், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் மற்றும் பெரிய இன்ஸ்டிடூஷன்ஸ் ஆர்வம் காட்டாத, சிறிய நிறுவனப் பங்குகளில்தான் சாத்தியம்.

2019-ம் ஆண்டில் இந்தியாவில் பங்குச்சந்தையில் ஏதாவது ஒரு விதத்தில் ஈடுபட்டவர்கள் மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர். அந்த 10 சதவிகிதத்தில் முக்கால் பங்கு நபர்கள் நேரடிப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள். 2019-ம் ஆண்டு டிசம்பர் வரை நம் நாட்டில் 30 கோடி டி-மேட் கணக்குகள் இருக்கின்றன.

மக்களுக்கு மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளின்மீது ஆர்வமும் நம்பிக்கையும் அதிகமாகியிருக்கிறது. அதனால்தான் SIP போன்றவற்றின் மூலம் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும், SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு வரும் பணம் சுமார் 7,000 கோடி ரூபாய்கள். ஜூன் 2019 நிலவரப்படி பரஸ்பரநிதிகள் வசம் இருக்கும் மொத்த பணம் - அசெட் அண்டர் மேனேஜ்மென்ட்-AUM, 25 லட்சம் கோடி ரூபாய்கள். இதில் டெப்ட் ஃபண்டுகளின் நிதிகளும் சேர்த்து. தனித்தனி கணக்குகள் எனப்படும் பரஸ்பரநிதி போர்ட் ஃபோலியோக்கள் எண்ணிக்கை 83 கோடி.

விவரம் தெரிந்தவர்கள், பணம் வைத்திருப்பவர்கள், பங்குகளில் ஆர்வம் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது போலவே, வலிமையான குழுமங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

FII-க்கள், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள், LIC மற்றும் ஏனைய காப்பீட்டு நிறுவனங்கள், HNI எனப்படும் பெரும் செல்வந்தர்கள் மற்றும் சிறுமுதலீட்டாளர்கள் எனக் குறைந்தபட்சம் ஐந்து வகையான முதலீட்டாளர் வகைகள் இருக்கின்றன. இவர்களைத் தாண்டி எந்தத் தனிப்பட்ட அல்லது குழுவாக இணைந்துகொண்ட தரகர்களோ சந்தையின் போக்கை அவர்கள் விருப்பத்துக்கு ஆட்டிவைக்க முடியாது.

Representational Image
Representational Image
பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை யார் தீர்மானிக்கிறார்கள் தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-89

அதேபோல, முன்கூட்டியே சரியாகக் கணித்து வாங்குவது மற்றும் விற்பதில் வேண்டுமானால் FII-க்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் சிறப்பாக இருக்கலாம். ஆனால், அவர்களாலும் தனித்து, சந்தையின் மொத்த மனநிலையை எதிர்த்து இயங்க இயலாது.

சில நேரங்களில், சர்வதேசப் பிரச்னைகள், அமெரிக்க வட்டி விகிதம், டாலர் மதிப்பு போன்ற காரணங்களுக்காக FII-க்கள் இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய அளவுகளில் விற்றுவிட்டு வெளியேறலாம்.

அதேபோல, `ரெடெம்ஷன்’ அழுத்தம் காரணமாக மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களும் விற்கலாம். அதுபோன்ற நேரங்களில், பெரிய அளவுகளில் `செல்லிங்’ இருப்பதால் விலைகள் குறையும். அதைத் திட்டமிட்டு செய்வதாக எடுத்துக்கொள்ள முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல, சர்வதேச பிரச்னைகள், அமெரிக்க வட்டி விகிதம், டாலர் மதிப்பு போன்ற காரணங்களுக்காக FII-க்கள் இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய அளவுகளில் வாங்கலாம்.

அப்படி, சந்தை உயர்கிறபோது, ``மார்க்கெட்டில் அவ்வளவு வேல்யூ இல்லை. ஏற்கெனவே மார்க்கெட் ஓவர் பிரைசிடு. ஆனாலும் லிக்விடிட்டி காரணமாக உயர்கிறது” என்பார்கள். மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களும் அவர்களுக்குத் தொடர்ந்து முதலீட்டுக்காகப் பணம் வருகிறபோது வேறு வழியில்லாமல் வாங்குவார்கள். இதையும் உள்நோக்கத்தோடு செய்வதாக எடுத்துக்கொள்ள முடியாது.

மேலே பார்த்த விலைகள் இறங்குதல் மற்றும் உயர்தல் ஆகிய இரண்டும் FII-க்கள் மற்றும் பரஸ்பரநிதிகளால் ஏற்படுவன. இந்த நேரங்களில், மற்றவர்களான LIC மற்றும் ஏனைய காப்பீட்டு நிறுவனங்கள், HNI-கள் மற்றும் சிறுமுதலீட்டாளர்கள் சந்தையின் போக்கில் போக வேண்டியதில்லை. FII-க்கள் அவர்கள் பிரச்னைக்காக விற்றால், மற்றவர்கள் வாங்கலாம். அதேபோல அவர்களிடம் கூடுதல் பணம் இருக்கிறது என்பதற்காக FII-க்கள் அல்லது பரஸ்பரநிதிகள் வாங்கினால் மற்றவர்களும் வாங்க வேண்டும் என்பதில்லை. ஆனால், பெரும்பாலானவர்கள் அப்படி கான்ட்ரா கால்’ எனப்படும் எதிர் முடிவு எடுப்பதில்லை.

இந்தியப் பங்குச்சந்தை மிக மிகப் பெரியதாகிவிட்டது. வர்த்தகம் பரவலாகிவிட்டது. பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகிவிட்டது. பெரிய குழுமங்களின் பலங்களிலும் ஒன்றுக்கு ஒன்று பெரிய வேறுபாடுகள் இல்லை. மேலும் அவர்கள் சூழ்நிலைகள், தேவைகள் வேறுபட்டனவாக இருக்கின்றன. இந்த நிலையில் எவராலும் மொத்த சந்தையின் போக்கைத் திட்டமிட்டு மாற்றுவது மிக மிகக் கடினம். அதற்குப் பெரும் பணம் தேவை. அப்படிச் சந்தைக்குள் வரும் பணத்துக்கு முன்போல இல்லாமல் இப்போது அடையாளம் தேவைப்படுகிறது. அதனால் தவறான நோக்கங்களுடன் பணம் உள்ளே வருவது மிகவும் சிரமம்.

Representational Image
Representational Image
பங்குச்சந்தையா, மியூச்சுவல் ஃபண்டா... முதலீட்டுக்கு எது பெஸ்ட்? #SmartInvestorIn100Days நாள்-88

மேலே பார்த்ததெல்லாம் மொத்த சந்தைக்கும் குறியீட்டு எண்களுக்கும். ஆனால், தனிப்பட்ட பங்குகளில் சிலர் விளையாடலாம். அவை லார்ஜ் கேப் பங்குகளாக இருந்தால் ( A குரூப் மற்றும் குறியீட்டு எண்களில் இருக்கும் பங்குகளாக இருந்தால்) அந்த விளையாட்டுகளை அதிக நாள்களுக்கு விளையாட முடியாது. ஷார்ட் டர்மில் கொஞ்சம் இறக்கி, ஏற்றிப் பார்க்கலாம். அதற்கும் அதிக செலவாகும்.

திட்டமிட்டு ஏற்றுதல் / இறக்குதல் எல்லாம், FII-க்கள், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் மற்றும் பெரிய இன்ஸ்டிடூஷன்ஸ் ஆர்வம் காட்டாத, சிறிய நிறுவனப் பங்குகளில்தான் சாத்தியம். அப்படி நடந்ததாக கடந்த காலங்களில் பல செய்திகள் வந்திருக்கின்றன. மக்கள் அதிலும் சிறுமுதலீட்டாளர்கள் ஏமாறுவது அங்கேதான்.

அவற்றைத் தடுக்க, பங்குச்சந்தை கண்காணிப்பு ஆணையம் செபி பல முயற்சிகள் எடுத்துவருகிறது. ஆனாலும் நிகழ்வுகளுக்கு குறைவில்லை.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு