Published:Updated:

பங்குகளை எப்போது விற்றால் வரிச்சலுகை கிடைக்கும்? #SmartInvestorIn100Days நாள் - 66

வாங்கிய வீடு, நிலம், நகைகள், பாண்டுகள் போன்றவற்றை விற்கும்போது லாபம் கிடைத்தால், அவையும் மூலதன ஆதாயம்தான். அதற்கென தனி வரி இருக்கிறது. கணக்கிட வழிமுறைகளும் இருக்கின்றன. அதன் பெயர், `கேப்பிட்டல் கெயின்ஸ் டேக்ஸ்’.

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

சொத்துகளை வாங்கி விற்கும்போது, கிடைக்கும் லாபத்துக்கு மட்டும் ஒரு வரி விதிக்கப்படுகிறது. அதன் பெயர் `கேப்பிட்டல் கெயின்ஸ் டேக்ஸ்’. சொத்துகள் என்றால் அதில் வீடு, இடம், நிலம் போன்ற அசையா சொத்துகள் மற்றும் பங்குகள், பரஸ்பர நிதிகள், பாண்டுகள் போன்ற `ஃபைனான்சியல் அசெட்கள் மற்றும் நகைகள் போன்றவையும் அடங்கும்.

பங்குகள் வாங்கி வைத்திருப்போருக்கு டிவிடெண்ட் கொடுப்பார்கள். அந்த டிவிடெண்ட் பணம் என்பது, பங்கு வைத்திருப்பவருக்கு கிடைக்கும் வருமானம். ஃபிக்ஸட் டெபாசிட் போட்டிருந்தால் அதற்கு வட்டி கொடுப்பார்கள். அதுவும் வருமானம். வீடு வாங்கி வாடகைக்கு விடலாம். வாடகைப் பணமும் வீட்டின் உரிமையாளருக்கு கிடைக்கும் வருமானம். அவற்றுக்கெல்லாம் வருமான வரி பொருந்தும்.

வாங்கிய பங்கை விற்கும்போது, லாபம் கிடைக்கலாம். நஷ்டமும் வரலாம். அது வாங்கிய மற்றும் விற்கும் விலைகளைப் பொறுத்தது.

லாபம் கிடைத்தால், அது பங்கு வாங்கப் போட்ட மூலதனத்துக்கு கிடைத்த லாபம் அல்லது ஆதாயம். இதைத்தான் `கேப்பிட்டல் கெயின்ஸ்’ என்கிறார்கள். அதாவது முதலீட்டில் ஆதாயம்.

வாங்கிய வீடு, நிலம், நகைகள், பாண்டுகள் போன்றவற்றை விற்கும்போது லாபம் கிடைத்தால், அவையும் மூலதன ஆதாயம்தான். அதற்கென தனி வரி இருக்கிறது. கணக்கிட வழிமுறைகளும் இருக்கின்றன. அதன் பெயர், `கேப்பிட்டல் கெயின்ஸ் டேக்ஸ்’.

வாங்கிய சொத்தை, முதலீட்டை எவ்வளவு காலத்துக்குப் பின் விற்கிறார்கள் என்பதன் அடிப்படையில், இந்த வரி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

ஒன்று, குறுகிய கால மூலதன ஆதாய வரி. `ஷார்ட் டர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் டேக்ஸ்’.

இரண்டாவது, நீண்டகால மூலதன ஆதாய வரி, `லாங் டர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் டேக்ஸ்’.

பங்கு முதலீடு
பங்கு முதலீடு
பங்கின் முகமதிப்பு குறையும்போது மொத்த மதிப்பில் என்னென்ன மாற்றங்கள் நேரும்? #SmartInvestorIn100Days - 64

பங்குகளைப் பொறுத்தவரை பங்குகளை வாங்கிய நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் விற்று லாபம் பார்த்தால் அது, `ஷார்ட் டர்ம் கேப்பிட்டல் கெயின். அதற்கு வரி, 15%. இதற்கு ஒரு நிபந்தனை, வாங்கும்போதும் விற்கும்போதும் செக்யூரிட்டி டிரான்சாக்‌ஷன் டேக்ஸ், STT கட்டியிருக்க வேண்டும். பங்குச்சந்தை மூலம் வாங்கி விற்கப்படுபவைமீது STT விதிக்கப்படுகிறது. `ஆஃப் மார்க்கெட் டிரான்சாக்‌ஷன்’ எனப்படும் சந்தைக்குத் தொடர்பில்லாமல் இருவர் அவர்களுக்குள் வாங்கி, விற்பவற்றுக்கு இது பொருந்தாது.

12 மாதங்களுக்கும் அதிகமான காலத்துக்கு வைத்திருந்து விற்றால், கேப்பிட்டல் கெயின்ஸ் டேக்ஸ், ஜீரோ சதவிகிதம். அதாவது வரி கிடையாது.

ஈக்விட்டி பங்குகள் மட்டுமல்லாமல். ஃபிரிபரன்ஸ் பங்குகள், பரஸ்பர நிதிகள், பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருக்கும் டிபென்ச்சர்கள், பாண்டுகள், கவர்மெண்ட் செக்யூரிடிஸுக்கும் இந்த `ஷார்ட் டர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் டேக்ஸ்’ விதி பொருந்தும். போனஸ் பங்குகளைப் பொருத்தவரை அவை வழங்கப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குப் பின் விற்றால் அதற்கு ஜீரோ சதவிகிதம்தான்.

Investment
Investment
நடுத்தர மக்கள் பங்குச்சந்தையை தவிர்ப்பது சரியா?  #SmartInvestorIn100Days நாள்-65

மேலே உள்ள பட்டியலில் இல்லாத சொத்துகளுக்கு குறுகிய காலம் என்பது 12 மாதங்கள் அல்ல. 24 மாதங்கள். அதாவது, 24 மாதங்களுக்குள் விற்கப்படுபவைக்கு மட்டுமே `ஷார்ட் டர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் டேக்ஸ்’. 24 மாதங்களுக்குப் பிறகு, விற்று லாபம் பார்த்தால், அதற்கு `லாங் டர்ம் கேப்பிடல் கெயின்ஸ் டேக்ஸ்’.

நகைகள் மற்றும் கடன்பத்திர பரஸ்பர நிதிகளுக்கு மட்டும் 36 மாதங்களுக்குக் குறைவாக இருந்தால்தான் `ஷார்ட் டர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ்’. மற்றபடி `லாங் டர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் டேக்ஸ்’தான்.

கேப்பிட்டல் கெயின்ஸ் டேக்ஸ் என்பது, வாரிசாக இருந்து பெற்றுக்கொள்ளும் சொத்துகளுக்குக் கிடையாது. ஆனால், அதைப் பின்னால் விற்று பணம் பெறும்போது, வாரிசுதாரருக்கு கிடைத்த லாபத்துக்கு இந்த வரி கணக்கிடப்படும்.

மூலதன ஆதாயத்தைக் கணக்கிடும்போது Indexation கணக்கிட்டு அதைக் கழித்துவிட்டு மீதத்தொகையைத்தான் லாபமாக எடுத்து வரி கணக்கிடுவார்கள் என்பதுபோல, இதில் இன்னும் பல இருக்கின்றன. இப்போதைக்கு இந்த இடத்தில் சொல்ல வருவது, பங்குகளுக்கு கேப்பிட்டல் கெயின்ஸ் டேக்ஸில் இப்படி ஒரு சலுகை இருக்கிறது என்பதைத்தான்.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.