Published:Updated:

பங்கு முதலீட்டில் லாபம் தவிர இன்னொரு பலனும் இருக்கு தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்- 47

பங்குகளில் வட்டி போன்ற டிவிடெண்ட் தரும் பங்குகள் இருக்கின்றன. நஷ்டம் செய்யும் நிறுவனங்கள் மட்டும்தான் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்காது. நல்ல நிர்வாகம் இருக்கும் பல நிறுவனங்கள், அவர்கள் கொடுக்கும் டிவிடெண்ட் தொகையைத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேபோவார்கள்.

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

பலரும் பங்குகளை வாங்குவது, அது விலை உயரும் என்கிற எதிர்பார்ப்பில்தான். விலை உயர்ந்தால் கிடைப்பது, `கேப்பிட்டல் கெயின்’ எனப்படும் முதல் பெருக்கம். 100 ரூபாய்க்கு பங்கை வாங்கி, 150 ரூபாய்க்கு விற்றால், 100 ரூபாய் `முதல்' 150 ரூபாயாகிவிட்டது. 50 ரூபாய் கேப்பிடல் கெயின்.

பங்குகள் தரும் மற்றொரு பலனும் இருக்கிறது. பலரும் அதை உபரி வருமானமாகப் பார்க்கிறார்கள். அதற்காகவே பங்குகள் வாங்குவோரும் உண்டு. அதன் பெயர் டிவிடெண்ட்.

வங்கி டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு இவ்வளவு என்று வட்டி தருகிறார்கள். வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி மட்டும்தான் கொடுக்கப்படும். அதில் போடப்படும் பணம் பெருகாது. 10,000 ரூபாய் டெபாசிட் செய்துவிட்டு, வட்டியை அவ்வப்போது பெற்றுக்கொண்டுவிட்டால், திரும்பக் கிடைப்பது, போட்ட அசல் மட்டுமே.

பங்குகளில் வட்டி போன்ற டிவிடெண்ட் தரும் பங்குகள் இருக்கின்றன. நஷ்டம் செய்யும் நிறுவனங்கள் மட்டும்தான் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்காது. நல்ல நிர்வாகம் இருக்கும் பல நிறுவனங்கள், அவர்கள் கொடுக்கும் டிவிடெண்ட் தொகையைத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேபோவார்கள்.

TCS
TCS

உதாரணத்திற்கு, TCS நிறுவனம்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் அந்தப் பங்குக்கு வழங்கப்பட்டிருக்கும் டிவிடெண்ட் தொகைகளைப் பாருங்கள்.

4000%, 500%, 500%, 1800%

இப்படியே... ஆண்டுக்கு ஒன்றிரண்டு, சில நேரங்களில் மூன்று முறைகள்கூட டிவிடெண்ட் வழங்குகிறார்கள். 2019-ல் வழங்கப்பட்ட 4000 % என்பது ஒரு சிறப்பு டிவிடெண்ட் என்பதால் அதை விட்டுவிடலாம். 2018-ல் 500, 500, 1800 சதவிகிதம் என்பதெல்லாம் இன்டரிம் அல்லது ஃபைனல் டிவிடெண்டுகள்.

ஒரு பங்குக்கு அதன் முக மதிப்பைப் போல 1,800 சதவிகிதம் என்றால், ஒரு ரூபாய் முகமதிப்புள்ள TCS நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கிற்கும், அதன் முகமதிப்பான 1 ரூபாய் போல, 18 மடங்கு டிவிடெண்ட் கொடுத்திருக்கிறார்கள் என்று பொருள். அதாவது, ஒரு பங்கிற்கு 18 ரூபாய் டிவிடெண்ட்.

இப்படி இன்டரிம், ஃபைனல் என்ற பெயர்களில் ஓர் ஆண்டிலேயே சாதாரணமாக 2500% , 3000% கொடுக்கிறார்கள். ஆண்டுக்கு 30 ரூபாய் டிவிடெண்ட்.

டிவிடெண்டுக்காகவே வாங்குவதென்றால், அட! TCS பரவாயில்லையே என்றும் தோன்றும். ஆனால், அவர்கள் கொடுக்கும் சதவிகிதம், 1 ரூபாய் முகமதிப்பின் மீது. டிவிடெண்ட் 3000% என்பது மிகமிக அதிகம்தான். ஆனால், சந்தையில் அந்தப் பங்கு ஒன்றின் விலையோ, 2000 ரூபாய் ஆயிற்றே. அதனால் இப்போது எவரும் TCS பங்கு வாங்கினால், அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 30 ரூபாய் டிவிடெண்ட் கிடைக்கும். ஆனால், அதைப் பெற 2000 ரூபாய் அல்லவா முதலீடு செய்ய வேண்டும்.

அப்படியென்றால், அது 100 ரூபாய் முதலுக்கு எவ்வளவு கணக்காகும்?

ஒன்றரை ரூபாய் கணக்காகும். இந்த 1.5% என்பதை `டிவிடெண்ட் ஈல்டு என்பார்கள். `ஈல்டு’ என்றால் விளைச்சல் என்பது நேரடி அர்த்தம். TCS பங்கு இப்போது நடக்கிற விலைக்கு, கிடைக்கிற டிவிடெண்ட் 1.5%. அட! 3000% என்றல்லவா மகிழ்ந்தேன் என்றால், அதுவும் சரிதான். ஆனால், அது `ஈல்டு’ அல்ல. நாம் 1 ரூபாய் பங்கை ஒரு ரூபாய்க்கே வாங்கியிருந்தால் நமக்கு டிவிடெண்டும். `டிவிடெண்ட் ஈல்டு’ம் ஒன்றே.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி? #SmartInvestorIn100Days -43

ஒருவர், அவர் பங்கை வாங்கிய விலையைப் பொறுத்து அவருக்கு கிடைக்கும் ஈல்டு அமையும்.

முந்தைய அத்தியாயத்தில் பார்த்த LG பாலகிருஷ்ணா, பங்கு கொடுக்கும் டிவிடெண்ட், 50%. அதன் விலையை வைத்துப் பார்த்தால், அது கொடுக்கும் `டிவிடெண்ட் ஈல்டு’, 1.86%.

நோசில் பங்கு கொடுக்கும் டிவிடெண்ட், 25% அதன் `டிவிடெண்ட் ஈல்டு’, 2.43%

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிவிடெண்ட், 65% `டிவிடெண்ட் ஈல்டு’, 0.42%

சென்செக்ஸ்
சென்செக்ஸ்
மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்? #SmartInvestorIn100Days நாள் - 44

இப்படியாக டிவிடெண்ட் கொடுக்கும் எல்லா நிறுவனங்களின் `ஈல்டு' களும் என்னவென்று பார்க்கலாம். `ஈல்டு’ என்பது ஒரு பங்கின் முக மதிப்பு, அது கொடுக்கும் டிவிடெண்ட் சதவிகிதம் மற்றும் பங்கின் நடப்பு விலை ஆகியவற்றால் முடிவாவது, கணக்கிடப்படுவது. அதனால் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் போல டிவிடெண்ட் ஈல்டும் மாறிக்கொண்டேயிருக்கும்.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.