Published:Updated:

பங்குகளை அடமானம் வைக்க ₹50,000 ரொக்கம் கட்ட வேண்டும்... ஏன்?! #SmartInvestorIn100Days நாள்-20

லட்ச ரூபாய் பணம் இருந்தால், லட்ச ரூபாய்க்கு பங்குகள் வாங்கலாம்; டெலிவரி எடுக்கலாம். `அதற்கு மேலும் நான் வர்த்தகம் செய்ய விரும்புகிறேன் என்றால் என்ன செய்வது?’

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

`கையில காசு, வாயில தோசை’  என்று ‘டவுண் பேமென்டடு’க்கு சொல்லப்படும்  வாக்கியம் தெரியும்தானே... எவ்வளவு பணம் இருக்கிறதோ அவ்வளவுக்கு மட்டுமே பொருள்கள் தருவோம் என்பதற்கு சொல்லப்படுவது.

இந்த வழிமுறை பங்குச்சந்தைக்கும் பொருந்தும். தரகரிடம் சொல்லி அல்லது நாமாகவே நேரடியாகத் தரகரின் இணையதளம் மூலம் பங்குகள் வாங்க வேண்டும் என்றால், அதற்கு முன்பணம் - மார்ஜின் – கொடுக்க வேண்டும். அந்த நாளுக்குள் முழுப்பணமும் கொடுத்தால்தான் வாங்கிய பங்கை, நமது டி மேட் கணக்கிற்கு   டெலிவரி கொடுப்பார்கள். இல்லாவிட்டால், வாங்கியதை அன்றே விற்று, `ஸ்கொயர் ஆஃப்’ செய்துவிடுவார்கள்.

அடமானம்
அடமானம்

லட்ச ரூபாய் பணம் இருந்தால், லட்ச ரூபாய்க்கு பங்குகள் வாங்கலாம். டெலிவரி எடுக்கலாம். `அதற்கு மேலும் நான் வர்த்தகம் செய்ய விரும்புகிறேன் என்றால் என்ன செய்வது?’ என்று கேட்டவர்களுக்காக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அந்தத் திட்டத்தின் பெயர், மார்ஜின் டிரேடிங்  ஃபெசிலிட்டி- MTF.

நகையை, வீட்டை, இடத்தை அடமானம் வைத்து பணம் வாங்குவதுபோல, பங்குகளை அடமானமாக வைத்து, அதில் கிடைக்கும் பணத்தில் மேலும் பங்குகள் வாங்கலாம்.

எப்படி எல்லா நகைகளுக்கும் கடன் கிடைக்காதோ அப்படி எல்லாப் பங்குகளின் மீதும் கடன் தரமாட்டார்கள். குறிப்பிட்ட சில பங்குகளை மட்டுமே ஈடாக வைத்துக்கொண்டு, மேலும் பங்குகள் வாங்க கடன் கொடுப்பார்கள். எந்தெந்தப் பங்குகளுக்கு மார்ஜின் தரலாம் என்பதைப் பங்குத் தரகர் முடிவுசெய்வதில்லை. பங்குச் சந்தைகளான, NSE,  BSE மற்றும் கண்காணிப்பு ஆணையம் ஆகியவை SEBI முடிவுசெய்கின்றன. அவ்வப்போது அந்த அனுமதிக்கப்பட்ட பங்குகளின் பட்டியலில் மாற்றங்களும் கொண்டுவருகின்றன.

தங்கத்தின் விலை கிராம் 4,000 ரூபாயாக இருந்தாலும், கடன் கொடுப்பது கிராமுக்கு 3,500 ரூபாய்க்குத்தான். அதுபோல, பங்குகளின் மீதும் நடப்பு விலைகளில் கடன் கிடைக்காது. தங்கத்தைக் காட்டிலும் வேகமாக விலை மாற்றங்கள் நிகழக்கூடியதல்லவா பங்குகள்.

சேமிப்பு
சேமிப்பு
பங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்! #SmartInvestorIn100Days - நாள் 3

இந்த MTF வசதியைப் பெற ஓரளவு கேஷ், சும்மா கட்ட வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவர் அவரது 5 லட்ச ரூபாய் பங்குகளை அடமானம் வைக்க விரும்பினால், அவர் 50,000 ரூபாய் ரொக்கம் கட்டிவிட்டு, மேலும் 3.5 லட்ச ரூபாய்க்கு பங்குகள் வாங்கலாம். இது ஒரு எடுத்துக்காட்டுதான். எவ்வளவுக்கு எவ்வளவு என்பதெல்லாம் அடமானம்  வைக்கிற பங்குகள், தரகு நிறுவனத்தின் MTF-க்கான வரைமுறைகள் போன்றவற்றைப் பொருத்து மாறும்.

இந்த முறையின் மூலம், ஒருவர் ஐந்தரை லட்ச ரூபாய் முதல் போட்டுவிட்டு, எட்டரை லட்ச ரூபாய்க்கு பங்குகள் வாங்க முடியும்.

எந்தக் கடனுக்கும் வட்டி உண்டல்லவா? இதற்கும் உண்டு. அதன்படி, மூன்று லட்ச ரூபாய் கடனுக்கு நாள் கணக்கில் வட்டி கணக்கிட்டு எடுத்துக்கொள்வார்கள். சில தரகு நிறுவனங்கள் மாதத்துக்கு 2% வட்டி போடுகிறார்கள். அப்படியென்றால், ஆண்டுக்கு 24%.

மார்ஜின் ஃபண்டிங் பணத்தில் வாங்கிய பங்கு, திடீரென கடுமையாக விலை இறங்கினால் (இண்டியா புல்ஸ் ஹவுசிங் போல) என்ன செய்வார்கள்? உடனே ஒரு தகவல் அனுப்புவார்கள். `உங்கள் மார்ஜின் பணம் குறைகிறது. தேவைப்படும் பணத்தை உடனடியாகக் கட்டுங்கள்’ என்பதுபோல மெயில் போகும். குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டாவிட்டால், அவர்களிடம் அந்த வாடிக்கையாளருக்கு இருக்கும் வேறு டிரேடிங் கணக்குகளில் கிரெடிட் பேலன்ஸ் இருந்தால், அதிலிருந்து MTF கணக்குக்கு பணத்தை மாற்றிக்கொள்வார்கள்.

Investing
Investing

வேறு எந்தக் கணக்கிலும் கிரெடிட் பேலன்ஸ் இல்லாவிட்டால், ஈடாகக் கொடுத்திருக்கும் அடமானப் பங்குகளை சந்தை விலையில் விற்றுவிடுவார்கள். விற்று, அவர்கள் பணத்தை எடுத்துக்கொண்டுவிடுவார்கள். அவர்கள் அப்படிச் செய்யாவிட்டால், கடனாகக் கொடுத்திருக்கும் பணத்தைத் திரும்ப வாங்குவது சிரமமாகிவிடலாம்.

கடன் ஃபண்டுகளில் முதலீடு... கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

அடமானம் பெற்றுக்கொண்டு கடன் கொடுத்தவர்கள், சந்தைகளில் விற்க ஆரம்பித்தால் அதன் பெயர், `மார்ஜின் கால்’. சாதாரணமாக யாரோ சில சிறுமுதலீட்டாளர்களின் அடமானப் பங்குகள், அந்த முறையில் சந்தையில் விற்கப்படுவதால் பெரிய தாக்கம் இருக்காது. ஆனால், நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை அடமானம் வாங்கியவர்கள் விற்றால், அந்தப் பங்கு விலையில் புயல் வீசும்.

அப்படி நிகழ்ந்ததற்குப் பல உதாரணங்கள் உண்டு. சமீபத்திய உதாரணங்கள், ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ் பேங்க்.

நல்ல விலையில் டிரேட் ஆகிக்கொண்டிருந்த பங்கு, ஒரு குறிப்பிட்ட விலைக்குக் கீழ் போய்விடக்கூடாது.  அதுதான் ’லக்‌ஷ்மண் ரேகா’. அதற்குமகீழ் விலை போய்விட்டால், மடைதிறந்த வெள்ளம்போல அந்தப் பங்கு விற்கப்படும்.

அந்த குறிப்பிட்ட விலைதான் அடமானம் வைக்கப்பட்ட விலை. அதற்குக் கீழ் போனால், அதன்மீது கடன் கொடுத்தவர், ஆட்டொமேட்டிக்காக விற்பார். அவ்வாறு விற்கும் வண்ணம் அவர் புரோகிராம் பண்ணி வைத்திருப்பார். அன்றைய தினமே மீண்டும் விலை உயர்ந்துவிடலாம். ஆனால், குறைந்த விலையில் விற்றது விற்றதுதான்.

Fully invested
Fully invested
யெஸ் பேங்க் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா? இன்னும் விலை வீழுமா? #SmartInvestorIn100Days - நாள் 10

இப்படி விலை கடுமையாக இறங்குகிறபோது மற்றொன்றும் நடக்கும். அது பலரும் போட்டுவைத்திருக்கும் ஸ்டாப் லாஸ் `ட்ரிகர்’ ஆவது. அதனாலும் விலைகள் விழும்.

சந்தை பெரிய அளவில் தொடர்ந்து உயர்கிறபோது, முதலீட்டாளர்கள் பங்குகளை மேலும் மேலும் வாங்க விரும்புவார்கள். ஆனால், அவர்களிடம்  அவ்வளவு பணம் இருக்காது. Fully invested  நிலையில் இருப்பார்கள். ஆனாலும் வாங்கினால் லாபம் கிடைக்கும் என்று தோன்றுகிறபோது, `மார்ஜின் பண்டிங்’ கிற்குப் போவார்கள். அதில் தொடர்வார்கள்.

Vikatan

பின்பு, எப்போதாவது சந்தை மிக வேகமாவும் அதிகமாகவும் விழுகிறபோது, பல்வேறு பங்குகளும் மிக அதிகம் விலை இறங்கி, மார்ஜின் விலைகளுக்கும் கீழ் வர, ’மார்ஜின் கால்’கள், ஸ்டாப் லாஸ்கள் எல்லாம் வேலைசெய்ய, பலரும் விற்க, சந்தை மேலும் விழும்.

இதைத்தான் நான் `மார்ஜின் கால பயங்கரங்கள்’ என்று என்னுடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.