Published:Updated:

ரிலையன்ஸ், டி.சி.எஸ் நிறுவனங்களில் `PE மல்டிப்பிள்' எப்படியிருக்கிறது? #SmartInvestorIn100Days நாள்-57

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏனைய வாய்ப்புகள், சொத்துகள், வியாபார சந்தை ஆகியவற்றை வைத்து, அதன் பங்குகளுக்கு ஆண்டு சம்பாத்யத்தைப் போல 27 மடங்குவரை விலை கொடுக்கலாம் என சந்தை நினைக்கிறது. இது எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

நிறுவனத்தின் மொத்த நிகர லாபத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் வருவதுதான் ஒரு பங்கிற்கான சம்பாத்யம். அதைத்தான் `எர்னிங்ஸ் பெர் ஷேர்’ என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் சுருக்கமாக, EPS.

கூடுதல் புரிதலுக்காக, சந்தையில் அதிகம் கவனிக்கப்படும் சில பங்குகளின் EPS-களை மணிகன்ட்ரோல்.காம் தரும் தகவல்கள் அடிப்படையில் பார்க்கலாம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 10 ரூபாய் முகமதிப்புள்ள பங்கின் தற்போதைய ஆண்டு EPS 57.14. கடந்த திங்கட்கிழமை அன்று நடந்த விலை (முடிவு விலை) 1,562 ரூபாய். அப்படியென்றால், அந்தப் பங்கு அதன் EPS-ஐ போல 27.4 மடங்கு விலை போகிறது. பங்கின் விலையை (பிரைஸ்) அதன் ஒரு பங்கின் சம்பாத்தியத்தால் (எர்னிங்) வகுத்துப் பார்த்து, அது எத்தனை மடங்கு (மல்டிபிள்) என்று சொல்வதன் பெயர், `பிரைஸ் எர்னிங் மல்டிப்பிள்’. சுருக்கமாக, PE மல்டிப்பிள்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏனைய வாய்ப்புகள், சொத்துகள், வியாபார சந்தை ஆகியவற்றை வைத்து, அதன் பங்குகளுக்கு ஆண்டு சம்பாத்யத்தைப் போல 27 மடங்குவரை விலை கொடுக்கலாம் என சந்தை நினைக்கிறது. சந்தை என்றால், இவற்றை எல்லாம் ஊன்றி கவனிக்கும் பெருமுதலீட்டாளர்கள் மற்றும் அனலிஸ்டுகள் போன்றோர். அதனால்தான் அந்த விலைக்கு வர்த்தகம் நடக்கிறது. இது இப்போதைய நிலை.

Share Price
Share Price

அந்த நிறுவனத்தின் லாபம் அடுத்த காலாண்டில் அதிகமாகிவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். உதாரணத்துக்கு, அதன் EPS 65 ரூபாய் ஆகிவிடுகிறது. ஆகா! நிறுவனத்தின் லாபம் மேலும் அதிகரித்துள்ளது. ஆகவே, அந்தப் பங்கை நாமும் வாங்கலாம் என்று பலரும் வாங்குவார்கள்.

பங்கின் விலை ஏறுவதும் இறங்குவதும் எதன் அடிப்படையில் தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-56

அப்படி பலரும் ஒருசேர வாங்குவதால், விலை உயரும். விலை உயர்ந்தபின் இப்போதும் இந்த விலையில் வாங்கலாமா? என்ன விலை வரை அதற்கு கொடுக்கலாம் (வேல்யுவேஷன்)? எதற்கு மேல் போய்விட்டால் விட்டுவிடலாம், என்றெல்லாம் எப்படி முடிவு செய்வது?

இங்கேதான் PE மல்டிப்பிள் பயன்படுகிறது. முன்பு கொடுத்த அதே 27 மடங்கை, விலையாக கொடுக்கலாம் என்று சந்தை நினைத்தால், EPS 65 ரூபாயை, 27 PE மல்டிப்பிளால் பெருக்கிப் பார்க்கும். 65*27 = 1755 ரூபாய்.

ஆக, லாபம் உயர்ந்திருக்கும் அளவை மட்டும் வைத்துப் பார்த்தால் விலை, 1755 வரை போகலாம் என்று சந்தை கணிக்கும்.

லாபம் குறைந்தால்?

shares
shares

அதே கணக்குதான். EPS 50 ரூபாயாக குறைந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதே PE மல்டிப்பிள் சரியென்று வைக்கும் பட்சம், 50*27= 1350 ரூபாய். அந்த அளவுக்கு விலை விழலாம். அந்த அளவுக்கும் கீழேபோனால், வாங்குபவர்கள் வந்துவிடலாம்.

எல்லா சமயமும் ஒரு நிறுவனப் பங்குக்கு ஒரே அளவு PE மல்டிப்பிள் இருக்காது. நிறுவனத்தின் எதிர்கால வாய்ப்பைப் பொறுத்தே PE மல்டிப்பிள் இருக்கும். நிகழ்வுகள், செய்திகளைப் பொறுத்து மாறும். காரணம், அந்த நிகழ்வுகள், செய்திகள் நிறுவன லாபத்தின் மீது தாக்கம் கொடுக்கலாம் என்பதால்.

PE மல்டிபிள் என்பது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். காரணம், முன்பே சொல்லியதுதான். நிறுவனத்துக்கு இருக்கும் வாய்ப்புகள் மற்றும் ஆபத்துகள். பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட துறையில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் ஒரு `ரேஞ்ச்’ க்குள் PE மல்டிப்பிள் இருக்கும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் இருக்கும் நிறுவனம் அல்ல. அதனால் அதை வைத்து ஒப்பீடு செய்வது சரியாக இருக்காது. அதனால், உதாரணத்துக்கு வேறு ஒரு துறையை எடுத்துப் பார்க்கலாம். தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளின் PE மல்டிப்பிள்கள் எப்படியிருக்கின்றன என்று பார்ப்போம்.

ஏறுமுகத்தில் இருக்கும் பங்கின் விலை திடீரென சரிவது ஏன் தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-55

ஒரு ரூபாய் முகமதிப்புள்ள TCS பங்கின் EPS, 87 ரூபாய். அதன் திங்கட்கிழமை முடிவு விலையான 2012 ருபாயை, 87 ஆல் வகுத்தால் வருவது, 23. ஆக, TCS பங்கின் தற்போதைய PE மல்டிப்பிள் 23.

அதே துறையில் இருக்கும் இன்ஃபோசிஸ் முகமதிப்பு 5 ரூபாய் உள்ள பங்கின் EPS, 34.56. திங்கட்கிழமை முடிவு விலை 714 ரூபாய். இன்ஃபோசிஸ் பங்கின் தற்போதைய PE மல்டிப்பிள்கள் 20.

Shares
Shares

2 ரூபாய் முகமதிப்புள்ள விப்ரோ டெக்னாலஜியின் தற்போதைய EPS, 14.61 ரூபாய். திங்கட்கிழமை முடிவு விலை, 238. PE மல்டிப்பிள், 16.3. தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகளின் PE மல்டிப்பிள்கள், 16 முதல் 23 வரை இருக்கிறது என்று சொல்லலாம். இதுதான் ரேஞ்ச்.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.