Published:Updated:

பங்குச்சந்தையில் `பிரைஸ் டைம் பிரையாரிட்டி’ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்! #SmartInvestorIn100Days - 69

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

வாங்கவோ விற்கவோ ஆர்டர் போட்டிருப்பவர்களில் எவருக்கு முதலில் என்பதில் சந்தைகள் பின்பற்றும் வழிமுறை சுவாரஸ்யமானது. தெரிந்துகொள்ளவேண்டியது.

இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் 5,000-க்கும் அதிகம். அவற்றில் எந்த நிறுவனப் பங்கையும் வாங்கலாம், விற்கலாம். சிரமமல்ல. வங்கிக் கணக்கு, டிமேட் கணக்கு, தரகர் உடனான வர்த்தகக் கணக்கு, வருமான வரி கணக்கு எண் ஆகியவை இருந்தால் போதும். வர்த்தகம் செய்யலாம்.

தரகு நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று அங்கே இருக்கும் அலுவலர்களிடம் சுயவிவரம் சொல்லி, வேண்டிய பங்குகள் வாங்கலாம். விற்கலாம். வீட்டில் இருந்தபடியே தொலைபேசியில் அழைத்து வாங்கச் சொல்லலாம், விற்கச் சொல்லலாம். அல்லது முன்கூட்டியே சில வேலைகள் செய்துவிட்டு, பின்பு தன் கையில் இருக்கும் மொபைல் போன் அல்லது `ஐ பேட்’ அல்லது கம்ப்யூட்டர்கள் மூலம், தரகரின் இணையதளம் மூலம் பங்குகள் வாங்கலாம், விற்கலாம்.

சந்தைகள், வாரம் ஐந்து நாள்கள்- திங்கள் முதல் வெள்ளிவரை-இயங்குகின்றன. காலை 9.15-க்குத் தொடங்கும் வர்த்தகம், இடைவெளி இல்லாமல் மாலை 3.30 வரை நடக்கிறது.

பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குகளை எந்த எண்ணிக்கையிலும் வாங்கலாம். முன்பெல்லாம் `மார்க்கெட் லாட்' என்று குறிப்பிட்ட எண்ணிக்கைகளில்தான் வாங்கமுடியும், விற்க முடியும். இப்போது அந்த `லாட்’ என்பது பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸுக்கு மட்டும்தான். அதைப்பற்றித் தனியே பார்க்க இருக்கிறோம். அதனால், இப்போதைக்கு `கேஷ் மார்க்கெட்’ அல்லது `ஈக்விட்டி’ என்றழைக்கப்படும் பொதுவான வர்த்தகம் குறித்துமட்டும் பார்ப்போம்.

வாங்கலாம், விற்கலாம்
வாங்கலாம், விற்கலாம்

கேஷ் மார்க்கெட்டில், மார்க்கெட் லாட் என்பது ஒன்று. அதனால் பங்குகளை எந்த எண்ணிகையிலும் வாங்கலாம், விற்கலாம். 23 அல்லது 56 அல்லது லட்சத்து ஒன்று என்று எந்த எண்ணிக்கையிலும் வாங்கலாம், விற்கலாம்.

ஒரு வர்த்தகம் முழுமையடைய இருவர் தேவை. ஒருவர் வாங்குபவர், மற்றொருவர் விற்பவர். ஒருவர் லட்சம் பங்குகள் வாங்க விரும்புவார், முயற்சி செய்வார். ஆனால் அவ்வளவு பங்குகளை விற்க எவரும் முன்வராவிட்டால், லட்சம் பங்குகள் வாங்க முடியாது. ஆயிரமோ இரண்டாயிரமோ மட்டும் கிடைக்கலாம். சமயத்தில் எதுவுமே கிடைக்காது!

இப்படி நடப்பதன் பெயர், பையர் பிரீஸ் (Buyer Freeze)

வாங்க ஆட்கள் நிறைய உண்டு. ஆனால், விற்க ஆட்கள் இல்லை. இந்த நிலை ஒவ்வொரு நாளும் சில பங்குகளிலாவது இருக்கும். 27.12.2019 அன்று மதியம் 12 மணி நிலவரப்படி, கீழ்க்கண்ட பங்குகளில் அப்படிப்பட்ட `பையர் பிரீஸ்’ நிலை.

பையர்  பிரீஸ்
பையர் பிரீஸ்
நடுத்தர மக்கள் பங்குச்சந்தையை தவிர்ப்பது சரியா?  #SmartInvestorIn100Days நாள்-65

ரானே இன்ஜின் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஆட்கள் ஆர்டர் போட்டிருக்கிறார்கள். அதன் பெயர் `பை ஆர்டர்’. அப்படியாக 21,254 பங்குகளுக்கு ஆர்டர் சந்தைக்கு வந்திருக்கிறது. ஆனால், அந்த நிறுவனப் பங்குகளை விற்க எவரும் முன்வரவில்லை. இத்தனைக்கும் அந்தப்பங்கு அன்றே 20 சதவிகிதம் விலை உயர்ந்துவிட்டது. அதன் பின்னும் எவரும் விற்க முன்வரவில்லை.

ரோலடெயினர்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்கவும் சிலர் ஆர்டர் போட்டிருக்கிறார்கள். அப்படியாக 73,068 பங்குகளுக்கு ஆர்டர் சந்தைக்கு வந்திருக்கிறது. ஆனால், அந்த நிறுவனப் பங்குகளை விற்கவும் எவரும் முன்வரவில்லை. நேரம் ஆக ஆக, விற்பவர்கள் வரலாம். வந்தால், வாங்க ஆர்டர் போட்டிருந்தவர்களுக்குக் கிடைக்கும்.

உதாரணத்திற்கு, ரானே இன்ஜின் பங்குகள் வைத்திருப்பவர்களில் ஒருவர், 100 பங்குகள் விற்க முன்வந்த, `செல் ஆர்டர்’ போட்டால், வாங்க ஆர்டர் போட்டிருந்தவர்களில் முதலில் 100 பங்குகள் கேட்டவர்களுக்குச் சந்தையின் கம்ப்யூட்டர் சிஸ்டமே, அந்த 100 பங்குகளை விற்றுவிடும்.

வாங்கவோ விற்கவோ ஆர்டர் போட்டிருப்பவர்களில் எவருக்கு முதலில் என்பதில் சந்தைகள் பின்பற்றும் வழிமுறை சுவாரஸ்யமானது. தெரிந்துகொள்ளவேண்டியது. அதன் பெயர், பிரைஸ் டைம் பிரையாரிட்டி (Price Time Priority).

எவர் அதிகமான விலை கேட்கிறாரோ அவருக்கு முதலில் வாங்கப்படும். அவருடைய `பை ஆர்டர்’ முதலில் எக்ஸிகியூட் ஆகும். ஒரே விலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் இருந்தால், அவற்றில் எந்த ஆர்டர் முதலில் போடப்பட்டதோ, அது முதலில் நிறைவேற்றப்படும்.

ஆர்டர் போடும் போதே, அது, `செல் ஆர்டரோ’, `பை ஆர்டரோ’, இன்ன விலை வந்தால் வாங்குங்கள் அல்லது இன்ன விலை வந்தால் விற்கலாம் என்று `ரேட்’ குறிப்பிட்டு ஆர்டர் போடலாம். `ரேட்’ போடாவிட்டால், அதன் பெயர், `மார்க்கெட் ரேட்’ ஆர்டர். அதை, MR ஆர்டர் என்பார்கள்.

மார்க்கெட்டில் கிடைத்த விலைக்கு வாங்குவார்கள். கிடைத்த விலைக்கு விற்பார்கள். அதிக லிக்விடிட்டி இருக்கிற லார்ஜ் கேப் பங்குகளை வாங்க, விற்க, `மார்கெட் ரேட்’ என்பது ஓரளவு சரி. என்ன விலைக்கு கிடைக்கும் அல்லது போகும் என்பது பார்த்தாலே தெரியும். ஆனால், மேலே அட்டவணையில் பார்த்த `ஸ்மால் கேப்’ பங்குகளை அப்படி ஓப்பனாக மார்க்கெட் ரேட்டில் வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள் என்று சொல்ல முடியாது.

Buy and sell
Buy and sell
வாங்கிய பங்குகளை உடனுக்குடன் விற்பது நல்ல அணுகுமுறையா? #SmartInvestorIn100Days நாள் - 68

ஆர்டர்களிலேயே `கன்சீல்டு’ ஆர்டர் என்ற வகையும் இருக்கிறது. கன்சீல்டு என்றால், மூடிய அல்லது மறைத்த என்று பொருள். 100 ரூபாய் விலையில் 10 பங்குகள் வாங்க ஆர்டர் இருப்பது போல திரையில் தெரியும். ஆனால், 100 ரூபாய் விலையில் 10 மட்டுமல்ல, கன்சீல்டாக 1000 பங்குகளுக்கு ஆர்டர் இருக்கும். இருக்கலாம்.

விற்பதிலும் இப்படி கன்சீல்டு ஆர்டர் போடுவார்கள். இவற்றின் பின்னால் நோக்கங்கள் இருக்கின்றன.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

அடுத்த கட்டுரைக்கு