Published:Updated:

டாடா மோட்டார்ஸ், IRCTC பங்குகளால் கிடைத்த படிப்பினைகள்! #SmartInvestorIn100Days நாள்-28

குறிப்பிட்ட செய்திக்குப் பிறகு, பங்கு விலை எவ்வளவு உயரலாம் அல்லது எதுவரை விலை குறையலாம் என்கிற வரையறைகள் சந்தையில் இல்லை.

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

ஒரு பங்கு குறித்த தீவிரமான நல்ல அல்லது கெட்ட செய்திகளுக்கு உடனடியாகவும், பெரியளவிலும் அந்தப் பங்கின் விலை மாற்றம்பெறும். மிக நல்ல செய்தி என்றால், உடனே சந்தையில் இயங்கும் பலரும் அந்தப் பங்கை வாங்குவார்கள். வாங்குபவர்களில், ஃபாரின் இன்ஸ்டிடியூஷனல் இன்வெஸ்டர்கள்-FIIs, உள்நாட்டு இன்ஸ்டிடியூஷனல் இன்வெஸ்டர்கள்-DIIs, பெரும் பணக்காரர்கள் எனப்படும் HNI,  மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், டிரேடர்கள், இன்ட்ரா டே டிரேடர்கள் எனப் பலரும் இருப்பார்கள்.

Buy and Sell
Buy and Sell

சமீபத்திய உதாரணம், டாடா மோட்டார்ஸ் பங்குகள். இரண்டாம் காலாண்டு முடிவுகளில் நிறுவனத்தின் நட்டம் குறைந்திருக்கிறது என்று தெரியவந்ததும், `முகூரத்' (Muhurat) டிரேடிங்கிலேயே 17% விலை உயர்வு. அடுத்த வர்த்தக நாளில், மற்றுமொரு 16.5%. இப்படியே அந்த நல்ல செய்திக்காக விலை உயர்ந்துகொண்டே போகும். கேஷ் மார்க்கெட் தவிர, ஃபியூச்சர் மார்க்கெட்டிலும் பலர் டாடா மோட்டார் பங்குகளைக் குறைந்த அளவு பணத்தை மார்ஜினாகக் கட்டிவிட்டு, வாங்குவார்கள்.

மற்றுமொரு உதாரணம், சமீபத்தில் லிஸ்ட் ஆன IRCTC பங்கு. லிஸ்ட் ஆனதும் போட்ட பணம் இரட்டிப்புக்கும் மேல் என்று சிலர் விற்றிருப்பார்கள். ஆனால், அதன்பின்பும் தொடர்ந்து விலை உயர்வதைக் கண்டு பலரும் வாங்க ஆரம்பித்திருப்பார்கள். விலை 1,000 ரூபாய் வரை போகும் என்கிற பேச்சுகளும் சந்தையில் உலாவர ஆரம்பித்தன. இன்னும் பலர் வாங்கினார்கள்.

பங்குச்சந்தை அநியாயங்கள்... உஷார்! #SmartInvestorIn100Days நாள்-14

இதெல்லாம் விலை உயர்வது குறித்து. அதேபோல, சில கெட்ட செய்திகளுக்காக சில பங்குகளின் விலை விழும். தொடர்ந்து குறையும். செய்தி தெரிந்துகொண்ட பல்வேறு தரப்பினரும் கையில் இருப்பதை விற்பார்கள். இல்லாத பங்குகளையும் லாப நோக்கில் இன்ட்ரா டே கணக்கில் விற்பார்கள். பியூச்சர்ஸ் & ஆப்ஷனில் இருக்கும் பங்குகளாக இருந்தால், கையில் இல்லாத பங்குகளை ஷார்ட் அடிப்பார்கள். இப்படியாக, ஒரே பங்கு பலராலும் தொடர்ந்து விற்கப்படும்.

யார் எவ்வளவு பங்கு வாங்குகிறார்கள் அல்லது விற்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியாது. குறிப்பிட்ட செய்திக்கு எவ்வளவு விலை உயரலாம் அல்லது எதுவரை விலை குறையலாம் என்கிற வரையறைகளும் சந்தையில் இல்லை. எல்லாம் அவரவர் கணிப்புகள், கணக்குகள்.

இதன் காரணமாக, நல்ல செய்திக்குத் தொடர்ந்து விலை உயரும். தொடர்ந்து வாங்கப்படும் பங்கு, ஒரு கட்டத்தில் அதன் விலை உச்சத்துக்குப் போய்விடும். அதன்பின், சந்தையில் வாங்கும் சக்தி குறைந்துவிடும். காரணம், அந்தப் பங்கின்மீது ஆர்வம் மற்றும் கவனம் கொண்டிருப்பவர்கள், அவர்கள் சக்திக்கு மீறியே வாங்கியிருப்பார்கள்.

Buy
Buy

இதனால் வாங்குதல் குறையும். ஏற்கெனவே, வாங்கி லாபத்தில் இருப்பவர்கள் விற்றுவிட முடிவுசெய்வார்கள். விற்பார்கள். விலை குறைவதைப் பார்த்து, இனி ஏறாது என்ற முடிவுக்கு வந்து சிலர் ஷார்ட் அடிப்பார்கள்.  ஆக, கையில் இருப்பதை விற்பவர்கள் என்று, சந்தையில் இப்போது அதே பங்கை விற்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

நம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா?! #SmartInvestorIn100Days நாள்-21

இதே நிலைதான் கெட்ட செய்திக்கு விலை இறங்கியதில் நடக்கும். பலரும் விற்று விற்று, மிக அதிகமாகவே விற்று, ஒரு நேரம் விற்பனை குறையும். ஷார்ட் அடித்தவர்கள், கவர் செய்வதற்காக வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். `ஷார்ட் கவரிங்’ அடிப்பதினாலும் விலை உயரும். அட! இது இன்னும் விலை உயருமோ என்ற நோக்கில் டிரேடர்களும் வாங்குவார்கள்.

இப்போது, சந்தையில் அந்தப் பங்கின் நிலைமை தலைகீழாகியிருக்கும். விலை உயர ஆரம்பிக்கும். முன்னது நடந்தது, `ஓவர் பாட் (Over Bought)’ காரணத்தால். பின்னது நடந்தது, `ஓவர் சோல்டு (Over Sold)’ காரணத்தால்.

`ஓவர் பாட்’ என்றால் தேவைக்கு அதிகமாய் வாங்கிவிட்ட நிலை. `ஓவர் சோல்டு’ என்றால் இருப்பதற்கும் அதிகமாய் விற்றுவிட்ட நிலை.

இந்த நிலை, சந்தையில் மற்றவர்களால் சரிசெய்யப்படும். தப்பு செய்தவனை அடித்துவிட்டு, அதிகம் அடித்ததால் அவன் மயங்கிவிட்டால், அடித்தவர்களே அவனை ஆசுவாசப்படுத்தி, சோடா வாங்கிக்கொடுப்பார்கள் அல்லவா... அப்படித்தான்.

இப்படி, ஒரு கட்டத்தில் வாங்குவது விற்பதாக மாறுவதையும், விற்பது வாங்குவதாக மாறுவதையும் `டிரெண்ட் ரிவர்சல்’ என்பார்கள். அதைக் காட்டக்கூடிய இண்டிகேட்டர், RSI.

`ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் RSI.

டெக்னிக்கல் அனலிசிஸில் இருக்கும் பல இண்டிகேட்டர்களில் RSI-யும் ஒன்று.

RSI
RSI
டெக்னிக்கல் அனலிசிஸ், ஒரு பங்கின் ஏற்ற இறக்கத்தை கணித்துச் சொல்லுமா? #SmartInvestorIn100Days நாள்-27

RSI எண் எழுபதுக்கு மேல் போனால் அது, `ஓவர் பாட் ஜோன்’. அதன்பின் விலை இறங்கும். அதே எண், 30-க்கும் கீழ் போய்விட்டால் அது, `ஓவர் சோல்டு ஜோன்’. அதன்பின் விலை ஏறும் என்பது பொதுவிதி. இந்த எண்களுக்குக் கொஞ்சம் ப்ளஸ் மைனஸ் (கூடுதல் குறைச்சல்) இருக்கும்.

இதுகுறித்த மேல் விவரங்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.