Published:Updated:

ஒரு லட்சம் ரூபாய்... தங்கம், ஷேர், ஃபிக்சட் டெபாசிட்.. எந்த முதலீட்டில் லாபம் அதிகம்?

ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும் பொருளாதார ஏற்ற இறக்கங்களை அலசும் தொடர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'அசெட் கிளாசெஸ்’ என்கிற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒருவர் அவரது முதலீட்டை வருமானம் பார்ப்பதற்காகப் போட்டு வைக்க இருக்கும் பல்வேறு வாய்ப்புகளை இப்படி அழைப்பார்கள். வங்கி டெபாசிட்டுகள், தங்கம், பங்குகள், ரியல் எஸ்டேட் என எல்லாம் நம் மக்களுக்கு நன்கு பரிச்சயமான சில அசெட் கிளாஸ்கள்தான். சிலர் எவ்வளவு பணம் கிடைத்தாலும் அதை பிக்செட் டெபாசிட்டில் மட்டுமே போடுவார்கள். வேறு சிலர் எவ்வளவு கிடைத்தாலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள்.

பங்குச் சந்தை, பங்குகளில் முதலீடு செய்ய விரும்பினால், ஒரு `அசெட் கிளாஸ்’ ஆக அது எப்படிப்பட்டது? மற்ற முதலீட்டு வாய்ப்புகளுடன் ஒப்பிடும்போது, அது என்ன விதங்களில் வேறுபடுகிறது என்பனவற்றை ஒரு முதலீட்டாளராகத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தினால், முதலீட்டு வாய்ப்புகளை பிக்செட் ரிட்டர்ன் மற்றும் வேரியபிள் ரிட்டர்ன் (Fixed Return & Varibale return) தருவன என்று இரண்டாகப் பிரிக்கலாம்.

பங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்! #SmartInvestorIn100Days - நாள் 3

பிக்செட் ரிட்டர்ன்

Fixed Return
Fixed Return

ஒருவர் அவரிடம் இருக்கும் பணத்தை வங்கியிலோ அல்லது அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களிலோ, வங்கி பிக்செட் டெபாசிட்களிலோ குறிப்பிட்ட காலத்துக்குப் போட்டு வைக்கலாம். அப்படிப் போடும் பணத்துக்கு என்ன சதவிகிதம் வட்டி என்பதை முன் கூட்டியே தெரிவிப்பதுடன், ஓராண்டுக்கு இவ்வளவு என்று (7.5% என்பது போல) எழுதிக் கொடுத்துவிடுவார்கள். அந்த ஓராண்டுக் காலத்தில் அந்த வங்கி லாபம் செய்தாலும் நட்டமடைந்தாலும், நாட்டில் பணவீக்கம், விலைவாசி மற்றும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்கள் கூடினாலும் குறைந்தாலும், டெபாசிட் போட்டவருக்கு அவரது டெபாசிட் தொகைக்கு வட்டி, 7.5%தான். அல்லது கட்டாயம் 7.5% உண்டு. கொஞ்சமும் கூடவோ, குறையவோ செய்யாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் வேறு சில வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. உதாரணத்துக்கு, அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைப்பு. ஒருவர் அலகாபாத் வங்கியில் பிக்செட் டெபாசிட் போட்டிருந்தால், அந்த வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டாலும், இந்தியன் வங்கியில் (உதாரணத்துக்கு) அலகாபாத் வங்கி கொடுப்பதைக் காட்டிலும் கால் சதவிகிதமோ அரை சதவிகிதமோ குறைவான வட்டி கொடுத்துக்கொண்டிருந்தாலும், முன்னர் அலகாபாத் வங்கியில் பணம் போட்டிருந்தவருக்கு, எழுதித் தரப்பட்ட சதவிகிதத்திலேயே வட்டி வழங்கப்படும். வழங்கப்பட வேண்டும். இப்படியாக வங்கி அல்லது அஞ்சலகம் அனுமதிக்கும் எந்தக் கால அளவுக்கும் டெபாசிட் செய்யலாம். ஐந்து ஆண்டுகளுக்குக் கூட இப்படி உறுதி செய்துகொள்ளலாம். இவ்வாறு நிரந்தரமாக வருமானம் தருவனவெல்லாம், `பிக்செட் இன்கம் அசெட்ஸ்’. பிக்செட் டெபாசிட்கள் தவிர, நான்-கன்வெர்ட்பிள் டிபென்ச்சர்கள், பாண்டுகள் என்று இன்னும் சில மாறாத வருமானம் தரும் முதலீட்டு வாய்ப்புகளும் உண்டு.

சிலர் நினைக்கலாம், பணியாளர்கள் பிராவிடென்ட் பண்டு (EPF), பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்டு (PPF) போன்றவை இந்த வகையில் சேராதா என்று. அவையும் நிச்சயம் `முதலுக்கு மோசம் வராத’, வருமானம் தரும் வாய்ப்புகள்தான். ஒரு வேறுபாடு, அவை என்ன வருமானம் தரும் என்பதை முன்கூட்டி தெரிவிப்பதில்லை. ஆண்டு முடிவில்தான் அறிவிக்கப்படுகின்றன. சமீபத்தில் பி.எப்-க்கு அறிவிக்கப்பட்ட 2018-19- நிதி அண்டுக்கான, 8.65 சதவிகித வட்டி விகிதம் போல. ஆமாம், இந்த வகை முதலீடுகளின் இரண்டு முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. முதல் அம்சம் போடும் முதலீடு மற்றும், அதற்குக் கொடுக்கப்படவிருக்கும் வருமானத்தின் அளவு ஆகிய இரண்டுக்குமே உத்தரவாதம் என்பதுதான்.

வங்கிகள் இணைப்பு... பங்கு முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

பென்ஷன் திட்டங்கள் இந்த வகையில் வராது என்று சொன்னாலும், புரிதலுக்காக குறிப்பிட்ட வகை பென்ஷன் திட்டத்தையும் இங்கே விளக்கிவிடுவோம். எல்.ஐ.சி அல்லது வேறு எதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் போடப்படும் `லம்ப் சம்’ முதலீட்டுக்கு இந்த வகையில்தான், தரவிருக்கும் `பென்ஷன்' எனும் வருமானம் முடிவு செய்யப்படுகிறது. பென்ஷன் திட்டங்களில் `சிங்கிள் பிரீமியம் பிளான்ஸ்’ என்று ஒரு வகை இருக்கிறது. அவ்வகைத் திட்டம் ஒன்றில் ஒருவர் ஒரே பிரீமியமாக ரூ.5 லட்சம் போட்டால், அவரது குறிப்பிட்ட வயதுக்குப்பின் கொடுக்கப்படும் பென்ஷன் தொகை `பிக்செட் இன்கம் ரேட்’ல்தான் கணக்கிடப்படுகிறது.

Insurance
Insurance

உதாரணத்துக்கு, அவர் பாலிசி எடுக்கும் நேரம் நாட்டில் வட்டி விகிதங்கள் 8% என்றால், அந்நிறுவனம் அவர் போடும் ரூ.5 லட்சத்துக்கு அதன் அடிப்படையில் கணக்கிட்டு, மாத ஓய்வூதியத் தொகையை முடிவு செய்யும். அதன் பின்னர் பாலிசிதாரரின் வாழ்நாள் முழுக்க, பின்னர் அவரது வாரிசுதாரரின் வாழ்நாள் முழுக்க, முன்பு முடிவு செய்யப்பட்ட அதே தொகைதான். அதாவது மாறாத வருமானம். முன்பு நம் நாட்டில் வட்டி விகிதம் 12 சதவிகிதமாக இருந்தபோது பாலிசி எடுத்தவர்களின் பணத்துக்கு இன்றும் அன்று கொடுத்த அதே அளவு பென்ஷன் கொடுக்கப்படுகிறது.

அசெட் கிளாஸ்கள் குறித்து மேலும் சிலவற்றைப் பார்ப்பதற்கு முன்பு, கடந்த காலத்தில் சில அசெட் கிளாஸ்கள் கொடுத்திருக்கும் வருமானங்கள் என்ன என்று தெரிந்தால் சுவாரஸ்யமாகவும் உபயோகமாகவும் இருக்கும் அல்லவா.

ஒருவர் ஒரு லட்ச ரூபாய் பணத்தை வைத்து சென்செக்ஸ் சில இருக்கும் பங்குகளை வாங்கியிருந்தால் அல்லது அதே லட்ச ரூபாய்க்குத் தங்கம் அல்லது வெள்ளி வாங்கியிருந்தால் அல்லது அந்தப் பணத்தைப் பாரத ஸ்டேட் வங்கியில் பிக்சட் டெபாசிட்டாக போட்டிருந்தால் அல்லது அதே அளவு பணத்தை பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட்டில் போட்டிருந்தால், அந்த ஒரு லட்சம் பணம் என்ன அளவாக வளர்ந்திருக்கிறது என்று பார்க்கலாம். அட்டவணையைப் பார்க்கவும்.

*30% வருமான வரி

1 lakh Investment in 1 year and 5 years
1 lakh Investment in 1 year and 5 years
தகவல் : பிசினஸ் ஸ்டாண்டர்டு, 23, செப்டம்பர் 2019 நிலவரப்படி.

பாரத ஸ்டேட் வங்கியில் பிக்செட் டெபாசிட் ஆகப் போடாமல் ஓராண்டுக்கு முன்போ, 5 ஆண்டுகளுக்கு முன்போ அந்தப் பங்கை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருந்தால், அது தற்போது எவ்வளவாக மாறியிருக்கும் என்று கணக்கிட்டுப் பார்க்க விருப்பமா?

நாளை சொல்கிறேன். அதற்குள் உங்களில் சிலர் கணக்கிட்டுச் சொல்லிவிடுவீர்கள்தானே!

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு