Published:Updated:

பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை யார் தீர்மானிக்கிறார்கள் தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-89

சிலர் நினைக்கலாம், சில பெருமுதலாளிகள், அரசியல்வாதிகள் அல்லது சில பெரிய பங்கு புரோக்கர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று. இது உண்மையா... என்று கண்டுபிடிப்பது இயலாத காரியம். ஆனால், இது சாத்தியமா... என்ற கோணத்தில் இந்தக் கேள்விக்குப் பதில் தேடலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் திட்டமிட்டு நடத்தப்படுகிறதா?” என்று எம்.செல்வநாயகம் கேட்டிருக்கிறார்.

இது மிகவும் சுவாரஸ்யமான கேள்வி. பலருக்கும்கூட இந்தச் சந்தேகம் இருக்கக்கூடும். குறிப்பாக, அவர்கள் நஷ்டத்தைச் சந்திக்கும்போது இப்படி யோசிக்கத் தோன்றும்.

இந்தக் கேள்விக்குப் பதில் கண்டுபிடிப்பதற்கு முன்பு, வேறு சில கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றில் ஒரு கேள்வி, `பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் யாரால் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன?' என்பது.

சிலர் நினைக்கலாம், சில பெருமுதலாளிகள், அரசியல்வாதிகள் அல்லது சில பெரிய பங்கு புரோக்கர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று. இது உண்மையா... என்று கண்டுபிடிப்பது இயலாத காரியம். ஆனால், இது சாத்தியமா... என்ற கோணத்தில் இந்தக் கேள்விக்குப் பதில் தேடலாம்.

அடுத்த கேள்வி, `பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் என்றால் எதைக் குறிப்பிடுகிறோம்... குறியீட்டு எண்ணையா... அப்படி என்றால் அவற்றோடு தொடர்புடைய நிறுவனப் பங்குகளை மட்டுமா அல்லது ஒட்டுமொத்த நிறுவனப் பங்குகளில் விலைகளையுமா?'

முன்பெல்லாம் நம் நாட்டில் பங்குச் சந்தை குறித்த விழிப்புணர்வு மிக மிகக் குறைவு. அந்தக் காலகட்டங்களில் மும்பை பங்குச் சந்தைதான் அறிவிக்கப்படாத அரசன். கொல்கத்தா, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் எல்லாம் அரசரின் தளபதிகள். அவையெல்லாம் `ரீஜனல் எக்ஸ்சேஞ்சஸ்’.

Representational Image
Representational Image
பங்குச்சந்தையா, மியூச்சுவல் ஃபண்டா... முதலீட்டுக்கு எது பெஸ்ட்? #SmartInvestorIn100Days நாள்-88

தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு இந்தியப் பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயித்தது பாம்பே ஸ்டாக் எக்சேஞ்ச்தான். அதில் கோலோச்சியவர்கள் ஒரு சில பெரிய தரகர்கள். அவர்களுக்குப் பின்புலமாகச் சில அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் இருந்திருக்கலாம். அந்தக் காலகட்டத்தில், அவர்கள் நினைத்தால் பங்குச் சந்தை நிலவரத்தை மாற்ற முடிந்தது; செய்தார்கள் என்றும் சொல்வார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்பு உள்ளே வந்தவர்கள், FII க்கள் எனப்படும் பாரின் இன்ஸ்டிடூஷனல் இன்வெஸ்டார்ஸ். அவர்களிடம் பணபலம் அதிகம். அவர்கள் அணுகுமுறை வித்தியாசமானது. தேர்ந்த ஆய்வுகள் செய்து நீண்டகாலம் வைத்திருப்பதற்காக வாங்கினார்கள். (2019 வரை அவர்கள் இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்திருப்பது 13 லட்சம் கோடி ரூபாய்கள்). அதனால், அவர்கள் வந்த பின்பு பல ஆண்டுகளுக்குச் சந்தையின் போக்கை அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்கள் வாங்கினால் உயரும். விற்றால் இறங்கும். குறிப்பாக 'ஏ குரூப்' எனப்படும் பங்குகள் மற்றும் லார்ஜ் கேப் பங்குகளில் அவர்கள் தாக்கம் அதிகம்.

Representational Image
Representational Image

முன்பிருந்தே இருந்துகொண்டிருந்தாலும், அதற்கும் அடுத்த காலகட்டத்தில், இந்தியன் இன்ஸ்டிடூஷன்ல் இன்வெஸ்டார்ஸ் பங்குகளில் பெரிய அளவுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். LIC உள்ளிட்ட பெரிய காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள் போன்றவை பங்குகளில் பெரிய அளவுகளில் முதலீடு செய்ய, கணிசமான பணம் அவர்கள் மூலம் சந்தைக்கு வந்தது. அந்த முதலீடுகள் நிலையாகவும் இருந்தது. அவர்களின் வாங்கு சக்தி வலிமையானது. ஜூன் 2019 வரையிலான கணக்குப்படி, LIC மட்டும் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு 5.98 லட்சம் கோடி ரூபாய்கள்.

அதற்கும் அடுத்த காலகட்டத்தில் தேசிய பங்குச் சந்தை வந்து விட்டது (1994). அது புளோர் டிரேடிங் முறையில் இருந்து மாறுபட்டு, வெளிப்படைத் தன்மையுள்ள `ஸ்கிரீன் பேஸ்டு டிரேடிங்’ கை அறிமுகப்படுத்தியது. வர்த்தகரோ முதலீட்டாளரோ அவர் செய்த வர்த்தகத்தை, விலை, நேரம் உட்பட, அவரே இணையத்தில் சரி பார்த்துக்கொள்ளமுடியும் என்கிற அளவு வெளிப்படைத்தன்மை வந்தது.

பங்குச் சந்தை: வரியை மிச்சம் செய்ய வழி... எப்போது பங்கு வாங்கலாம்? #SmartinvestorIn100Days நாள் - 86

இந்த மாற்றங்களால் மும்பையில் மட்டும் மையம் கொண்டிருந்த வர்த்தகம் பெரு நகரங்கள் மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு சிறு நகரங்களுக்கும் ஊர்களுக்கும் கூட பரவியது. Broad based ஆனது. 2017 டிசம்பர் வரையிலான தகவல்படி, 363 ஊர்களில் தேசிய பங்குச் சந்தை அதன் டெர்மினல்கள் மூலம் இயங்குகிறது. கிட்டத்தட்ட 2 லட்சம் டிரேடிங் டெர்மினல்கள் மூலம் நாடெங்கில் இருந்தும் வாங்குதல் விற்றல் நடக்கிறது.

இவை குறித்து இன்னும் சில தகவல்களையும் தெரிந்து கொள்ளவேண்டும். அதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் சொல்கிறேன். அதன்பின் திட்டமிட்டு ஏற்ற இறக்கங்கள் நடத்த முடியுமா என்பது குறித்து ஒரு முடிவுக்கு வரலாம்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு