Published:Updated:

மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்? #SmartInvestorIn100Days நாள் - 44

பங்குகள் விலை உயர்ந்தால், அந்தப் பங்குகளை வைத்திருப்போர் அனைவருக்கும் அவர்கள் வைத்திருக்கும் எண்ணிக்கைகளைப் பொறுத்து லாபம். இறங்கினாலும் வைத்திருக்கும் எண்ணிக்கையைப் பொறுத்து நஷ்டம். இந்த லாப நஷ்டங்களும் `பேப்பர்’ களில்தான்.

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் 10,00,000 கோடிகளை நெருங்குவது சரி. அதனால், அந்த நிறுவனத்துக்கு என்ன பலன் என்ற சந்தேகம் வரலாம்.

பங்கு விலை உயர்வது, குறைவது போன்றவை அந்தந்த நிறுவனங்களின் வியாபாரம் மற்றும் லாப நஷ்டங்களையும் பொறுத்து அமையும். ஆனால், பங்கு விலை உயர்வதால், அந்த நிறுவனத்துக்கு நேரடிப் பலன் ஏதுமில்லை.

BSE
BSE

ரிலையன்ஸ் பங்கு விலை உயர்ந்து, மார்க்கெட் கேப் புதிய உச்சம் தொட்டிருப்பதால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாபாரத்தில், பேலன்ஸ் ஷீட்டில் எந்த மாறுதலும் வராது. இது, எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

15.11.19 அன்று ஜெயவேல் என்ற ஒரு வாசகர் கேள்விகள் பகுதியில், `நான் 100 ரூபாய்க்கு வாங்கிய பங்கு விலை, 125 ரூபாய் ஆகிவிட்டது. அதனால், எனக்கு லாபம் என்பது புரிகிறது. நிறுவனத்துக்கு என்ன லாபம்?’ என்று கேட்டிருந்தார்.

நிறுவனர்கள், தங்கள் நிறுவனத்தின் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யக் கூடுதல் முதல் கேட்டு, IPO வெளியிடுகிறார்கள். அவர்கள் கேட்ட பணம் கிடைக்கிறது. அப்படி முதல் கொடுத்தவர்களுக்கு அவர்கள் பங்குகள் வழங்குகிறார்கள். அதன்பின் அவர்கள் நிறுவனத்தின் `முதல்'-லில் ஒரு பகுதிக்கு மட்டுமே சொந்தக்காரர்கள். அவர்கள் நிறுவிய காரணத்தால், `புரமோட்டர்கள்’. பலருக்கும் பங்குகள் வழங்கியதால் அவர்கள் நிறுவனம் `பப்ளிக் லிமிடெட் கம்பெனி’ ஆகிவிடுகிறது. பொதுமக்களும் பங்குகள் வைத்திருக்கிறார்கள்.

நிறுவனர்கள் அந்த நிறுவனத்தில் போட்ட பணத்தை வெளியே எடுக்காமல், தொடரலாம். ஆனால் `பப்ளிக்’ நிறுவனத்திலிருந்து வெளியேற விரும்பினால் அதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும். அதற்கான வழிதான், பங்குச்சந்தையில் `லிஸ்ட்’ செய்வது எனும் பட்டியல் இடுவது.

பங்கு முதலீடு
பங்கு முதலீடு

பங்குச்சந்தைகள் NSE மற்றும் BSE-யில் தங்கள் நிறுவனப் பங்குகளை `லிஸ்ட்’ செய்ய, நிறுவனம் பணம் கட்டவேண்டும். மேலும், நிறுவனம் குறித்த தகவல்கள் தரவேண்டும். அந்தத் தகவல்களில் மாறுதல் வருகிறபோதெல்லாம் அவற்றை பங்குச்சந்தைகளுக்குத் தரவேண்டும். தொடர்ந்தும், உடனடியாகவும் அவற்றைத் தரவேண்டும். அவற்றை பங்குச்சந்தைகள் இணையதளங்கள் மூலம் பொதுவெளியில் தெரிவிக்கும். எவரும் தெரிந்துகொள்ளலாம்.

பங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்! #SmartInvestorIn100Days - நாள் 3

காரணம், பங்குகளை வாங்கியவர்களின் `முதல்’ அந்த நிறுவனத்தில் இருக்கிறது. நிறுவனத்தின் லாப நஷ்டங்கள், பங்கு விலைகள் மாறுவதன் மூலம் அவர்களையும் பாதிக்கும். அந்த `அர்த்தத்தில்’ அவர்களும் அந்த அளவில் முதலாளிகள்தான். அவர்களை நிறுவனத்தின் பங்குதாரர்கள் என்கிறார்கள். அதனால் அவர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும். நேரடியாக எல்லோருக்கும் தெரிவிக்க முடியாது என்பதால், பட்டியல் இடப்பட்ட பங்குச்சந்தைகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

லிஸ்ட் ஆன பங்குகள், அதன்பின் சந்தைகளில் விற்கப்படும். விலைகள் உயரும் இறங்கும். அதனால் மார்க்கெட் கேப்பிடலைஷேசன் உயரும், குறையும்.

பங்குகள் விலை உயர்ந்தால், அந்தப் பங்குகளை வைத்திருப்போர் அனைவருக்கும் அவர்கள் வைத்திருக்கும் எண்ணிக்கைகளைப் பொறுத்து லாபம். இறங்கினாலும் வைத்திருக்கும் எண்ணிக்கையைப் பொறுத்து நஷ்டம். இந்த லாப நஷ்டங்களும் `பேப்பர்’ களில்தான். கூடுதல் விலைக்கு விற்று பணத்தைப் பார்த்தால்தான் உண்மையான லாபம். இல்லாவிட்டால் பேப்பர் லாபம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன புரமோட்டர் முகேஷ் அம்பானி (அவர் அப்பா, திருபாய் அம்பானிதான் புரமோட்டர். அவரிடமிருந்து பெற்றவர் மகன், முகேஷ் அம்பானி. இப்போது வைத்திருக்கிறார்). அவர் வசம் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் அளவு 48.87 சதவிகிதம். கிட்டத்தட்ட 309 கோடி 10 ரூபாய் பங்குகள். அவற்றின் மதிப்பு 4,50,000 லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல்.

ஒருநாள் ரிலையன்ஸ் பங்குகள் வாசகர் கேட்டதுபோல 25 ரூபாய் விலை உயர்ந்தால், முகேஷ் அம்பானி வைத்திருக்கும் 309 கோடி பங்குகளுக்கு 7,725 கோடி ரூபாய் லாபம். ஆனால், அவர் என்ன விற்கவா போகிறார்? விற்றால் அது லாபம். மற்றபடி அவற்றின் மதிப்பு கூடியிருக்கிறது.

25 ரூபாய் விலை உயர்ந்ததால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் வைத்திருக்கும் அனைவருக்கும் அந்த அளவு அவர்கள் போட்ட பணத்தின் சந்தை மதிப்பு அதிகரிக்கிறது. விற்றவர்களுக்கு பணம் கிடைக்கிறது. ஆனால், அதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் எண்ணிக்கை மாறாது. ஒருவர் விற்கவேண்டும் என்றால், அதை வேறு எவராவது வாங்க வேண்டும். இவையெல்லாம் நிறுவனத்துக்கு வெளியில், பங்குச்சந்தைகளில் நடப்பது. நிறுவனம் இவற்றால் நேரடியாக லாபமோ நஷ்டமோ அடைவதில்லை. அதனிடம் இருக்கும் `முதல்’ பணத்தை வைத்து அது அதன்போக்கில் அதன் வியாபாரத்தைப் பார்க்கும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி? #SmartInvestorIn100Days -43

ஆனால், அதே நிறுவனம் வேறு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யும்போது, கடன் கேட்கப்போகும்போது என்று வேறு பலவற்றில், நிறுவனம் எவ்வளவு பெரியது, அதன் பங்குகள் எவ்வளவு பிரீமியத்தில் வர்த்தகம் ஆகின்றன, அதன் மார்க்கெட் கேப் எவ்வளவு என்று பார்க்கப்படும்.

அடுத்த அத்தியாயத்தில் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனின் முக்கியத்துவத்தைப் பார்க்கலாம்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.