Published:Updated:

ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் என்றால் என்ன... ஓர் விரிவான அலசல்! #SmartInvestorIn100Days நாள்-98

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

சொந்தப் பணத்தை நிர்வாகம் செய்வதில் நிதானம் காட்டினால், அதுதான் `ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட்.'

ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் என்றால் என்ன... ஓர் விரிவான அலசல்! #SmartInvestorIn100Days நாள்-98

சொந்தப் பணத்தை நிர்வாகம் செய்வதில் நிதானம் காட்டினால், அதுதான் `ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட்.'

Published:Updated:
#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

வருமான வாய்ப்பு ஒரே போல இருந்தாலும் சிலர் சிரமத்தில் வாழ்வதற்கும் வேறு சிலர் நிம்மதியாக வாழ்வதற்கும் என்ன காரணம்? சென்ற அத்தியாயத்தில் பார்த்த, 90 சதவிகித மக்கள் செய்யத் தவறுவது என்ன? 10 சதவிகித மக்கள் செய்வதுதான் என்ன?

`ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட்’ என்பதுதான் வெற்றிகரமான சிலர் செய்வதும், வெற்றியைத் தவறவிடும் பிறர் செய்யாததும். `ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட்’ என்றால், பணத்தை நிர்வாகம் செய்வது... சரியாக நிர்வகிப்பது.

ஒருவருக்கு 30,000 ஏக்கர் நிலம் இருக்கலாம். அவரிடம் ஆயிரக்கணக்கானவர்கள் ஊதியம் பெற்று பணியாளர்களாக இருக்கலாம். அவருடைய நிறுவனத்தில் அவர் கையெழுத்துகளில் சில ஆயிரம் கோடி ரூபாய்களுக்குக்கூட வரவு செலவுகள் நடக்கலாம். ஆனாலும், அவரது நிதி நிர்வாகம் சரியில்லை என்றால், அவரது `வாழ்க்கைத் திரைப்படம்’ சோகத்தில்தான் முடியும் என்பதை சமீபத்தில்கூட பார்த்தோம்.

ஒருவரிடம் `10 லட்ச ரூபாய் சொத்து இருக்கிறது. மற்றொருவரிடம் அதைப்போல நூறு மடங்கு அதிகமாக 10 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. இந்த இருவரில் எவர் நிம்மதியாக வாழ்வார்? எவருக்கு தொந்தரவுகள் வரும் சாத்தியம் குறைவு என்று கேட்டால், எவர் கண்ணுக்கும் 10 கோடிக்காரர்தான் பெரிதாகத் தெரிவார்.

ஆனால், நிதி நிர்வாகத்தில், கணக்குகளில், நமக்குத் தெரியும், ஒரு பேரேட்டில் இரண்டு பகுதிகள் இருக்கும் என்று. ஒன்றின் பெயர் டெபிட். மற்றொன்றின் பெயர் கிரெடிட்.

Representational Image
Representational Image

பத்து லட்ச ரூபாய் வைத்திருப்பவருக்கு கடன், இரண்டு லட்சம். பத்து கோடி வைத்திருப்போருக்கு கடன், பன்னிரண்டு கோடி என்று வைத்துக்கொள்வோம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் என்ன வரும்?

முதலாம் நபருக்கு கடன் போக, நிகர சொத்து மதிப்பு, எட்டு லட்சம். இரண்டாம் நபருக்கு, கடனில் அவரது சொத்து போக, இரண்டு கோடி கடன்.

நிகரமாக ஒருவருக்கு +8 லட்சம் மற்றொருவருக்கு நிகரமாக மைனஸ் 2 கோடி.

கடன் வாங்கலாம் தப்பில்லை. போகப்போக மதிப்பு உயரும் சொத்துக்கள் வாங்க கடன் வாங்கலாம். ஆனால், தேய்மானமாகும் வாகனங்கள், போன்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், சுற்றுலாக்கள், கேளிக்கைகளுக்கு கடன் என்றால் சிக்கல்தான்.

ஆமாம், ஏன் சிலர் சேமிக்காமல் அவ்வளவு செலவு செய்கிறார்கள்?

Representational Image
Representational Image

அது ஒரு தேசிய நெடுஞ்சாலை. ஒருவர் தாம்பரத்திலிருந்து சொந்தக் காரில் குடும்பத்துடன் கிளம்புகிறார். அவர் போக வேண்டியது விழுப்புரத்துக்கு. பாட்டு கேட்டுக்கொண்டே நிதானமாக, மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டிச் செல்கிறார்.

சிறிதுதூரம் சென்றபின், பின்னால் வரும் ஒரு காரிலிருந்து ஹாரன் சத்தம் விடாமல் ஒலிக்கிறது. அதைக்கேட்ட அவருக்கு எரிச்சல். பொதுவாக முந்த விரும்பும் பிற வண்டிகளுக்கு வழி விட்டு ஓட்டும் தன்மை உடையவர்தான் அவர். ஆனாலும், அன்று பின்னால் வந்த அந்த வாகன ஓட்டி, ஹாரன் அடித்த விதம் அவருக்கு எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கியது. அதனால், அந்த வண்டி ஓவர் டேக் செய்ய வழி கொடுக்காமல், தன் வண்டியை இப்படியும் அப்படியும் வளைத்து ஓட்டினார்.

பின்னால் வந்த வண்டியில் இருந்தவரும் சளைத்தவர் இல்லைபோல. போட்டியை விடுவதாக இல்லை. கடும் முயற்சிக்குப் பிறகு, ஒரு நேரம் இவர் வண்டியை அவர் முந்திவிட்டார்.

நம்மவருக்கு பொறுக்கவில்லை. கோபம். உடனே தன் வண்டியை முந்திய வண்டியை இவர் விரட்ட ஆரம்பிக்கிறார். வேகத்தைச் சற்று கூட்டி அந்தக் காருக்கு இணையாக வந்துவிட்டார். நடுவில் மீடியன் இருக்கும் அந்த தேசிய நெடுஞ்சாலையில், போகிற வருகிற வண்டிகளுக்குத் தனித்தனியாக இரண்டு பாகங்கள். அதனால் நல்லவேளையாக இவர்கள் வண்டிகளுக்கு எதிரில் வேறு வண்டிகள் வரவில்லை.

இப்போது இரண்டு கார்களும் இணையாக ஒன்றை ஒன்று முந்த முயன்றபடி வேகமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. பின்னால் வந்து ஓவர் டேக் செய்த வண்டி இப்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில். நம்மவர் வண்டியும் 90 கிலோமீட்டர் வேகத்தில். அவர் ஆக்சிலேட்டரை அழுத்த, அவர் வண்டி இப்போது 100 கிலோ மீட்டர் வேகத்தில். இவரும் அழுத்த இப்போது இவரும் 100 கிலோமீட்டர் வேகத்தில். அவர் 110. இவர் வண்டியும் சளைக்காமல் 110 கிலோ மீட்டர் வேகத்தில்.

இவர் மனைவி, ``வேண்டாம். விடுங்கள். அவர் போகட்டும்” என்று சொல்வது இவர் காதில் விழவில்லை. தொடர்ந்து வேகமாகவே போகிறார்.

காரணம், இப்போது இவர் வண்டியை இவரா ஓட்டுகிறார்? இவர் என்ன வேகம் போக வேண்டும் என மற்றொரு கார் ஓட்டுநர் அல்லவா தீர்மானிக்கிறார்!

நிதானமாக, நிம்மதியாகப் பாட்டுக் கேட்டுக்கொண்டே 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிப்போய்கொண்டிருந்த அவர், இப்போது பரபரப்பாக 120 கிலோ மீட்டர் வேகத்தில், தன் மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பை மறந்து, ரிஸ்க் எடுத்து அல்லவா பறந்துகொண்டிருக்கிறார்!

Representational Image
Representational Image

வண்டி விழுப்புரம் தாண்டிப்போனாலும் போகும். அதெல்லாம் எதுவும் இப்போது அவர் கவனத்தில் இல்லை.

வேறு சிலர் இருக்கிறார்கள். ``உனக்கு அவசரமா? முந்து” என்று கண்ணாடிக்கு வெளியே கையை நீட்டி, மெல்ல அசைத்து வழியனுப்பி வைத்துவிட்டு தங்கள் தங்கள் போக்கில் தங்கள் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக ஓட்டிப் போவார்கள்.

யாரோ, எவரோ, எதற்காகவோ செய்வதெல்லாம் நமக்கு எதற்கு? `என் வாழ்க்கைக்கு, என் தேவைக்கு, என் சூழ்நிலைக்கு, என் சக்திக்கு ஏற்ப நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். அதன்படி நிதானமாக, அதேசமயம் உறுதியுடன் பயணிப்பேன்’ என்று, வண்டி ஓட்டுவதில் மட்டுமல்ல தன் சொந்தப் பணத்தை நிர்வாகம் செய்வதிலும் நிதானம் காட்டலாம். காட்டினால் அதுதான் 'ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட்.'

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.