Election bannerElection banner
Published:Updated:

ஓய்வுக் காலத்திற்காக நிச்சயம் முதலீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா? #Smartinvestorin100days நாள் -95

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

ஓய்வுக் காலத்திற்குத் தேவையான பணம் இல்லாமல் போய்விட்டால், பின்னால் சம்பாதிக்க முடியுமா... சேர்க்க முடியுமா?

சிலருக்கு, குளிக்கும் அறைக்குள் போய் சோப்பு டப்பாவைத் திறந்தவுடன்தான், தேய்ந்துபோய் கிடக்கும் சோப்பு கண்ணில் பட்டது நினைவுக்கு வரும். `அடடா! நேற்றே புது சோப்பு எடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்தோமே... மறந்து விட்டோமே ’ என்று. அதற்காக, குளியலறையில் இருந்து வெளிவர சோம்பலாக அல்லது தோதுப்படாமல் இருக்கலாம். அதனால், தேய்ந்துபோன சோப்பைப் பயன்படுத்தி குளித்துவிட்டு வெளியே வருவார்கள்.

இதேபோல சமையலுக்குத் தேவையான பொருள்கள், வண்டிக்குப் பெட்ரோல், வங்கியிலிருந்து எடுத்துவைத்துக்கொள்ளவேண்டிய ரொக்கம் என்று பலவும் தேவைப்படும் கணம் நினைவுக்கு வரும். குளிக்கும் அறைக்குள் போனபின்பு, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்கும் நேரத்தில், வண்டியை அவசரமாக எடுத்துக்கொண்டு போகும்போது என்று தேவைப்படும் நேரம் நினைவு வந்து என்ன பலன்? முன்னரே செய்திருந்தால் சிரமம் இல்லை.

Investment
Investment
பங்கு விலை போலவே கரன்சி விலையும் தொடர்ந்து மாறும்... ஏன் தெரியுமா? #SmartInvestorIn100Days நாள் - 94

இதெல்லாம் பரவாயில்லை. சமாளித்துவிடலாம். நஷ்டமானாலும் ஓரளவிற்குத்தான். ஆனால் பலருக்கும், அவர்களுக்குப் பின்னொரு காலத்தில் சம்பாத்தியம் இருக்காது என்றும், ஆனாலும் பணம் தேவைப்படும் என்றும் முன்னரே தெரியாது. சோப்பு டப்பாவைத் திறந்தபின் நினைவு வருவது போல, ஓய்வுக் காலத்தில் சேமிக்க வேண்டும் என்பது, ஓய்வுக்காலம் வந்த பிறகுதான் வரும். சோப்போ, பெட்ரோலோ போட்டுக் கொள்ளாமல் இருக்கலாம். அவை குறைந்துபோனாலும் பரவாயில்லை. ஆனால், ஓய்வுக் காலத்திற்குத் தேவையான பணம் இல்லாமல் போய்விட்டால், பின்னால் சம்பாதிக்க முடியுமா... சேர்க்க முடியுமா?  

ஓய்வுக் காலம் என்பது எல்லோருக்கும் உண்டு. கண்டிப்பாக வரும். ஒருவர், அவரது சுமார் 20-வது வயதிலிருந்து சம்பாதிக்க ஆரம்பிக்கலாம். பெரும்பாலானவர்கள், 58 அல்லது 60 ஆவது வயதில் பணி ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். அந்தக் கணக்கின்படி, ஒருவர் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சம்பாதிக்கிற காலம். ஆனால், இன்றைக்கு இந்திய சராசரி ஆயுட்காலம் 69 ஐ நெருங்கியிருக்கிறது.

Investment
Investment

சராசரி என்பது எல்லோருக்கும் ஆனதல்ல. சிலர் சராசரிக்கும் குறைவான காலம் வாழ, வேறு சிலர் சராசரியைவிட அதிகமான காலம் வாழ்கிறார்கள். ஒருவர் 80 வயது வரை வாழ்வார் என்று எடுத்துக்கொண்டால்கூட, 60 வயதுக்குப் பிறகு மேலும் 20 ஆண்டுகள் வாழ்ந்தாக வேண்டும். சிலர், 90 வயது வரை வாழ்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள், அவர்களது பணி ஓய்வுக்குப் பிறகு 30 அல்லது 40 ஆண்டுகள் வாழ வேண்டும். அவர்கள் சம்பாதித்த போது இருந்ததைப் போல் விலைவாசி இருக்காது. ஓய்வுபெற்ற பிறகு மிகக் கடுமையாக உயர்ந்திருக்கும். 

வாழ்க்கையின் முதல் 40 ஆண்டுகள் சம்பாதிப்பது. அடுத்த 40 ஆண்டுகளில் சம்பளம் இல்லாமல் வெறுமனே செலவழிப்பது மட்டும். இதுதான் ஓய்வுக் காலம். பலர், தங்களுக்கும் இப்படிப்பட்ட ஓர் ஓய்வுக் காலம் உண்டு என்பதை உணர்வதில்லை. `அவுட் ஆஃப் சைட்’ என்கிற காரணத்தினால், கவனிக்காமல் விடலாமா?  அந்த காலகட்டதிற்குத் தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்ய வேண்டாமா?

கிரிக்கெட் போட்டிகளில் முதல் 10 ஓவர்களில் ஆற அமர கவனமில்லாமல் ஆடி விக்கெட்டுகளை இழந்து, ஓட்டம் சேர்க்காமல் விட்டுவிட்டு, போட்டியில் வெற்றிபெறுவதற்காகக் கடைசி 10 ஓவர்களில் தேவையான ஓட்டங்கள் அத்தனையையும்- சுமார் 100 ஓட்டங்கள் என்று வைத்துக்கொள்வோம்- எடுக்க முடியுமா? அப்போது Required run rate மிக அதிகமாக, ஓவருக்கு 10 ஓட்டங்கள் என்கிற சவாலான நிலையில் இருக்கும்.  #Smartinvestorin100days

Cricket
Cricket
மியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன? அதில் எப்படி முதலீடு செய்வது? #SmartInvestorIn100Days நாள்-91

கிரிக்கெட்டில், ஒருவரால் அவரது எல்லா ஓவர்களிலும் சரியாக ஆடி, ஓட்டங்கள்  எடுக்க முடியும். ஆனால், வாழ்க்கையில்? வாழ்க்கை முழுக்க சம்பாதிக்க முடியாது.

சம்பாதித்துக்கொண்டே செலவழித்துக்கொண்டிருப்பது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு. பின்னர்,  சம்பாத்தியம் நின்றுவிடும். ஆனால், தொடர்ந்து செலவு செய்ய வேண்டும். தவிர, விலைவாசி உயர்வதால் சேர்ந்துகொள்ளும் கூடுதல் சுமை.

ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் என்பதில் ஓய்வுக்கால திட்டமிடலுக்கு முக்கிய இடமுண்டு.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு