Published:Updated:

ஒரு நிறுவனத்துக்கு `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ ஏன் முக்கியம்? #SmartInvestorIn100Days நாள் - 45

சமீபத்தில் செபி அமைப்பு, பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குகளை மார்க்கெட் கேப்பிடலைசேஷன் அடிப்படையில் வரிசைப்படுத்தும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

மார்க்கெட் கேப் எவ்வளவு என்று பார்ப்பது ஒரு வகை. அதைப் பார்த்தால், ஒரு நிறுவனத்தின் மொத்த ஈக்விட்டி பங்குகளுக்கும் சேர்த்து சந்தையில் என்ன மதிப்பு இருக்கிறது என்பது தெரியும்.

பட்டியல் இடப்பட்டிருக்கும் சுமார் 5,000 நிறுவனப்பங்குகளில் எதற்கு எவ்வளவு மார்க்கெட் கேப் என்று பார்ப்பது மட்டும் போதாது என்று அதையே மூன்று வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள்.

முதல் வகை `லார்ஜ் கேப்’, இரண்டாவது `மிட் கேப்’, மூன்றாவது `ஸ்மால் கேப்’.

எந்தப் பங்கு, எந்தப் பிரிவின் கீழ்வரும் என்பதைக் கண்காணிப்பு ஆணையம் `செபி’ முடிவு செய்யும். சிறிதுகாலத்துக்கு முன்புவரை, எத்தனை லட்சம், கோடிக்கும் மேல் இருந்தால், ஒரு நிறுவனத்தின் பங்கு லார்ஜ் கேப், எதற்கு மேல் – எதற்கும் குறைவாக இருந்தால் மிட் கேப் என்று வகை பிரித்தார்கள்.

சேமிப்பு
சேமிப்பு

தினந்தோறும் பங்கு விலைகள் மாறுதல் அடைவதால், சில பங்குகளின் பிரிவு அடிக்கடி மாறிக்கொண்டிருந்தது. இன்னும் சில பங்குகளின் விலைகள் குறுகிய காலத்திலேயே பெரும் மாறுதலுக்கு உள்ளாயின. தவிர, சில நிறுவனங்கள் போனஸ் பங்குகள் கொடுத்து பங்குகள் எண்ணிக்கையை அதிகரித்தன. வேறு சில நிறுவனங்கள் `ரைட்ஸ்’ பங்குகள் வெளியிட்டு பங்குகள் எண்ணிக்கையை அதிகரித்தன.

இந்தக் காரணங்களாலும், பங்குச் சந்தைகளின் உயர்வு மற்றும் வீழ்ச்சிகளாலும், பல பங்குகளின் மார்க்கெட் கேப்பிடலைஷேசன் தொகை மாறிக்கொண்டேயிருந்தது. அதிலும் குறிப்பாக, சில பங்குகளின் தொகை இரண்டு பகுதிகளுக்கு இடையில் இருந்தால், சில நாள்கள் `லார்ஜ் கேப்’ ஆகவும், வேறு சில நாள்கள் `மிட் கேப்’ ஆகவும் மாறிமாறிப் பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தது.

இந்தச் சிக்கல் வேண்டாம் என்று சமீபத்தில் `செபி’ ஒரு மிக நல்ல மாறுதலைச் செய்திருக்கிறது. அந்த மாறுதல், பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குகளை மார்க்கெட் கேப்பிடலைசேஷன் அடிப்படையில் வரிசைப்படுத்துவது. அந்த வரிசை எண் வைத்து என்ன வகை `கேப்’ என்று முடிவு செய்வது.

முன்பு பார்த்ததுபோல அப்படி வரிசைப்படுத்தியதில், இருப்பதிலேயே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மார்க்கெட் கேப்தான் அதிகம் என்பதால் அதற்கு முதல் இடம். அடுத்த இடத்தில் TCS பங்கு. பின்பு HDFC Bank பங்கு. இப்படியாக வரிசைப்படுத்தி, முதல் 100 இடங்களில் இருப்பவை மட்டும் `லார்ஜ் கேப்’ பங்குகள் என்று சொல்லியிருக்கிறது செபி.

அதேபோல, 101 முதல் 250 வது இடம் வரை இருக்கும் நிறுவனப் பங்குகள் `மிட் கேப்’. அதற்குப் பின்னால் இருப்பவை எல்லாம், `ஸ்மால் கேப்’.

அவ்வளவுதான். சிம்பிளாக முடித்துவிட்டார்கள்.

பங்குச் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடி... ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

இந்த வரிசை மாறாதா என்று கேட்டால், இவையும் மாறத்தான் செய்யும். ஆனாலும் இந்த மாறுதலில் வெளிப்படைத்தன்மை அதிகம். அதனால், கண்காணிப்பது சுலபம்.

கண்காணிப்பதா? இதில் கண்காணிக்க என்ன இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறதா?

இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது முதலீட்டாளர்களுக்கு அவர்கள் வாங்கும், வைத்திருக்கும் பங்கு என்ன வகை என்று தெரிய வேண்டும். ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு குணம் உண்டு.

லார்ஜ் கேப் பங்கு என்பது பெரும் எண்ணிக்கையில் இருக்கும் கணிசமான விலையில், பரிவர்த்தனை நடக்கும் பங்கு. அதனால் சந்தையில் அதன் `லிக்விடிட்டி’ அதிகம்.

லிக்விடிட்டி என்றால், உடனடியாக வாங்க, விற்கக்கூடியது என்று பொருள். தங்கத்தின் லிக்விடிட்டி மிக அதிகம். எந்த நாட்டிலும் எந்த நேரத்திலும் என்ன அளவு இருந்தாலும் தங்கத்தை விற்கவும் வாங்கவும் முடியும். தங்கத்தைக் காட்டிலும் விலை அதிகம் இருந்தாலும் வைரம் அப்படிப்பட்டதல்ல. பிளாட்டினத்தை விற்பது இன்னும் சிரமம். அதற்குண்டான சந்தையைக் கண்டுபிடித்து, தரத்தை நிறுவி... என்று அது அத்தனை சுலபமல்ல.

மற்றோர் உதாரணம் சொல்வதென்றால், காய்கறிகளை வைத்துச் சொல்லலாம். காய்கறி மார்க்கெட்டுக்குப் போனால் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும் வெங்காயம், தக்காளி ஆகிய இரண்டும் லார்ஜ் கேப் போல. எல்லாக் கடைகளிலும் இருக்கும். கடைக்கு கடை பெரிய விலை வித்தியாசம் இருக்காது. ஆனால், சுரைக்காயோ, காலிபிளவரோ அப்படியல்ல. சில கடைகளில்தான் கிடைக்கும். விலை கடைக்கு கடை மாறுபடும். எது சரியான விலை என்று சொல்ல முடியாது. அவை நிச்சயம் விற்றுவிடும், வாங்க ஆட்கள் வருவார்கள் என்றும் சொல்ல முடியாது. லிக்விடிட்டி குறைவு.

லிக்விடிட்டி
லிக்விடிட்டி

பங்குகளிலும் அப்படித்தான். லார்ஜ் கேப் பங்குகளில் ஏதாவது ஒரு நிறுவனத்தின் பங்கு வைத்திருந்தால், அதில் 1000 எண்ணிக்கையில் மட்டுமல்ல, 10,000 விற்பது என்றாலும் வாங்க ஆள் இருப்பார்கள். அவ்வளவு எண்ணிக்கையில் வாங்க விரும்பினால், விற்க ஆள் கிடைப்பார்கள். அதுதான் லிக்விடிட்டி.

தவிர, லார்ஜ் கேப் பங்குகளின் வாங்கும் விற்கும் விலைகளில் பெரிய வித்தியாசம் இருக்காது. 1,000 பங்குகளையும் சின்ன விலை வித்தியாசத்தில் வாங்கிவிட முடியும்.

ஆனால், மிட் கேப் பங்குகள் அப்படியல்ல. ஸ்மால் கேப் இன்னும் மோசம். முன்பு பார்த்த பஜாஜ் ஹிந்துஸ்தான் பங்கு நினைவிருக்கிறதா? அதைப் பெரிய `குவாண்டிட்டி’கள் விற்க இயலாது. பிடித்துத் தள்ளினால், மிகக் குறைந்த விலைக்குப் போகலாம்.

பங்குச்சந்தை அநியாயங்கள்... உஷார்! #SmartInvestorIn100Days நாள்-14

இப்படிப்பட்ட காரணங்களால், ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகளில் சிலர் விளையாடுவார்கள். அதை, சந்தை மொழியில் `மானுபுளேஷன்’ என்பார்கள். வேண்டுமென்றே விலை ஏற்றுவது, இறக்குவது. இதைச் சிலரால் செய்ய முடிவதற்கு காரணம், வெளியில் இருக்கும் அந்தப் பங்குகளின் எண்ணிக்கை குறைவானது. விலையும் அவ்வளவு இல்லை.

ஆனால் லார்ஜ் கேப் அப்படியல்ல. எவரும் உள்நோக்கத்துடன், ஒரு வர்த்தக நாளில் லார்ஜ் கேப் பங்குகளின் விலைகளைக் குறைத்துவிட முடியாது. உடனே வாங்க ஆட்கள் வந்து, விலை ஏறிவிடும். அதேபோல அவற்றின் விலைகளைச் செயற்கையாக ஏற்றவும் முடியாது. உடனே விற்க ஆட்கள் வந்துவிடுவார்கள். விலை இறங்கிவிடும்.

அதனால்தான் பங்குச் சந்தைக்குப் புதியவர்கள் என்றால், இப்படிப்பட்ட தகிடுத்தத்தங்கள் இருக்க வாய்ப்பு குறைவாக இருக்கும், லார்ஜ் கேப் பங்குகள் மட்டும் வாங்குங்கள் என்று சொல்வது.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.