மற்ற எபிசோடுகள்
Published:Updated:

62 வருடப் பயணம்... கிரைண்டர் முதல் கிச்சன் பொருள்கள் வரை... புதுமை படைக்கும் செளபாக்யா..!

 பிரவீன் குமார், வரதராஜன், பாலசுப்பிரமணியம்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரவீன் குமார், வரதராஜன், பாலசுப்பிரமணியம்

வெற்றித் தலைமுறை - 9

புதுமையாக யோசிப்பதன் மூலமும், வித்தியாசமான மார்க்கெட்டிங் டெக்னிக் மூலமும் ஒரு பொருளுக்கான தேவையை மக்களிடம் உருவாக்கி அதை ஒரு பிராண்டாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்தவர்கள் ‘சௌபாக்யா’ நிறுவனத்தினர். பல சறுக்கல் களில் இருந்து மீண்டெழுந்து இன்று தமிழ்நாடு முழுவதும் வாடிக்கையாளர்களைப் பெற்று, பெரும்பாலான குடும்பங்களில் தவிர்க்க முடியாத இடத்தைத் தக்கவைத்துள்ளனர். கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட சௌபாக்யா, அடுத்தடுத்த தலைமுறையினரின் முயற்சியால் இன்று கிச்சனுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தயாரிக்கும் நிறுவனமாக உயர்ந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தொடக்கம் சுவாரஸ்ய மானது. ஈரோடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கே.பி.வெங்கட்நாராயணன், தன் குடும்பத்துக்காக 1960-ல் கிரைண்டர் ஒன்றை வாங்கினார். அந்த கிரைண்டர் பழுது அடையவே, அதைச் சரிசெய்ய அதிக செலவு செய்தார். ஒரு கட்டத்தில் கிரைண்டர் அடிக்கடி பழுதானதால், தானே அந்த கிரைண்டர் பாகங்களைக் கழற்றி சரிசெய்தார். அப்போது கிரைண்டர் இயங்கும் டெக்னிக்கையும் தெரிந்துகொண்டார். இதைத் தொடர்ந்து நாமே ஒரு கிரைண்டரைத் தயாரித்தால் என்ன என்று நினைத்தார். அதற்கான முயற்சியில் வெற்றியும் பெற்றார். இன்னும் அதிக எண்ணிக்கையில் கிரைண்டர் தயாரித்து, விற்க நினைத்தார். தயாரித்த கிரைண்டர்களை விற்கும் முயற்சியில் அவரும், அவரின் மூன்று மகன்களும் களத்தில் இறங்கினார்கள்.

பிரவீன் குமார், வரதராஜன், பாலசுப்பிரமணியம்
பிரவீன் குமார், வரதராஜன், பாலசுப்பிரமணியம்

1960-ல் மாதம் இரண்டு கிரைண்டர் தயாரித்து, விற்க வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக இருந்தது. ஊர் ஊராகச் சென்று மார்க்கெட் செய்து தங்களின் பொருள்களை விற்றவர்கள், 1980-ல் சௌபாக்யா என்ற பெயரில் ஒரு நிறுவனமாக உருவெடுத்தார்கள். அந்த நிறுவனத்தின் வெற்றிப் பயணம் பற்றிய தகவல்களை நம்மிடம் சொல்ல ஆரம்பித்தனர் சௌபாக்யா நிறுவனத்தின் இணை இயக்குநர்கள் பாலசுப்பிரமணியமும் பிரவீன் குமாரும்.

“தாத்தா, பெரியப்பா, அப்பா, சித்தப்பா ஆகியோர்தான் பிசினஸில் எங்களுக்கு இன்ஷ்பிரேஷன். பெரியப்பா ராஜேந்திரன் நிதி சார்ந்த பணிகளையும், அப்பா ஆதி கேசவன் தயாரிப்புப் பணிகளையும், சித்தப்பா வரதராஜன் மார்க்கெட்டிங் பணிகளையும் கவனித்துக்கொண்டார்கள். அடுத்த தலைமுறையில் நானும் என் தம்பியும் வெளிநாடு சென்று படித்திருந்தாலும், எங்களுக்கு முந்தைய தலைமுறையினரின் அனுபவப் பாடம் மூலம்தான் பிசினஸை வெற்றிகரமாக நடத்தும் வழிமுறைகளைக் கற்றுக் கொண்டோம். இப்போதும் பெரியோர்கள் வழி காட்டுதல்படிதான் செயல்படுகிறோம்.

பிசினஸ் தொடர்பான எந்த முடிவை எடுக்கும் முன்பும் குடும்பமாக ஆலோசனை செய்த பிறகே செயல்படுத்துகிறோம். அது எங்களுடைய தலைமுறை வெற்றி என்றும் சொல்லலாம்.

எங்களுடைய தொழிலின் ஆசான் எங்கள் தாத்தாதான். தாத்தாவிடம் இருந்து நாங்கள் முக்கியமாகக் கற்றுக்கொண்ட பாடம், விடா முயற்சி. தாத்தா தொழில் தொடங்கியபோது கிரைண்டர் என்கிற ஒரு பொருளையே நம் மக்கள் பார்த்ததில்லை. கிரைண்டருக்கான தேவையை மக்களுக்குப் புரிய வைத்தால்தான் தயாரித்த பொருளை விற்க முடியும் என்ற சூழல். இதனால், ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் கண்காட்சிகள், திரையரங்குகள் போன்ற இடங்களில் கிரைண்டரை டெமோ காட்டுவார்களாம். ‘ஆட்டுக்கல் தானாக சுத்துது’னு வேடிக்கை பார்க்கக்கூடிய மக்கள் கூட்டம்தான் அதிகம். ஒரு மாதத்தின் இறுதியில் இரண்டு கிரைண்டர்களைத் தயாரித்துவிட்டு, அடுத்த மாத தொடக்கத்தில் அதை ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்வது வாடிக்கை. அப்படி ஒரு மாதத்தில் ஒரு கிரைண்டர் விற்றுவிட்டதாம். இன்னொரு கிரண்டரை மாத இறுதியாகியும் விற்க முடியவில்லையாம்.

அப்பா நம்பிக்கை இழந்து தாத்தாவிடம், ‘என்ன செய்ய லாம்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு தாத்தாவோ, ‘இந்த மாதம் முடிய இன்னும் மூன்று நாள்கள் இருக்கிறது. நிச்சயம் விற்றுவிடலாம்’ என்று சொல்லி, அந்த கிரைண்டரை விற்றுக் காட்டியதுடன், அடுத்த மாதத் துக்கு ஒரு ஆர்டரையும் ஒரு திருமண வீடு மூலமாகப் பெற்றாராம்.

அதனால் மார்க்கெட் ஏற்ற இறக்கம் பற்றியோ, ஒரு மாதம் விற்பனைக் குறைவு பற்றியோ நாங்கள் கவலைப்பட்டது கிடையாது. தரமான பொருள் இருந்தால், நிச்சயம் வாடிக்கை யாளர்கள் நம்மை தேடி வருவார்கள்” என்று பால சுப்பிரமணியம் முடிக்க, பிரவீன் தொடர்கிறார்.

“பிசினஸில் தரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மார்க்கெட்டிங்கும் மிக முக்கியம். அதை அப்பா மற்றும் சித்தப்பா எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில் கிரைண்டர் பற்றிய புரிந்துகொள்ளல் எல்லாம் மக்களுக்கு இல்லாத நேரம், ஊர் ஊராகச் என்று அந்த ஊரில் இருக்கும் பெரிய மனிதர்கள் வீட்டில் கிரைண்டர் களை விற்பார்களாம். கிரைண்டர் என்பது ஆடம்பரம் என்ற கருத்தை மறக்கடித்து வசதிக்கானது என்ற எண்ணத்தைப் பதிக்க இல்லத் தரசிகளிடம் கிரைண்டர் பற்றி அப்பாவும் தாத்தாவும் நிறைய பேசுவார்களாம். அப்படித்தான் வாடிக்கையாளர்களின் எண்ணிக் கையை அதிகரித்தார்கள்.

நாங்கள் மூன்று தலைமுறையாக பிசினஸில் இருப்பது போன்று எங்களுக்கு மூன்று தலைமுறை வாடிக்கையாளர்களும் இருக் கிறார்கள். அவர்களைத் தக்க வைக்கத்தான் கிரைண்டர் மட்டு மல்லாமல், கிச்சனில் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களையும் தயாரிக்க ஆரம்பித்தோம்.

நாங்கள் தயாரிக்கும் பொருள் களை இலவசமாகக் கொடுப்பது, ஆஃபர்களில் தருவது என நிறைய டெக்னிக்குகளைக் கையாள் கிறோம். அதே போன்று நாளிதழ்கள், பருவ இதழ்கள், ரேடியோ, தொலைக்காட்சி என எல்லாவற்றிலும் தொடர் விளம்பரங்கள் கொடுப்பதன் மூலம் நாங்களும் இந்த பிசினஸில் இருக்கிறோம் என்பதை மக்களுக்கு நினைவு கூர்ந்து அதன் மூலம் வியாபாரத்தை அதிகரிக்கிறோம்.

62 வருடப் பயணம்... கிரைண்டர் முதல் கிச்சன் பொருள்கள் வரை...  
புதுமை படைக்கும் செளபாக்யா..!

கிரைண்டர் மட்டும் போதாது; கிச்சனில் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களை அறிமுகம் செய்தால் மட்டும்தான் தொடர்ந்து வியா பாரத்தைப் பெருக்க முடியும் என்ற யோசனையை முன்வைத்தவர் அப்பாதான். அவர் வழிகாட்டுதல் பெயரில் 2005-ம் ஆண்டில் கிச்சனுக்குத் தேவையான பொருள்கள் தயாரிக்க ஆரம்பித் தோம்.

நாங்கள் எங்களுக்கென தனியாக ஒரு டிசைனிங் குழுவை வைத்திருக் கிறோம். அவர்கள் அந்தப் பொருளை டிசைன் செய்து முடித்ததும், எங்களுடைய பணியாளர்களிடம் கொடுத்து சோதனை செய்வோம். அதன்பின் அதில் உள்ள நிறைகுறைகளைத் தீர்த்து வியாபாரத்துக்குத் தயார் செய்கிறோம்.

நாங்கள் தயாரிக்கும் எந்தப் பொருளுக்கும் உடனே வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஒரு பொருள் அறிமுகம் ஆகும் ஒரு வருடத்துக்குள் நல்ல வரவேற்பைப் பெறுகிறது என்பதே உண்மை. ஆனால், நம்முடைய புதிய பொருள்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன என்பதை மக்களுக்குப் புரிய வைப்பது அவசியம்” என்று விளம்பர யுக்தி பற்றி பிரவீன் முடிக்க வியாபார நுணுக்கங்கள் பற்றி பால சுப்பிரமணியம் பேசத் தொடங்கினார்.

“எங்கள் தாத்தா காலத்தில் கிரைண்டர்கள் தயாரிக்கும் பணியை எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களே செய்து, அவற்றை விற்கும் வேலையையும் அவர்களே செய்து வந்தார்கள். ஒன்றிரண்டு எண்ணிக்கையில் அப்போது கிரைண்டர்கள் விற்பனையானதால், தயாரிப்பு வேலையில் பெரிதாகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்த பிறகு, எங்களுக்கென்று ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி கிரைண்டர்கள் தயாரிக்கத் தொடங்கினோம். 1980-களில் ஈரோட்டில் இருந்து பல போராட்டங்களைக் கடந்து சித்தப்பா வரதராஜன் சென்னை வந்தார். அவரின் இலக்கு பெரிய பிராண்டாக உருவாக வேண்டும் என்பது மட்டும்தான். டீலர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஹோம் அப்ளையன்ஸ் கடைகளில் எங்களின் பொருளை அப்பா கொண்டு சேர்த்தார்.

அதற்கடுத்து, கிரைண்டரைத் தாண்டி பல பொருள்களை நாங்கள் தயாரிக்கத் தொடங்கினோம். ஆன்லைன் விற்பனை, புதிய ஷோரூம்கள் என எடுத்த அடுத்தடுத்த முயற்சியால் இன்று தமிழ் மக்கள் வீட்டில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளோம். இந்தியா மட்டு மல்ல வெளிநாடுகளில் உள்ள தமிழ் உணவகங்களிலும் எங்களுடைய பொருள்கள் இடம் பிடித்துள்ளன. அடுத்தாக எங்களுடைய கிச்சன் அப்ளையன்ஸ்களை வெளிநாடு வரை கொண்டு சேர்க்கும் முயற்சியில் களம் இறங்கியிருக்கிறோம். 62 வருட பயணத்தில் ஏற்ற இறக்கங்களை நிறுவனம் கடந்து வந்துவிட்டது. புதிய புதிய வாடிக்கையாளர்கள் என முன்னேறிக்கொண்டே செல்கிறோம்’’ என்று முடித்தார் பாலசுப்பிரமணியம்.

காலத்துக்கேற்ப மாற்றங்களையும் புதுமைகளையும் படைக்கும் நிறுவனம், காலம் தாண்டியும் நிற்கும்!

(தலைமுறை தொடரும்)