அலசல்
Published:Updated:

விருதுகள் மேடையை விறுவிறுப்பாக்கிய தமிழிசை - கனிமொழி

கனிமொழி, தமிழிசை
பிரீமியம் ஸ்டோரி
News
கனிமொழி, தமிழிசை

திரைப்படமா... ஒரு பாடலைப் படம் பிடிப்பதற்குள்ளேயே போதும் போதுமென்றாகிவிட்டது! - கனிமொழி; என் பெயரிலும் தமிழ்... உயிரிலும் தமிழ்! - தமிழிசை

வெளிப்படையான சுவாரஸ்யமான தங்கள் பேச்சால், மொத்த மேடையையும் கட்டிப்போட்டார்கள் இருவரும். இவர்கள் மேடையேறியது... சாதனைப் பெண்களின் சங்கமமான ‘அவள் விகடன்’ விருதுகள் மேடை!

தமிழ்க் குடும்பங்களின் தலைமகளாக விளங்குகிற ‘அவள் விகடன்’ இதழ், மருத்துவம், விளையாட்டு, இலக்கியம், சமூகச் செயல்பாடு, கல்வி, ஆன்மிகம் எனப் பல்துறை சார்ந்தும் தங்களது செயற்கரிய செயல்களால் சாதித்துக்கொண்டிருக்கும் பெண்களைப் பெருமிதப்படுத்தும் வகையில், ‘அவள் விருதுகள்’ வழங்கிவருகிறது. அவள் விகடனுக்கு இது வெள்ளிவிழா ஆண்டு. அவள் நடத்தும் விருதுக்கு இது 5-ம் ஆண்டு. கடந்த 18-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற விழாவிலிருந்து சில தருணங்கள்...

விருதுகள் மேடையை விறுவிறுப்பாக்கிய தமிழிசை - கனிமொழி

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு ‘மூன்றாம் பாலினம்’ என்கிற அங்கீகாரம் வழங்கப்பட்டாலும், சமூகத்தில் அவர்கள் இன்னும் விலக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்தச் சமூகச் சவால்களுக்கு இடையே, 15 திருநங்கைகள் ஒன்றிணைந்து மதுரையில் ‘ட்ரான்ஸ் கிச்சன்’ என்கிற பெயரில் உணவகத்தை நடத்திவருகின்றனர். நம்பிக்கையோடு நடைபோடும் இந்த அணிக்கு, ‘வெற்றிப்படை’ விருது வழங்கப்பட்டது.

விருதை வழங்குவதற்காக மேடையேறினார், நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி. விருதுபெற்றவர்களை நெஞ்சார வாழ்த்திய கனிமொழியிடம், அவருடைய வாழ்வின் சில முக்கியத் தருணங்களில் எடுக்கப்பட்ட படங்களைத் திரையிட்டு அது குறித்தான அனுபவத்தைக் கேட்டார்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களான தீபக்-நட்சத்திரா.

படம்: ஜெயலலிதாவால் நள்ளிரவில் கருணாநிதி கைதுசெய்யப்பட்டு காரில் அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வு.

கனிமொழி: தலைவர் கைதுசெய்யப்பட்ட அந்த இரவு, தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே உலுக்கியது என்றே சொல்ல வேண்டும். இங்கே எதுவும் நிரந்தரமில்லை என்கிற உண்மையைச் சொல்லிக் கொடுக்கக்கூடியதாகவும் இருந்தது அந்த இரவு.

படம்: முதல்வரான மு.க.ஸ்டாலினை, தங்கை கனிமொழி முத்தமிட்டு வாழ்த்திய தருணம்.

கனிமொழி: அப்பாவுக்குப் பிறகு அண்ணன் கட்சித் தலைவராகப் பதவியேற்றுக்கொண்ட அந்தத் தருணம் மகிழ்ச்சியானது என்பதோடு, நாங்கள் கடந்துவந்திருந்த வலியும் நிறைந்திருந்தது.

படம்: பிரதமர் நரேந்திர மோடி - முதல்வர் கருணாநிதியின் உடல்நலன் விசாரிக்க வந்த நிகழ்வு.

கனிமொழி: அத்தருணம் வெகு இயல்பாக இருந்தது. மோடி ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்தவராக, ‘நீங்கள் டெல்லிக்கு வர வேண்டும்’ என்று அன்போடு அப்பாவிடம் சொன்னார்.

அடுத்து, சாதிய, பாலின பேதங்களின் குரூரத்தைத் தன் செறிவான எழுத்துகளில் பதிவுசெய்த எழுத்தாளர் பாமாவுக்கு ‘இலக்கிய ஆளுமை’ விருது வழங்கப்பட்டது. கனிமொழியிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்ட பாமா, “கவிஞராக கனிமொழி மீது ஈர்ப்பும் அபிமானமும் உண்டு. அவரது அரசியல் செயல்பாடுகளுக்கு நான் ரசிகை’’ என்று நெகிழ்ந்தவர், “அடித்தட்டு மக்களுக்கு விட்டு விடுதலையாகிப் பறக்கிற சுதந்திரம் தேவை. இந்த விருது எனக்கு உத்வேகத்தைக் கொடுக்கிறது” என்றார்.

“கடைசியாக எப்போது கவிதை எழுதினீர்கள்?” என்று கனிமொழியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

“அப்பா அளவுக்கு நான் அதிகம் எழுதுவதில்லை. சமீபத்தில் பெரியாரைப் பற்றி ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் கட்டுரை எழுதினேன்’’ என்றவர், “அவசியம் இன்னும் நிறைய எழுத வேண்டும்” என்று தனக்கே சொல்லிக்கொண்டார்.

அடுத்து, “திரைத்துறைக்கு வருவீர்களா?’’ என்ற கேள்வியை எதிர்கொண்ட கனிமொழி, “திரைப்படங்கள் பார்க்க ஆர்வம் இருக்கிறது. ஆனால், அத்துறையில் பங்களிக்கும் ஆர்வம் இல்லை. ‘செம்மொழியான தமிழ்மொழியே’ பாடலை நான்தான் ஒருங்கிணைத்தேன். அதுவே போதும் போதும் என்றாகிவிட்டது. அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது தவறான முடிவு என நினைத்தேன்” என்று வெகு யதார்த்தமாகப் பேசினார் கனிமொழி.

விருதுகள் மேடையை விறுவிறுப்பாக்கிய தமிழிசை - கனிமொழி

அவள் விருதுகளில் தலையாய விருது, ‘தமிழன்னை விருது.’ இந்த விருதை, பரத நாட்டியப் பேரொளி பத்மா சுப்ரமணியனுக்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை வழங்கி கௌரவித்தார். அதைத் தொடர்ந்து தமிழிசையிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு வெகு சுவாரஸ்யமான பதில்களைப் பகிர்ந்தார் அவர்.

“உங்களைப் பற்றித் தெரியாத முகம் ஒன்றை எங்களுக்குச் சொல்லுங்க?” என்ற கேள்வியை எதிர்கொண்ட தமிழிசை, “என் வாழ்க்கையே திறந்த புத்தகம்தான். அதில் தெரியாத முகம் எதுவுமில்லை” என்றவர், அடுத்து அவருடைய ஒரு ஆதங்கத்தையும் சேர்த்தே பகிர்ந்தார். “அம்மாவின் வயிற்றில் குழந்தைக் கருவாக இருக்கும்போது ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிந்து குணப்படுத்தும் ஃபீட்டல் தெரபி படித்த மருத்துவர் நான். ஆனால், என்னுடைய மருத்துவ முகம் வெளியேயே தெரியவில்லை. மருத்துவத் துறையில் பிரபலமாக இருந்தபோதே அரசியலுக்கு வந்துவிட்டேன்” என்றார்.

அடுத்து அவரிடம் முன்வைக்கப்பட்ட ‘இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க’ எனும்படியான படங்களுடன் தொடுக்கப்பட்ட கேள்வி & பதில் மொமன்ட், பலத்த கைதட்டல்களை அள்ளியது.

விருதுகள் மேடையை விறுவிறுப்பாக்கிய தமிழிசை - கனிமொழி

“அரசியல்வாதியா... ஆளுநரா?”

“அரசியல்வாதிக்குள் இருக்கும் ஆளுநர்... ஆளுநருக்குள்ளிருக்கும் அரசியல்வாதி!”

“சாம்பாரா... மீன் குழம்பா?”

“மீன் குழம்பு.”

“சுடிதாரா... புடவையா?’’

“புடவை.”

“சிதம்பரமா... மதுரையா?’’

“சிதம்பரம் வழியாகப் போகும் மதுரை.”

“தமிழா... இந்தியா?’’

“தமிழ்தான்... என் பெயரிலும் இருக்கிறது உயிரிலும் இருக்கிறது.”

“இன்ஸ்டாகிராமா... ட்விட்டரா?”

“ட்விட்டர்தான்.”

“இளையராஜாவா... ரஹ்மானா?’’

“தமிழிசைக்கு எந்த இசையும் பிடிக்கும். அதில் எந்தப் பாரபட்சமும் இல்லை.”

சமூக மாற்றத்துக்காகச் செயல்படும் பல பெண் ஆளுமைகளுக்கு, தமிழகத்தின் பல்துறை பிரபலங்கள் விருதுகள் வழங்க, நிறைவுபெற்றது அவள் விருதுகள் 2021!