சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

எப்படி இருக்கின்றன தமிழகத் தொழில்கள்? - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

தமிழகத் தொழில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழகத் தொழில்கள்

மான்செஸ்டருக்கு என்னதான் ஆச்சு?

உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனாவின் பீதி இன்னும் குறைந்தபாடில்லை. இரண்டாம் அலை, எட்டாம் ஊரடங்கு என கொரோனா தந்த பாதிப்பு தமிழகத்தின் ரத்தநாளமான தொழிற்துறையையும் முடக்கிப் போட்டுள்ளது. தொடர் லாக்டௌன் அறிவிப்புகளால் பொருளாதாரம் சீட்டுக்கட்டாகச் சரிந்திருக்கும் இந்தச் சூழலில் தமிழகத்தின் சிறுகுறு நடுத்தரத் தொழில்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கின்றன என தமிழகத் தொழில் நகரங்களின் நிலவரங்களை விசாரித்தோம்.

மான்செஸ்டருக்கு என்னதான் ஆச்சு?

தமிழ்நாட்டிலேயே சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள மாவட்டம் கோவை. இம்மாவட்டத்தில் இருக்கும் நெசவாலைகள், ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ என்ற சிறப்பைப் பெற்றுத் தந்திருக்கின்றன. கூடுதலாக பின்னலாடைத் தொழிலும் கோழிப் பண்ணைகளும், மோட்டார் உதிரி பாகங்கள் தொழிலும் இங்கு அமைந்துள்ளன. இப்போது எல்லாத் தொழில்களுமே பெரும் சரிவைச் சந்தித்திருக்கின்றன.

“கோவை மாவட்டத்தில் மூன்றாயிரம் பம்ப் மோட்டார் செட் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. ஒன்றரை லட்சம் பேர் இதை நம்பி இருக்கின்றனர். நவம்பரிலிருந்து ஜூன் வரைதான் எங்களுக்கு சீசன். இந்தக் காலகட்டத்தில் எங்களால் இயங்கவே முடியவில்லை. 50 பேர் இருந்த இடத்தில் 25 பேர்தான் இருக்கின்றனர். வாரத்தில் மூன்று நாள்கள்தான் வேலை. பல நிறுவனங்கள் மூடப்பட்டுவருகின்றன. கோவையில் 70 ஆண்டுகளாக பம்ப் மோட்டார் தயாரிப்பு இருந்துவருகிறது. இப்படி ஓர் சூழ்நிலையை நாங்கள் எதிர்கொண்டதில்லை” என்கிறார் கோவை பம்ப் செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) தலைவர் மணிராஜ்.

எப்படி இருக்கின்றன தமிழகத் தொழில்கள்?  - ஒரு  ஸ்கேன் ரிப்போர்ட்

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் சங்க (டேக்ட்) கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ், “கோவை மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 15,000 நிறுவனங்கள் முற்றிலும் முடங்கிவிட்டன. அவர்கள் எல்லாம், தற்போது வேறு பணிகளை நோக்கி நகர்ந்து கொண்டி ருக்கின்றனர்” என்று வேதனையுடன் சொல்கிறார்.

கோவையின் இன்னொரு பிரதான தொழில் வெட்கிரைண்டர் தயாரிப்பு. அந்தத் தொழிலும் தற்போது பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது.

தஞ்சையின் நிலை என்ன?

தஞ்சாவூர் என்றாலே நெல்லும் காய்கனியும் தான். டெல்டாவிலிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் காய்கனிகள் செல்லும். இப்போது, விளைந்த காய்கறிகளைக் கொண்டு செல்ல முடியவில்லை.

“விளைச்சல் அமோகமாக இருந்தால் மக்கள் செழிப்பா இருப்பாங்க. எல்லா வியாபாரமும் அமோகமாக நடக்கும். ஊரடங்கால விளைஞ்சதை விற்க முடியலே. காய்கறி, பழங்களெல்லாம் வீணாகிருச்சு. நிறைய பேர் போட்ட முதலைக்கூட எடுக்கமுடியாமத் தவிக்கிறாங்க. தீபாவளிக்குக் கொஞ்சநாள்தான் இருக்கு... இப்படியே போனா என்னாகும்னு தெரியலே!’’ என்கிறார் பழவியாபாரியான ஹாஜா மைதீன்.

எப்படி இருக்கின்றன தமிழகத் தொழில்கள்?  - ஒரு  ஸ்கேன் ரிப்போர்ட்

குடந்தை அனைத்துத் தொழில் வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளர் சத்யநாராயணன், ` `கும்பகோணத்தின் சிறப்புகளாகக் கருதப்படும் பட்டுப்புடவை, பித்தளை, வெள்ளிப் பாத்திரங்கள், ஐம்பொன் சிலை உற்பத்தி முழுமையாக முடங்கிடுச்சு. மக்கள் இப்போதான் கடைவீதிகளுக்கு வரத் தொடங்கியிருக்காங்க.

வேலைபார்த்த வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குப் போயிட்டாங்க. வேலைக்கு ஆட்கள் கிடைக்கலே. ரெண்டு மாதத்துக்கு முன்பே தீபாவளிக்கான உற்பத்தியும் விற்பனையும் தொடங்கிடும். ஆனால் இப்போ இயல்பான வணிகம்கூட நடக்கலே!’’ என்றார்.

எப்படி இருக்கின்றன தமிழகத் தொழில்கள்?  - ஒரு  ஸ்கேன் ரிப்போர்ட்

டல்லடித்துப்போன கரூர்!

பெட்ஷீட், தலையணை உறை, மேஜை விரிப்புகள், கிச்சன் டவல், காலணி மிதிகள், குளியலறை டவல் உள்ளிட்ட துணிகள் தயாரிப்பில் கரூர்தான் முன்னணி.

“தீபாவளி நேரத்தில் பத்துக் கோடி ரூபாய் வரை பிஸினஸ் நடக்கும். ஆனால், இந்த வருடம் பாதிகூட இருக்காது. தீபாவளி நெருங்கியும் உற்பத்தி அதிகமாகவில்லை. நிறைய பேருக்கு வேலை போய்விட்டது. ஓரளவுக்குப் பொருளாதாரச்சூழல் சரியானால்தான் பழைய நிலை திரும்பும்” என்கிறார் வீட்டு உபயோகத் துணிகள் தயாரிக்கும் ஸ்டீபன் பாபு.

கரூரில் சிறிதும் பெரிதுமாக 50 பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள் உள்ளன. கொரோனாவால், கடந்த ஆறு மாதங்களாக இந்தத் தொழிலும் ஜீரோவாகிவிட்டது.

“1946-ல இருந்து தொழில் பண்றோம். இந்தத் தொழிலை நம்பி, சுமார் 30,000 தொழிலாளர்கள் இருந்தாங்க. மாதத்துக்கு 600 பஸ் வரை பாடி கட்டி அனுப்புவோம். கடந்த ஆறுமாதமா ஒரு வண்டிக்குக்கூட பாடி கட்டலே. மொத்தமா தொழில் முடங்கிக்கிடக்கு. திரும்பவும் இயல்புக்கு வர குறைந்தது ரெண்டு வருஷமாவது ஆகிடும்” என்கிறார், கரூர் பஸ்பாடி பில்டர்ஸ் அசோசியேஷன் முன்னாள் செயலாளர் ‘சக்தி கோச்’ நடராஜன்.

புஸ்வாணமாகிப்போன சிவகாசி!

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிதும் பெரிதுமாக 1,070 பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

“தொழிற்சாலைகளில் மூன்று லட்சம் தொழிலாளர்களும், மூலப்பொருள்கள் உற்பத்தியில் ஐந்து லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வோராண்டும் தீபாவளி முடிந்த பதினைஞ்சாவது நாளிலேயே அடுத்த ஆண்டுக்கான உற்பத்தியை ஆரம்பிச்சிருவோம். வருஷத்துக்கு ரூ. 3,000 கோடி மதிப்புல பட்டாசுகள் உற்பத்தி செய்றோம். ரூ.900 கோடி வரை இப்போ வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கு. பட்டாசு வித்தாதான் தொழிலாளர்களுக்கு சம்பளம், போனஸெல்லாம் வழங்கமுடியும்” என்கிறார் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கணேசன்.

மதுரை - மலராத மல்லி!

நல்ல நிறமாகவும் கூடுதல் வாசனையாகவும் பெரிதாகவும் இருப்பதால் மதுரை மல்லிக்குத் தனி மவுசு உண்டு. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை முதல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வரை 14,000 ஹெக்டேரில் பயிரிடப்படும் மல்லிகை, ‘மதுரை மல்லி’ என்று அழைக்கப்படுகிறது. மதுரைப் பூமார்க்கெட்டில் ஒரு நாளைக்குப் பத்து டன் மல்லிகை விற்பனையாகி வந்த நிலையில் கொரோனா லாக்டௌனால் இன்று பாதிக்கும் குறைவாகவே விற்பனை நடக்கிறது.

60 ஆண்டுகளாக மல்லிகைப்பூ வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவரும், பூ ஏற்றுமதியாளருமான ஜெகதீசன் “தமிழகத்தில் பெரிய பூச்சந்தை மதுரைதான். உள்நாட்டு விற்பனை மட்டுமன்றி, கனடா உட்பட 11 நாடுகளுக்கு மதுரை மல்லி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா லாக்டௌனால் மார்க்கெட், போக்குவரத்து எல்லாம் முடங்கிப்போனது. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பெர்ப்யூம் கம்பெனிகளுக்குக் கொடுப்பது, வந்தே பாரத் விமானங்களில் மல்லிகையை ஏற்றுமதி செய்வது எனச் சில வேலைகளைச் செய்தோம். இருந்தாலும் வழக்கமான வணிகமில்லை. பிப்ரவரியில் இருந்து அக்டோபர் வரை விவசாயம் நடக்கும். மற்ற இரண்டு மாதம் உற்பத்தி இருக்காது. அந்தவகையில் பார்த்தால் இந்த ஆண்டு முழுவதும் மல்லிகை வியாபாரம் பெரும் நஷ்டம்தான். இது சரியாக இன்னும் நீண்ட நாள் பிடிக்கும்” என்றார்.

எப்படி இருக்கின்றன தமிழகத் தொழில்கள்?  - ஒரு  ஸ்கேன் ரிப்போர்ட்

ஈரோடு - மங்கும் மஞ்சள்!

மஞ்சள் மண்டிகளுக்குப் பெயர்போன ஈரோட்டின் நிலை என்ன? உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் பி.நல்லசாமியிடம் பேசினோம்.

“பொதுவா அஞ்சு வருஷத்துக்கு ஒருதடவை மஞ்சளோட விலையில் ஏற்றம் இருக்கும். ஆனா, 2011-க்குப் பிறகு மஞ்சள் விலை சரசரன்னு இறங்கிடுச்சு. 2011-ல ஒரு குவிண்டால் மஞ்சள் பதினேழாயிரமா இருந்துச்சு. இன்னைக்கு ஒரு குவிண்டால் ஆறாயிரத்துக்குத்தான் போகுது. கொரோனாவுக்கு முன்னாடிகூட ஏழாயிரத்துக்குப் போச்சுங்க. சரியான விலை கிடைக்காததால விவசாயிகளும் மஞ்சள் போடுறதைக் குறைச்சிக்கிட்டாங்க. அதனால உற்பத்தியும் குறைஞ்சு போயிடுச்சி.

குறிப்பா, ஈரோட்டுப் பகுதிகள்ல மஞ்சளை ஒரு சேமிப்பா வச்சிப்பாங்க. நல்ல விலை கிடைக்கிறப்ப வித்துடுவாங்க. இந்தக் கொரோனாவால கிட்டத்தட்ட மூணு மாசம் மஞ்சள் மார்க்கெட்டையும் மூடிட்டாங்க. அந்தச் சமயத்துல விவசாயிகள் மஞ்சளை விக்க முடியாம ரொம்ப சிரமப்பட்டாங்க. பண்டிகை, விசேஷ நாள்கள், திருவிழாக் காலங்கள்ல நிறைய மஞ்சள் போகும். அதேமாதிரி ஹோட்டல்கள்ல அதிகம் மஞ்சள் பயன்படும். இந்தக் கொரோனால எல்லாத்தையும் மூடிட்டதால நிறைய நஷ்டமுங்க. கிட்டத்தட்ட 40-50 கோடி வரை வர்த்தகம் பாதிப்பு. ஈரோட்டுல தினம் அஞ்சாயிரம் மூட்டை மஞ்சள் விக்கும். இன்னைக்கு ரெண்டாயிரம் மூட்டைகூட விக்க மாட்டேங்குது. விழுந்த பிசினஸ் எந்திரிக்க இன்னும் ஆறு மாசமாவது ஆகுங்க” என்றார்.

திருப்பூர் - பாதிக்கப்பட்ட பனியன் நகரம்

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது, தமிழகத்தின் பிறமாவட்டத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளித்து வந்தவை திருப்பூரின் பனியன் கம்பெனிகள். இன்றோ பழைய நிலை எப்போது திரும்பும் என முதலாளிகளும் தொழிலாளர்களும் கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் (டீமா) சங்கத்தின் தலைவர் எம்.பி.முத்து ரத்தினம், “திருப்பூர்ப் பின்னலாடைத் தொழிலில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்கள். மீதமுள்ள 90 சதவிகிதம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள்தான். கொரோனாவால் இந்தச் சிறு, குறு நிறுவனங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. லாக்டெளனால் கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடிக்கு மேலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

தொழிலாளர்களை நம்பித்தான் திருப்பூர் பனியன் தொழிலே இருக்கிறது. கொரோனாவிற்கு முன்பே திருப்பூரில் கிட்டத்தட்ட 40 சதவிகித அளவிற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை இருந்தது. இப்போது இது 70 சதவிகிதமாகியிருக்கிறது. கொரோனாவால் சொந்த ஊர்களுக்குச் சென்ற வடமாநிலத் தொழிலாளர்களில் 20 சதவிகிதத்தினர் மட்டுமே திரும்பி வந்திருக்கின்றனர்.

வழக்கமாக மாதம் நான்காயிரம் கோடிக்கு திருப்பூர் பிசினஸ் இருக்கும். இப்போ 50 சதவிகித பிசினஸ்தான் நடக்குது. தொழில் கடனில் ஆறு மாத காலத்திற்கு இ.எம்.ஐ தள்ளிவைப்பு, வட்டிக்குறைப்பு போன்றவற்றை அரசாங்கம் செய்துகொடுத்தால்தான் திருப்பூர் பனியன் தொழில் மீண்டெழும். இதுவரை சீனாவுக்குச் சென்ற பல ஆர்டர்கள், இப்போது இந்தியாவை நோக்கி வர ஆரம்பித்திருக்கின்றன. சீனாவுக்குச் சென்றதில் 5 சதவிகித ஆர்டர்கள் நமக்குக் கிடைத்தாலே திருப்பூரின் எதிர்காலம் மிகப் பிரகாசமாக இருக்கும்” என்றார்.

எப்படி இருக்கின்றன தமிழகத் தொழில்கள்?  - ஒரு  ஸ்கேன் ரிப்போர்ட்

தேங்கிய ரெடிமேட் ஆடைகள்

திருச்சி மாவட்டம், மணப்பாறைக்கு அருகேயிருக்கிறது புத்தாநத்தம். திருப்பூருக்கு அடுத்து ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் கம்பெனிகள் இங்குதான் அதிகம். வழக்கமாக தீபாவளி காலங்களில் மிகவும் பரபரப்பாக இயங்கும் இந்த ஊர் இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. “சூரத், மும்பை, அகமதாபாத் நகரங்கள்ல இருந்து கிரெடிட்ல மூலப்பொருள்கள் வாங்குவோம். இப்போ கிரெடிட்டை நிறுத்தி, பணம் கொடுத்தால், துணி கொடுப்போங்கிற நிலைக்குக் வந்திட்டாங்க. ரூ.1 கோடி மதிப்புல ஸ்கூல் யூனிபார்ம்கள் தயார்செஞ்சு தேக்கிப்போய் கிடக்கு. பதினைஞ்சு கம்பெனிகள் தயாரிப்பை நிறுத்திட்டாங்க” என்கிறார் புத்தாநத்தம் ரெடிமேட் உற்பத்தியாளர் நலச்சங்கச் செயலாளர் இதயதுல்லா.

காரைக்குடியில் தயாராகும் கண்டாங்கி சேலைக்கு உலகம் முழுவதும் பெரிய மார்க்கெட் உண்டு. லாக்டவுன் அறிவிக்கப்பட்ட முதல் மூன்று மாதங்கள் தடுமாறிய கண்டாங்கி சேலை உற்பத்தி தற்போது மெல்ல மீண்டுவருகிறது. ஆன்லைன் விற்பனை கைகொடுத்திருக்கிறது. “அரசு இன்னும் கொஞ்சம் ஊக்குவித்தால் முழுமையாக மீண்டுவந்துவிடுவோம்” என்கிறார் காரைக்குடி ராஜீவ்காந்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க இயக்குநர் பழனியப்பன்.

மெல்ல மீளுமா தமிழகம்?

தமிழகத்தின் ஆன்மாவாக விளங்கும் சில முதன்மைத்தொழில்களின் நிலையையே இங்கு பட்டியலிட்டுள்ளோம். இந்தப் பெருந்தொழில்களைச் சார்ந்துள்ள மற்றும் சாராத சிறு, குறு தொழில்களும் ஏராளம். இவை அனைத்துமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது தளர்வுகள் அதிகரிக்க, தொழில்வளர்ச்சியும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீப ஒளி, நிச்சயம் தமிழகப் பொருளாதாரத்துக்கு ஒளியேற்றும் என்று நம்புவோம்!