
நேட்டிவ் பிராண்ட் - 20
கரூரில் 1902-ம் ஆண்டில் 200 சதுர அடியில் தொடங்கப்பட்ட பாத்திரக் கடை இன்று 2,500 சதுர அடியில் விரிந்து சாதனை படைத்திருக்கிறது. இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என ‘கே.என்.விஸ்வநாத செட்டியார் பாத்திரக் கடை’யின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த அருண் பிரசன்னாவின் தந்தை ஜெயபிரகாஷிடம் முதலில் பேசினோம்.
“எங்களுக்கு பூர்வீகமே கரூர்தான். எங்க தாத்தா விஸ்வநாதன் செட்டியார் ஆரம்பித்த கடைதான் இது. அவருக்கு முன்பிருந்த தலை முறையினர் கரூரில் ஃபைனான்ஸ் தொழிலில் இருந்திருக்காங்க. அதனால, எங்க தாத்தா விஸ்வநாதனுக்கும் சிறுவயதிலேயே ஏதாவது தொழில் தொடங்கணும்ங்கிற ஆசை வந்திருக்கு. ‘என்ன தொழில் செய்யலாம்’னு யோசிச்சப்பதான், அப்ப கரூர்ல பித்தளை, செம்பு பாத்திரங்களுக்கான தேவை இருப்பதை உணர்ந்திருக்கிறார். உடனே, வெளி மாவட்டங்கள்ல இருந்து தரமான பித்தளைப் பாத்திரங்களை வாங்கி வந்து, அதை சைக்கிள்ல கட்டிக்கிட்டு, சுத்துபட்டுல உள்ள கிராமங்களில் போய் வியாபாரம் பண்ணி யிருக்கிறார்.

எங்க தாத்தா கொடுத்த தரமான பாத்திரங்களால் மக்கள்கிட்ட அவர்மேல நம்பிக்கை வந்திருக்கு. அதனால், ரூ.250 முதலீடு செஞ்சு, கரூர் கச்சேரி பிள்ளையார் கோயில் பக்கத்துல 1902-ம் வருஷம் இந்தக் கடையை ஆரம்பித்திருக்கிறார். தொழில்ல காட்டிய வேகம், பொருள்களின் தரம்னு மக்கள்கிட்ட குறுகிய காலத்திலேயே கடைக்கு பெரிய பேர் வந்திருக்கு. கும்பகோணம், திருநெல்வேலினு பல மாவட்டங்களுக்கு போய் மக்களின் தேவைக்கேற்ப பாத்திரங் களை பர்சேஸ் பண்ணிட்டு வந்து, விற்க ஆரம்பித்திருக்கிறார். தொழில் பிக்கப் ஆனது.
எங்க தாத்தாவுக்கு ராமசாமி, மலையாளம், கிருஷ்ணமூர்த்தி, நாராயணன்னு நாலு பசங்க. அவங்களும் தாத்தாவுக்கு ஒத்தாசை பண்ணியிருக்காங்க. இதனால், 1945-ல் இரட்டை வாய்க்கால் அருகே கடையை மாத்தி 1,000 சதுர அடி கடையா விரிவுபடுத்தினாங்க. இரண்டு பக்கமும் தராசு, இரண்டு பக்கமும் கல்லாபெட்டினு இரண்டு பக்கமும் வியாபாரம் பண்ணும் உத்தியைப் புகுத்தியிருக் காங்க. இதனால கடைக்கு ‘இரட்டை பாத்திரக்கடை’னு பேராயிட்டு.
இந்த நிலையில, தாத்தா 1950-ல இறந்துபோக, அவரோட நாலு மகன்களும் தொழிலைக் கவனிச்சுருக்காங்க.பித்தளை பானை, பித்தளை குடம், பித்தளை அண்டா, பித்தளை டம்ளர், பொங்கல் பானை, குண்டா, இட்லி பானை, கரண்டிகள், அடுக்கு கேரியர்னு இங்க இல்லாத பொருள்களே இல்லைங்கிற அளவுக்கு எல்லா பொருள்களையும் வாங்கி விற்க ஆரம்பிச்சிருக்காங்க.
1960-க்குப் பிறகு, பாத்திரங்களை எளிதாக விளக்கி, பயன்படுத்துகிற மாதிரி எவர்சில்வர் பாத்திரங்கள் வந்துச்சு. உடனே, எவர்சில்வர் பாத்திரங்களையும் வாங்கி, விற்க ஆரம்பிச்சிருக் காங்க. அதுக்கும் மக்கள்கிட்ட ஏக கிராக்கியா இருந்திருக்கு. இதனால், தமிழ்நாட்டில் மட்டும் பாத்திரங்கள் வாங்கியது போய், ஹரியானா, பாம்பே, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், குஜராத்னு வெளிமாநிலங்களில் இருந்தும் பாத்திரங்களைப் பார்த்து பார்த்து வாங்கத் தொடங்கியிருக்காங்க.
1980-க்குப் பிறகு, எவர்சில்வர் பாத்திரங்கள் அதிகம் விற்பனையாக ஆரம்பிச்சிருக்கு. அதனால, அந்தப் பாத்திரங்களை அதிகம் வாங்கியிருக்காங்க. ஆனா, தரத்தில் மட்டும் சமரசம் பண்ணிக்கவே இல்லை. அதேபோல், 1980-க்குப் பிறகு குக்கர், மிக்ஸி, கேஸ் ஸ்டவ் மாதிரியான சிறிய வீட்டு உபயோகப் பொருள்களுக்கான விற்பனையையும் தொடங்கி இருக்காங்க. கரூர் மக்கள் அதுக்கும் ஏக ஆதரவு கொடுத்த தால், அந்த விற்பனையும் நல்லா நடக்க ஆரம்பித்திருக்கிறது.
இதற்கிடையில், 1986-ல் சொத்துகள் பிரிக்கப்பட்டபோது, எங்கப்பா நாராயணனுக்கு இந்தப் பாத்திரக்கடை பாத்தியமா வந்திருக்கு. கரூரை பூர்வீகமாகக் கொண்டு தொடங் கப்பட்ட லட்சுமி விலாஸ் வங்கியோட ஷேர் ஹோல்ட ராகவும், 20 வருஷம் இயக்குநராக வும் எங்க தாத்தா விஸ்வநாதன் இருந்திருக்கிறார்.
அதே போல், என்னோட பெரியப்பா கிருஷ்ணமூர்த்தி 20 வருஷமும், தம்பிகளான ராமாமிர்தம் 30 வருஷமும், சாய்பிரசாத் 20 வருஷமும் வங்கி யோட இயக்குநர்களாகப் பதவி வகித்திருக்காங்க” என்றார்.
தொடர்ந்து பேசிய, ஜெய பிரகாஷின் தம்பியான ராமா மிர்தம், “எங்கப்பா நாராயண னுக்கு, எங்கண்ணன் ஜெய பிரகாஷ், நான், தம்பிகள் துவாரக்கநாதன், சிவக்குமார், சாய்பிரசாத்னு ஐந்து பிள்ளைகள். அதுல, எங்க அண்ணன் ஜெயபிரகாஷும், தம்பி துவாரக்கநாதனும் நேரடியாகக் கடை நிர்வாகத்தை கவனிச்சுக்கிட்டாங்க. நான் உள்ளிட்ட மத்த மூணு பேரும் பங்குதாரர்களாக உள்ளோம்.

கடையை இன்னும் விசால மாக்க நினைச்சு, 2000-ம் வருஷம், இப்போ பஜார்ல இருக்கிற 2,500 சதுர அடியில் அமைந்திருக்கிற இந்த இடத்துக்கு கடையை மாத்தினோம். தொடர்ந்து, இரண்டு பேரும் இன்னும் வியாபாரத்தை மேம்படுத்தினாங்க.
எங்க கடைக்கு ‘கே.என்.விஸ்வநாத பாத்திரக் கடை’னு பெயர் இருந்தாலும், ‘இரட்டை பாத்திரக் கடை’ன்னுதான் இன்னமும் மக்கள்கிட்ட பேச்சு வழக்கில் பேரா நிலைச்சிருக்கு. இதுல, கடையைக் கவனிச்சுக் கிட்ட தம்பி துவாரக்கநாதன் மட்டும், 2016-ல் கடை நிர்வாகத்தை விட்டு பிரிஞ்சு போய்விட்டார்.
மீதியுள்ள நான்கு பேர்களில் ஒருவரான ஜெயபிரகாஷும், அவரோட மகன் அருண் பிரசன்னாவும் இப்போ கடை நிர்வாகத்தை நேரடியாக பார்த்துக் குறாங்க. நான் உள்ளிட்ட மற்ற மூன்று பேர்களும் பங்கு தாரர்களாக உள்ளோம். சகோதரர்கள் நாங்க சேர்ந்து ஆரம்பித்த டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட மத்த தொழில்களை நாங்க மூணு பேரும் பார்த்துக் கிறோம்.
எங்க தாத்தா, எங்க அப்பா கட்டிக்காத்த இந்தப் பாத்திரக் கடையோட பேரை இன்னும் பல தலைமுறைக்குக் கடத்தணும் கிறதுதான் எங்களோட ஆசை. எங்ககிட்ட நாலு தலைமுறையாக பாத்திரங்கள் வாங்குற 150 கஸ்டமர்கள் இருக்காங்க. இதைத் தவிர, 2,000 ரெகுலர் கஸ்டமர்கள் இருக்காங்க. மூணு தலைமுறையா எங்களுக்கு வழிவழியா பாத்திரங் களைக் கொடுக்கும் சப்ளையர்களே 10 பேர் இருக்காங்க.
கரூர் மாவட்டம் முழுக்க உள்ள மக்கள்ல அநேகம் பேர் எங்க கடையில் பொருள் வாங்குறாங்க. அதே போல், 1990-க்கு முன்பு வரை கரூர்ல வந்து செட்டிலானவங்க வீடுகள்ல எங்க கடை பண்ட பாத்திரம்தான் இருக்கும். அதே போல், கரூர் முழுக்க உள்ள வீடுகள்ல உள்ள பாத்திரங்கள்ல ஒரு பாத்திரமாவது எங்க கடையில் வாங்குன பாத்திரமா இருக்கும்” என்றார்.
நிறைவாகப் பேசிய நான்காவது தலைமுறையைச் சேர்ந்த அருண் பிரசன்னா, “நான் எம்.பி.ஏ முடிச்சுட்டு, டெக்ஸ்டைல்ஸ் தொழில்ல தயாரிப்பு, மொத்த விற்பனை பிரிவுகள்ல கால்பதிச்சேன். அதன்பிறகு, 2010 வாக்குலஇந்தப் பாத்திரக் கடை ரீடெய்ல் பிஸினஸுக்கு வந்துட்டேன்.
கடையை முழுக்க கணினிமயமாக்கினேன். பார்கோடு நம்பர் கொடுத்தேன். அந்த வகையில், 14,000 பார்கோடு நம்பர் இருக்கு. 10,000 வகையான பண்டங்கள் கடையில் விற்பனைக்கு இருக்கு. ரூ.2 மதிப்புள்ள ஸ்பூன் தொடங்கி ரூ.5,000 மதிப்புள்ள பித்தளை பானை வரை சகலப் பாத்திரங்களும் எங்க கடையில் விற்கப்படுது. இப்ப 250 வகையான வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்துகொண்டு இருக்கிறோம்.
முதல்ல வீட்டு ஆட்கள் மட்டும்தான் கடையில் பிஸினஸ் பண்ணினாங்க. இப்போ 10 வேலை ஆட்களை நியமித்திருக்கிறோம். என்னதான், கடையை நவீனமாக்கி னாலும், தரத்தில் ஒரு சதவிகிதம்கூட குறைவாக கொடுக்கலை. எங்க கடையில் விற்பனையாகுற 80% பொருள்களை அதைத் தயாரிக்கிற இடத்துக்கே போய் கொள்முதல் செய்துகிட்டு வர்றதால், தரத்தில் எந்த பழுதும் ஏற்படுவதில்லை.
‘பட்ஜெட்’ என்று வரும் மக்களுக்கும் தரமாக, நியாயமான விலையில் பாத்திரங்களை விற்பனை செய்கிறோம். கரூர் மாவட்டம் மட்டுமன்றி, கரூரில் இருந்து வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் என போய் செட்டிலானவங்க, கோயில், உறவினர் வீடுகள் என்று இங்க வரும்போது, எங்க கடைக்கு வந்து பொருள்களை வாங்காம போக மாட்டாங்க.
இன்னும் நூற்றாண்டு கடத்தும் இந்த ஸ்தாபனத்தைக் கொண்டுபோகணும்னு நினைத்து செயல்படுகிறோம். கரூர் மாவட்டத்திலேயே இன்னும் ஒரு இடத்தில் கிளை, மற்ற மாவட்டங்களில் கிளைகள் தொடங்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறோம். அதன்பிறகு, அங்கேயும் எங்க இரட்டை பாத்திரக் கடையின் பாத்திரங்கள் பளபளக்கும்” என்றார் உறுதியோடு!
தொலைநோக்குடன் செயல்படும் இவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள்!