பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

கலக்கல் வருமானம் தரும் கான்கிரீட் ஆணி..!

கான்கிரீட் ஆணி
பிரீமியம் ஸ்டோரி
News
கான்கிரீட் ஆணி

தொழில் பழகுவோம் வாங்க! 12

'மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரிது’ என்னும் பிரசித்தமான பழமொழியை, ஆணிக்கு உதாரணமாகச் சொல்லலாம். உருவத்தில் மிகச் சிறியதாக இருக்கும் ஆணி, கட்டுமானத்துறையில் முக்கியமான பங்கு வகிப்பதால், இந்தியாவில் இதற்கான தேவை ஆண்டுக்குப் பல ஆயிரம் டன் அளவில் இருப்பது பலரும் அறியாத உண்மை. கட்டுமானச் செலவுகளைக் குறைப்பது மற்றும் தரமான மூலப்பொருள்களை வாங்குவது என இரண்டுக்குமே இணையான முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டிய சூழலில், தற்போது பிரபலமாகிவரும் கான்கிரீட் ஆணிக்கான சந்தை வாய்ப்பு நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. இதற்கான தொழில் வாய்ப்புகள் குறித்து இந்த வாரம் வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

கான்கிரீட் ஆணி ஏன் அவசியம்?

ஜம்பர் டூல் கொண்டு சுவரில் துளையிட்டும், தேவைப்பட்டால் அந்தத் துளையில் சிறிய அளவிலான மரக்கட்டையைச் செருகிய பிறகும், அதில் ஆணி அடிக்கும் வழக்கமே பெரும்பாலான இடங்களிலும் கடைப்பிடிக்கப் படுகிறது. இதற்குப் பதிலாக, துளையிடும் இயந்திரமும் பயன்படுத்தப்படும். இதுபோன்ற நடைமுறைகளால், பல நேரங்களில் துளை பெரிதாகி, சுவரில் விரிசல் ஏற்படக்கூடும்.

கட்டுமானப் பணியில் பிளம்பிங் வேலையில் கிளாம்பிங் செய்ய ஆணி அடிப்பது பல நேரங் களில் சவாலாகவும் அதிக நேரம் தேவைப்படும் வேலையாகவும் இருக்கிறது. இத்தகைய சிக்கல் களைத் தவிர்க்கவும், எளிதான முறையில் ஆணி அடிப்பதுடன், உறுதித்தன்மையுடன் கூடிய ஆணியை உபயோகித்துப் பல விதத்தில் பயன்பெறவும் கான்கிரீட் ஆணி தயாரிப்பும் அதன் பயன்பாடும் அவசியமாகிறது.

கலக்கல் வருமானம் தரும் கான்கிரீட் ஆணி..!

சாதாரண ஆணிக்கும், கான்கிரீட் ஆணிக்கும் என்ன வித்தியாசம்?

பெரும்பாலும் மைல்டு ஸ்டீல் உலோகத்தால் தான் ஆணிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆணிகளைச் சுவரில் பொருத்தும்போது அவை அடிக்கடி வளைவதுடன், திறன் அதிகம் செலவிடும் பணியாகவும் இருக்கும்.

கான்கிரீட் ஆணியானது, மீடியம் கார்பன் ஸ்டீல் மெட்டீரியலால் உருவாக்கப்படுவதால், இவை மிகக் கடினமானதாகவும் உறுதியாகவும் இருக்கும். இதனால், சுத்தியல் வைத்துத் தட்டும்போது, எவ்வித சேதாரமும் இன்றி, இந்த ஆணி சுவரில் விரைவாகப் பதிந்துவிடு வதுடன், பலமான பிடிப்புடன் செயல்படும்.

கலக்கல் வருமானம் தரும் கான்கிரீட் ஆணி..!

தயாரிப்பு முறை

மூலப்பொருள் தேர்வு (High carbon steel wire rod): 0.45 – 0.55 அளவு கார்பன் கொண்ட 5.5 மில்லி மீட்டர் விட்டமுள்ள (Diameter) கம்பியைப் பயன்படுத்த வேண்டும்.

தேவையான விட்டத்துக்கு மாற்றுதல் (Drawing into required size): Wire drawing இயந்திரத்தின் உதவியுடன், மூலப்பொருளின் விட்டத்தைத் தேவையான அளவுக்கு வடிவமைத்துக் கொள்ளலாம்.

கம்பியைத் தயாரித்தல்: Wire drawing செய்யப்பட்ட உருளை வடிவ கம்பியை ஆணி இயந்திரத்தில் செலுத்தி, ஆணியாகத் தயாரித்துக்கொள்ளலாம்.

கடினப்படுத்துதல் (Hardening): தயாரிக்கப்பட்ட ஆணியானது 900 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்பட்டு கடினமானதாக மாற்றப்படும்.

நிலைப்படுத்துதல் (Tempering): கடினப்படுத்துதல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட உலோகம் எதுவானாலும், அதன் உடையும் தன்மை (Brittleness) அதிகமாக இருக்கும். எனவே, ஆணியானது ஃபர்னஸ் இயந்திரத்தில் 250 – 350 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சரியான உறுதித்தன்மைக்கு நிலைப்படுத்தப்படும்.

சுத்தம் செய்தல்: ஆணியை சல்ஃபியூரிக் அமிலத்தில் சேர்த்து எடுப்பதால், அதன் மேற்புறத்தில் உள்ள தேவையற்ற துகள்கள் நீங்கிவிடும்.

துத்தநாக முலாம் பூசுதல்: துருப்பிடிக்காமல் நீண்ட காலத்துக்குப் பயன்படுத்த ஏதுவாக, ஆணியானது துத்த நாகப் பூச்சு செய்யப்படும். இதனால், அவை சைனிங்கான தோற்றமும் பெறும்.

உலர்த்துதல் மற்றும் பேக் செய்தல்: முலாம் பூசப்பட்ட ஆணியை உலர்த்திய பிறகு, 100 கிராம் முதல் கிலோ கணக்கிலும் தேவைக்கேற்ற அளவுகளில் பேக் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

கான்கிரீட் ஆணியின் சிறப்பம்சங்கள்

* சுவரில் எளிதாக நுழையும்.

* மற்ற ஆணிகளைச் சுவரில் பொருத்தும்போது, ஆணி வளைவது போன்ற சேதாரங்கள் ஏற்படும். ஆனால், இந்த வகை ஆணியைப் பயன்படுத்துவதால் சேதாரம் ஏற்படாது.

* கான்கிரீட் ஆணி தயாரிப்புக் கான மூலப்பொருள்கள் எளிதில் கிடைக்கும்.

* இதன் தோற்றம் கவரக் கூடியதாக இருப்பதுடன், பயன் படுத்தவும் சுலபமானது.

கலக்கல் வருமானம் தரும் கான்கிரீட் ஆணி..!

விற்பனை வாய்ப்பு

பெரிய தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடத்தில் கிலோ கணக்கில் ஆணிகள் தேவைப்படுவதால், அங்கெல்லாம் கான்கிரீட் ஆணியைப் பயன்படுத்தி, வேலையை விரைவாக முடிக்கலாம். இது நவீனமயமாக்கப் பட்ட புதுமையான மற்றும் அதிக வரவேற்புள்ள தொழிலாக உள்ளதால், விற்பனைக்கான சந்தை வரவேற்பும் அதிகமாக இருக்கிறது. எனவே, சுயதொழில் ஆர்வமுள்ள பட்டதாரிகள் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த வர்கள், இந்தத் தொழிலை நம்பிக்கையுடன் தொடங்கலாம்.

வங்கிக் கடனுதவி

இந்தத் தொழில் தொடங்க 40 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப் படும். ‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ் 29.15 லட்சம் ரூபாய் கடனுடன், 25% மானியமும் பெறலாம்.

மாதம் 16,50,000 ரூபாய் வருமானம்!

ஆணி தயாரிப்புக்கான மூலப்பொருளை (மீடியம் கார்பன் ஸ்டீல்) ஒரு கிலோ 57 ரூபாய்க்குப் பெறலாம் (போக்குவரத்து மற்றும் சேதாரம் சேர்த்து). கான்கிரீட் ஆணி ஒரு கிலோ சராசரியாக 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினமும் 600 கிலோ ஆணி உற்பத்தி செய்யலாம். அந்த வகையில் ஒரு மாதத்துக்கு (25 தினங்கள்) 15,000 கிலோ உற்பத்தி மூலம் 16,50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

(தொழில் பழகுவோம்)

 ரகு
ரகு

“வருங்காலத்தில் வரவேற்பு மேலும் அதிகரிக்கும்!”

கோயம்புத்தூரிலுள்ள ‘Apt Tools & Machinery India Pvt Ltd’ நிறுவன உரிமையாளரான ரகு, பேக்கேஜிங் தேவைகளுக்கான பல்வேறு பொருள்களையும் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கான்கிரீட் ஆணி தயாரிப்பு குறித்து அவர் சொன்னதாவது... ‘‘வெறும் ஆணிதானே எனப் பலரும் நினைத்தாலும், உலக அளவிலும், இந்தியாவிலும் ஆணிகளுக்கான தேவை ஆச்சர்யப்படும் வகையில் இருக்கிறது. சமீப காலமாகப் பிரபலமாகிவரும் கான்கிரீட் ஆணியானது, சீனாவிலிருந்துதான் நம் நாட்டுக்கு அதிக அளவில் இறக்குமதியாகிறது. உள்நாட்டிலேயே உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக, கான்கிரீட் ஆணி உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். தற்போது பத்து வகையான ஆணிகளில் மாதத்துக்கு 300 டன் உற்பத்தி மேற்கொள்வதில், 80 டன் அளவுக்கு கான்கிரீட் ஆணியைத் தயாரிக்கிறோம். உள்நாட்டு ஆணி உற்பத்தியில் எங்கள் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. கட்டுமானத் துறையில் இந்த வகை ஆணியின் பயன்பாடு பெரிதும் உதவுவதால், இவற்றுக்கான வரவேற்பு வருங்காலத்தில் மென்மேலும் அதிகரிக்கும்” என்று நம்பிக்கையுடன் முடித்தார்.