தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ரூ.20,000 to ரூ.18 கோடி... வெற்றிகரமாக முன்னேறும் மும்பைத் தமிழர்!

சபேசன் நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
சபேசன் நடராஜன்

பிசினஸ்

தொழிற்சாலை களுக்குத் தேவையான உபகரணங்களையும் இயந் திரங்களையும் இன்ஜினீயரிங் கம்பெனிகள்தான் வடிவமைத்து உருவாக்கிக் கொடுக்கின்றன. அது போன்ற ஒரு கம்பெனியை மும்பையைச் சேர்ந்த தமிழர் சபேசன் நடராஜன் 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

சமையல் எண்ணெய், மருந்து, ரசாயனம் போன்ற வற்றைப் பிரித்தெடுக்கத் தேவையான அனைத்து வகையான ராட்சத ஃபில்டர் களையும் தயாரித்து வருகிறது மும்பையைச் சேர்ந்த ஜோதி பிராசஸ் எக்யூப்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்.

இந்த நிறுவனம் 1986-ம் ஆண்டு சாய் இன்ஜினீயரிங் என்கிற பெயரில் தொடங்கப் பட்டது. இதன் நிர்வாக இயக்குநர் சபேசன் நடராஜன். விருதுநகரைச் சேர்ந்த அவர் தனது சுவாரஸ்யமான பயணத்தை நம்மிடம் எடுத்துச் சொன்னார்.

‘‘விருதுநகர் எனது சொந்த ஊராக இருந்தாலும் சீர்காழியில்தான் படித்தேன். ஆனால், 12-வது வகுப்பைக் கூட என்னால் தாண்ட முடியவில்லை. 12-ம் வகுப்பு படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தேன். எனது அப்பா கமிஷன் வியாபாரம் செய்துவந்தார். அவர் என்னையும் கமிஷன் வியாபாரத்தில் சேரும்படி சொன்னார்.

ஆனால், நான் 12-வது வகுப்பில் தொழிற்கல்வி படித்திருந்ததால், அது சார்ந்த வேலையில் சேர வேண்டும் என உறுதியாக இருந்தேன். மும்பை இன்ஜினீயரிங் கம்பெனியில் வேலை இருப்பதாக விளம்பரத்தை பார்த்து அதற்கு விண்ணப்பித்தேன். வேலை கிடைத்தவுடன் நான் மும்பைக்குச் செல்லப் போகிறேன் என்று என் அப்பாவிடம் சொன்னேன்.

சபேசன் நடராஜன்
சபேசன் நடராஜன்

ஆனால், என்னை அவர் மும்பைக்கு அனுப்பத் தயாராக இல்லை. ‘‘நான் முதலில் மும்பை வேலைக்குப் போகிறேன். அந்த வேலையில் நான் தோற்றுவிட்டேன் எனில், உங்களது தொழிலை வந்து பார்த்துக்கொள்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

மும்பையில் மஹிந்திரா டிராக்டர் நிறுவனத்துக்குத் தேவையான உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கும் காவேரி இன்ஜினீயரிங் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன்.

1983-ம் ஆண்டு வேறு ஒரு கம்பெனிக்கு மாறினேன். கம்பெனியில் வேலை செய்வதால், என்னால் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந் தேன். 1986-ம் ஆண்டு நவிமும்பை பகுதியில் நடிகர் தர்மேந்திராவின் நண்பருக்குச் சொந்தமான கம்பெனி ஒன்றை வாடகைக்கு எடுத்து சாய் இன்ஜினீயரிங் வொர்க் என்ற பெயரில் நடத்த ஆரம்பித்தேன்.

கம்பெனி ஆரம்பிக்க என்னிடம் அப்போது பணம் எதுவும் இல்லை. 20,000 ரூபாயை மாதம் 20% வட்டிக்கு வாங்கிதான் கம்பெனியையே தொடங்கினேன். அந்த நேரத்தில் கொங்கன் பகுதியில் புதிய ரயில் தடம் அமைக்கும் பணி நடந்து வந்தது. கொங்கன் ரயில்வேயில் தமிழ் அதிகாரி ஒருவர் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார்.

ரயில் தண்டவாளத்தில் ரயில்கள் ஒரு தடத்தில் இருந்து மற்றொரு தடத்துக்கு மாறும் இடத்தில் அமைக்கப்படும் பாயின்ட் கிராஸர்களை வடிவமைத்து தேவையான அளவு கொங்கன் ரயில் வேயிக்கு சப்ளை செய்தோம். இதில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைத்ததுடன், அடுத்தகட்டத்துக்கு எங்களைக் கொண்டு செல்ல உதவியது. அதாவது, தொழிற்சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்களைத் தயாரிக்க ஆரம்பித்தோம்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் தயாரிக்கும் இயந்திரங்களைப் பழுது பார்க்க பெரிய அளவில் அப்போது ஆள்கள் இல்லாமல் இருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இயந்திரங்களைப் பராமரித்துக் கொடுக்கும் பணிகளை எடுத்துச் செய்தோம்.

1990-களில் சமையல் எண்ணெய்க்கு அதிக வரவேற்பு இருந்தது. ஆனால், அந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் மிகவும் குறைவாக இருந்தது. உடனே அந்தத் துறைக்குத் தேவையான பில்டர்களைத் தயாரித்து புதிதாக ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு வழங்கினோம். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ஒரு கம்பெனிக்குத் தேவையான வடிகட்டுதல், திடப்படுத்துதல், உலர்த்துதல் போன்ற தேவைகளுக் கான பிரஷர் லீஃப் ஃபில்டர், பேக் ஃபில்டர், டிரம் ஃப்ளேக்கர், டிரம் ட்ரையர்களை நாங்களே டிசைன் பண்ணி தயாரித்துக் கொடுக்கிறோம். சமையல் எண்ணெய் மட்டுமல்லாது ரசாயானம், மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகளுக்குத் தேவையான உபகரணங்களையும் அதிக அளவில் உற்பத்தி செய்கிறோம்.

1992-ம் ஆண்டு இக்கம்பெனியை நான் என் பங்குதாரர்களிடமிருந்து அவர்களின் பங்குகளையும் வாங்கிக்கொண்டேன்.

நாங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து உப கரணங்களும் மிகவும் தரத்துடன் இருந்ததால் எங்களுக்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் எங்களால் ஒரு கம்பெனியில் தேவையான உபகரணங்களைத் தயாரிக்க முடியவில்லை. இதனால் 2004-ம் ஆண்டு நவிமும்பை தொழிற்பேட்டையில் ஜோதி இன்ஜினீயரிங் என்ற பெயரில் புதிய கம்பெனியைத் தொடங்கினோம்.

2008-ம் ஆண்டில் இருந்து நாங்கள் தொழிற் சாலைகளுக்குத் தேவையான உபகரணங்களை ஏற்றுமதி செய்துவருகிறோம். ரஷ்யா, உக்ரைன், சிலி, பொலிவியா, மலேசியா, துபாய், கனடா, அமெரிக்கா உட்பட 16 நாடுகளுக்கு நாங்கள் நேரடியாக ஏற்றுமதி செய்கிறோம்.

இது தவிர, எங்களிடம் இருந்து இயந்திரங் களையும் உபகரணங்களையும் வாங்கும் வேறு கம்பெனிகள், 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.

நடப்பு ஆண்டில் புதிய கம்பெனி ஒன்றை வாங்க முன்பணம் கொடுத்திருக்கிறோம். தற்போது ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இதை 30 கோடியாக உயர்த்த நானும், என் மகன் கைலாஷும் முயற்சி செய்து வருகிறோம்’’ என்றவர், பிசினஸ் செய்துவருபவர்கள் தங்கள் பிள்ளைகந்த் தங்களுடைய பிசினஸில் கொண்டு வர செய்ய வேண்டிய விஷயங்களை எடுத்துச் சொன்னார்.

‘‘பெற்றோர்கள் தங்களது விருப்பத்தைப் பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது. பிள்ளை களின் விருப்பத்தைக் கேட்டு அவர்களின் தேர்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என்பதே அவர் சொன்ன யோசனை. தமிழகத்தில் இருந்து மும்பைக்குக் குடிபெயர்ந்து அங்கு தனக்கென ஒரு தொழிலைத் தொடங்கி சிறப்பாக நடத்திவரும் சபேசன் நடராஜன் பாராட்டத்தக்கவர்!

படம்: கோவிந்தன் சேவன்