
சக்சஸ் ஃபார்முலா!
சாதனையாளர்களின் வெற்றி என்பது, சின்னச் சின்ன சுய ஒழுக்கங்களிலும், சுய கட்டுப் பாடுகளிலும் இருந்தே ஆரம்பிக்கிறது” என்கிறார், மாபெரும் தன்னம்பிக்கை எழுத்தாளர் ஜிம் ரோன் (JIM ROHN).

ஆம், விராட் கோலியும் நீரஜ் சோப்ராவும், முகேஷ் அம்பானியும் நாள் ஒன்றுக்கு 16 முதல் 18 மணி நேரம் வரை உழைக்கக்கூடியவர்கள். நம்மைப் போன்று நான்கு மணி நேரம் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், சீரியல், சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களில் நேரத்தை செலவழிப்பவர்கள் கிடையாது. அவர்கள் கவனம் முழுவதும் தாம் சார்ந்திருக்கும் துறையில் சாதிப்பது குறித்தே இருந்ததால் அவர்களால் சாதிக்க முடிந்தது; இன்னமும் முடிகிறது. அதற்கு சுய கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் மிக மிக முக்கியம்.

இதைச் சொல்லும்போது நாம் உங்களை சமூக வலைதளங்களைப் பார்க்க வேண்டாம் என்றோ, சீரியல், சினிமா போன்றவற்றைக் கவனிக்க வேண்டாம் என்றோ சொல்லவில்லை. அதில் சாதிக்க வேண்டும் என்பதே உங்கள் கனவாக இருந்தால், தாராளமாக அதில் 4 மணி நேரம் என்ன... 18 மணி நேரம் வரைகூட செலவழிக்கலாம். ஆனால், அது பொழுதுபோக்கு என்று முடிவெடுத்து விட்டீர்களேயானால், நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் வரை மட்டுமே செலவழிக்க வேண்டும். இந்த சுய கட்டுப்பாடே, உங்களை முன்னேற்றுவதற்கான ஆரம்பப் புள்ளி.
இதுபோன்று உங்கள் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக் கொள்ள நாள்தோறும் உடற்பயிற்சி, யோகா, தியானம், உங்கள் துறையில் சாதிக்க துறை சார்ந்த பயிற்சி, படிப்பு, தொடர்பு என ஒரே நேர்கோட்டில் பயணிக்க சுய கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் ஜிம் ரோன் சொல்வது போல மிக மிக அவசியம்.
இன்னும் சொல்லப்போனால், நட்புகளை இழக்காமல், தேவையற்றவற்றுக்கு ‘நோ’ சொல்லும் துணிவும் வேண்டும். வெற்றிக்கான ஃபார்முலா தயார்... நீங்கள் தயாரா?