மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இரண்டாம் உலகப்போர் நெருக்கடி... மும்பையில் உருவான நியூ மகாலட்சுமி சில்க்ஸ்!

கே.பழனி
பிரீமியம் ஸ்டோரி
News
கே.பழனி

நேட்டிவ் பிராண்ட் - 20

பட்டுப்புடவைகள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது காஞ்சிபுரம்தான். காஞ்சிபுரத்தில் இருந்து உலகம் முழுவதும் புட்டுப்புடவைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தைப் பூர்வீகமாகக்கொண்ட கே.பழனியின் குடும்பம் மும்பையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் பட்டுப்புடவை வியாபாரம் செய்து வருகின்றனர். அதுவும் ஐந்து தலைமுறையாக மும்பையில் அவர்கள் பட்டுப்புடவை வியாபாரம் செய்து வருகின்றனர்.

மாட்டுங்கா என்னும் குட்டி சென்னை...

மும்பையில் மாட்டுங்கா எப்போதும் குட்டிச் சென்னையாகவே இருந்து வருகிறது. இப்போது இந்தப் பகுதியில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொருள்களும் மாட்டுங்காவில் கிடைக்கும். அப்படிப்பட்ட பாரம்பர்யம்மிக்க மாட்டுங்காவில் இருக்கும் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்காகவே நியூ மகாலட்சுமி ஸ்டோர்ஸ் இரண்டாம் உலகப்போர் தொடங்கப்படுவதற்கு முன்பே அதாவது, 1934-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து ஒரே இடத்தில் செயல்படும் நியூ மகாலட்சுமி ஸ்டோர்ஸ், மும்பையில் தென் இந்தியர்களின் அடையாளமாகத் திகழ்கிறது. தவிர, மும்பை மட்டுமல்லாது, புனேவில் உள்ள தமிழர்களும் குஜராத்தில் உள்ள தமிழர்களும் பட்டுச்சேலை வாங்க இந்த நியூ மகாலட்சுமி சில்க்குக்குதான் வருகின்றனர். இந்தக் கடையின் உரிமையாளர் கே.பழனியை சந்தித்தோம். அவர் தனது பிசினஸ் பயணம் பற்றி பல தகவல்களை சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னார்.

கே.பழனி
கே.பழனி

மயிலாப்பூரில் முதல் கடை...

‘‘நாங்கள் பாரம்பர்யமாக நெசவாளிக் குடும்பம். என் முப்பாட்டனார் மாதாரி சுப்பராயன் செட்டியார் 1915-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே காஞ்சிபுரத்தில் சொந்தமாகப் பட்டுப்புடவை நெய்ந்து விற்பனை செய்து வந்தார். அப்போது உற்பத்திக் குறைவு என்பதால், பட்டுப் புடவைகளுக்கு அதிக வரவேற்பு இருந்தது. இதனால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் சென்னை மயிலாப்பூரில் 1929-ம் ஆண்டு பட்டுப்புடவைகளை விற்பனை செய்ய ஒரு கடையைத் தொடங்கினார். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தவிர, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் பட்டுப் புடவைகளைப் பெட்டியில் எடுத்துச் சென்று விற்பனை செய்துவந்தார்.

நியூ மகாலட்சுமி சில்க்ஸ் வந்தது எப்படி?

1930-ம் ஆண்டு சுப்பராயன் செட்டியார், மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு பட்டுப் புடவைகளை விற்பனை செய்துவந்த நேரத்தில் இரண்டாம் உலகப்போர் வந்துவிட்டது. இதனால் அவர் இந்தியா திரும்ப கப்பல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவரால் சென்னைக்கு திரும்ப முடியவில்லை. எப்படியாவது இந்தியாவுக் குத் திரும்பி வந்துவிடும்படி அவரின் குடும்பத் தினர் கேட்டுக்கொண்டனர். இதனால் பட்டுப் புடவைகளை முழுமையாக விற்பனை செய்யாமல் அவற்றை எடுத்துக்கொண்டு இந்தியா வந்தால் போதும் என்ற மனநிலையில் மும்பை வந்த ஒரு கப்பலில் ஏறி மும்பை வந்துவிட்டார்.

மும்பையில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், பட்டுப்புடவைகளுடன் தமிழ்நாட்டுக்குச் செல்வது பாதுகாப்பற்றது என்பதை உணர்ந்த சுப்பராயன், நிலைமை சரியாகும் வரை மாட்டுங்காவில் தங்கி இருக்க முடிவு செய்தார்.

அந்த நேரம் தமிழகம் உட்பட தென் இந்தியாவிலிருந்து அதிக மான குடும்பங்கள் மாட்டுங் காவில் வந்து தங்கி இருந்தனர். அவர்களிடம் தன்னிடம் இருக்கும் விற்பனையாகாத புடவைகளை விற்பனை செய்ய ஆரம்பித்தார். சாலையோரம் பெட்டியை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்.

அவரே எதிர்பாராத விதமாக மக்களிடம் பட்டுப்புடவை களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. இதனால் மேற்கொண்டு இந்த வியாபாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று கருதி, மும்பையில் நிரந்த வியாபாரத்தைத் தொடங்க முடிவு செய்தார். இதற்காக அடிக்கடி காஞ்சிபுரம் சென்று புடவைகளை வாங்கி வந்து மும்பையில் சிறிய கடையில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

1934-ம் ஆண்டு மாட்டுங்காவில் முதல்முறையாக குடியிருப்புடன் கூடிய வணிக வளாகம் ஒன்று சிறிய அளவில் கட்டப்பட்டது. அதில் ஒரு கடையை சொந்த மாக வாங்கி நியூ மகாலட்சுமி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் பட்டுப்புடவைகளை விற்பனை செய்யத் தொடங்கினார். அன்று தொடங்கிய இந்தக் கடை பல தலைமுறை வாடிக்கையாளர் களைச் சந்தித்து வருகிறது.

சென்னையில் இரண்டு கடைகள்...

மும்பையில் பட்டுப்புடவை கடையை ஆரம்பிப்பதற்கு முன்பே மயிலாப்பூரில் ஒரு கடையைத் தொடங்கினார் என் தாத்தா. ஆனால், கடுமையான போட்டி அப்போது இருந்ததால், அந்தக் கடையை மூடிவிட்டார்.

பிற்பாடு மும்பையில் கடை ஆரம்பித்து, நல்ல வெற்றி கண்ட பிறகு, சென்னை தி.நகரில் பட்டுப் புடவை கடை ஒன்றைத் தொடங்கினார். இந்த முறையும் போட்டிகள் அதிகரித்ததால், அந்தக் கிளை யையும் மூடிவிட்டோம். நாங்கள் இப்போது சென்னையில் மூன்று திருமண மண்டபங்களை மட்டும் நடத்தி வருகிறோம். மும்பையில் நியூ மகாலட்சுமி ஸ்டோரில் முழு அளவில் கவனம் செலுத்தி வருகிறோம்.

இரண்டாம் உலகப்போர் நெருக்கடி... மும்பையில் உருவான 
நியூ மகாலட்சுமி சில்க்ஸ்!

உற்பத்தியில் இருந்து விற்பனைக்கு...

வாடிக்கையாளர்களுக்குத் தேவை யான ஆடைகளை ஆரம்பத்தில் காஞ்சிபுரத்தில் நாங்களே சொந்த மாகவும் தயாரித்து வந்தோம். விற்பனைப் பிரிவில் கவனம் செலுத்தியதால், இப்போது காஞ்சி புரத்தில் பட்டு ஆடைகள் உற்பத்தியை நாங்கள் முழுமையாக கைவிட்டுவிட்டோம். அதே சமயம், சிறந்த தயாரிப்பாளர்களிடம் நேரடியாகச் சென்று கொள்முதல் செய்து வந்து விற்பனை செய்து கொண்டிருக்கிறோம். எங்களுக்குத் தேவையான டிசைன்களை தயாரிப் பாளர்களிடம் கொடுத்து உற்பத்தி செய்து வாங்கிக்கொள்கிறோம்’’ என்ற பழனி, பிற விஷயங்கள் பற்றி பேசத் தொடங்கினார்.

செம்பூரில் பட்டுப்புடவைக் கண்காட்சி...

மும்பையில் 1998-ம் ஆண்டில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியையொட்டி செம்பூரில் பட்டுப் புடவைக் கண்காட்சியை நடத்துகிறோம். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே, செம்பூரில் ஒரு கிளையையும் தொடங்கினோம். ஆனால், சில காரணங்களால் அதை வேறு ஒருவரிடம் தந்துவிட்டு, இப்போது மும்பை முலுண்ட் பகுதியில் ஒரு கிளையைத் தொடங் கியிருக்கிறோம்.

நடிகை ஹேமாமாலினியும், பாடகி ஆஷா போஸ்லேயும்...

மாட்டுங்காவில் உள்ள எங்களது கடைக்கு பாடகி ஆஷா போஸ்லே, நடிகை ஹேமாமாலினி, அரசியல் வாதிகளின் துணைவியார்கள் உட்பட பல நட்சத்திரங்கள் புடவை வாங்க அடிக்கடி வாங்க வருவதுண்டு. தென் இந்தியர்கள் மட்டுமல்லாது, குஜராத்தியர்கள், மராத்தியர்கள் உட்பட வடமாநிலத்தவர்களும் திருமண பட்டுப்புடவைகள், பரதநாட்டிய அரங்கேற்ற ஆடைகளை எப்போதும் எங்களது கடையில் இருந்து வாங்குகின்றனர்.

ரூ.80,000 வரை...

எங்களிடம் இப்போது அதிகபட்சமாக ரூ.80,000 வரையிலான பட்டுப்புடவைகள் கிடைக்கிறது. நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான ஆடைகள் கொடுப் பதால்தான் எங்களால் 100 ஆண்டுகளைக் கடந்த பிறகும் இந்தத் தொழிலில் நிலைத்து நிற்க முடிகிறது. நாங்கள் ஆடைகளின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்து கொண்டது கிடையாது. தற்போது செயற்கை பட்டு ஆடைகள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளபோதிலும் 100% காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளை மட்டுமே விற்பனை செய்கிறோம்.

மூன்று தலைமுறையைத் தாண்டி நான்காவது தலைமுறையாக 1982-ம் ஆண்டு இந்தத் கடையை நடத்தும் பொறுப்பு என்னிடம் வந்தது. இப்போது இந்த நியூ மகாலட்சுமி சில்க்ஸ் ஐந்தாவது தலைமுறையாக என் மகனின் நிர்வாகத்தில் இருந்து வருகிறது.

ஆண்டுக்கு ரூ.5 கோடி...

இப்போது ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வரை இருந்து கொண்டிருக்கிறது. பழமை மாறாமல் தொடர்ந்து சிறிய இடத்தில் நாங்கள் இந்தக் கடையை நடத்தி வருகிறோம். எதிர்காலத்தில் வேறு இடத்தில் பட்டுப்புடவைகளுடன் வேறு ஆடைகளையும் சேர்த்து விற்பனை செய்யும் கடையைத் திறக்கும் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது’’ என்று உற்சாகமாகப் பேசி முடித்தார் கே.பழனி.

மும்பையில் உள்ள தென் இந்திய மக்கள் பட்டுப்புடவை வாங்க தேடிச் செல்லும் இடமாக நியூ மகாலட்சுமி ஸ்டோர்ஸ் இருக்கிறது. புதுமையான பல யுக்திகளை இந்தக் கடையின் நிர்வாகத்தினர் பயன்படுத்தி வருவதால், இனிவரும் காலத்தில் இந்தக் கடை இன்னும் பெரிய அளவில் விரிவாக்கம் அடையும் என்பதில் சந்தேகமே இல்லை!

படங்கள்: ரவி சாலமன்