பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

இப்போது 12, அடுத்து 30... லாஜிஸ்ட்டிக்ஸ் ஸ்டார்ட்அப்பின் அசத்தல் டார்கெட்..!

செந்தில்குமார், விஎம்எஸ் செல்வம், அம்ரேஷ் சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
செந்தில்குமார், விஎம்எஸ் செல்வம், அம்ரேஷ் சிங்

ஸ்டார்ட்அப்

வர்த்தகத்தின் வடிவம் மாறிவரும் அதே சூழலில், புதிய புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகிவருகின்றன. அப்படி வாய்ப்புகளில் உருவான ஒரு நிறுவனம்தான் வீலாசிட்டி (Wheelocity). தொடங்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள் 12 மில்லியன் டாலர் நிதியைத் திரட்டி இருக்கிறது. லைட் ஸ்பீட் வென்ச்சர்ஸ் மற்றும் அனிகட் கேப்பிடல் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. இந்த நிறுவனம் என்ன செய்கிறது, எதற்கான நிதி என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி விஎம்எஸ் செல்வத்தை சந்தித்தோம். குறுகிய காலத்தில் நிறுவனம் அடைந்த வளர்ச்சி குறித்து விளக்கினார்.

செந்தில்குமார், விஎம்எஸ் செல்வம், அம்ரேஷ் சிங்
செந்தில்குமார், விஎம்எஸ் செல்வம், அம்ரேஷ் சிங்

தொழில் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான்...

‘‘நான் தொழில் குடும்பத்தில் இருந்து வந்தவன். பட்டர்ஃபிளை நிறுவனம் எங்கள் குடும்பத்தைச் சார்ந்தது. (சில மாதங்களுக்கு முன்பு கிராம்டன் கிரீவ்ஸ் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது). அதனால் எனக்கு இயல்பாகவே தொழில் குறித்த அறிமுகம் இருந்தது.

சென்னையில் இன்ஜினீயரிங் படித்தேன். கல்லூரியில் எலெக்டிவ் பேப்பர் எடுக்கும்போது லாஜிஸ்டிக்ஸ் எடுத்தேன். அதனால் அதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. நம்மில் பெரும்பாலானவர்கள் லாஜிஸ்டிக்ஸ் என்பது பொருள்களைக் கொண்டுசெல்வது என்று மட்டுமே புரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், லாஜிஸ்டிக்ஸைக் கையாள வேண்டும் எனில், பல துறைகள் குறித்த தெளிவு இருக்க வேண்டும்.

அதனால் அமெரிக்காவில் எம்.பி.ஏ (லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் படித்தேன்). பர்து (Purdue) பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்தேன். சர்வதேச அளவில் லாஜிஸ்டிக்ஸுக்கு மூன்று நிறுவனங்கள் சிறப்பானவை. வால்மார்ட், டெல் மற்றும் டொயோட்டா. நான் டெல் நிறுவனத்தில் சுமார் 18 மாதங்கள் வேலை செய்தேன்.

அதைத் தொடர்ந்து இந்தியாவுக்குத் திரும்பி குடும்ப நிறுவன மான பட்டர்ஃபிளை நிறுவனத்தில் இணைந்தேன். அங்குதான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தமாக நிறுவனம் தொடங்க வேண்டும் எனத் திட்டமிட்டேன்.

சப்ளை செயின் குறித்து ஆலோசனை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் உள்ளன. இதைக் கையாளு வதற்கு பல நிறுவனங்கள் உள்ளன. ஆனால், படித்த படிப்பும் நிஜவாழ்க்கையும் வெவ் வேறாகவே இருக்கும். இரண்டிலும் தனித் தனியாக சிறப்பாகச் செயல்படும் நிறுவனங் கள் உண்டு. ஆனால், ஆலோசனை மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தும் நிறுவனங்கள் இல்லை. அதனால் அந்தப் பிரிவில் தொடங்கிய நிறுவனம்தான் ஹெச் அண்ட் எஸ் சப்ளை செயின் சர்வீசஸ் நிறுவனம்.

இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு உதவியாக...

லாஜிஸ்டிக்ஸில் என்ன ஆலோசனை சொல்ல முடியும், அதற்கெல்லாம் ஒரு நிறுவனம் தேவையா என்கிற கேள்வியைத் தான் பலரும் கேட்டார்கள். உதாரணமாக, ஒரு இ-காமர்ஸ் நிறுவனம் ஒரு சிறிய மாவட்டத்துக்கு சேவை வழங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு பல எல்லைகள், சிக்கல்கள் இருக்கும். உதாரணமாக, ஒரு நாளைக்கு குறிப்பிட்ட பொருள்களை மட்டுமே, குறிப்பிட்ட நகரத்துக்கு சப்ளை செய்ய முடியும். இதில் எப்படி வரிசைப்படுத்துவது, எப்படிக் கொண்டு செல்வது என்பது உள்ளிட்டவற்றை நாங்கள் வழங்குகிறோம்.

பல எஃப்.எம்.சி.ஜி, இ-காமர்ஸ் என பல முக்கிய நிறுவனங்கள் எங்கள் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். சப்ளை செயின் என்பது வாடிக்கையாளர்களுக்கு வருவது மட்டுமல்ல, மூலப் பொருள்களைத் தயாரிப்புக்குத் தேவையான இடத்துக்கு சரியான நேரத்தில் கொண்டு செல்வதுதான் சப்ளை செயின்.

நிஞ்சாகார்ட்டில் வேலை பார்த்தேன்...

இதில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தோம். அப்போது நிஞ்சாகார்ட் நிறுவனத்தின் நிறுவனர் திருக் குமரனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்களுடைய தொழில் குறித்து பேசும்போது பல விஷயங்கள் சிறப்பாக இருந்தன. ஆனால், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயினில் இன்னும் பெரிய மாறுதல்கள் செய்யலாம் என்று சொன்னேன்.

இதுவரை நாங்கள் செய்தது எல்லாம் அழுகாத, அதிக ஆயுள் காலம் இருப்பவை. ஆனால், காய்கறி மற்றும் பழங்கள் என்பது சில மணி நேரங்கள் முதல் சில நாள்களுக்குள் வாடிக்கையாளர் களுக்கு சென்றடைய வேண்டும். இவை குறித்து எங்களுக்கு தெரியாதே தவிர, எப்படி மேம்படுத்த முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் ஒரு மாதத்துக்கு சோதனை அடிப்படையில் பணியாற்றினேன். பல விஷயங்களை மேம்படுத்த முடிந்தது.

அப்போது தோன்றியதுதான் வீலாசிட்டி என்னும் ஐடியா. இந்தியாவில் தபால் துறை இருக்கிறது. பல தனியார் கூரியர் நிறுவனங்கள் உள்ளன. ஆனால், இ-காமர்ஸ் டெலிவரிக்கு என பிரத்யேக நிறுவனங்கள் எதுவும் கிடையாது. அந்த இடை வெளியைக் களைவதற்கு பல நிறுவனங்கள் (டெலிவரி, இகாம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல) உருவாகின.

அதுபோல, காய்கறி மற்றும் பழங்களை விநியோகம் செய்யும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் இல்லை. இதை ஃபிரஷ் காமர்ஸ் லாஜிஸ்டிக்ஸ் என்று அழைக்கிறோம். அதனால் அந்த இடைவெளியைக் களைவதற்காகத் தொடங்கப் பட்டதுதான் வீலாசிட்டி.

வீலாசிட்டி என்கிற வார்த்தையை வெலா சிட்டியில் (Velocity) இருந்து உருவாக்கினோம். வேகமாக செல்வதுடன், சரியான திசையில் வேகமாகச் செல்ல வேண்டும். லாஜிஸ்டிக்ஸுக்கு சக்கரம் தேவை. தவிர மனிதனின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் சக்கர மும் ஒன்று. அதனால் இவற்றை ஒருங்கிணைத்து வீலாசிட்டி எனப் பெயர் வைத்தோம்.

மூன்று விதமான லாஜிஸ்ட்டிக்ஸ் சேவைகள்...

எங்களிடம் மூன்று விதமான லாஜிஸ்டிக்ஸ் உள்ளது. காய்கறி மற்றும் பழங்களை ஒருங்கிணைப்பது, நகரங்களில் உள்ள இருப்பு மையங்களுக்குக் கொண்டு வருவது மற்றும் லாஸ்ட்மைல் டெலிவரி இவை மூன்றுமே நாங்கள் செய்கிறோம். எங்களிடம் பல வாடிக்கை யாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மூன்றும் தேவைப்படலாம். ஏதாவது ஒன்றுகூட தேவைப்படலாம். கிலோவுக்கு இத்தனை ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்திருக்கிறோம். தவிர, இதில் வேறு சில சிக்கல்களும் இருக்கின்றன. வெப்ப நிலை, ஈரப்பதம், தரம் உள்ளிட்டவற்றையும் நாம் கவனிக்க வேண்டும். பொருள்களைக் கொண்டு செல்வது மட்டுமே இங்கு பிரதானம் கிடையாது.

விஎம்எஸ் செல்வம்
விஎம்எஸ் செல்வம்

இலக்கு 30 நகரங்கள்...

இப்போது 350 நிரந்தர பணியாளர் உட்பட 2,000 பணியாளர்கள் உள்ளனர். நாங்கள் லாபத்தில்தான் செயல்படுகிறோம். இருந்தாலும் தொழில்நுட்பம் மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கான தற்போது நிதி திரட்டி இருக்கிறோம்.

இப்போதைக்கு 12 நகரங்களில் செயல்படு கிறோம். இதை 30 நகரங்களுக்கு உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். சென்னையில் நாங்கள் செயல்படுகிறோம் எனில், சென்னை என்பது நுகர்வு நகரம்தான். ஆனால், பொருள் களை வாங்குவது சென்னை சுற்றுவட்டாரத் தில்தான். அதுபோல, 30 நகரங்கள் எனில், பெரிய நிலப்பரப்புக்கு நெட்வொர்க் உருவாக்க வேண்டும்.

கடந்த ஆண்டு அக்டோபரில் ஹெச் அண்ட் எஸ் சப்ளை செயின் நிறுவனத்தின் ஒரு பிரிவாகத் தொடங்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் புதிய நிறுவனத்தைத் தொடங் கினோம். ஏப்ரல் முதல் செயல்பட்டு வருகி றோம்.

எங்கள் நிறுவனத்தில் செந்தில்குமார் மற்றும் அம்ரேஷ் சிங் ஆகியோர் இணை நிறுவனர்களாக உள்ளனர். செந்தில், செயல்பாடுகளைக் கவனித்துக்கொள்கிறார். அம்ரேஷ், டெக்னாலஜியைப் பார்த்துக்கொள்கிறார்.

ஃபிரெஷ் காமர்ஸ் என்பது காய்கறி மற்றும் பழங்கள் மட்டுமே கிடையாது. பால் பொருள்கள், இறைச்சி என அடுத்தகட்ட விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’’ என உற்சாகமாகப் பேசி முடித்தார் செல்வம்.

எல்லா பிசினஸ்களுக்கும் அடிப்படையாக இருப்பது லாஜிஸ்ட்டிக்ஸ்தான். தவிர, நகர்ப்புறத்தின் அடுத்த வளர்ச்சி லாஜிஸ்ட் டிக்ஸை நம்பித்தான் இருக்கிறது. எனவே, இந்த நிறுவனத்தின் பிசினஸ் இனிவரும் காலத்தில் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!