ஆசிரியர் பக்கம்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

“நான் பத்தாவது ஃபெயில்!” - தமிழகம் முழுக்க 20 கிளைகள்...

  உற்பத்திக்கூடம்...
பிரீமியம் ஸ்டோரி
News
உற்பத்திக்கூடம்...

அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் கணேசனின் வெற்றிக்கதை

தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான பெரம்பலூரில் குடிசைத் தொழிலாக பலகார தொழிலை ஆரம்பித்து, இன்று தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட கிளை களோடு ஒரு பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் நிறுவனம். பாரம்பர்யமான இனிப்புகள் மற்றும் கார வகைகளை, வீட்டில் செய்வதைப்போல பக்குவமாக தயாரித்துக் கொடுத்து, மக்கள் மனதில் இனிப்பாய் ஒட்டிக்கொண்டிருக்கிறது. தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத் தில், பல மடங்கு பரபரப்பாக வேலைகள் நடந்துகொண்டிருந்த அஸ்வின்ஸ் நிறுவனத் துக்கு ஒரு விசிட் அடித்தோம்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பிர மாண்டமாக இயங்கிவரும் அஸ்வின்ஸ் நிறு வனத்தின் ஃபேக்டரியில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஸ்வீட் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இவ்வளவு பெரிய நிறுவனத்தின் உரிமையாளர் என்கின்ற தோரணை எதுவுமே இல்லாமல், எளிமையான நபராக அறிமுகமானார் அஸ்வின்ஸ் நிறுவனத் தின் உரிமையாளர் கே.ஆர்.வி.கணேசன். சூடான ஒரு கோப்பை தேநீருக்குப் பிறகு, ஃபேக்டரியை சுற்றிக்காட்டியபடியே, அஸ்வின்ஸ் நிறுவனத்தின் ஆரம்பம் முதல் எதிர்காலம் வரை பேசத் தொடங்கினார்.

  கே.ஆர்.வி.கணேசன்
கே.ஆர்.வி.கணேசன்

நான் பத்தாவது ஃபெயிலுங்க...

“பெரம்பலூர்ல இருந்து 30 கி.மீ தூரத்துல இருக்குற கடம்பூர் கிராமம்தான் என்னோட சொந்த ஊர். எனக்கு மூணு அக்காக்கள், ஒரு அண்ணன். நான்தான் வீட்டுக்குக் கடைசிப் பிள்ளை. சின்ன வயசுல இருந்து எனக்கு படிப்புல பெருசா ஆர்வம் இல்லை. பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். அதையும் பாஸ் பண்ணலை. பத்தாவது லீவுக்கு சென்னை போயிருந்தேன். அங்க ‘கிராண்ட் ஸ்வீட்ஸ்’ங்கிற பேர்ல என்னோட தாத்தா நடராஜன் ஒரு பெரிய கடையை நடத்திட்டு இருந்தாங்க. இன்னிக்கும் ஒரு பெரும் புகழ் பெற்ற நிறுவனமாக அது இருக்கு. அவர்கிட்ட இருந்துதான் இந்தத் தொழிலை நான் கத்துக் கிட்டேன்.

சென்னையில இருந்து ஊருக்கு வந்ததும், பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட்ல பத்துக்கு பத்து இடத்துல என் பையன் அஸ்வின் பேர்ல சின்னதா ஒரு ஹோட்டல் போட்டேன். அப்போ எல்லா பஸ்ஸும் பைபாஸ்லயே போனதால, பஸ் ஸ்டாண்ட்டுக்கு எந்த பஸ் ஸும் வரலை. அதனால பெருசா வியாபாரம் நடக்கலை. இருந்தாலும் அன்னிக்கு நான் போட்ட டீக்கும், டிபனுக்கும் மக்கள்கிட்ட நல்ல பேர் இருந்தது.

அந்த நேரத்துல ஒரு சூப்பர் மார்கெட்ல பார்ட்னராக சேர்ந்தேன். சைடு பிசினஸா, வீட்ல சமோசா, தட்டை, அச்சு முறுக்குன்னு செஞ்சு டீக்கடைகளுக்கும் பேக்கரிகளுக்கும் கொடுத்துட்டு வந்தேன். அதுமட்டுமில்லாம, ஒரு ஏஜென்டை பிடிச்சி திருச்சி, கும்ப கோணம்னு எல்லா ஊருக்கும் எங்களோட பலகாரங்களை சப்ளை செஞ்சோம். மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு.

குடும்பமா ஒரு குடிசை தொழில்!

அதுக்கப்புறம்தான் தைரியமா, குடும்பமா சேர்ந்து, ‘ஏன் பெரம்பலூர்ல சின்னதா ஒரு ஸ்வீட் கடை போடக் கூடாது’ன்னு பேங்க்ல லோன் வாங்கி பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட்ல ஒரு கடையை ஆரம்பிச்சோம். இன்னிக்கு அஸ்வின்ஸ் நிறுவனத்துக்கு பெரம்பலூர் (3), திருச்சி (6), சென்னை (4), சேலம் (2), அரியலூர், துறையூர், ஆத்தூர், உளுந்தூர்பேட்டை, புதுச்சேரி என 20-க்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கு. 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எங்ககிட்ட வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

ஸ்வீட் கடை மட்டுமில்லாம திருச்சி, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் சைவ உணவகத்தையும் நடத்திக்கிட்டு இருக் கோம். உணவுத் தொழிலை கையாள்வதில் அதிக கவனமாக இருக்கணும். சுவை, தரம், சேவை என எதுவும் மிஸ் ஆகக்கூடாது. ஏன்னா நம்மளைத் தேடி நிறைய மக்கள் வர்றாங்க. அவங்களோட வார்த்தை ரொம்ப முக்கியம். அதுதான் நம்மளோட வளர்ச்சிக் கும் வீழ்ச்சிக்கும் என்னிக்கும் காரணமாக இருக்கும்’’ - பெரும் உழைப்புடன் ஒரு சாம் ராஜ்யத்தை எழுப்பிய கதையை தன்னடக்கத் துடன் பகிர்ந்தார்.

365 நாளும் கொழுக்கட்டை!

தங்களது உணவு தயாரிப்பு முறை மற்றும் சிறப்பு உணவுகள் பற்றி தொடர்ந்த கணேசன், ``தரம்தான் எங்களுக்கு முக்கியம். அதனால ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து வாங்குறோம். முடிஞ்ச அளவுக்கு எந்தப் பொருளையும் ரெடிமேடாக வாங்குற தில்லை. கடலை மாவு வேணும்னா கடலைப் பருப்பை வாங்கி தான் அரைப்போம்.

அதே மாதிரி அந்தக் காலத்துல எப்படி மாவை இடிச்சி பலகாரம், ஸ்வீட்ஸ் செய் வாங்களோ, அந்தமாதிரி தான் இன்னிக்கும் மெஷின்ல அரைக்காம இடிச்சி செஞ்சுக் கிட்டு இருக்கோம். அதேபோல, ஒரு தடவை பயன்படுத்துன எண்ணெயை மறுபடியும் பயன்படுத்துறதில்லை. பலகாரத்தோட சுவை குறைஞ்சிடும் என்பது மட்டுமில்லாம, வாடிக்கையாளர்களோட உடல்நலமும் எங்களுக்கு முக்கியம்.

நாங்க முதல்ல ஆரம்பிச்ச தட்டை, அச்சு முறுக்கு மட்டுமில்லாம அதிரசம், பொரி உருண்டை, கை முறுக்கு, எள்ளுருண்டை, கடலை உருண்டை, கொழுக்கட்டைனு எல்லா பாரம்பர்ய பலகாரங்களையும் மக்கள் அவ்ளோ விரும்பி வாங்கிட்டுப் போறாங்க. அதுபோக தென்னிந்திய ஸ்வீட்கள், வட இந்திய ஸ்வீட்களும் நம்மகிட்ட கிடைக்கும். ஊறுகாய் வகைகள், இட்லி பொடி வகைகள், ரெடிமேட் சாத மிக்ஸ் போன்றவையும் விற்கிறோம். கல்யாண சீர் பட்சணங்களுக்கு வாடிக்கையாளர்கள் என்ன பலகாரம் கேட்டாலும் செஞ்சு கொடுத்துட்டு இருக்கோம். 365 நாளும் நம்மகிட்ட கொழுக்கட்டை கிடைக்கிறது இன்னொரு ஸ்பெஷல்’’ என்றவர் தயாரான ஸ்வீட்களை நமக்கு டேஸ்ட் செய்யக் கொடுக்க, நாக்கில் கரைந்து நினைவில் பதிந்தது.

  உற்பத்திக்கூடம்...
உற்பத்திக்கூடம்...

ஒவ்வொரு தீபாவளிக்கும் ஒரு புது கடை திறப்போம்!

தீபாவளி சீசன் பற்றி கணேசன் சொன்னபோது, ``தீபாவளிக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே படுஜோராக தயாராகிடுவோம். நம்ம பொருள் நிறைய பேர்கிட்ட போய் சேரும் என்பதால, தீபாவளி நேரத்துல சுவையில கூடுதலாக கவனம் செலுத்துவோம். இதுவரைக்கும், சரக்கெல்லாம் விற்றுத் தீர்ந்து போதாமல் போற அளவுக்குத்தான் ஒவ்வொரு வருஷமும் தீபாவளி சிறப்பா இருந் திருக்கு. வழக்கத்தை விட தீபாவளி நேரத்துல ரெண்டு மடங்கு பிசினஸ் அதிகரிக்கும். இன் னொரு விஷயம்... ஒவ்வொரு தீபாவளியின் போதும், புதுசா ஒரு கடையைத் திறக்குறதையும் நாங்க வாடிக்கையா வெச்சிருக்கோம்’’ என்று அசர வைத்தார்.

குடும்பமா உழைக்கிறோம்!

``நான் நிறைய வெளிய போய் மார் கெட்டை கவனிச்சுட்டே இருப்பேன். டெல்லி போன்ற இடங்களில் உணவு சார்ந்த கண்காட்சிகள்ல தவறாம கலந் துக்குவேன். நான் மட்டுமில்ல... எங்க குடும் பமே தொழிலுக்காக உழைக்கிறோம். சென்னையில இருக்க கடைகளை என் அண்ணன் ரெங்கராஜ் பாத்துக்குறாங்க. என் பொண்ணு நிஷாவும், மாப்பிள்ளை சிபியும் சேலத்துல இருக்குற கடைகளை நிர்வாகம் செய்றாங்க. என்னோட சேர்ந்து என் மனைவி செல்வகுமாரியும், மகன் அஸ்வினும் பெரம்பலூர் ஃபேக்டரி மற்றும் கடைகளின் நிர்வாகத்தை பார்த்துக் குறோம்.

எந்தவொரு தொழில்லயும் வாடிக்கை யாளர்கள்தான் நமக்கு தெய்வம். அவங்களை முதல்ல மதிக்கணும். வாடிக் கையாளர்களுக்குத் தரமான பொருளையும், சிறப்பான சேவையையும் கொடுக்கணும்னு நினைச்சு ஒவ்வொரு நிறுவனமும் செயல் படணும். அப்படி செயல்படுற நிறுவனங்கள் எல்லாம்தான் இன்னிக்கு வளர்ந்திருக்கு. குறிப்பா, பெரம்பலூர் மக்களுக்கு ஒரு பெரிய நன்றியை சொல்லணும்.

சென்னை மாதிரியான ஒரு பெரிய நகரம் கிடையாது பெரம்பலூர். ஒரு சின்ன நகரம். அந்த ஊர்ல நாம இந்தளவுக்கு வளர்ந்துருக்கோம்னா அந்த மக்களோட ஆதரவு ரொம்ப முக்கியம். அதேபோல எங்களோட ஊழியர்களும் அர்ப்பணிப் போட வேலை செஞ்சு நிறுவனத்தை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்காங்க. எங்க நிறுவனத்தில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத் துக்கு மேல் பெண்கள்தான் வேலை பார்க்கிறாங்க என்பதில் எங்களுக்கு ரொம்பப் பெருமை. இந்தக் கூட்டு உழைப்பு தான் இப்போ வெற்றியா தித்திக்குது’’ என்கிற கணேசன், தன் ஊழியர்களிடம் முதலாளியாக இல்லாமல், அந்தப் பெரிய குடும்பத்தின் தலைவனாக நின்று பேசி அவர்களின் நிறை குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

வெற்றி சூத்திரம்!