நடப்பு
Published:Updated:

“மகளுக்கான தேடலில் உதயமானதுதான் இந்த இயற்கை அங்காடி!” - ஒரு தாய் தொழிலதிபரான கதை!

மீரா மாறன்
பிரீமியம் ஸ்டோரி
News
மீரா மாறன்

மகளின் உடல்நலனுக்கான தேடல்தான் மீராவைத் தொழில் முனைவராக மாற்றி இருக்கிறது!

“கட்டடக்கலை நிபுணராக 18 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், இயற்கை உணவு சார்ந்த தொழில்முனைவோரானது எனக்கு முற்றிலும் பெரிய மாற்றம்தான். அப்படி நுழைந்த இந்தத் துறையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்களுடன் மகிழ்ச்சியோடு பயணிக்கிறேன்” – உற்சாகமாகக் கூறுகிறார் மீரா மாறன். மகளின் உடல்நலனுக்கான தேடலில் பிசினஸ்வுமனாக மாறியிருக்கிறார் மீரா. சென்னையில் முன்னணி இயற்கை அங்காடியான ‘டெரா எர்த் ஃபுட்’ விற்பனை நிலையத்தையும், அதைச் சார்ந்த உற்பத்தி ஆலையையும் வெற்றிகரமாக நடத்திவருகிறார். அடையாற்றிலுள்ள அங்காடியில் மீராவைச் சந்தித்தோம்.

வித்தியாசமாக யோசிப்போம்..!

“என் குடும்பம் பிசினஸ் குடும்பம். அப்பாவின் தெர்மாகோல் உற்பத்தித் தொழிலுக்கு வீட்டில் பலரும் உதவுவோம். ஆனால், எதிர்காலத்தில் பிசினஸ் துறைக்குள் வரும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை. ‘எல்லோரும் செய்வதுபோல ஒரு விஷயத்தைச் செய்யாமல், எதைச் செய்தாலும் புதுமையாகவும் தனித்துவமாகவும் செய்ய வேண்டும்’ என்பது எங்கள் குடும்பத்தின் கொள்கை. சதுர வடிவ கேரம் போர்டில் விளையாடுவதில் சவால் குறைவு என்று பிரத்யேகமான அறுகோண வடிவ கேரம் போர்டில்தான் விளையாடுவோம். இப்படி விளையாட்டு முதல் அவரவர் வேலை வரை குடும்பத்தினர் அனைவரும் தனித்துவமாகச் செயல்படுவோம்.

மீரா மாறன்
மீரா மாறன்

சிறுவயது முதலே எனக்கு டிசைனில்தான் ஆர்வம் அதிகம். திருச்சி என்.ஐ.டி-யில் கட்டடக்கலைப் பயின்றேன். பிறகு, கட்டுமான வடிவமைப்பு களுக்கான புராஜெக்ட்டுகள் கிடைத்தன. வீட்டிலேயே டிசைன் அலுவலகம் அமைத்து டால்மியா குழுமம், ஸ்ரீராம் குழுமம், ஈஷா ஹோம்ஸ் உட்பட முன்னணி நிறுவனங்கள் பலவற்றுக்கும் 19 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான புராஜெக்ட்டுகளைச் செய்து கொடுத்தேன்.

கை, கால்களில் வெட்டுக்கீறல்..!

இதற்கிடையே குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில், மகளுக்கு 4 வயதில் சருமப் பிரச்னைகள் ஏற்பட்டன. காலையில் தூங்கி எழும்போது குழந்தையின் கை மற்றும் பாதங்களில் வெட்டுக்கீறல்கள்போல் ஏற்பட்டு ரத்தம் வடியும். பல மருத்துவர்களைச் சந்தித்தும்கூட நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை. அப்போது ஒரு தாயாக நான் அனுபவித்த வேதனைகள் விவரிக்க முடியாதவை.

மகளைப் பள்ளிப் படிப்பிலிருந்து நிறுத்தினோம். மகளுக்கு ஏற்பட்ட சரும பாதிப்பு குறித்துத் தெரிந்துகொண்டு, இயற்கையான வழியில் குணப்படுத்த அதிக நேரம் செலவிட்டேன். ‘‘இது சரும நோயல்ல, ‘Leaky gut syndrome’ என்ற குடல் சார்ந்த பிரச்னை’’ என அறிந்தோம். குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திய கோதுமை, பால் போன்ற பல்வேறு உணவுகளைத் தவிர்த்தோம். அவற்றுக்கு மாற்று உணவுகளை வீட்டிலேயே தயாரித்து எங்களின் உணவுப் பழக்கத்தையும் மாற்றினோம்” என்றவர், மகளைக் குணமாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டு 2007-ல் அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார்.

பகலில் குழந்தை, இரவில் டிசைனிங்

“அப்போது கைவசம் இருந்த கட்டுமான புராஜெக்ட்டுகளைக் கவனித்துக்கொள்ளச் சென்னையில் என்னுடைய டிசைன் அலுவலகம் தொடர்ந்து இயங்கியது. அமெரிக்காவில் பகலில் குழந்தைக்கு முழுமையாக நேரம் ஒதுக்குவேன். அங்கு இரவு நேரம் இந்தியாவில் பகல் என்பதால், குழந்தை உறங்கியதும் தடையின்றி எனது பணிகளையும் கவனித்தேன். என் கணவர் மாறன் தனியார் நிறுவன வேலைக்குச் சென்றார். அங்கிருந்த பிரபல இயற்கை அங்காடி ஒன்றில் காய்கறிகள், பழங்கள், தின்பண்டங்கள் உட்பட அனைத்து உணவுப் பொருள்களையும் இயற்கை விளைபொருள்களிலிருந்து உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தாத வகையில் தயாரித்து விற்பனை செய்தார்கள். அங்கு ஷாப்பிங் செல்லும் போதெல்லாம், ‘இதுபோன்ற அங்காடி நம்மூரிலும் இருந்தால் நன்றாக இருக்குமல்லவா’ என்ற சிந்தனை வரும். உணவே மருந்தென முழுமூச்சாகச் செயல்பட்டதற்குப் பலனாக மகளின் உடல்நிலையும் படிப்படியாகச் சரியானது. 2010-ல் சென்னை திரும்பினோம்.

மீரா மாறன்
மீரா மாறன்

கிருஷ்ண ஜயந்தியில் சிறுதானிய தின்பண்டம்

கட்டுமான வடிவமைப்புப் பணிகளிலிருந்து முழுமையாக விலகி, கெடுதல் ஏற்படுத்தாத ‘தேவைக்கு அதிகம் பதப்படுத்தப்படாத புவி சார்ந்த உணவுகளைத் தயாரிக்க முடிவெடுத்தேன். கோதுமை, மைதா, பால், வெள்ளைச் சர்க்கரை, குளூடன்-ஃபிரி மற்றும் வீகன் வகை பேக்கரி உணவுகளைத் தயாரித்து ஓர் உணவுத் திருவிழாவில் ஸ்டால் அமைத்தேன். சில மணி நேரத்திலேயே என் தயாரிப்புகள் விற்பனையானது. அதுவே, என் புதிய தொழிலுக்கான அடித்தளம்.

ஒருமுறை கிருஷ்ண ஜயந்திக்கு முன்தினம் சிறுதானிய தின்பண்டங்களைத் தயாரித்து, நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்தேன். ஆர்டர்கள் வரவே, ‘டெரா’ என்ற பிராண்ட் பெயருடன் நானே லோகோ டிசைன் செய்து அன்றிரவே பேக்கிங் செய்து அனுப்பினோம். தயாரிப்புகள் அனைத்தும் ஒரே தினத்தில் விற்றுத் தீர்ந்ததுடன் புதிய ஆர்டர்களும் குவிந்தன. தரமான பொருள்களை வாங்குவதற்கு மக்கள் எப்போதும் தயாராக இருப்பது, அன்று எனக்கு நிதர்சனமாகப் புரிந்தது.

நண்பர்கள் வட்டாரம் தவிர, சில இயற்கை அங்காடிகளுக்கும் உணவுப் பொருள்களை விற்பனை செய்தேன். ஒரு கட்டத்தில் வாடகைக் கட்டடத்தில் புதுப்புதுத் தின்பண்டங்களையும் தயாரித்தேன். பண்டிகைக் காலத்திலும், பல்வேறு நிறுவன நிகழ்ச்சிகளுக்கும் இனிப்பு மற்றும் கார வகை தின்பண்டங்களுக்கான ஆர்டர்கள் அதிகரித்தன. பல உத்திகளுடன் வாடிக்கை யாளர்கள் வட்டாரத்தை அதிகரித்து சென்னை நீலாங்கரையில் இயற்கை அங்காடியைத் தொடங்கினேன்.

‘‘இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து, உடல்நலனுக்குக் கேடு விளைவிக்காத உணவுப் பொருள்களைத் தேடுவோருக்குத் தீர்வு அளிப்பதே எனது பிரதான நோக்கம்!’’

குளூடன்-ஃப்ரி, வீகன் பேக்கரி உணவுகள்

சரியான திட்டமிட்டலுடன் தொழிலை நடத்துவதால், ‘டெரா’ விரைவாகவே வளர்ந்தது. இயற்கை வேளாண்மையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், அனைத்து வகை மளிகைப் பொருள்கள், மூலிகை உணவுகள், சிறுதானிய தின்பண்டங்கள், குளூடன்-ஃப்ரி, வீகன் பேக்கரி உணவுகள் உட்பட உணவுத் தேவைக்கான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் விற்பனை செய்கிறோம். இயற்கை விளைபொருள்களுக்குப் படிப்படியாகவே வரவேற்பு அதிகரித்துவருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் ஊழியர்களின் பங்களிப்புடன் கடுமையாக உழைத்திருக்கிறோம். இதற்குப் பலனாக, சென்னையில் முன்னணி இயற்கை அங்காடியாக எங்கள் விற்பனை நிலையங்கள் பிரபலமடைந்துள்ளன’’ என்று பெருமிதத்துடன் சொன்னார் மீரா.

“சென்னையில் இரண்டு இடங்களில் இனிப்பு, கார வகை ஸ்நாக்ஸ் உணவுகளை மட்டும் தயாரிக்கிறோம். இயற்கை விவசாயிகளிடமிருந்து நேரடியாக காய்கறிகள், பழங்களை வாங்கி விற்பனை செய்வதால் அவர்களின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

மேலும், விவசாயிகள் மற்றும் பிறரிடமிருந்து மதிப்புக்கூட்டல் செய்யப்பட்ட பொருள்களை வாங்கி விற்பதுடன், நாங்களே மதிப்புக்கூட்டல் செய்தும் விற்பனை செய்கிறோம். நமது விற்பனைப் பொருள்கள் தரமாக இருந்தால், மக்களே நம்மைப் பிரபலப்படுத்திவிடுவார்கள். இப்படித்தான் எங்கள் அங்காடிகளும் பிரபலமாகின. இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து, உணவே மருந்து என்பதற்கு ஏற்ப உடல்நலனுக்குக் கேடு விளைவிக்காத உணவுப் பொருள்களைத் தேடுவோருக்கு தீர்வு அளிப்பதே எனது பிரதான நோக்கம்’’ என்று நம்பிக்கையோடு பேசி முடித்தார் மீரா.

இயற்கை விளைபொருள்களுக்கு அதிகரித்து வரும் வரவேற்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் வெற்றிதான்!