சென்னையைச் சேர்ந்த சுந்தரம் ஃபாஸனர்ஸ் (Sundaram Fasteners) நிறுவனம் ரூ.2,062 கோடி (250 மில்லியன் டாலர்) மதிப்புள்ள மின்சார வாகனத்துக்குத் தேவையான உதிரி பாகங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை உலகின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.

சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிறுவனம் உலகளாவிய OEM மற்றும் வாகன உற்பத்தியாளர்களுக்கு உதிரி பாகங்களை வழங்கும் மிகப்பெரிய சப்ளையர் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் இந்த ஒப்பந்தம்தான் இந்த நிறுவனத்தின் பெரிய தொகை ஒப்பந்தம் ஆகும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தயாரிக்கப்படும் உதிரி பாகங்கள் MHEV/PHEV/BEV உள்ளிட்ட பல்வேறு மின் வாகன மாடல்களிலும், நடுத்தர வகை டிரக், எஸ்யுவி, செடான்களிலும் பயன்படுத்தப் படும். இந்தப் புதிய உதிரி பாகங்கள் பொருத்திய வாகனங்களை 2024-ம் ஆண்டு வட அமெரிக்காவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

ஓர் ஆண்டுக்கு 15 லட்சம் உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்குவதன் மூலம் நிறுவனத்தின் வருடாந்தர விற்பனை 2026-ம் ஆண்டு ரூ.428.84 கோடியை (52 மில்லியன்) உச்சத்தை எட்டும் என சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.