Published:Updated:

`நியூஸ் பிரின்ட்டுக்கு 10% சுங்க வரி ரத்து செய்யுங்கள்!'- மத்திய அரசுக்கு ஐ.என்.எஸ் கோரிக்கை

எம்.குமரேசன்

இந்தியாவில் ஆண்டுக்கு 25 லட்சம் டன் நியூஸ் பிரின்ட்டுகள் தேவை. ஆனால், 10 லட்சம் டன் நியூஸ் பிரின்ட்டுகள்தான் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நியூஸ் பிரின்ட்
நியூஸ் பிரின்ட்

நியூஸ் பிரின்ட்டுக்கு 10 சதவிகிதம் சுங்க வரி விதிப்பை ரத்து செய்ய மத்திய அரசுக்கு இந்திய ஐ.என்.எஸ் (Indian Newspaper Society) கோரிக்கை விடுத்துள்ளது.

நியூஸ் பிரின்ட்
நியூஸ் பிரின்ட்

பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில், செய்தித்தாள்கள் அச்சடிக்க இறக்குமதி செய்யப்படும் நியூஸ் பிரின்ட்டுக்கான சுங்க வரியை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால், செய்தித்தாள் நிறுவனங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

``ஏற்கெனவே விளம்பர வருவாய் குறைந்துள்ளது. குறைந்த வருவாயில் அதிகச் செலவு பிடிக்கும் தொழில் பத்திரிகை தொழில். இதனால், சிறிய மற்றும் நடுத்தரப் பத்திரிகைகள் அதிக நஷ்டத்தைச் சந்திப்பதுடன் மூடப்படும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பத்திரிகை நிறுவனங்கள் ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. எனவே, இந்த அதிக வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு பத்திரிகைத் தொழிலைக் காப்பாற்ற வேண்டும்''என ஐ.என்.எஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறது.

செய்தித் தாள்கள்
செய்தித் தாள்கள்

இந்தியாவில் ஆண்டுக்கு 25 லட்சம் டன் நியூஸ் பிரின்ட்டுகள் தேவை. ஆனால், 10 லட்சம் டன் நியூஸ் பிரின்ட்டுகள்தான் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்றவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. கிளேஸ்டு ரக நியூஸ் பிரின்ட்டுக்காக முற்றிலும் வெளிநாடுகளை நம்பித்தான் இந்திய நிறுவனங்கள் இருக்கின்றன.