Published:Updated:

''வங்கிகளும் திருந்தினால் வாராக்கடன் தடுக்கப்படும்!'' - நிதித்துறை நிபுணர் எஸ்.சிவகுமார்

''வங்கிகளும் திருந்தினால் வாராக்கடன் தடுக்கப்படும்!'' - நிதித்துறை நிபுணர் எஸ்.சிவகுமார்
''வங்கிகளும் திருந்தினால் வாராக்கடன் தடுக்கப்படும்!'' - நிதித்துறை நிபுணர் எஸ்.சிவகுமார்

ஒரு நிறுவனத்திற்குக் கடன் கொடுக்கும்போதே இந்தக் கடன் தொகை திரும்பவராது என்று கூறும் அளவுக்குச் சில திறமையாளர்கள் வங்கிகளில் இருந்தாலும் அவர்களின் அறிவுரைகளுக்கு மதிப்பு கொடுக்கப்படுவதில்லை.

தற்போதைய செய்திகளில் தினமும் ஒரு பெருநிறுவனம் வாராக்கடன் குற்றச்சாட்டில் சிக்குவதும், உரிமையாளர் தலைமறைவாவதும் வாடிக்கையாகிவருகிறது. அப்படி கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடமிருந்து சொத்துகளைப் பறிமுதல் செய்வதும் கடினமான பணியாக இருப்பதால், தற்போது இதற்கென மத்திய அரசு புதியச் சட்டம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளது. இதன்மூலம் வாராக்கடன் வைப்பவர்களின் அனைத்துச் சொத்துகளையும் கையகப்படுத்தி, அதிலிருந்து அந்தக் கடன்தொகையை வசூலிக்க வழி காணப்படுகிறது. 

எனினும், இது தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் கதை போன்றதே! நம் வங்கி அதிகாரிகளை மீறி இத்தகைய வாராக்கடன் குற்றங்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு நடப்பது எப்படி என்ற கேள்வி, சராசரி இந்தியர்கள் அனைவருக்கும் எழும் கேள்விதான். இதில் எங்கே தவறு நடக்கிறது, எப்படி தவறு நடக்கிறது என வங்கித் துறையில் 35 ஆண்டுகால அனுபவமிக்க நிதித்துறை நிபுணர் எஸ்.சிவகுமாரிடம் கேட்டோம்...

''இதற்கு முதல் காரணமே, வங்கிக்கடன் கொடுக்கும்போது சரியான நடைமுறைகளை வங்கிகள் கடைப்பிடிக்காததுதான். ஒரு தொழிலைத் தொடங்குமுன் அவர்கள் கொடுத்துள்ள திட்ட வரையறை சரியாக இருக்கிறதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். ஆனால், அதில் கவனம் செலுத்தாமல் கடன் பெறுபவர் அடமானமாக எதைக் காட்டுகிறார் என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள். இது முதல் தவறு.

அடுத்ததாக, அந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கேற்ற திறன், திட்டமிடல், கட்டமைப்பு போன்றவை அந்தத் தொழில்முனைவோரிடம் இருக்கின்றனவா என்பதையெல்லாம் பெரிதும் கவனத்தில்கொள்வதில்லை. இதுகுறித்த தகவல்களை ஆய்வுசெய்ய, மேலாண்மைத்திறன் உள்ளவர்கள் வங்கிகளில் இருக்க வேண்டும். ஆனால், அதற்கான ஏற்பாடுகள் வங்கிகளில் இல்லை. 

அடுத்ததாக வங்கி அலுவலர்களுக்குள் நிலவும் ஈகோ பிரச்னை. ஒருவருக்குக் கடன் கொடுக்கும்போதே இந்தக் கடன்தொகை திரும்ப வராது என்று கூறும் அளவுக்குத் திறமையாளர்கள் சிலர் வங்கிகளில் இருந்தாலும், அவர்களின் அறிவுரைகளுக்கு மதிப்பு கொடுக்கப்படுவதில்லை. அவர்களிடம் அறிவுரை கேட்பதுமில்லை. எனவே, அத்தகைய திறமைசாலிகள் தங்களது கருத்தை வெளிப்படுத்தாமல் ஒதுங்கிவிடுகிறார்கள். ஆக, கண்ணுக்குத் தெரிந்தே தவறான நபர்களுக்குக் கடன் கொடுக்கும் சூழல் நிலவுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, வங்கிக்கடன் வாங்குபவர்கள் அனைவருமே ஏமாற்றுக்காரர்கள் அல்ல. நேர்மையாளர்களும் இவர்களில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குப் பொருள் உற்பத்தி, விளம்பரம், விநியோகம், விற்பனை, பணியாளர்கள் மேலாண்மை என எதிலாவது பிரச்னை ஏற்பட்டு வருமானம் பாதிக்கப்பட்டிருக்கும். அப்படியானவர்களுக்கு உரிய ஆலோசனை கொடுத்து தொழிலை மேம்படுத்த, கடன் கொடுத்த வங்கிகள்தாம் உதவ வேண்டும். ஆனால், ஆலோசனை கூறுவதற்கு பதில், அவருக்குக் கூடுதலாகக் கடனளித்து, அந்தத் தொழில் மேலும் நஷ்டத்தைச் சந்தித்து, வாராக்கடன் தொகை அதிகரிக்கவே வங்கி அதிகாரிகள் வழிசெய்கிறார்கள். 

வங்கிக்கடன் வாங்கியவர்கள், கடனைத் திருப்பிச் செலுத்தாதபட்சத்தில் சர்ஃபேசி ஆக்ட் (SARFAESI Act)படி, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பிணையாக வைத்ததை ஏலத்துக்குவிட்டு வாராக்கடனை ஓரளவுக்கு மீட்க முடியும். இந்தச் சட்டம் இருப்பதால், கடனை எப்படியும் வசூலித்துவிடலாம் என்ற அதீத நம்பிக்கையில் ஒருவரது தொழில் நஷ்டம் குறித்து வங்கிகள் பெரிதும் கவலைப்படாமல் இருக்கின்றன.

கடன் பெற்றவர்கள் தரப்பிலும் கடனைப் பயன்படுத்துவதில் தவறு நடக்கின்றன. கடன் பெறும் வரை மிகவும் நேர்மையாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்கள், கடன் தொகையைப் பெற்றதுமே தொழிலுக்குச் செலவழிப்பதை விட்டுவிட்டு கார், பைக், நகை என ஆடம்பரச் செலவுகளுக்கு அந்தத் தொகையைப் பயன்படுத்துகிறார்கள். இப்படி சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டால் தொழிலில் நஷ்டமடையாமல் என்ன செய்வார்கள்? 

இவை அனைத்துக்கும் மேலாக மிக முக்கியமான காரணம், ஊழல். வங்கி அதிகாரிகள், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு கடனுதவி செய்வதும், திருப்பித்தர மாட்டார்கள் எனத் தெரிந்தே கடனுதவி அளிப்பதுமாக பல்வேறுவிதங்களில் ஊழல் நடைபெறுகிறது. இந்த ஊழலில் தனியார்துறை, பொதுத்துறை வங்கிகள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்தான் தனியார் துறை வங்கிகளும் வாராக்கடன் மோசடியில் சிக்கி நிதிநெருக்கடிக்குள்ளாகின்றன. எனவே, இத்தகைய ஊழல் நடைபெறாதபடி கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்" என்றார். 

ஆக, வங்கிக்கடனை வாராக்கடனாக மாற்றியதில் கடன் பெற்றவர்கள் மட்டுமன்றி, வங்கிகளும் குறிப்பிட்ட பங்கு வகிப்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. கடன் கொடுக்கும் முன் தீர ஆராய்ந்து கொடுப்பதன் மூலமே இத்தகைய குற்றச் செயல்களிலிருந்து தேசத்தையும் மக்களின் சேமிப்பையும் காப்பாற்ற இயலும்.

அடுத்த கட்டுரைக்கு