அலசல்
Published:Updated:

வங்கிக் கணக்குகளை முடக்கிய வசூல்ராஜா வருமானவரித் துறை!

வங்கிக் கணக்குகளை முடக்கிய வசூல்ராஜா வருமானவரித் துறை!
பிரீமியம் ஸ்டோரி
News
வங்கிக் கணக்குகளை முடக்கிய வசூல்ராஜா வருமானவரித் துறை!

வங்கிக் கணக்குகளை முடக்கிய வசூல்ராஜா வருமானவரித் துறை!

‘என் வங்கிக் கணக்கை வருமானவரித்துறை முடக்கிவிட்டது. அதை மீட்டெடுத்துக் கொடுங்கள்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் நடிகர் அர்விந்த் சுவாமி. அட்வான்ஸ் டாக்ஸ், அதாவது முன்கூட்டிய வரியைக் கட்டுவது தொடர்பாக வருமானவரித்துறை அவரது வங்கிக் கணக்கை முடக்கியது. ஆனால், முடக்கப் பட்டது அர்விந்த் சாமியின் வங்கிக் கணக்கு மட்டுமல்ல, பிரபல நடிகர்கள் மற்றும் பல ஆயிரம் தொழில் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும்தான் என்பது வெளியில் வராத ரகசியம்.

வருமானவரித்துறை ஏன் இப்படி செய்தது? 

வங்கிக் கணக்குகளை முடக்கிய வசூல்ராஜா வருமானவரித் துறை!

இந்திய வருமானவரிச் சட்டப்படி, ஒரு நிறுவனம் தன் வருமானத்தைக் கணக்கிட்டு, அட்வான்ஸ் டாக்ஸாக முதல் காலாண்டில் 15%, இரண்டாவது காலாண்டில் 30%, மூன்றாவது காலாண்டில் 30%, நான்காவது காலாண்டில் 25% செலுத்த வேண்டும். இந்த 25 சதவிகிதத்தை மார்ச் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். நிதி ஆண்டு முடிந்தபின்பு வரவு செலவைக் கணக்கிட்டு, கூடுதலாக வரி கட்ட வேண்டிய அவசியமிருந்தால் கட்டுவதும் அதிகமாகக் கட்டியிருந்தால் திரும்பப் பெறுவதும் வழக்கம்.

இப்படி மார்ச் 15-ம் தேதிக்குள் பல தொழில் நிறுவனங்கள் அட்வான்ஸ் டாக்ஸ் கட்டின. ஆனால், பல நிறுவனங்கள் 2017 மார்ச்சில் கட்டிய அட்வான்ஸ் டாக்ஸைவிட, 2018 மார்ச்சில் கட்டியது குறைவாக இருந்ததைப் பார்த்து வருமானவரித்துறை பதறிப்போனது. ‘சரியாகக் கணக்கிட்டுத்தான் கட்டியிருக்கிறீர் களா?’ என்று கேட்டு, பல ஆயிரம் தொழில் நிறுவனங்களுக்கும் தொழில்ரீதியில் செயல்படும் பல புரபஷனல்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸுக்குப் பல நிறுவனங்கள் பதில் அளித்துவிட்டன. ஆனால், வருமானவரித்துறையோ பதில் தந்த நிறுவனங்கள், பதில் தராத நிறுவனங்கள் என்றெல்லாம் வித்தியாசம் காட்டாமல், பல நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கியது. 

வங்கிக் கணக்குகளை முடக்கிய வசூல்ராஜா வருமானவரித் துறை!

இந்த நடவடிக்கை சரியா என்று சென்னையைச் சேர்ந்த முன்னணி வரி ஆலோசகரும் வழக்கறிஞருமான கே.வைத்தீஸ்வரனிடம் கேட்டோம். ‘‘ஒருவர் வருமானவரி பாக்கி வைத்திருக்கிறார் என்றால், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதற்கு முறையான பதில் வரவில்லை என்றாலோ வரி கட்ட மறுத்தாலோ மட்டுமே அவரின் வங்கிக் கணக்கிலிருந்து வரி பாக்கிக்கான பணத்தை எடுக்கும் அதிகாரம் வருமானவரித் துறைக்கு இருக்கிறது. அந்த வங்கிக் கணக்கில் பணம் ஏதும் டெபாசிட் செய்யும்பட்சத்தில், அதை வரி பாக்கிக்காக ஒதுக்கி வைக்கச்சொல்லி வங்கிகளுக்கு உத்தரவிடும் அதிகாரமும் உண்டு. இதேபோல், அந்த நிறுவனத்துக்குக் கடன் கொடுக்க வேண்டியவர்களுக்கும் ‘வரி பாக்கி இருக்கிறது’ என்று சொல்லி அதை வசூலித்துத் தங்கள் கணக்கில் சேர்க்கவும் வருமானவரித் துறைக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல், வரி பாக்கி வைத்திருப்பவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தால் அது சட்ட விரோதம். வரி விதிமுறைகள் இப்படித் தெளிவாக இருக்க, அவசரப்பட்டு வங்கிக் கணக்குகளை முடக்கியது தேவையில்லாத நடவடிக்கை’’ என்றார் அவர்.

வருமானவரித்துறை இப்படி அதிரடியில் இறங்கியதற்குக் காரணமே, அரசு நிர்ணயித்த வரி இலக்கினை அடைவதற்காகத்தான் என்கிறார்கள் விஷயம் தெரிந்த ஆடிட்டர்கள் சிலர். 2017-18 நிதியாண்டில் அரசின் நேரடி வரி வருவாய் இலக்கு ரூ.9.80 லட்சம் கோடி. இந்த நேரடி வரி என்பது வருமான வரி மற்றும் நிறுவனங்கள் வரி ஆகிய இரண்டும் இணைந்ததாகும். ஆனால், 2016 நவம்பரில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம், 2017 ஜூலையில் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி வரி ஆகிய நடவடிக்கைகளினால், நிர்ணயித்த அளவுக்கு வரி வசூலை அடைய முடியவில்லை. இந்த விஷயம் வெளியே தெரிந்தால் ‘பொருளாதாரம் சரியில்லை, மோடி ஆட்சி சரியில்லை’ எனப் பலரும் பலவிதமாகப் பேசத் தொடங்கிவிடுவார்கள். ‘நிர்ணயித்த இலக்கைவிட அதிகமாக வரிவசூலைக் காட்டிவிட்டால் பிரச்னையில்லை’ என யோசித்தபோது உருவானதுதான், இந்த வங்கிக் கணக்கை முடக்கும் ஐடியா.

வங்கிக் கணக்குகளை முடக்கிய வசூல்ராஜா வருமானவரித் துறை!

இதனால், நேரடி வரி வசூல் 18% அதிகரித்து, ரூ.10,02,607 கோடி வரிவசூல் என்று கணக்கு வந்தது. திடீரெனப் பல ஆயிரம் வங்கிக் கணக்குகளை முடக்கியதால், அந்தக் கணக்குகளில் இருந்த பணம் அனைத்தும் அரசின் வசூல் கணக்கில் வந்தது. இதனால் அரசு நிர்ணயித்த இலக்கு தொகையை விட அதிக அளவில் பணம் வசூலானது போன்றதொரு தோற்றம் கிடைத்தது. இனி அந்தப் பணம் உரிய நபர்களுக்குத் திரும்ப அளிக்கப்பட்டாலும், அதுபற்றிய தகவல் மக்களிடம் பெரிய அளவில் போய்ச் சேராது.

‘‘பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்கத்தாலோ, ஜி.எஸ்.டி வரியாலோ பொருளாதாரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை; மாறாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் வரி வருவாயானது, ரூ.5.83 லட்சம் கோடியிலிருந்து ரூ.10.20 லட்சம் உயர்ந்திருக்கிறது என்பதை ஒரு சாதனையாகக் காட்ட வருமானவரித்துறை இப்படியொரு நடவடிக்கையை எடுத்திருக்கலாம்’’ என்கிறார்கள் அவர்கள்.

தவறு செய்தவர், செய்யாதவர் என்று பார்க்காமல் எல்லா வங்கிக் கணக்குகளையும் முடக்குவதில் வருமானவரித்துறை இனியாவது கொஞ்சம் நிதானமாக நடந்துகொண்டால் நன்றாக இருக்கும்!

- சேனா சரவணன்